இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
(அதிகாரம்:இனியவை கூறல்
குறள் எண்:100)
பொழிப்பு (மு வரதராசன்): இனிய சொற்கள் இருக்கும்போது அவற்றைவிட்டுக் கடுமையான சொற்களைக் கூறுதல் கனிகள் இருக்கும்போது காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
|
மணக்குடவர் உரை:
பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல், பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.
பரிமேலழகர் உரை:
இனிய உளவாக இன்னாதகூறல் - அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்; கனி இருப்பக் காய் கவர்ந்தற்று - இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்.
('கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம். பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.)
இரா சாரங்கபாணி உரை:
இன்பத்தைத் தரும் இனிய சொற்கள் தன்னிடம் இருக்க, அவற்றைக் கூறாது ஒருவன் துன்பம் தரும் கடுஞ்சொற்களைக் கூறுதல், கனியும் காயும் ஓரிடத்தே இருக்கக் கனியை விடுத்துக் காயை விரும்பியது போலும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
பதவுரை: இனிய-இனிமையானவை; உளஆக--இருப்பனவாக; இன்னாத-இனியவை அல்லாத, தீயவை; கூறல்-சொல்லுதல்; கனி-பழம்; இருப்ப-உளவாயிருக்க; காய்-கனியாத காய்; கவர்ந்து-கொண்ட; அற்று-அத்தன்மைத்து.
|
இனிய உளவாக இன்னாத கூறல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர்க் கினியவாகச் சொல்லுஞ் சொற்க ளின்பத்தைத் தருதலைக் கண்டவன் இனிய சொற்கள் இருக்கக் கடிய சொற்களைக் கூறுதல்;
பரிப்பெருமாள்: கேட்டார்க் கினியவாஞ் சொற்களைக் கூறலாய் இருக்க இன்னாத சொற்களைக் கூறுதல்
பரிதி: நல்ல வார்த்தை இருக்கத் தீயவை கூறல்; .
காலிங்கர்: வேறொரு புறத்துப் போய் முயன்று தேட வேண்டாதபடி, இனியவாகிய சொற்கள் தனது நாவகத்து உளதாயிருப்ப மற்று இன்னாதனவற்றைப் பிறர்க்குச் சூழ்ந்து சொல்லுதல் எத்தன்மைத் தெனின்;
பரிமேலழகர்: அறம் பயக்கும் இனிய சொற்களும் தனக்கு உளவாயிருக்க, அவற்றைக் கூறாது பாவம் பயக்கும் இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்;
பரிமேலழகர் குறிப்புரை: 'கூறல்' என்பதனான் சொற்கள் என்பது பெற்றாம்.
'இனிய சொற்கள் தன்னிடம் இருப்ப, அவற்றைக் கூறாது இன்னாத சொற்களை ஒருவன் கூறுதல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இன்சொல் இருக்கவும் கடுஞ்சொல் கூறாதே', 'இனிய வார்த்தைகள் வேண்டிய மட்டும் இருக்கும்போது துன்பமான வார்த்தைகளைப் பேசுவது', 'இனிய சொற்களிருப்பவுங் கடுஞ் சொற்களை யொருவன் சொல்லுதல்' 'இன்பம் கொடுக்கும் இனிய சொற்களிருக்கவும் துன்பம் கொடுக்கும் கடுஞ் சொற்களைச் சொல்லுதல்', என்ற பொருளில் உரை தந்தனர்.
இனிய சொற்களிருக்கவும் துன்பந்தரும் இழி சொற்களைச் சொல்லுதல் என்பது இப்பகுதியின் பொருள்.
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பழமுங் காயும் ஓரிடத்தே யிருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.
பரிப்பெருமாள்: பழமுங் காயும் ஓரிடத்தே கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறர்க்கேயன்றித் தனக்கும் நன்றாகாது என்றது.
பரிதி: நல்ல பழம் இருக்க வேப்பங்காயைத் தின்பதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: நம் இல்லகத்து இனிய கனி உளவாய் இருப்ப வன்காயைப் புறத்துச் சென்று நுகர்ந்து விரும்பினாற்போலும்1. என்றவாறு.
பரிமேலழகர்: இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்.
பரிமேலழகர் கருத்துரை: பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக்கண்ணும் சென்றன. இனிய கனிகள் என்றது ஒளவை உண்ட நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது காஞ்சிரங்காய் போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம். இவை இரண்டு பாட்டானும் இன்னாத கூறலின் குற்றம் கூறப்பட்டது.
பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்டது போல' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'நல்ல பழம் இருக்க வேப்பங்காயைத் தின்பது போல' என்றார். 'கனி இருப்பக் காயைப் பறித்து நுகர்ந்து விரும்பினால் போலும்' என்று காலிங்கர் கூறினார். பரிமேலழகர் 'கனிகள் இருக்கக் காய்களை நுகர்வது போல்' என உரை செய்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'கனியை விடுத்துக் காயைக் கவரலாமா?', 'ஒரு புறத்தில் பழங்கள் வேண்டிய மட்டும் இருக்கப் பழத்தை விட்டுப் பச்சைக் காய்களைப் பறித்துக் கொள்வது போலத்தான்', 'இனிய பழங்கள் தன் கையிலிருக்கும்போது அவற்றை உட்கொள்ளாது இனியவையல்லாத காய்களைத் தின்னுதலை யொக்கும்', 'இனிய பழம் இருக்கவும் சுவை தராத காய்களை உண்டதை ஒக்கும்' என்றபடி பொருள் உரைத்தனர்.
பழம் இருக்கவும் காயைக் கொண்டது போல என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
இனிய சொற்களிருக்கவும் துன்பந்தரும் இழி சொற்களைச் சொல்லுதல், பழம் இருக்கவும் காய் கவர்ந்து அற்று என்பது பாடலின் பொருள்.
'கவர்ந்து' என்பதன் பொருள் என்ன?
|
இன்சொற்கள் தன்னகத்தே இருக்க இழிவான சொற்களைப் பேசுபவன் இரங்கத்தக்கவன்.
இனிய சொற்கள் இயல்பிலேயே அமைந்திருக்க, இனியவை அல்லாதவற்றைக் கூறுதல், கனிகள் கையில் இருப்ப, சுவையில்லாத காய்களைக் கொள்ளுதலை ஒக்கும்.
வேறொரு இடம் சென்று முயன்று தேட வேண்டாதபடி, இன்பம் தரும் சொற்கள் இயல்பாகப் பயன்படுத்தும்படியாக தமது நாவகத்தே உளவானாலும் சிலர் அதை நன்றாக உணர்ந்திருந்தாலும் இன்னாத சொற்களைக் கூறுகின்றனர். அவர்களது இப்பண்பை ஓர் உவமை மூலம் வள்ளுவர் இங்கு விளக்குகிறார். ஒருவன் முன்னால் தேர்ந்தெடுத்து நுகர்வதற்குச் சுவையான பழமும், பழுக்காத காயும் இருந்தால் அவற்றில் எதை எடுத்து அவன் சுவைப்பான்? பார்த்தவுடனேயே காய் என்றால் தின்பதற்குரியது அல்ல என்றும் பழம் என்றால் இனிமை பயக்கும் என்பதை எவரும் அறிந்துகொள்வர். அப்படியிருந்தும் அவன் காயை எடுத்து நுகர்வானானால் அது அவனது பேதைமையைத்தான் காட்டும். அதனால் இனிய சொற்களையே ஒருவன் பேசவேண்டும். இனிமை பயவாத சொல்லை உரைக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறார் வள்ளுவர்.
'இன்னாத கூறல்' என்பது இன்னாத சொற்களைக் கூறல் என்ற பொருளாகிறது. இன்னாத சொற்கள் என்பதற்குக் கடிய சொற்கள், தீய சொற்கள், இன்னாதனவற்றைப் பிறர்க்குச் சூழ்ந்து சொல்லுதல், பாவம் பயக்கும் இன்னாத சொற்கள், கடுமையான சொற்கள், பாபத்தை வரப்பண்ணப்பட்ட இன்னாத வசனங்கள், பொல்லாத வார்த்தை, ஒரு நற்பயனையும் தராத வன் சொற்கள், துன்பம் தரும் கடுஞ்சொற்கள், கடுஞ்சொல், கடுமையான வார்த்தைகள், இனிமையில்லாத சொற்கள், கொடிய சொற்கள், தனக்குத் தீதும் (பாவமும்) பிறர்க்குத் துன்பமும் பயக்கும் கடுஞ் சொற்கள் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
பலர் இன்னாத கூறல் என்றதற்குக் கடுஞ்சொற்கள் என்றே பொருள் கொண்டனர். கடுஞ்சொற்கள் பற்றி முந்தைய குறளிலே கூறப்பட்டுவிட்டது.
குறள் நடையமைப்பையும் உவமப் பொருளையும் நோக்கும்போது இங்கு சொல்லப்படும் இன்னாத சொற்கள் என்பது இனிமை பயவாத அல்லது இழிவான சொற்களைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. இழிசொற்கள் என்பது வெறுப்பூட்டக் கூடிய, பண்பாடற்ற, கீழ்மையான, நயமற்ற, இடக்கரான மொழியாகும்.
