இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0096அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:96)

பொழிப்பு (மு வரதராசன்): பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய அறம் வளர்ந்து பெருகும்.

மணக்குடவர் உரை: நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே அறமல்லாதன தேய அறம் வளரும்.

பரிமேலழகர் உரை: நல்லவை நாடி இனிய சொலின் - பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்; அல்லவை தேய அறம் பெருகும் - அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும்.
(தேய்தல் : தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல். "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நல்லவற்றைக் கண்டு இனிமையாகக் கூறின் தீமை தேயும்; அறம் வளரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லவை நாடி இனிய சொலின் அல்லவை தேய அறம்பெருகும்.

பதவுரை: அல்லவை-அறமல்லாதன, தீயன, பாவங்கள்; தேய-குறைய; அறம்-நற்செயல்; பெருகும்-மிக வளரும்; நல்லவை-நல்லனவற்றை, நன்மை பயப்பன; நாடி-ஆராய்ந்து, வேண்டி, விரும்பி, கண்டு; இனிய-இனிமையானவையாக; சொலின்-சொன்னால்.


அல்லவை தேய அறம்பெருகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறமல்லாதன தேய அறம் வளரும்;
பரிப்பெருமாள்: அறமல்லாதன தேய அறம் வளரும்;
பரிதி: பாவங் குறையும், புண்ணியம் பெருகும்;
காலிங்கர்: அல்லவையாகிய பாவமானது மிகவும் தேய்ந்து அறமானது மிகவும் பெருகும். அஃது யாதோ எனின்;
பரிமேலழகர்: அவனுக்குப் பாவங்கள் தேய அறம் வளரும்.
பரிமேலழகர் குறிப்புரை: தேய்தல்: தன் பகை ஆகிய அறம் வளர்தலின் தனக்கு நிலையின்றி மெலிதல்.

'அறமல்லாதன தேய அறம் வளரும்' என்று தொல்லாசிரியர்களுள் மணக்குடவர்/பரிப்பெருமாள் உரை செய்தனர். 'பாவங் குறையும், புண்ணியம் பெருகும்' என்றார் பரிதி. 'பாவங்கள் தேய அறம் வளரும்' என்றபடி காலிங்கரும் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீயவை தேய அறம் வளரும்', 'பாவங்கள் குறைந்து புண்ணியம் அதிகமாகும்', 'அவனது குற்றம் குறைந்து குணம் வளரும்', 'தீமை தருவன குறைய அறமானது வளரும்', என்ற பொருளில் உரை தந்தனர்.

தீமை தருவன குறைய அறம் வளரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நல்லவை நாடி இனிய சொலின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே.
பரிப்பெருமாள்: நல்லவான சொற்களை யாராய்ந்து இனியவாகச் சொல்லுவானாயின் அதனானே.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நல்லவை ஆராய்ந்து கூறவேண்டும் என்பதும் அதனாற் பயனும் கூறிற்று.
பரிதி: இனிமையாகிய இன்சொல் சொல்லின் என்றவாறு
காலிங்கர்: தனக்கும் பிறர்க்கும் இம்மை மறுமை பயக்கும் இனிய சொற்களை ஆராய்ந்து சொல்ல வல்லனாயின் என்றவாறு.
பரிமேலழகர்: பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை மனத்தான் ஆராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: "தவத்தின்முன் நில்லாதாம் பாவம்" (நாலடி.51) என்பதூஉம் இப்பொருட்டு. நல்லவை நாடிச் சொல்லுங்காலும் கடியவாகச் சொல்லின், அறன் ஆகாது என்பதாம். இதனான் மறுமைப்பயன் கூறப்பட்டது.

'நல்ல சொற்களை ஆராய்ந்து இனிமையாக சொன்னால்' என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'இன்சொல் சொல்லின்' என்று பரிதியும் 'தனக்கும் பிறக்கும் இம்மை மறுமை பயக்கும் இனிய சொற்களை ஆராய்ந்து சொல்லவல்லனாயின்' என்று காலிங்கரும் 'பொருளால் பிறர்க்கு நன்மை பயக்கும் சொற்களை ஆராய்ந்து இனியவாகச் சொன்னால்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நன்மை தரும் சொற்களை ஆராய்ந்து ஒருவன் தேன் ஒழுகப் பேசுவானாயின், அவனுக்கு', 'நல்ல எண்னத்தோடு நல்ல சொற்களையே பேசினால்', 'ஒருவன் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை ஆராய்ந்து அவற்றை இனிய முறையில் சொல்லுவானாயின்', 'நன்மை பயக்கும் சொற்களை ஆராய்ந்து இனியனவாகச் சொன்னால்' என்றபடி பொருள் உரைத்தனர்.

