இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0099



இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

(அதிகாரம்:இனியவை கூறல் குறள் எண்:99)

பொழிப்பு (மு வரதராசன்): இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான கடுஞ்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?



மணக்குடவர் உரை: ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான். அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?

பரிமேலழகர் உரை: இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் - பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்; வன்சொல் வழங்குவது எவன்கொல் - அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி?
('இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர். கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.)

குன்றக்குடி அடிகளார் உரை: பிறர் கூறிய இன்சொல்லால் இன்பம் நுகர்ந்ததை அறிந்தவன், பிறரிடத்தில் வன்சொல்லை வழங்குவது ஏன்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் வன்சொல் வழங்குவது எவன்கொல்?

பதவுரை: இன்-இனிய; சொல்-மொழி; இனிது-இன்பம்; ஈன்றல்-பயத்தல்; காண்பான்-உணர்ந்து தெளிபவன், அனுபவித்தறிகின்றவன்; எவன்கொலோ-எதனாலோ, என்ன பயன் கருதியோ?; வன்-கொடிய; சொல்-மொழி; வழங்குவது-சொல்லுதல்.


இன்சொல் இனிதீன்றல் காண்பான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான்;
பரிப்பெருமாள்: ஒருவன் இனியவாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான்;
பரிதி: நல்ல வசனம் நன்மையே தரும்;
காலிங்கர்: இனிய சொல்லானது மற்று இவ்வாறு இனியது பயத்தலை நூல்களில் கேட்டிருக்கையன்றி, இம்மையே காண்கின்றவன்;
பரிமேலழகர்: பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவித்து அறிகின்றவன்;
பரிமேலழகர் குறிப்புரை: 'இனிது' என்றது வினைக்குறிப்புப் பெயர்.

''இனிய சொற்கள் இன்பத்தைப் பயத்தலைக் காண்பான்'' என்று பொதுமையில் மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'இனிய சொல் இனிமை பயத்தலை நூல்கள் மூலம் அறிந்ததோடு நேரில் கண்டும்' என நூலளவைகளையும் காட்சியளவையையும் துணைக் கொண்டு பொருள் உரைத்தார். பரிமேலழகர் 'இன்சொல் தனக்கு இன்பம் பயத்தலை அனுபவிக்கிறவன்' என்ற உரை தருவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இன்சொல் தனக்கு நலந்தருவதைக் கண்டவன்', 'பிறர் கூறும் இன்சொல் தனக்கு இன்பம் தருதலை உணர்பவன்', 'இனிய வார்த்தைகளால் இனிய பயன்கள் உண்டாவதைத் தினந்தினம் கண்ணுக்கு முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிற மனிதன்', 'பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பம் பயத்தவை உணருகின்றவன்', என்ற பொருளில் உரை தந்தனர்.

இன்சொற்கள் இன்பம் உண்டாக்குவதை துய்த்து உணர்பவன் என்பது இப்பகுதியின் பொருள்.

எவன்கொலோ வன்சொல் வழங்குவது?:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?
பரிப்பெருமாள்: அதற்கு மறுதலையாகிய வன்சொல்லை வழங்குவது எப்பயனை நோக்கியோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது இனிமை கூறாதார்க்கு ஒரு பயனும் இல்லை என்றது.
பரிதி: அதுவறிந்து பொல்லாத வசனம் கூறுவான் அஃதேதெனில், பாவத்தின் வழி என்றவாறு. [வசனம் - சொல்]
காலிங்கர்: இனியதனைவிட்டு இனிதல்லாத வன்சொல்லை யாவர் மாட்டும் செலுத்துவது என்னகொலோ? எனவே, யாவதும் ஒருபயனுமில்லை என்றவாறு. [யாவதும் - ஒரு சிறுதும்]
பரிமேலழகர்: அது நிற்கப் பிறர்மாட்டு வன்சொல்லைச் சொல்வது என்ன பயன் கருதி?
பரிமேலழகர் குறிப்புரை: கடுஞ்சொல் பிறர்க்கும் இன்னாதாகலின், அது கூறலாகாது என்பது கருத்து.

'வன்சொல்லை யாவர் மாட்டும் செலுத்துவது என்ன பயன் கருதி?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஏன் பிறரிடம் கடுஞ்சொற் கூறுகிறான்?', 'பிறரிடம் கடுஞ்சொல் கூறுவது எதற்காக? ', 'எதற்காகத் துன்பத்தை உண்டாக்குகிற கடுஞ்சொற்களைப் பேசுகிறானோ தெரியவில்லை', 'பிறர்பால் வன்சொற்களைச் சொல்லுவது எதனாலோ?', என்ற பொருளில் உரை தந்தனர்.

