இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0097



நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:0097)

பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை பயக்கும்.

மணக்குடவர் உரை: பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும், குணத்தினின்று நீங்காத சொல் என்றவாறு.

பரிமேலழகர் உரை: நயன் ஈன்று நன்றி பயக்கும் - ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்: பயன் ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் - பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல்.
(நீதி: உலகத்தோடு பொருந்துதல். 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.)

சி இலக்குவனார் உரை: பயனைக் கொடுத்து இனிய பண்பினின்றும் நீங்காத சொல், பிறர் விரும்பும் இயல்பை அளித்து நன்மையைக் கொடுக்கும்..


பொருள்கோள் வரிஅமைப்பு:
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்.

பதவுரை: நயன்-விரும்பப்படுதல், விரும்புதல், இனிமை, இன்பம்; ஈன்று-விளைத்து; நன்றி-நன்மை; பயக்கும்-உண்டாக்கும்; பயன்-பயன்; ஈன்று-கொடுத்து; பண்பின்-குணத்தினின்றும்; தலைப்பிரியா-நீங்காத; சொல்-மொழி.


நயன்ஈன்று நன்றி பயக்கும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து;
பரிப்பெருமாள்: பிறரால் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து;
பரிப்பெருமாள் குறிப்புரை: நயனீன்று பயனீன்று எனக் கூட்டுக.
பரிதி: இனிய வசனம் இம்மைக்கு நல்லோர் என்னும்; மறுமைக்கு முத்தியும் கொடுக்கும்;
காலிங்கர்: ('நயனின்று' பாடம்.) தாம் ஒழுகுகின்ற ஒழுக்கம் நழுவாது நிலைபெற்று, மற்றுமுள்ள நன்மையும் பயக்கும்; அது யாதோவெனில்;
பரிமேலழகர்: ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்;
பரிமேலழகர் குறிப்புரை: நீதி: உலகத்தோடு பொருந்துதல்.

இப்பகுதிக்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'பிறர் விரும்புவர்; பொருள் கிடைக்கும்; அறம் விளையும்' எனப் பொருள் உரைத்தனர். பரிதி 'இம்மையில் நற்பெயரும் மறுமையில் வீடுபேறும் கிடைக்கும்' என்று கூறினார். காலிங்கர் நயனின்று என்று பாடம் கொண்டதால் தாம் ஒழுகுகின்ற ஒழுக்கம் நழுவாது நிலைபெற்று, நன்மையும் பயக்கும் என உரை தருகிறார். பரிமேலழகர் 'இம்மைக்கு நீதி, மறுமைக்கு அறம் பொருளால் பிறர்க்கு நன்மை கிடைக்கும்' என்று உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் பிறர்க்கு நன்மையைத் தந்து ஒருவர்க்கு இன்பம் நல்கி', 'பேசுகிறவனுக்கு அருள் குணத்தை உண்டாக்கி', 'பயனைக் கொடுத்து, பிறர் விரும்பும் இயல்பை அளித்து நன்மையைக் கொடுக்கும்', 'நன்மை விளைப்பனவாய் ஒருவனுக்கு நியாய வாழ்க்கையையும்', என்ற பொருளில் உரை தந்தனர்.

விரும்பப்படுதல் விளைத்து, நன்மை உண்டாக்கி, என்பது இப்பகுதியின் பொருள்.

பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல்:

இப்பகுதித் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறத்தினையும் பயக்கும் குணத்தினின்று நீங்காத சொல் என்றவாறு
பரிப்பெருமாள்: அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல் என்றவாறு
பரிப்பெருமாள் குறிப்புரை: இது குணத்தோடு கூறல் வேண்டும் என்பதூஉம். அதனானே அறம் பொருள் இன்பம் மூன்றும் எய்தலாம் என்பதூஉம் கூறிற்று.
பரிதி: விருந்துக்கு இனியவை சொல்வானாகில் என்றவாறு.
காலிங்கர் ('பயனின்று' 'தலைப்பிரியார்' பாடம்): தன் நாவானது பயனில்லாதனவற்றைச் சொல்லாமை. பிறர்க்கு நிலைபெறும். அதன் பொருட்டுப் பயனான இனிய மரபுடையார் சொல்லானது என்றவாறு.
பரிமேலழகர்: பொருளால் பிறர்க்கு நன்மையைக் கொடுத்து இனிமைப் பண்பின் நீங்காத சொல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பண்பு' என்பது ஈண்டு அதிகாரத்தான் இனிமைமேல் நின்றது. தலைப்பிரிதல் - ஒரு சொல் நீர்மைத்து.

