இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0141பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல்

(அதிகாரம்:பிறனில் விழையாமை குறள் எண்:141)

பொழிப்பு (மு வரதராசன்): பிறனுடைய உரிமையாகிய மனைவியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்தில் அறமும் பொருளும் ஆராய்ந்து கண்டவரிடம் இல்லை.

மணக்குடவர் உரை: பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.

பரிமேலழகர் உரை: பிறன் பொருளாள் பெட்டு ஒழுகும் பேதைமை - பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை, ஞாலத்து அறம் பொருள் கண்டார் கண் இல் - ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை.
(பிறன் பொருள்: பிறன் உடைமை, அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார். எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பிறன் மனைவியை விரும்பும் மடமை உலகில் அறம்பொருள் அறிந்தவரிடம் இருப்பதில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்.

பதவுரை: பிறன்-மற்றவன்; பொருளாள்-உரிமையானவள்; பெட்டு-விரும்பி, காதலித்து; ஒழுகும்-நடந்து கொள்ளும், வாழ்ந்து வரும்; பேதைமை-மடமை, அறியாமை; ஞாலத்து-உலகத்தின்கண், உலகத்தில்; அறம்-நல்வினை; பொருள்-பொருள்; கண்டார்கண்-ஆராய்ந்து அறிந்தவர் மாட்டு; இல்-இல்லை.


பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை;
பரிப்பெருமாள்: பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை;
பரிதி: பிறர் மனையாள் அழகுகண்டு விரும்புதல்;
காலிங்கர்: தனக்கு உரியாளம் அன்றியே, தன் கணவனுக்கு உரியளாகி ஒழுகுகின்ற கற்பினாளைத் தாம் விரும்பி ஒழுகும் அறியாமையானது;
பரிமேலழகர்: பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாளைக் காதலித்து ஒழுகுகின்ற அறியாமை;
பரிமேலழகர் குறிப்புரை: பிறன் பொருள்: பிறன் உடைமை. [பிறனுடைமை - பிறனுக்கு உரிமையாய் இருப்பது]

'பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பி யொழுகுகின்ற அறியாமை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி பிறர் மனையாள் அழகுகண்டு விரும்புதல் என்று மாறுபாடான உரை பகன்றார். காலிங்கர் 'தன் கணவனுக்கு உரியளாகி ஒழுகுகின்ற கற்பினாளை விரும்பி ஒழுகும் அறியாமை' என்று விரித்துரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறனுக்கு உரியவளை விரும்பி ஒழுகும் அறியாமை', 'இன்னொருவனுக்கு உரிமைப் பொருளாகிய அவனுடைய மனைவியின்மேல் காம இச்சைகொண்டு அலைகிற மூடத்தனம்', 'பிறனது உடைமையாவாளை விரும்பி ஒழுகும் அறியாமை', 'பிறனுக்குரிய மனைவியிடம் விரும்பித்காத முறையில் ஒழுகுகின்ற அறியாமை' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறனுடைய பொருளாயிருப்பவளை விரும்பும் மடமை என்பது இப்பகுதியின் பொருள்.

ஞாலத்து அறம்பொருள் கண்டார்கண் இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.
பரிப்பெருமாள்: உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அறனும் அன்று பொருளும் அன்று என்றது.
பரிதி: பூமியில் தன்மநெறியும் பொருள் நெறியும் கண்டாரிடத்து இல்லை; இன்ப நெறி கண்டாரிடத்து உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: இவ்வுலகத்து அறமும் பொருளும் உணர்ந்தார்மாட்டு இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: ஞாலத்தின்கண் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்து அறிந்தார்மாட்டு இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: அறம், பொருள் என்பன ஆகுபெயர். செவ்வெண்ணின் தொகை, விகாரத்தால் தொக்கு நின்றது. இன்பம் ஒன்றையே நோக்கும் இன்ப நூலுடையார் இத்தீயொழுக்கத்தையும் 'பரகீயம்' என்று கூறுவராகலின், 'அறம் பொருள் கண்டார் கண் இல்' என்றார். எனவே அப்பேதைமை உடையார் மாட்டு அறமும் பொருளும் இல்லை என்பது பெறப்பட்டது. [இன்ப நூல்- காம நூல்]

'இவ்வுலகத்து அறமும் பொருளும் உணர்ந்தார்மாட்டு இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உலகத்து அறநூல் பொருள்நூல்களை ஆராய்ந்தறிந்தாரிடத்து இல்லை', 'இல்லறத்தின் அர்த்தத்தை அறிந்தவர்களிடம் இருக்காது', 'உலகத்திலே அறத்தின் இயல்பையும் பொருளின் இயல்பையும் அறிந்தவர்கள்பாற் காணப்பட மாட்டாது', 'உலகத்தில் அறநூலையும் பொருள் நூலையும் ஆராய்ந்தறிந்தாரிடம் இல்லை (பிறன் மனைவியை விரும்புவது அறநெறிக்கு மாறுபட்டது; பொருளுக்குக் கேடு; இன்பமும் விரும்பியவாறு அடைய முடியாது.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

உலகத்திலே அறம், பொருள் இயல்பை உணர்ந்தவர்களிடம் காணப்பட மாட்டாது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறன்பொருளாளை விரும்பும் மடமை உலகத்திலே அறம், பொருள் இயல்பை உணர்ந்தவர்களிடம் காணப்பட மாட்டாது என்பது பாடலின் பொருள்.
'பிறன்பொருளாள்' குறிப்பது என்ன?