இழிசொற்கள் கேட்போர்க்குத் துன்பம் தருவன. எனவே அவை இன்னாத சொற்கள். சிலர் வழக்கமாகவே எந்த இடத்திலுமானாலும், யாரிடமானாலும், எதற்காகப் பேசுவதானாலும் கேட்கப் பொறுக்கமாட்டாத சொற்களையே பயன்படுத்துகின்றனர். இழிசொற்கள் பேசுவோர் அவற்றின் விரும்பத்தகாமையை அறிந்து வைத்திருந்தாலும் மீண்டும் மீண்டும் அவற்றையே கூறுவர். அவர்க்கு இன்னாத சொற்கள் அதாவது தீய சொற்கள், கெட்ட சொற்கள் கூறல் மேல் ஒரு ஈர்ப்பு இருக்கும் போலும். அதைத்தான் குறள் 'கவர்ந்து' என்ற சொல்லால் குறிக்கிறது. இழிந்த சொற்களையே எப்பொழுதும் பேசுபவன் கேட்போர்க்குத் துன்பம் விளைத்துத் தனக்கும் தீமையை வரவழைத்துக்கொள்கிறான். இன்சொல் கனிபோல ஒருவருக்கு இனிமை தரும். ஆனால் இழிசொல் கூறல் காய்போலப் பயனால் இனிமை பயவாது போகும். எனவே இன்னாத கூறல் நன்றாகாது எனச் சொல்லி இனிமை இல்லாத சொற்களின் மேல் உள்ள விருப்பம் நீங்கி, இனிய சொற்களின் மீது நாட்டம் கொள்ள வேண்டும் என்கிறது பாடல்.
கனியை விடுத்துக் காயைக் கவர்ந்தது போல என்ற உவமையை விளக்கிய காட்சிஅமைப்புகளிலிருந்தும், எந்தக் காய் சொல்லப்பட்டது, என்பதை ஊகித்தறிந்தனவற்றிலிருந்தும் காணப்படும் சுவையான சில உரைக்குறிப்புகள்:
- பழமுங் காயும் ஓரிடத்தே இருக்கக் கண்டவன், பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து.
- நல்ல பழம் இருக்க வேப்பங்காயைத் தின்பதற்கு ஒக்கும்.
- நம் இல்லகத்து இனிய கனி உளவாய் இருப்ப வன்காயைப் புறத்துச் சென்று நுகர்ந்து விரும்பினாற்போலும்.
- இனிய கனிகள் என்றது (ஆயுளை வளர்க்கும்) நெல்லிக்கனிபோல அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்றது (ஆயுளைக் கொள்ளும்}. காஞ்சிரங்காய் (எட்டிக்காய்) போல நஞ்சானவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல்.
- இனிய கனிகளும் தன் கைக்கண் உளவாயிருக்க, அவற்றை நுகராது காய்களை நுகர்ந்ததனோடு ஒக்கும்.
- கனியும் காயும் ஓரிடத்தே இருக்கக் கனியை விடுத்துக் காயை விரும்பியது போலும்.
- இனிய பழங்கள் நிறைந்த ஒரு மரத்தில் ஏறின ஒருவன் இனிப்புள்ள பழங்களைப் பறித்துக் கொள்ளாமல் அதிலுள்ள கசப்பும் புளிப்புமான காய்களைப் பறிப்பது போல
- உண்டுமகிழச் சுவைதரும் கனிகள் இருக்கும்போது அதைவிடுத்து கனிவற்ற, சுவையற்ற அல்லது கசக்கும் காய்களைக் கொள்ளுதல் போன்றது.
- நல்ல பழவகைகள் இருக்க, துவர்ப்பும், கசப்பும் மிக்க காய்களைத் தேடி உண்ணுவதுபோலாம்.
- கையகத்தே கனியிருக்க அதனை நுகராது அயலிடத்தே உள்ள காயைக் கவர்வது போலவும்.
- ஒருவன் தோப்புக்குச் சென்று மரத்தில் ஏறிப் பறித்துக் கொள்ளக்கூடிய கனியை உண்ணாமல், அவனே நள்ளிருள் போதில் யாரும் அறியா நிலைமையில் அயலார் தோப்பிற்குச் சென்று மாரி இரவில் மயங்கு இருள் வேளையில் உச்சமாய் ஓங்கிய மரத்தில் ஏறி திருட்டுத்தனமாய்க் காயைப் பறித்து-புளிக்கும் காயை-உவர்க்கும் காயை-பிஞ்சுக்காயை-கச்சல் காயை-பால் வழியும் காயை-பயந்து பயந்து தின்றதைப் போல.