'நன்மை தரும் சொற்களைக் கண்டு ஒருவன் இனிமையாகப் பேசுவானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நன்மை தரும் சொற்களைக் கண்டு ஒருவன் இனிய சொலின் தீமை தருவன குறைய அறம் வளரும் என்பது பாடலின் பொருள்.
'இனிய சொலின்' எப்படி அறம் வளரும்?

இன்சொற்கள் பேசினால் குற்றம் குறைந்து குணம் பெருகும்.

பிறருக்கு நன்மை உண்டாகும் சொற்களை, விரும்பி இனிமையான தன்மையில் ஒருவன் சொல்லுவானேயானால், தீமைகள் அருகி, அறம் வளர்ந்து பெருகும்.
நல்ல சொற்கள் தீய சொற்கள், இனியவை, இன்னாதவை இவற்றைப் பகுத்து, அல்லாதவற்றைத் தவிர்த்து, நன்மைதரக்கூடியவற்றை இனிமையாகப் பேசினால், தீயன தேய்ந்து அறம் பெருகும் என்கிறது இக்குறள். நல்லவற்றை எண்ணிப் பேசவேண்டும்; அவற்றையும் இனிய பொருள் பொதிந்த சொற்களால் பேசினால் தீயவை மறைந்து நன்மைகள் வளரும்.
அல்லவை என்றது நல்லவை அல்லனவாகிய செயல்கள் என்ற பொருளில் வந்தது. தீயவை என்னாது அல்லவை என்னும் மென்சொல்லால் குறிக்கப்பெற்றது.
இப்பாடலில் சொல்லப்படும் நன்மை யாருக்கானது? சொல்பவர்க்கு மட்டும் இன்சொல் நலந்தருவதல்ல; அது அதனைக் கேட்போர்க்கும் நலந்தருவதாகும். கேட்பவரும் இன்சொல் வயப்பட்டு அதனால் நல்லன நாடிச் செயல்படுவர். இது நீண்டு பொது நன்மைக்கும் வழிவகுக்கிறது.

பிறரொடு பேசும் முறையை விளக்குவது 'இனியவை கூறல்' அதிகாரம். அன்பு கலந்ததாய், விருப்பம் தோன்ற, வஞ்சனை அற்றதாய் முகமலர்ந்து பேசப்படுவன இனியவை கூறலாம். பேச்சு இனிமையாக இருந்தாலும், நோக்கமும் நல்லதாக இருக்க வேண்டும். கெட்டதை நாடி இனிய சொன்னாலோ, அல்லது நல்லவை நாடி இனிமை இல்லாதவற்றைச் சொன்னாலோ, அவற்றால் அறத்துக்கு எதிரிடையான விளைவுகள்தாம் உண்டாகும். நல்லதை நினைத்து கூடச் சிலர் கடுமையாகப் பேசிவிடுவர்; அப்படி சொன்னால் கேட்பவன் அந்த நல்லதை செய்யாமல் போனாலும் போகலாம். அதுபோல் தீய சொற்களையும் இனிமை தோன்றக் கூறிவிடலாம். ஆனால் இவை அறமாகக் கருதப்படா. நன்மையானவற்றை இனிமையாகப் பேசினால் அறம் தோன்றும்.

அறத்தின் அதாவது நற்செயல்களின் விளைவாகக் கிடைக்கும் பயனைப் 'புண்ணியம்' என்றும் தீயசெயல்களின் விளைவுகளைப் 'பாவம்' என்றும் கூறுவது மரபாகும். எனவே நல்லவை என்பதைப் புண்ணியம் என்றும் அல்லவை என்றதைப் பாவம் என்றும் கொள்வர்.
நாடி என்ற சொல்லுக்கு விரும்பி என்றும் ஆராய்ந்து எனவும் பொருள் கொள்ளலாம். 'நல்லவை நாடி' என்றால் பிறர் நன்மைகளை விரும்பி அல்லது எண்ணி என்று பொருள்.

