இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0092அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:92)

பொழிப்பு (மு வரதராசன்): முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப் பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்

மணக்குடவர் உரை: மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின்.

பரிமேலழகர் உரை: அகன் அமர்ந்து ஈதலின் நன்று - நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று; முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின் - கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின்.
(இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: முகமலர்ந்து என்றும் இன்சொற் கூறின் அகமலர்ந்து கொடுப்பதிலும் சிறந்தது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
.அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனஅமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்

பதவுரை: அகன்-உள்ளம், நெஞ்சம்; அமர்ந்து-விரும்பி, மகிழ்ந்து; ஈதலின்-கொடுத்தலைவிட; நன்றே-நன்மையுடையதே, நல்லதாம்; முகன்-முகம்; அமர்ந்து-மலர்ந்து, இனியனாய்; இன்சொலன்-இனியசொல்லுடையவன்; ஆக-ஆகும்படி; பெறின்-பெற்றால்,


அகன்அமர்ந்து ஈதலின் நன்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனம் பொருந்திக் கொடுத்தலினும் நன்று;
பரிதி: மனமகிழ்ந்து சொர்ணதானங் கொடுப்பதைக் காட்டிலும்;
காலிங்கர்: அகமலர்ந்து ஒருவர்க்கு உபகாரம் செய்தலினும் மிகநன்று; அது யாதோவெனின்;
பரிமேலழகர்: நெஞ்சு உவந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று

'மனமகிழ்ந்து ஒருவற்கு வேண்டிய பொருளைக் கொடுத்தலினும் நன்று' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளம் மகிழ்ந்து ஒருவனுக்கு ஈதலைக் காட்டிலும் நல்லது', 'மனப்பூர்வமாகத் தான கொடுப்பதிலும் நல்லது', 'நெஞ்சுவந்து ஒரு பொருளைக் கொடுப்பதிலுஞ் சிறந்தது', 'மனம் விரும்பிக் கொடுத்தலின் நன்று', என்ற பொருளில் உரை தந்தனர்.

உள்ளம் விரும்பிக் கொடுத்தலின் நன்று என்பது இப்பகுதியின் பொருள்.

முகன்அமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முகம் பொருந்தி இனிமைச்சொல் சொல்ல வல்லவனாயின்
பரிதி: இன்சொல் விசேஷம் என்றவாறு.
காலிங்கர்: யாவர்க்கும் முகமலர்ந்து இனிய சொல் சொல்லுமவனாகப் பெறின்.
பரிமேலழகர்: கண்டபொழுதே முகம் இனியனாய் அதனொடு இனிய சொல்லையும் உடையனாகப் பெறின்.
பரிமேலழகர் கருத்துரை: இன்முகத்தோடு கூடிய இன்சொல் ஈதல் போலப் பொருள் வயத்தது அன்றித் தன் வயத்தது ஆயினும், அறநெஞ்சுடையார்க்கு அல்லது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்னும் கருத்தான், 'இன்சொலன் ஆகப் பெறின்' என்றார்.

'முகமலர்ந்து இனிய சொல் சொல்லும்வனாகப் பெறின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் முகம் மலர்ந்து இன்சொல்லும் இயம்புவனாக இருப்பின், அஃது', 'முகமலர்ச்சியோடு இனிய வார்த்தைகளைச் சொல்லுவது', 'முகமலர்ந்து இனிய சொற்களைச் சொல்லும் இயல்பு வாய்க்கப் பெற்றால், அது', 'கண்டபொழுது முகம் இனியனாய் இன்சொற்கள் பேசும் இயல்பு உடையனாய் இருக்கப் பெற்றால்' என்றபடி பொருள் உரைத்தனர்.

முகம் மலர்ந்து இன்சொல் பேசும் இயல்பு உடையனாய் இருக்கப் பெற்றால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முகம் மலர்ந்து இன்சொல் பேசும் இயல்பு உடையனாய் இருக்கப் பெற்றால், உள்ளம் விரும்பிக் கொடுத்தலின் நன்று என்பது பாடலின் பொருள்.
ஈதலைவிட இன்சொல் மேலானது என்றா சொல்லப்பட்டுள்ளது?