'குணத்தினின்று நீங்காத சொல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'பயனின்று' 'தலைப்பிரியார்' எனப் பாடம் கொண்டமையால் சற்று மாற்பாடான உரை நல்குகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறத்தினையும் தரும் இனிமைப் பண்பின் நீங்காத இன்சொல்'', 'பிறருக்கு நன்மை உண்டாகும்படி சொல்லுவதன் பண்பு கெடாதபடி பேசுகின்ற இனிய வார்த்தைகள்', 'பல நன்மைகளை செய்யும் இனிய பண்பினின்றும் நீங்காத சொல்', 'அறப்பயனையும் தரும் இனிமை நீங்காதனவாயுள்ள சொற்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

பயன் தரும் பண்பின் நீங்காத சொல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பயன் தரும் பண்பின் தலைப்பிரியா சொல்லானது விரும்பப்படுதல் விளைத்து, நன்மை உண்டாக்கும் என்பது பாடலின் பொருள்.
'பண்பின் தலைப்பிரியாச்சொல்' என்றால் என்ன?

பண்பு பிறழாமல் இன்சொல் கூறுக.

நல்ல பண்பிலிருந்து விலகாத சொற்கள் கூறுதல் விரும்பத்தக்கவனாக ஆக்கி, கேட்போருக்கும் சொல்லுவோனுக்கும் இன்பத்தையும் நன்மையையும் அளிக்கும்.
இன்சொல்லின் தன்மையாக பண்பில் தலைப்பிரியா சொல் என இங்கு குறிக்கப்படுகிறது. இப்பாடலை, பண்புடன் கூடிய சொற்களைக் கூறுதல் பயன்ஈன்று, நயன்ஈன்று, நன்றிபயக்கும் என வாசிப்பது குறட்கருத்தை அறிய உதவும்.
பயன்ஈன்று என்பதிலுள்ள பயன் என்றது அறப் பயன் என்ற பொருளில் வந்தது. அதாவது அறப்பயன் பெறுவது பேசப்படுகிறது. இனிய சொல் என்று கருதி பயனில சொல்லக் கூடாது. சொல்லுவது நன்மைதானே என்ற எண்ணத்தில் பண்பற்ற முறையிலும் சொற்களை சொல்லிவிட வேண்டாம்; கடுஞ்சொற்கள் சொல்லும் நன்மையை இல்லாது செய்துவிடும். இன்சொல் பேசும் சிலர் அறிவுரை கூறும்போதுகூட ஆர்வ மிகுதியால் பண்பு கெடப் பேசிவிடுவர். அதாவது தீய சொற்களையும், தீங்கு விளைவிக்க கூடிய சொற்களையும் உதிர்த்துவிடுவர். அப்பொழுது விரும்பிய பயன் விளையாது. பண்பற்ற தகாத சொற்கள் இல்லாது உரைப்பவர்க்கு அறப்பயன் கிடைக்கும் என்கிறது பாடல்.
நயன், நன்றி என்ற சொற்கள் பலபொருளுக்கு இடமளிப்பவை.
‘நயன்’ என்பதற்கு விரும்பப்படுதல், நீதி, ஒழுக்கம், இன்பம், நியாய வாழ்க்கை, அன்பு, சித்தகத்தி, நன்மை, செல்வம் என்ற பொருள்கள் காணப்பெறுகின்றன. இவற்றுள் நீதி என்பது பரிமேலழகர் கொண்ட பொருள். நீதி என்பது உலகத்தோடு பொருந்துதல் என்று அதற்கு அவர் விளக்கமும் தருகிறார். இதனால் நயன் என்றது அற நூல்களில் விதிக்கப்பட்டன மட்டும் அல்லாமல் உலகத்திற்கு ஒத்து நடத்தலுமாம் என்பது பொருளாகிறது. இன்சொல் கூறுபவர் பிறரால் விரும்பப்படுவராதலால். இங்கு மணக்குடவர் கொண்ட விரும்பப்படுதல் என்ற பொருள் சிறப்பதால் 'நயன் ஈன்று' என்ற தொடர்க்கு விருப்பத்தை உருவாக்கி எனப் பொருள் கொள்ளப்படுகிறது.
'நன்றி’ என்பதற்கு அறம், நன்மை, துறவறம், புகழ்ச்சி, இன்பம் எனப் பொருள் கூறினர். இவற்றுள் அறம் என்பது இங்கு பொருந்தும். பண்புள்ள சொற்களைச் சொல்பவர்கள் பயன் இல்லாத சொற்களைக் கூறமாட்டார்கள். அவை நயமானதாகவும் அமையும்; கூறுவோருக்கும் கேட்போர்க்கும் மகிழ்ச்சியையும் தரும்; நன்றி பயக்கும் அதாவது நன்மையையும் உண்டாக்கும். பண்பிலிருந்து நீங்காத சொற்கள் குற்றம் பெருகாமல் காக்கவல்லவை. குற்றத்தைத் தடுப்பது மட்டுமன்றி அச்சொற்கள் பலநற்செயல்களை ஊக்குவித்தலும் கூடும். நன்மையை ஊக்க வல்ல இன்சொற்களின் ஆற்றலே நன்றி பயக்கும் எனச் சொல்லப்பட்டது.
பண்பின் தலைப்பிரியாச் சொல்லின் விளைவுகளில் மூன்று இப்பாடலில் கூறப்பெறுகின்றன. அவை: நயன், பயன், நன்றி என்பன.