'இனிய சொலின்' எப்படி அறம் வளரும்?

இனிய முறையில் பேசினால் அறம் பெருகும் எனச் சொல்கிறது பாடல்.
இனிய சொலின் என்பதற்கு 'இனிய சொற்களைச் சொன்னால்' என்பது பொருள். இத்தொடரமைவு மக்கள் பெரிதும் அவ்வாறு சொல்வதில்லை என்பதை விளங்க வைக்கிறது. இனிய பயனுள்ள சொற்களை எப்பொழுதும் சொல்வது ஒரு கடிய முயற்சிதான், ஆனாலும் தொடர்ந்து அதைப் பயில்வார்க்கு அதுவே அவருடைய இயல்பாக மாறிவிடும். இப்பண்பை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொண்டால், தீயவை மறைந்து அறம் மலரும். நல்லவற்றைச் சொல்லும்போது இன்சொல்லால் கூறவேண்டும் என்றதால் கடுஞ்சொற்கள் களையப் பெறுகின்றன. நா காக்காமல் வீசப்படும் வன்சொற்களே மறச் செயல்கள் நேர்வதற்கு பெரிதும் ஏதுக்கள் ஆகின்றன.
'நல்லவை நாடி' என்றதால் பிறருள்ளத்தில் நல்லெண்ணங்களை யுண்டாக்கத்தக்கக் கருத்துக்களைத் தேர்ந்து எனக் கொள்ளலாம். அக்கருத்துக்களைக் கூறும்போது இன்சொற்களால் சொல்க என்கிறார் வள்ளுவர். இன்சொற்கள் பேசினால் கேட்டோர் உள்ளம் பண்பட்டு அவற்றை ஏற்கும். அவை பலநற்செயல்களை ஊக்குவித்தலும் கூடும். ஒருவரின் நோக்கமறிந்து அவருக்கு நன்மைதருமாறு, அன்பொழுக இனிய சொற்களால் சொன்னால், அவர் அதற்கிணங்கி நன்மைகளே செய்வார்.
இனி இனிய சொல் பேசுவது நல்லிணக்கத்தை வளர்க்கும்; மனித உறவுகள் மேம்பாடுற்று மாந்தரிடை உராய்வுகள் குறையும்; இணக்கமான சூழ்நிலைகள் உருவாகி எல்லாம் நல்லவையாக நிகழும். ஒளி விளங்கினால் இருள் நீங்குதல் இயற்கை; நன்மைகள் நேரும்போது அறமல்லாதவை தாமாகவே மறையும்.

பரிமேலழகர் உரையில் சுட்டப்பெறும் நாலடியார் பாட்டு அறநெறியில் நிற்பார்முன் தீமைகள் நில்லா' எனக் கூறுகிறது. அப்பாடல்:
விளக்குப் புக இருள் மாய்ந்தாங்கு, ஒருவன்
தவத்தின்முன் நில்லாதாம் பாவம்; விளக்கு நெய்
தேய்விடத்துச் சென்று இருள் பாய்ந்தாங்கு, நல் வினை
தீர்விடத்து நிற்குமாம், தீது.
(நாலடியார் அறத்துப்பால் 6. துறவு, 51 பொருள்: ஓரிடத்தில் விளக்கொளி வர அங்கே இருந்த இருட்டு நீங்கினாற்போல, ஒருவனது தவமுயற்சியின் முன் அவன் செய்ததீவினை நில்லாது, விளக்கின் நெய் குறையுமிடத்தில், சென்று இருட்டு மீண்டும் போய்ப் பரவினாற்போல, நல்வினை நீங்குமிடத்தில் தீவினை சென்று சூழ்ந்து நிற்கும்.)

நன்மை தரும் சொற்களைக் கண்டு ஒருவன் இனிமையாகப் பேசுவானாயின் தீமை தருவன குறைய அறம் வளரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

நல்ல நோக்கத்துடன் இனியவைகூறல் அறமாம்.

பொழிப்பு

நல்லவற்றைக் கண்டு இனிமையாகக் கூறினால் தீயவை தேய அறம் வளரும்.