கடுஞ்சொற்களைப் பேசுவது எதனாலோ? என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
இன்சொற்கள் இன்பம் உண்டாக்குவதை துய்த்து உணர்பவன் வன்சொல் வழங்குவது எதனாலோ? என்பது பாடலின் பொருள்.
வன்சொல் வழங்குவதால் உண்டாகும் குற்றம் என்ன?

துன்பம் காண்பதற்காகவா வன்சொற்கள் கூறுகிறாய்?

பிறர் கூறும் இனிய சொற்கள் தனக்கு இன்பம் தருவதனை உணரும் ஒருவன் கடுஞ்சொற்களை வழங்குவது எதற்காக?
இன்சொல்லின் இனிமையை உணர்ந்தும் கடுஞ்சொல் பேசும் மக்களைப் பார்த்து வள்ளுவர் ஆற்றாமை கொள்கிறார். இனியவை கூறல் இன்பம் பயப்பதை உணர்கின்றவன் ஏன் கடுஞ்சொற்கள் கூறுகிறான் எனக் கேட்கிறார். இன்சொல் இனிதீன்றல் என்ற தொடர், பிறர் இனிய பேச அது தனக்கு இனிமை பயத்தல், தான் இனிய பேச பிறர் இன்புறுதல், தனது இன்சொல் தனக்கே இனிமை உண்டாக்குதல் என்ற மூன்று வகையான இன்பங்களைக் குறிப்பதாகக் கொள்ள இயலும்.
மற்றவர் இனிமையாகப் பேசும்போது அதைத் துய்த்து மகிழ்கின்றவன் தான் பிறரிடம் பேசும்போது வன்சொற்களைக் கூறி மற்றவர் மனம் துன்பப்படச் செய்து தானும் ஏன் துன்பப்பட வேண்டும் என்று வியக்கிறார் வள்ளுவர். அதற்குக் காரணம் அறியாதார் போல் அவர் இரங்குவதும் தெரிகிறது.

காண்பான் என்பது இன்சொல் இனிமை தருகின்றது என்பதைத் துய்த்து அறிகிறவனைக் குறித்தது. இதற்குக் கடின முயற்சியோ வேறு தனித்தகுதியோ திறமையோ வேண்டியதில்லை. உலக மாந்தர் அனைவருமே நாளும் அப்படி அனுபவித்து உணர்பவரே.
'காண்பான்' என எதிர்காலத்தாற் கூறப்பட்டதால் கண்டு கொண்டேயிருப்பவன் என நயங்காணுவார் திரு வி க. அவர் மொழிவது: "ஆசிரியர்க்குக் "கண்டான்" என்று கூறவும் மனமெழவில்லை. அவர் "காண்பான்" என்று கூறி மகிழ்வெய்துகிறார். 'காண்பான்', அநுபவிப்பவனை -அநுபவித்துக் கொண்டிருப்பவனை- உணர்த்துவது. அநுபவத்திலிருந்து ஆசிரியர் எடுத்துக் காட்டியுள்ளது ஊன்றி நோக்கத்தக்கது."
'"கொலோ" என்னுஞ்சொல் நெஞ்சைக் கவர்கிறது. அதன் இனிமையையும் நாகரிகத்தையும் என்னென்று சொல்வேன்!' என்று பாராட்டி மகிழ்கிறார் திரு வி க. மேலும் அவர் ''வன்சொல் வழங்குவது எத்தன்மைத்தோ? வன்சொல் வழங்குவதும் உண்டாகுங்கொல்? என்ன வியப்பு? வன்சொல் வழங்குவது என்ன பயன் அளிக்கும்? துன்பத்தைக் காணுதற்கா? என்று எள்ளியவாறாம்; வன்சொல் வழங்குவது எப்பயன் கருதி? துன்பம் கருதியா என்று இரங்கியவாறாம்' என்று பலதிறக் கருத்துக்களை உள்ளடக்கியதாக இத்தொடர்க்கு விளக்கம் தருகிறார்.