- இவன் கையில் ஏற்கனவே நல்ல பழம் இருக்கிறது. இதைத் தின்று சுவைத்து மகிழாமல் கீழே போட்டுவிட்டு அடுத்த வீட்டுத் தோட்டத்திலே இருக்கிற காயைத் திருடப் போகிறான் போல.
- நல்ல இனிய கனிகள் கைவசம் இருக்கவும், யாரேனும் காய்களை விரும்பித் தேடிப் போய்க் கைப்பற்றி உண்பார்களா?
- இனியனவும் வாழ்நாளை நீட்டிப்பனவுமான கனிகளும் கைப்பனவும் சாவைத் தருவனவுமான காய்களும் ஒரு சரியாய்க் கைக்கு எட்டுவனவாக விருக்கவும், அவற்றுள் முன்னவற்றை விட்டுவிட்டுப் பின்னவற்றை மட்டும் பறித்துண்ட லொக்கும்
- உண்ண வேண்டிய சுவையான கனி தன் கையில் இருக்கும்போது மற்றவர் கையில் இருக்கின்ற காயை ஒருவன் போராடிப் பிடுங்கித் தின்பது போல.
- கனிகள் இருக்கக் காய்களைப் பறித்தாற் போலும்.
- கனிகள் இருக்கையில் காய்களைத் தேடுவதை ஒக்கும்.
- நல்ல பழம் இருக்க நச்சுக்காயை உண்பது போலாம்.
சுவையுள்ள பழங்கள் இருக்க அவற்றைவிட்டு இனியதல்லாத காய்களைத் தின்ன விரும்புவது போன்றது இன்பம் தரும் சொற்கள் உள்ளனவாகத் துன்பம் தரும் சொற்களைச் சொல்லுதல் என்பது உவமப் பொருள்.
|
'கவர்ந்து' என்பதன் பொருள் என்ன?
கவர்ந்து என்ற சொல்லுக்குக் கைக்கொண்ட, தனதாக்கிக் கொண்ட, நுகர்ந்த, தின்ற, விரும்பிய, விரும்பித்தின்ற பறித்த எனப் பலவாறு பொருள் உரைத்தனர்.
'காய்கவர்ந்த கள்வனேனே' என்று அப்பர் கூறியிருப்பதாலும், ‘உள்ளங்கவர் கள்வர்’ என்ற வழக்கு பற்றியும் கவர்தல் என்பதற்கு திருடுதல் என்ற பொருளும் கூறினர்.
கள்வர் பயனுள்ள பொருளைத்தான் கவர்வர். பயனற்றதைப் பறிக்க வாரார். இன்சொல் என்ற அறம் கூற வரும் வள்ளுவர் அதைக் கள்வன் மேல் ஏற்றிக் கூறவும் மாட்டார். எனவே திருடுதல் என்ற பொருள் இங்கு பொருந்தாது.
‘கவர்பு விருப்பாகும்’ (சொல் 356) என்னும் தொல்காப்பிய நூற்பாவின்படி ‘கவர்ந்தற்று’ என்பதற்கு விரும்பினாற் போலும் என்று பொருள் கோடல் பொருந்தும் என்பார் இரா சாரங்கபாணி. தேவநேயப்பாவாணர் ''கவர்ந்தற்று' என்னும் சொல் மரங்களினின்று காய்கனிகளைப் பறிக்குஞ் செயலை நினைவுறுத்தும். கவர்தல் பறித்தல்; இங்குப் பறித்துண்டல்' என்பார்.
'கவர்ந்து' என்பதற்கு இங்கு விரும்பி, பறித்து, கைக்கொண்டு எனும் பொருள்கள் ஏற்கும்.
'கவர்ந்து' என்றது விரும்பிக்கொள்ளல் என்ற பொருளது.
|
இனிய சொற்களிருக்கவும் துன்பந்தரும் இழி சொற்களைச் சொல்லுதல், பழம் இருக்கவும் காயைக் கொண்டது போல என்பது இக்குறட்கருத்து.
இனியவை கூறல், இன்னாத கூறல் இவற்றில் எதைத் தேர்ந்துகொள்வது என்பதற்கு அறிவாராய்ச்சி தேவை இல்லை.
இனிய சொற்கள் இருக்கவும் இழிசொற்களைக் கூறுதல், கனி இருக்கக் காயை விரும்பிக் கொண்டது போலும்.
|