பக்குவமாய்ச் சொல்லப்பட்ட பண்பான சொற்கள் அவற்றைக் கூறுபவனுக்கு விரும்பப்படுதலான வாழ்க்கையையும் அறப்பயனையும் தரும்.

'பண்பின் தலைப்பிரியாச்சொல்' என்றால் என்ன?

'பண்பின் தலைப்பிரியாச்சொல்' என்றதற்குக் குணத்தினின்று நீங்காத சொல், விருந்துக்கு இனிய சொல், பிறர்க்கு நிலைபெறும் பொருட்டுப் பயனான இனிய மரபுடையார் சொல், இனிமைப் பண்பின் நீங்காத சொல், நல்ல வசனம், நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், (இனிமையாகிய) குணத்தினின்று நீங்காத சொல்‌, பண்பை விட்டு விலகாத இனிய சொல், இனிமைப் பண்பிற் சிறந்ததுமாகிய இனிய சொல், உயர்பண்புச் சொல், குறிப்பிட்ட குணம் நீங்காமலிருக்கிற இனிய சொல், இனிமைப் பண்பில் இருந்து நீங்காத சொல், இனிமை நீங்காதனவாயுள்ள சொற்கள், இனிய பண்பினின்றும் நீங்காத சொல், இனிமையான தன்மையிலிருந்தும் நீங்காமலிருக்கும் சொல், பண்பிலிருந்து சிறுதும் விலகாததுமான இன்சொல், இனிமைப் பண்பினின்றும் நீங்காத சொல், பேசினவனுடைய பண்பாட்டினின்றும் சிறுதும் பிரியாத இன்சொல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இதில் சொல்லப்பட்டுள்ள பண்பு இனிமைக் குணத்தைக் குறிக்கும் என்றும் இனியவைகூறல் என்பது அதிகாரமாதலின், அதிலிருந்து இனிமைப் பண்பு வருவித்து உரைக்கப்பட்டது என்றும் கூறினர். அதனினும் பண்பிலிருந்து நீங்காத சொல்லை இன்சொல்லின் தன்மையாகக் கொள்வது நன்று. இன்சொல்லைப் பண்பற்ற முறையிலும் சொல்லுதல் கூடும். எனவே பண்புடன் இன்சொல் கூறுக எனச் சொல்லப்பட்டது.
தலைப்பிரிதல் என்பது என்பது தலைக்கூடுதல் என்பதற்கு எதிர்ச் சொல். இது இரண்டு சொல்லாகத் தோன்றினாலும் அது இங்கு நீங்குதல் என்னும் பொருளை உணர்த்தும் ஒரு சொல்லின் தன்மையதாகும். இங்கு தலை என்பது பொருள் உணர்த்தாது நின்றது. 'தலையை' இடப்பொருளாக் கொண்டு 'பண்பிற்றலைப் பிரியா' என்பதற்குப் பண்பினிடத்தினின்றும் நீங்கா என்று பொருள் கூறுவோருமுளர். தலைப்பிரியா என்றது முற்றும் பிரியாமை என்ற பொருளில் உள்ளது.
இன்சொல் என்று வாளா கூறாது, பண்பின் தலைப்பிரியாச் சொல்' என்று சொல்லப்பட்டது ஏன்? ஒருவர் உதட்டளவில் இன்சொல் பேசி உள்ளத்தில் வஞ்சிக்கும் குணத்துடனும் பேசலாம். இன்சொல் கூறுபவர் அதை ஏளனமாகவும் இரட்டைப் பொருள் தருமாறும் பேசலாம். ஆவேசமாக எதையும் கூறுதலும் பண்புடன் கூடியதாகா. இவையெல்லாம் நன்மை பயவா. எனவே பண்பு பிரியாத சொற்கள் எனப்பட்டது.

பண்பின் தலைப்பிரியாச் சொல் என்ற தொடர்க்கு பண்பிலிருந்து நீங்காத சொல் என்பது பொருள்.

இனிமைப் பயன் தரும் பண்பு நீங்காத சொல்லானது விரும்பப்படுதலை விளைத்து, நன்மைகள் பல உண்டாக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பண்பும் பயனும் கொண்ட இனியவைகூறல் நயமும் நலமும் தரும்.

பொழிப்பு

இனிமைப் பயன் தரும் பண்பான சொல்லானது விரும்பப்படுதலை உண்டாக்கி நன்மைகள் விளைக்கும்.