இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0093



முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொல் இனதே அறம்

(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:93)

பொழிப்பு (மு வரதராசன்): முகத்தால் விரும்பி - இனிமையுடன் நோக்கி - உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும்

மணக்குடவர் உரை: கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.

பரிமேலழகர் உரை: முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி - கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி; அகத்தான் ஆம் இன்சொலினதே அறம் - பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம்.
('நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: ஒருவனைக் கண்டபோது முகத்தால் விருப்பத்தோடு இனிமையாக நோக்கி மனம் ஒன்றிய இன்சொல்லை இயம்புவதே அறம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் .இன் சொலினதே அறம்

பதவுரை: முகத்தான்-முகத்தினால்; அமர்ந்து-விரும்பி, விருப்பத்தோடு, (மகிழ்ச்சி) பொருந்தி; இனிது-இனிதாக; நோக்கி-பார்த்து; அகத்தான்-மனத்திடத்ததாகிய, ஆன்-(3ம் வேற்றுமை உருபு) கருவிப் பொருளில்; ஆம்-ஆகும் இன்சொலினதே--இன்சொற்களைச் சொல்லின், இனிய சொல்லுதலின் கண்ணதே; அறம்-அறம், நல்வினை.


முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி;
பரிப்பெருமாள்: கண்ணாலே பொருந்தி, இனிதாக நோக்கி;
பரிதி: யாரையும் கிருபையினாலே பார்த்து; [கிருபையினாலே-கருணையோடு]
காலிங்கர்: கேட்டவர்க்குச் சில சொல்லுமிடத்துத் தம்முகத்தினால் இனிதாக நோக்கி;
பரிமேலழகர்: கண்டபொழுதே முகத்தான் விரும்பி இனிதாக நோக்கி;

'தம்முகத்தினால் இனிதாக நோக்கி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முகமலர்ந்து இனிமையாகப் பார்த்து', 'முகமலர்ச்சியோடு இனிமை தரப் பார்த்து', 'முகமும் முகமும் மலர இனிமையாகப் பார்த்து', 'கண்ட பொழுதே முகத்தான் விரும்பி இனிமையாகப் பார்த்து' என்ற பொருளில் உரை தந்தனர்.

முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து என்பது இப்பகுதியின் பொருள்.

அகத்தானாம் இன்சொல் இனதே அறம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.
பரிப்பெருமாள்: மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுதானே யறமாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஆம் என்பதனை இறுதியிற் கூட்டுக. இதனானே மனத்தோடு கூடாத இன்சொல் அறமாகாது என்றவாறாயிற்று. இனிமை சொல்லுங்கால் மனத்தோடு கூறுதலும், நல்லன ஆராய்ந்து கூறுதலும் தாழ்ந்து கூறுதலும் யார் மாட்டும் கூறுதலும், குணத்தொடு கூறுதலும் வேண்டுமாகலின் மனத்தொடு கூறவேண்டும் என்பதூஉம் அதுதானே அறமாவது என்பதூஉம் கூறினார். [கூடாத-பொருந்திவராத]
பரிதி: மனமகிழ்ந்து சொல்லின், அதுவன்றோ தன்மம் என்றவாறு.
காலிங்கர்: பதறாது தனித்திருந்து இருவர் நெஞ்சமும் அமையாத இனிமையைத் தருவதாகிய இன்சொற்களைச் சொல்லின் மற்று அதுவே அறமாவது என்றவாறு.
பரிமேலழகர்: பின் நண்ணிய வழி, மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே அறம். [நண்ணிய வழி-மிக அண்மையில் வந்தபோது]
பரிமேலழகர் குறிப்புரை: 'நோக்கி' என்னும் வினையெச்சம் 'இன்சொல்' என அடையடுத்து நின்ற முதல்நிலைத் தொழிற் பெயர் கொண்டது. ஈதலின் கண்ணது அன்று என்றவாறு. இவை இரண்டு பாட்டானும் இன்முகத்தோடு கூடிய இன்சொல் முன்னரே பிணித்துக் கோடலின், விருந்தோம்புதற்கண் சிறந்தது என்பது கூறப்பட்டது.

'மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின் அதுவெ அறமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளத்தோடு சொல்லுக; அதுவே அறம்', 'மனப்பூர்வமாக இனிய வார்த்தைகளைச் சொல்லுவதே அறங்களின் அடிப்படை', 'உள்ளத்தோடு கூடிய இனிய சொற்களைச் சொல்வதே இனியவை கூறும் அறமாகும்', 'பின்னர் உள்ளன்போடு இனிய சொற்களைச் சொல்லுதலின் முறைமையில் அறம் உள்ளது' என்றபடி பொருள் உரைத்தனர்.

உள்ளன்போடு இனிய சொற்களைச் சொல்வதே அறமாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து அகத்தானாம் இன்சொலினதே அறமாகும் என்பது பாடலின் பொருள்.
'அகத்தானாம் இன்சொலினதே' என்றால் என்ன?

உள்ளன்போடு இன்சொற்கள் கூறுவதே ஓர் அறம்தான்.

முகத்தினால் விருப்பம் காட்டி, இனிமையாகப் பார்த்து, உளமார்ந்த இன்சொற்கள்‌ பேசும்போது அறம் திகழும்.
இதுதான் அறம் என்று குறிப்பிட்டு சொல்லப்படும் குறட்பாக்களுள் ஒன்று இது.
முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து மனத்திலும் ஒன்றி நின்று இனிமையான சொல்லைக் கூறுதலும் அறம் என்று கூறுகிறது இப்பாடல். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்.. (குறள் 34) அதாவது மனத்தின்கண் குற்றம் இல்லாது இருத்தலே எல்லா அறமுமாம்... என்று அறத்திற்கு வரையறை செய்தார் வள்ளுவர். இங்கு, எளிதில் எல்லோராலும் கடைப்பிடிக்கக்கூடிய, உள்மனத்துள் மாசில்லாது வெளிவரும், இன்சொல்லினால் இயற்றப்படும் அறம் கூறப்படுகிறது. இனியவை கூறும் பண்பைக் குறள்பனுவலில் பலமுறை கூறியுள்ளார் வள்ளுவர். அதை இங்கு அறம் என்ற மிக உயர்ந்த நிலைக்கு ஏற்றி மகிழ்கிறார் அவர்.

முகத்தான் அமர்ந்து: உள்ள நெகிழ்ச்சியைக் காட்டுவது முகமாதலால் முகத்தான் அமர்ந்து என்பது முதலில் கூறப்பட்டது. வந்தவரிடம் உரையாடும்போது வரவேற்பவர் விருப்பம் இல்லாத முகத்தோடு இருந்தால், வந்தவர்க்கு பேசுவதில் மனத்தடை உண்டாகிவிடும். எனவே மலர்ந்த முகத்துடன் காணப்பட வேண்டும். முகமலர்ச்சி கண்வழியே தெரியும் என்பதால் மணக்குடவர் கண்ணாலே பொருந்தி என என உரை வரைகிறார். ஒருவருடன் மேலும் மேலும் பழக வேண்டுமென்ற உந்துதலை உண்டாக்குவது அவரது முகமலர்ச்சியேயாகும்.
இனிது நோக்கி: முகமும் முகமும் கலக்கும்போது நோக்கும் பார்வையில் இனிமை தோன்றவேண்டும் என அடுத்து சொல்லப்படுகிறது. முகத்தை கடுமையாக வைத்துக் கொண்டு பேசுவதில் பொருளில்லை. 'நோக்கி' என்னும் சொல்லிற்குக் 'கண்ணால் பார்த்து' என்று பொருள் கூறும் அளவில் நில்லாது 'கண்ணாலும் கருத்தாலும் பார்த்து' என்று உரைப்பார் திரு வி க.