எந்தச் சூழ்நிலையிலும் முகம்மலர்ந்து இன்சொல் பேசுதல் நன்று.

முகமலர்ச்சியோடு இனிமையான சொற்களைச் சொல்லுங் குணம் கொண்டவனாக ஆகிவிட்டால், அது மனமகிழ்ச்சியோடு ஈயும் குணத்திலும் சிறந்ததாகும்.
ஈதல் சிறந்த அறம். ஒரு பொருளை முக உணர்ச்சி காட்டாமல், ஒரு சொல்லும் கூறாமல், கொடுத்தாலும் நல்லதுதான். நல்ல உள்ளத்துடன் கொடுப்பதையும் முகமலர்ச்சியுடன் கொடுப்பவர் மிகவும் பெருமைக்குரியவராவார். ஆனால் வள்ளுவர் நல்லுள்ளமுடையவராயினும் முகம் மலர்ந்து கொடுத்தாலும் இன்சொல் வழங்கிக் கொடுக்க வேண்டும் என்கிறார். சிந்தனையை வேறெங்கோ கொண்டு கடுமுகம் காட்டியோ வன்சொல் பேசியோ பொருள் கொடுத்தால் அதைப் பெறுபவருக்கு இன்பமாக இருக்காது. மனம் உவந்து கொடுப்பதை இன்சொல் பேசிக் கொடுக்க வேண்டும். இதை ஈதலைக் காட்டிலும் சிறப்பானது இனிய சொல் என இப்பாடல் மொழிகிறது.
அகனமர்ந்து ஈதலைவிட முகமலர்ந்து 'இன்சொல் கூறல் நன்று' என்று கூறாமல் 'இன்சொலனாகப் பெறின் நன்று' எனக் கூறப்பட்டது. ஏன்?
இன்சொல் பேசுபவனாக இருத்தல் எளிதன்று; அதற்குப் பெருமுயற்சி செய்தல் வேண்டும். இதனாலேயே 'இன்சொலன் ஆகப் பெறின்' எனச் சொல்லப்பட்டது. பெறின் என்ற சொல் அருமைப்பாட்டை உணர்த்த வந்தது. பரிமேலழகர் 'ஈகைக்குப் பொருளுடைமை வேண்டும். இன்சொல்லுக்கு அது தேவையில்லை. மனமிருந்தால் போதும். ஆனால் அறநெஞ்சம் வாய்த்தவருக்கே இன்சொல் கூற இயலும். மற்றவர்க்கு அது இயல்பாக இன்மையின் அதனினும் அரிது என்பதை உணர்த்தவே இன்சொலனாகப் பெறின் என்றார்' என விளக்கினார்.

ஈதலைவிட இன்சொல் மேலானது என்றா சொல்லப்பட்டுள்ளது?