இன்னொருவனுக்கு உரிமையாவாளை விரும்புவது மடத்தனம்.

இவ்வுலக அறம் தெரிந்தவர், இல்வாழ்க்கையின் பொருள் அறிந்தவர் - இவர்களிடம் பிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்பி வாழ்ந்துவரும் மடமை இல்லை.
பிறனுக்கு உரிமையான பெண்ணை அதாவது இன்னொருவரை மணந்து அவரது இல்லாளாக ஒழுகும் பெண்டிரை அறிவில்லாரே விரும்பி நடப்பர்.

ஞாலத்து அறம்பொருள்‌ கண்டார்கண் இல் என்று சொல்லப்பட்டது உலகத்தோடு ஒட்ட ஓழுகலறிந்தார்கண்‌ இல்லை என்பதைக் குறிப்பதற்காக.‌ பிறன் உடைமையை விரும்புதல் அறமற்ற செயல்; இல்வாழ்வின் பொருள் என்பது ஒருத்தனுக்கு ஒருத்தி என்று உலகத்து பல பண்பாடுகளின் ஆன்றோர் வகுத்த நெறியைச் சொல்வது. இவ்வறத்தையும் பொருளையும் அறிந்தவர்கள் உலகத்தோடு ஒட்ட ஒழுகுவர்; இவற்றை அறியாதவர்கள் பிறன் மனை விழைந்து அலைவர்; அவர்கள் மடையர்கள் என்கிறார் வள்ளுவர். தன் மனைவியைத் தவிர, தனக்கு உரிமையில்லாத பிற மகளிரை, அறம் பொருள் இவற்றை எண்ணாமல், தன் உடைமையாய் நோக்குதல் ஆகாது என்பதும் பிறன்மனைவிழைதல் ஒரு தீயஒழுக்கம் என்பதும் வலியுறுத்தப் பெறுகின்றன.
அறம்பொருள் கண்டார் என்ற தொடர்க்கு அறத்தின் பொருள் அறிந்தவர்களிடத்தில் என்பதாகவும் 'அறத்தையே உறுதிப் பொருளாகக் கொண்ட நல்லோரிடத்தில்' எனவும் உரை செய்தனர்.

இப்பாடலுக்குப் பரிதி 'பிறர் மனையாள் அழகுகண்டு விரும்புதல்' என்று கூறி 'அப்படி நயப்பவர்க்கு அறம், பொருள் நெறிகள் இல்லை; இன்பநெறி மட்டும் உண்டு' எனவும் உரைத்தார். வ உ சி 'பிறன் மனையாளைக் காதலித்தல் களவும், பாவமுமாம்' என இக்குறளுக்குக் கருத்துரைப்பார். 'பிறருடைய உரிமையில் தலையிடுதலும் பிறருக்குத் தீங்கு செய்தலே ஆகும். உலகத்தில் பிறருக்குத் தீங்கு செய்யக்கூடாது என்ற அறநூலின் முடிவையும் பிறருடைய உரிமையைக் கெடுக்கக்கூடாது என்ற பொருள் நூலின் முடிவையும் ஆராய்ந்து கண்டவர்களின் வாழ்க்கையில் பிறனுடைய மனைவியை விரும்பி ஒழுகும் அறியாமை இல்லை' என உரை காண்பார் மு வரதராசன். 'அறநூலையறியாததினால் பிறன் பொருளை நுகர்தல் தீவினை என்பதும், பொருள் நூலையறியாததனால் பிறன் மனையாள் பிறன் பொருள் என்பதும், தெரியாது போயின' என்பது தேவநேயப்பாவாணரின் விளக்கம்.

பரிமேலழகர் தனது விரிவுரையில் அறம்பொருள் செவ்வெண்ணின் தொகை எனக் குறித்துள்ளார், அறமும் பொருளும் என்று உம்மைவைத்து எண்ணாது அறம் பொருள் என்று எண்ணினதற்குச் செவ்வெண் என்று பெயர். இச் செவ்வெண் தொகைபெற்றே வரவேண்டும். அது தொகை பெறுங்கால் அறம் பொருள் இரண்டும் எனப் பெறும். தொகை மறைந்து வந்தமையின் இங்குச் செவ்வெண்ணின் தொகை விகாரத்தால் தொக்கு நின்றது என விளக்கமும் தந்தார் பரிமேலழகர்.

'பிறன்பொருளாள்' குறிப்பது என்ன?