முகத்தான் அமர்ந்து, இனிது நோக்கி அகத்தானாம் இனியவை கூறவேண்டும் என்கிறது பாடல். அதாவது உள்ளன்போடு இனிய சொல்லவேண்டும்.
மாசில்லா மனதில்தான் அன்பு மலர்ந்து, அது இன்சொற்களைப் பேசவும் வைக்கும். இன்முகம் காட்டலும் உடன் உளம் நிறைய இனிய சொற்களைச் சொல்லுதலும் மக்களைப் பிணித்து மகிழ்விக்குந் தன்மையன.
முகமலர்ச்சி, அன்பானபார்வை, இனிய பேச்சு உடையாரிடம் யாவரும் நெருங்கிப் பேச விரும்புவர்.

ஈதல் அறம் என்று அற நூல்கள் பலவும் கூறும். இதனால் அறம் என்று சொல்லைக் கேட்டதும், பிறருக்கு ஏதேனும் ஒன்றைக் கொடுத்து உதவுவது என்பதுதான் பலருக்கும் நினைவில் தோன்றும். கொடுப்பது செல்வம் படைத்தவர்களுகளுக்கே எளிதானது. இப்பாடலில். எல்லாரும் செய்யவல்ல இனியவை கூறலை அறம் என்ற நிலைக்கு கொணர்கிறார் வள்ளுவர். நாளும் உலகவாழ்க்கையில் பல்வேறு நிலையினரோடு பழகும் சமயங்களில் அவர்களிடம் மலர்ந்த முகம் காட்டி, பார்வையில் இனிமை கூட்டி, உள்ளங்கனிந்த சொல்லைக் கூற வேண்டும். அவ்வளவே அறம் என்கிறார் அவர்.

'இன்சொல் சொல்லுதனிடத்து அறம் என்பதிலுள்ள நுணுக்கம் நெஞ்சைக் கவர்கிறது. இப்பாவிலுள்ள சொல் அமைவும், கருத்து நுணுக்கும் பொருளாழமும், இவைகள் ஈனும் அமைதியும் அகத்திணையார்க்கு விருந்தாவன. முகத்தானமர்தல்-மலர்தல்; இனிது நோக்கல்-மணங்கமழ்தல். இன்சொல்-தேன்பிலிற்றல். இன்சொல்லினிடத்தாகிய அறம்-சுவைத்தல். முகனமர்தலில் அன்பும் இனிது நோக்கலில் அருளும் ஒன்றி அகத்தானாம் இன்சொல்லினதாகிய அறமாய்க் கனிந்து நிற்றல் காண்க' என இப்பாடலைப் போற்றி உவப்பார் திரு வி க.

இன்சொல் பேசும் மெய்ப்பாடு இக்குறளில் படம் பிடித்துக் காட்டப்படுகிறது.

'அகத்தானாம் இன்சொலினதே' என்றால் என்ன?