இக்குறளை முதலில் வாசிக்கும்போது எவர் மனத்திலும் விரைந்தெழும் வினா 'இனியசொற்களை உடையராயிருத்தல் நல்லதே என்றாலும், அது எவ்வாறு ஈதலைவிட மேலாகும்?' என்பது.
கொடுக்காவிட்டாலும் இனிது பேசிமட்டும் உதவி கேட்டு வந்தவரை அனுப்பிவிடலாம்; அதனால் பெறும் பயன் ஈதலைவிடப் பன்மடங்காகும் என்று சிலர் இக்குறட்கு பொருள் கூறினர். கொடுப்பதற்கு வாய்ப்பும் வளமும் இருந்தும் ஏதும் கொடுக்காமல் இன்சொல்லும் இன்முகமும் இருந்தால் போதும் என்பது இனியவை கூறலைச் சிறப்பிப்பதாயினும் ஈதலைத் தடுப்பதுபோல் ஆகிவிடும். எனவே அதுவல்ல இக்குறள் கூற வந்தது. முகத்தில் உணர்ச்சிகள் ஏதும் காட்டாமலும் வெறும் சொல்லாலோ அல்லது ஒன்றும் சொல்லாமலோ ஒரு பொருளைக் கொடுத்ததாலும் அக்கொடையும் சிறந்ததுதான். ஆனால் அதைப் பெறுபவன் மனம் ஏதேனும் ஒரு சொல்லால் வடுபடச் சுளிக்கச் சொல்லிப் பொருள் தந்தால் அதில் பெருமை சேராது. கொடை ஏற்பவனுக்குப் பொருள் தேவையே பெரிது. ஆயினும் பொருளைவிட அகமும் முகமும் மலர்ந்த வரவேற்பையும் இன்சொற்களையுமே அவன் பெரிதும் விரும்புவான்.. இனிய மொழி வழங்குவதில் இழப்பு ஒன்றுமில்லை. பேசுபவர் மற்றும் கேட்பவர் இருவர் மனங்களும் குறைகள் ஏதுமின்றி இன்புறச் செய்யும் தன்மையுடையது இனிய சொல். இன்சொல் பேசுவதால் யாருக்கும் குறை ஏதும் இராது, இனிமையே சேரும். இன்முகத்தோடு இனிய சொல் கூறி, மனமுவந்து ஈவது என்பது மிகச் சிறப்பானதாகிறது.
இக்குறளின் நோக்கம் அறம் செய்பவனுக்கு இன்சொல்லும் இன்முகமும் இன்றியமையாதன என்பதை வலியுறுத்துவது ஆகும். ஈய வேண்டாம் இன்சொல் ஒன்றே போதும் என்று கூறப்படவில்லை. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு (புகழ் 231) என ஈத்துவக்கும் இன்பத்தை மிக உயர்த்திக் காட்டுபவர் வள்ளுவர். ஈதலைவிட இன்சொலனாக இருப்பது நன்று என இன்சொல் கூறுவதன் மேன்மையை இன்னும் உயர்த்துகிறார் அவர். கொடையினும் நன்றாதல் மகிழ்விப்பதும் இன்சொல் கூறலுமே என்பதுவே இக்குறள் வழங்கும் பொருள்.
'ஈதலை எதற்காக இங்குக் குறித்தல் வேண்டும்? வேறொன்றைக் குறித்தலாகாதா?' என்று வினவி அதற்கு 'ஈதல் அறக்கூறுகளுள் ஒன்று ஆனால் சிறந்தது; அது மனமாசற்ற முழு அறநிலைக்கு திறவு போன்றது; இத்துணைச் சிறப்பு வாய்ந்த ஈகையினும் சிறந்தது இன்சொல் என்பார் 'முகனமர்ந்தது இன்சொலனாகப் பெறின், அகனமர்ந்து ஈதலின் நன்றே' என்றார்' என விளக்கம் தந்தார் திரு வி க.

அதிகாரம் இனியவை கூறல். குறளின் சொல்லமைப்பை நோக்கும்போது இன்சொல் கூறுபவனாக எப்பொழுதுமே இருத்தல் நல்லது என்பதை வலியுறுத்துவதாகத் தெரிகிறது. இன்சொலன் ஆகப் பெறின் என்றதற்கு இன்சொலன் ஆகிவிட்டால் எனப் பொருள் கொண்டால் எங்கும் எப்பொழுதும் எந்தச் சூழ்நிலையிலும் இன்சொல் கூறுபவனாக இரு என அறிவுறுத்தவதாக அமையும்.

ஈதலைவிட மேலானது இன்சொல் என்பது மட்டும் இங்கு சொல்லப்படவில்லை. ஒருவன் என்றுமே இன்சொலனாக இருக்க வேண்டும் எனச் சொல்கிறது இது.

முகம் மலர்ந்து இன்சொல் பேசும் இயல்பு உடையனாய் இருக்கப் பெற்றால், உள்ளம் விரும்பிக் கொடுத்தலின் நன்று என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

யாண்டும் இனியவைகூறல் இயல்பைப் பெற்றுக்கொள்.

பொழிப்பு

முகம் மலர்ந்து இன்சொல் பேசுபவனாக இருப்பின், அது உள்ளம் மகிழ்ந்து ஒருவனுக்கு ஈதலைக் காட்டிலும் நல்லது.