'பிறன்பொருளாள்' என்றதற்குப் பிறனுடைய பொருளாயிருப்பவள், பிறர் மனையாள், தனக்கு உரியாள் அன்றியே தன் கணவனுக்கு உரியளாகி ஒழுகுகின்ற கற்பினாள், பிறனுக்குப் பொருளாம் தன்மையுடையாள், இன்னொருவனுக்கு உரிமைப் பொருளானவள், பிறன் உரிமையளாம் மனைவி, பிறன் மனைவி, பிறனது உடைமையாவாள், பிறனுக்குரிய மனைவி, அடுத்தவனுக்கு உரிமையான மனைவி, பிறனுக்கு உரிமையானவள், வேறொருவன் உடமையாகவுள்ளவள், அடுத்தவனின் உரிமை ஆகிய மனைவி, பிறனுடைய பொருளாகிய மனையாள் என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.

பிறன் மனைவியைக் குறிக்க வள்ளுவர் இங்கு பிறன் பொருளாள் என்ற தொடரைப் பயில்கிறார். பிறன் என்ற சொல்லுக்கு இன்னொருவன் என்பதும் பொருளாள் என்றதற்கு உரிமையானவள் என்பதும் நேர் பொருள். பிறன்பொருளாள் என்ற தொடர் இன்னொருவனுக்கு உரிமையானவள் எனப் பொருள்படும். ஒருவனுக்கு உரிய பொருளாவது அவ்வொருவனுக்கே பயன்‌படுதற்குரியது.
பிறன் பொருளாள் என்றது அடிமைப் பொருளையே குறிக்கின்றது என்றும் 'பிறன் பொருள்' என்ற சொல்பயன்பாடே ஏற்கத்தக்கது அல்ல என்றும் சிலர் கூறினர். இவர்கள் இத்தொடர்க்குப் பிறனுடைய பொருளாவாள் எனக்கொண்டு மனைவியானவள் கணவனது பொருளே அதாவது ஆடும் மாடும், தட்டுமுட்டும் போன்ற பொருள் போன்றதே என்றனர். இதை வன்மையாக மறுக்கும் தெ பொ மீனாட்சி சுந்தரம், 'இவர்கள் 'தம்பொருளென்ப தம் மக்கள்' என்பதற்கும் 'பொருளல்லவற்றைப் பொருள் என்றுணரும் மருள்' என்பதற்கும் 'பொருட்பொருளார்' என்பதற்கும் 'அருட்பொருள்' என்பதற்கும் என்ன பொருள் கூறுவார்கள்? 'இதனை ஒரு பொருளெனக் கருதேன்' என உலக வழக்கிற்குப் பொருள் என்னை? பொருள் என்றால் உறுதிப் பொருள் என்பதும் பொருள் அன்றோ? இல்லறத்தானுக்கு இல்லாள் உறுதிப்பொருள் ஆவாள் என்பதொன்று. அன்றியும் அன்பு மிக்கார் அன்புடைப் பொருளைப் புதையல் என்று புகழ்வார்; ஆதலின் அகமுடையானுக்குப் பெரும்புதையல் ஆவாள் மனையாட்டியே எனலாம்' என அடுக்கி மனைவியானவள் கணவனது அடிமைப்பொருளல்ல; அவள் அவனது வாழ்விற்கு உறுதிப்பொருள் ஆவாள் எனத் தெளிவுபடுத்துவார்.
'பிறனுடைய பொருளாய் இருப்பவள் என்ற மணக்குடவர் உரை பிறன் உடைமையால் அவன் வழியன்றிப்பிறன்வழி ஒழுகாக்கற்பினள் என்ற கருத்தையும் பிறனுடைய வாழ்வின் பொருளாக அதாவது வாழ்வின் இலட்சியமாக இருப்பவள் என்ற கருத்தையும் தந்து சிறப்பளிக்கிறது (தண்டபாணி தேசிகர்). 'தனக்கு உரியாள் அன்றியே தன் கணவனுக்கு உரியாளாகி' என்ற காலிங்கர் உரை விரும்புவனாகிய தனக்குஉரியள் அன்றி என்றும் வேறொருவனுக்குக் கணவனாய் உரிமையானவள் என்றும் குறித்துக் காட்டுகிறது.
சொ தண்டபாணிப்பிள்ளை 'பிறன் ஒருவனுக்குப் பொருள் போல உரியள் ஆனாள்' என்று பிறன்பொருளால் என்பதற்குப் பொருள் உரைத்தார். பிறன் பொருள் என்பது மனைவியானவள் தன் கணவனால் பொருட்படுத்தப்படுகிறாள்; அவனது ஆழ்மனத்தில் நிறைந்து நிற்கிறாள் என்ற கருத்துத் தருவது.

'பிறன்பொருளாள்' என்றது பிறனுக்கு உரிமையானவள் என்னும் பொருளது.

பிறனுடைய வாழ்வின் பொருளாயிருப்பவளை விரும்பும் மடமை உலகத்திலே அறம், பொருள் இயல்பை உணர்ந்தவர்களிடம் காணப்பட மாட்டாது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பிறனில் விழையாமை அறமும் பொருளுடையதுமாகும்.

பொழிப்பு

பிறனுக்கு உரியவளை விரும்பும் மடமை உலகில் அறம்பொருள் அறிந்தவரிடம் இருப்பதில்லை.