'அகத்தானாம் இன்சொலினதே' என்றதற்கு மனத்தோடே பொருந்திய இன்சொல் சொல்ல வல்லவனாயின், சொல்லின், பதறாது தனித்திருந்து இருவர் நெஞ்சமும் அமையாத இனிமையைத் தருவதாகிய இன்சொற்களைச் சொல்லின், மனத்துடன் ஆகிய இனிய சொற்களைச் சொல்லுதலின் கண்ணதே, மனத்திலே தயையுடனே9 கூடி நல்ல வசனங்களைச் சொல்லுகிறதே, மனமகிழ்ந்து இன்சொல் நவில்வதன்றோ, மனமும் வாக்கும் ஒத்து இனிய சொல்லைச் சொல்லுதல் அதுவே, உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே, மனத்தோடு பட்டதாகிய இனிய சொற்களைச் சொல்லுத விடத்தையுடையதே, உள்ளத்தின் ஆழத்திலிருந்து ஓடிவரும் இன்சொற்களைப் பேசுவதே, அகம் மலர்ந்த நிலையில் இனிய சொற்களைச் சொல்லுதல், உள்ளத்தோடு சொல்லுக; அதுவே, மனம் ஒன்றிய இன்சொல்லை இயம்புவதே, மனப்பூர்வமாக வெளிவருகிற இனிய சொல்லைச் சேர்ந்ததுதான், உள்ளத்தோடு கூடிய இனிய சொற்களைச் சொல்வதே இனியவை கூறும், மனமார்ந்த இனிய சொற்களைச் சொல்லுமிடத்தேதான், உள்ளன்போடு இனிய சொற்களைச் சொல்லுதலின் முறைமையில், மனமுவந்து தோன்றும் இனிய சொற்களைச் சொல்வதே, மனத்தின் ஆழத்திலிருந்து இன்சொல் மொழிதலே, அக மலர்ச்சியோடு கூடிய இனிய சொற்களைச் சொல்லுதலை யுடையதே, மனத்தினால் நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணும் நினைவை இனிய சொல்லினால் காட்டும் அவ்வளவே என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அகத்தானாம் இன்சொலினதே என்பதற்கு உள்ளத்தால் கூடி இன்சொல்லினிடத்தது என்பது பொருள். அகத்தான் என்றது உள்ளத்தால் எனப்பொருள்படும்; ஆம் என்பது ஆகும் என்ற பொருளது. இன் சொலினதே என்ற தொடர்க்கு இன்சொல்லைச் சொல்லுதலினிடத்தே எனவும் இன்சொல் சொல்லுமிடத்ததே எனவும் பொருள் கூறுவர்.
இன்சொல் பேச்சளவில் இனியதாக இல்லாமல் உள்ளத்திலிருந்து பிறப்பதாயும் இருத்தல் வேண்டும். அகத்தானாம் இன்சொலினதே என்றது அகம் உவந்து இன்சொற்களைச் சொன்னால் அதுவே எனப் பொருள்படும். உள்ளத்திலே கள்ளத்தைக் கொண்டு உதட்டிலே தேன் போன்ற இனிய சொற்களை முகமலர்ந்து இனிதுநோக்கி உரைத்தாலும் அறமாகாது என்பது பெறப்பட்டது.

பரிப்பெருமாள் 'மனத்தோடு கூடாத இன்சொல் அறமாகாது' எனச் சொல்லி 'இனிமை சொல்லுங்கால் மனத்தோடு கூறுதலும், நல்லன ஆராய்ந்து கூறுதலும் தாழ்ந்து கூறுதலும் யார் மாட்டும் கூறுதலும், குணத்தொடு கூறுதலும் வேண்டுமாகலின் மனத்தொடு கூறவேண்டும்' எனத் தெளிவாக இத்தொடரை விளக்கினார்.
காலிங்கர் 'இருவர் நெஞ்சமும் அமையாத இனிமையைத் தருவதாகிய இன்சொல்லின்'’ என இத்தொடர்க்கு உரை செய்துள்ளார். இவர் அகத்தானாம் என்பதற்கு 'அகத்தானா' எனச் சொற்சிதைவு செய்து பொருள் கண்டிருப்பார் என்பர். காலிங்கர் உரைக்குத் தண்டபாணி தேசிகர் 'சொல்வானும் கேட்பானும் ஆகிய இருவர் நெஞ்சமும், இன்சொல்லைச் சொல்லிப் போதும் என்றும், கேட்டுப் போதும் என்றும் அமையாத வண்ணம் இன்சொல்லைச் சொல்லின்' எனக் கூறி 'அமுதங்கூட உண்பார்க்குப் போதும் என்ற தெவிட்டலை உண்டாக்கும். இன்சொல் அத்தகைய அமைதியைத் தராது.. மேலும் மேலும் சொல்ல வேண்டும், கேட்க வேண்டும் என்ற எழுச்சியை இருவர் மாட்டும் தரும் என்று ஒரு புதுமைக் கருத்தைப் பொதுமையின் வழங்குகிறார்' என விளக்கமும் செய்வார்.

'அகத்தானாம் இன்சொலினதே' என்ற தொடர் அகத்தானாகும் இன்சொல் சொல்லுதனிடத்து என்ற பொருள் தரும்.

முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளன்போடு இனிய சொற்களைச் சொல்வது அறமாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இனியவைகூறல் ஒரு மகிழ்ச்சியூட்டும் காட்சியாகப் படைக்கப்பட்டு வழங்கப் பெறுகிறது.

பொழிப்பு

முகமலர்ந்து இனிமையாகப் பார்த்து உள்ளன்போடு இன்சொல் இயம்புவதே அறம்