சிறுமையுள் நீங்கிய இன்சொல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள்; [புன்மை-இழிதகைமை, அற்பத்தனம்]
பரிப்பெருமாள்: புன்மையுள் நின்று நீங்கிய இனிய சொற்கள்;
பரிதி: பாவம் நீங்கிய புண்ணியத்து இன்சொல்;
காலிங்கர்: ('சிறுமையினீங்கிய' பாடம்). குற்றத்தினின்றும் நீங்கிய இனிய சொற்களைச் சொல்லுவதால் ஒருவன்;
பரிமேலழகர்: பொருளால் பிறர்க்கு நோய் செய்யாத இனிய சொல்;
'சிறுமை நீங்கிய இன்சொல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். சிறுமை என்ற சொல்லுக்கு புன்மை என்று மணக்குடவர்/பரிப்பெருமாள்,
பாவம் என்று பரிதி, குற்றம் என்று காலிங்கர். பொருளால் பிறர்க்கு விளையும் நோய் என்று பரிமேலழகர், விளக்கம் கூறினார்கள்.
இன்றைய ஆசிரியர்கள் 'சிறுதன்மை இல்லாத இன்சொல்', 'குற்றமற்ற இன்சொல் ஒருவனுக்கு', 'மனத்தில் கெட்ட எண்ணம் இல்லாமல் இனிய சொற்களையே பேசினால்', 'பிறரை இழிவுபடுத்தாத இனிய சொற்கள்', என்ற பொருளில் உரை தந்தனர்.
சிறுதன்மை இல்லாத இன்சொல் என்பது இப்பகுதியின் பொருள்.
மறுமையும் இம்மையும் இன்பம் தரும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.
பரிப்பெருமாள்: இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இன்பமாவது மக்களாயும் தேவராயும் நுகரப்படுவது.
பரிதி: இம்மைக்குச் செல்வமும் மறுமைக்கு முத்தியும் கொடுக்கும் என்றவாறு.
காலிங்கர்: இம்மை மறுமை இரண்டின் கண்ணும் இன்பத்தைப் பெறுவான் என்றவாறு.
பரிமேலழகர்: ஒருவனுக்கு இருமையினும் இன்பத்தைப் பயக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: மறுமை இன்பம் பெரிதாகலின், முன் கூறப்பட்டது. இம்மை இன்பமாவது, உலகம் தன் வயத்ததாகலான் நல்லன எய்தி இன்புறுதல். இவை இரண்டு பாட்டானும் இருமைப்பயனும் ஒருங்கு எய்துதல் வலியுறுத்தப்பட்டது.
'இம்மையின் கண்ணும் மறுமையின் கண்ணும் இன்பத்தைத் தரும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'எப்பிறப்பினும் இன்பம் தரும்', 'மறுமையிலும் இம்மையிலும் இன்பம் தரும்', 'அது இம்மை மறுமை இரண்டுக்கும் நன்மை உண்டாக்கும்', 'இவ்வுலகிலும் இறந்த பின்னும் இன்பம் தரும்' என்றபடி பொருள் உரைத்தனர்.
மறுபிறப்பிலும் இப்பிறப்பிலும் இன்பம் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.
|