தம்மை மற்றவர்கள் நிலையில் வைத்துப் பார்க்குமாறும் தான் எதை விரும்புவானோ அதைப் பிறர் திறத்துச் செய்யவேண்டும் என்ற கருத்தை அடிக்கடி சொல்பவர் வள்ளுவர்: வணிகர்கள் பிறர் பொருளையும் தம்முடையது போலக் கருதி தமக்கு ஏற்படும் பொருளாக்கம் கேடு குறித்து எவ்வளவு கவனம் எடுத்துக் கொள்கிறார்களோ அவ்வளவு கவனத்தைப் பிறர் பொருள் திறத்திலும் காட்டி வாணிபம் செய்ய வேண்டும் என்று வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோல் செயின் (நடுவுநிலைமை 120) என்ற குறளிலும், ஒருவன் தன்னின் மெல்லியான் ஒருவனை நலிய எண்ணுங்கால் தன்னைவிட வலியான் ஒருவன் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையை எண்ணுதல் வேண்டும் என வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து (அருளுடைமை 250) என்பதிலும், தன்னுயிர்க்குத் துன்பம் தருவன எவை என்பதைப் பட்டறிவினால் உணரும் ஒருவன் அச்செயல்களை பிறர் திறத்துச் செய்யாதொழிதல் வேண்டும் என தன்னுயிர்க்கு இன்னாமை தான்அறிவான் என்கொலோ மன்னுயிர்க்கு இன்னா செயல் (இன்னாசெய்யாமை 318) என்ற பாடலிலும் எனவும் கூறினார்.
அவைபோன்று இங்கும் வேண்டப்படுவது தன்னைப் பிறரிடத்து வைத்துப் பார்க்கவல்ல கற்பனையாற்றலே. இவ்வாறாக காட்சி அளவை உத்தி கொண்டு வன்சொல் தவிர்க்க என்பது அறிவுறுத்தப்பட்டது.

வன்சொல் வழங்குவதால் உண்டாகும் குற்றம் என்ன?

வன்சொல் என்றதற்கு வன்சொல். பொல்லாத வசனம், பொல்லாத வார்த்தை, வன்சொற்கள், கடுஞ்‌சொல், கடுமையான வார்த்தைகள், இனிமைக்கு அயலான சொற்கள், கடிய சொல், கொடுஞ்சொற்கள், கடுமையான பேச்சு என்றவாறு பொருள் கூறினர் உரையாளர்கள். இன்சொல்லுக்கு மறுதலையானது வன்சொல். இது பெரிதும் உரக்கக் கூறப்படும் வசைச்சொற்களையும் சுடுசொற்களையும் குறிப்பதாம்.

வன்சொல் பேசுவது என்ன பயன் கருதியோ எனச் சொல்லப்பட்டதால் அது துன்பத்தைத் தரும் என்பது தெளிவாகிறது. வன்சொல் மகிழ்ச்சியைக் கொல்வது; நோய் செய்வது; அச்சமூட்டுவது. இன்சொல் என்னும் தண்ணீராலேதான் வாழ்க்கை சிறக்கும். வன்சொல் என்னும் கொதிநீரால் வாழ்க்கை என்னும் பயிர் தழைக்காது. அழுக்காறு, அவா, வெகுளி ஆகிய தீமைகளைத் துணைக் கொண்டு வருவது வன்சொல். வன்சொல் கூறல் தன்னலத்தில் தோன்றுவது. தன் நலம் கேடுறுமோ என்ற அச்சம் வரும்போது தன்னைக் காத்துக்கொள்ள எழுவது. வாழ்வில் ஏமாற்றங்களும் தோல்விகளும் சூழும்போதும் கடுஞ்சொல் தோன்றும். வன்சொற்களினால் எந்தவித நன்மையும் ஏற்படுவதில்லை. அவை அன்பைப் பொசுக்கி உறவினைக் கெடுக்க வல்லன; கருத்து வளர்ச்சியையும் மாற்றங்களையும் தடுக்கும் ஆற்றலையும் கொண்டன. நெருப்புபோல சுட்டு ஆறாத வடுக்களை உண்டாக்கக் கூடியன. துன்பத்தையும், எதிரிகளையும், கெடுதலையும் மட்டுமே பெற்றுத்தரவல்ல வன்சொல் மறத்தைக் கைக்கொள்ள வேண்டாம் என்கிறது பாடல்.

இன்சொற்கள் இன்பம் உண்டாக்குவதை துய்த்து உணர்பவன் கடுஞ்சொற்களைப் பேசுவது எதனாலோ? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இனியவை கூறலால் இன்பம் துய்ப்பவன் தானும் இனிய சொல் அல்லவா கூறவேண்டும்!

பொழிப்பு

இனிய சொற்கள் இன்பம் தருதலை உணர்பவன் கடுஞ் சொற்கள வழங்குவது ஏன்?