இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0091இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்

(அதிகாரம்:இனியவைகூறல் குறள் எண்:91)

பொழிப்பு (மு வரதராசன்): அன்பு கலந்து வஞ்சம் அற்றவைகளாகிய சொற்கள், மெய்ப்பொருள் கண்டவர்களின் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.

மணக்குடவர் உரை: இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம்.
இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: இன்சொல் - இன்சொலாவன; ஈரம் அளைஇப் படிறு இலவாம் செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் - அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள்.
(ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: அன்பும் தூய்மையும் அறமும் உடைய உண்மையான சொல்லே இன்சொல்லாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

பதவுரை: இன்சொலால்-இனிய மொழிஆதல் (ஆதலின்), இனிய சொல்லாவது; ஈரம்-அருள், அன்பு, இரக்கம்; அளைஇ-கலந்து; படிறு-வஞ்சனை; இலவாம்-இல்லாதவையாம், இல்லாமலிருக்கின்ற; செம்பொருள்-உண்மைப் பொருள், அறம்; கண்டார்-உணர்ந்தவர்; வாய்ச்சொல்-மொழி, வாய்மை, வாய்மைச் சொல்.


இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம்;
பரிப்பெருமாள்: இன்சொலாதலானே அருளொடு பொருந்திக் குற்றமிலவாம்;
பரிதி: ஆபத்துக் காலத்துக்கு வைத்த உடைமைபோல் உதவும்;
காலிங்கர்: இனிய சொல்லுவாய்க் கேட்போர் நீர்மை விராவிப் பொய்யென்கின்ற பிற விகாரமும் இலவாம்; யாவை எனின்; [நீர்மை- தன்மை]
பரிமேலழகர்: இன்சொலாவன; அன்போடு கலந்து வஞ்சனை இலவாயிருக்கின்ற;
பரிமேலழகர்: குறிப்புரை: ஆல் அசைநிலை. அன்போடு கலத்தல் - அன்புடைமையை வெளிப்படுத்தல். படிறு இன்மை - வாய்மை. மெய்யுணர்ந்தார் ['இன்சொலால்' என்பதிலுள்ள ஆல்]

'இன்சொல்லாதலால் அருளொடு பொருந்திக் குற்றமிலவாம்' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். .

இன்றைய ஆசிரியர்கள் 'இன்சொல்லுடன் அன்பு கலந்து வஞ்சனைகள் இல்லாமல் இருக்கும்', 'இனிமையாகவும் அன்பு கலந்தனவாகவும் வஞ்சகநோக்கம் இல்லாதனவாகவும் இருக்கும். இதுதான் இனியவைகூறல்', 'இனிய சொல்லாவன அன்போடு கலந்து வஞ்சனையில்லாதனவாய்', 'இனிமை உடையுனவாய் அன்பு பொருந்திவஞ்சனை அற்றனவாய் இருக்கும்', என்ற பொருளில் உரை தந்தனர்.

இன்சொல்லானது அருளோடு கலந்து வஞ்சனை இல்லாததாயிருக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது. [கடிந்து - சினந்து]
பரிப்பெருமாள்: இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும்;
பரிப்பெருமாள் கருத்துரை: எனவே அவ்வாறு கூறாராயிற் குற்றம்போலத் தோன்றும் என்பது கருத்து. என்னை? நடுவு சொல்வான் ஒருவன் ஒருவனைத் தோல்வி சொல்லும் காலத்தும் இன்சொல்லானே கூறானாயின், அது குற்றமாய்த் தோற்றுமாதலால் இஃது ஒருவனைக் கடிந்து சொல்லவேண்டு மிடத்தும் இன்சொல்லாலே கடிய வேண்டுமென்றது.
பரிதி: உபதேசத்தோடே கூடிய நல்லோர் சொல்
காலிங்கர்: வீட்டின்பமாகிய மெய்ப்பொருளினை நோக்குதற்குரியவர் வாய்ச் சொற்கள் என்றவாறு.
பரிமேலழகர்: அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள்.
பரிமேலழகர் குறிப்புரை: வாய்மை. மெய்யுணர்ந்தார் நெஞ்சிற்கு எல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது. 'இலவாம் சொல்' என இயையும். 'வாய்' என வேண்டாது கூறினார், தீயசொல் பயிலா என்பது அறிவித்தற்கு. இதனான் இன்சொற்கு இலக்கணம் கூறப்பட்டது.

இப்பகுதிக்கு ''உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்கள்' என்று மற்றவர்கள் உரைக்க பரிமேலழகர் 'அறத்தினை உணர்ந்தார் வாயிற்சொற்கள்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறம் உணர்ந்தார் வாயின் சொற்கள்', 'இல்வாழ்க்கையின் பயன்களைச் செம்மையாக அறிந்தவர்களுடைய வாயிலிருந்து வெளிவரும் சொற்கள்', 'மெய்ப்பொரு ளுணர்ந்தவர்களுடைய வாயிற் பிறப்பனவாயுள்ள மொழிகளாம்', 'மெய்ப்பொருளை உணர்ந்தோர் சொல்லும் சொற்கள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அறம் உணர்ந்தாரது வாய்மை மொழி என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செம்பொருள் கண்டார் அருளோடு கலந்து வஞ்சனை இல்லாதனவாய் மொழியும் வாய்மைச் சொற்கள் இன்சொல் ஆகும் என்பது பாடலின் பொருள்.
'செம்பொருள் கண்டார்' யார்?

கேட்பதற்கு இன்பம் பயக்குமாறு பேசுவது மட்டும் இன்சொல் ஆகாது.

அறம் உணர்ந்தோர் அருள் கலந்து, வஞ்சனை அற்றதாய், வாய்மையுடன் கூறும், சொல் இன்சொல்.
கேட்போர் மனம் மகிழும்படி சொல்வது என்பதையே இன்சொல் என்று எண்ணுகிறோம். வள்ளுவர் 'இனிய சொற்கள் என்பன அறம் உணர்ந்தார் வாய்ச்சொற்கள்; அவை அன்புடையன, வஞ்சனையற்றன' என இன்சொல்லுக்கு இலக்கணமாகக் கூறுகின்றார். 'செம்பொருள் கண்டார் வாய்சொல் இன்சொல் ஆல் (ஆதலால் அவை) ஈரம் அளைஇப் படிறு இலவாம்' என்று இக்குறளை வாசித்தால் பொருள் கொள்ளுதல் எளிதாகும்.
வஞ்சனையை நெஞ்சில் கொண்டவர் இனிக்கப் பேசி ஏமாற்றுவார். அது அன்புடன் பேசப்படுவதாகாது. சொல்பவரும் நல்லவராக இருக்க வேண்டும். உண்மையை அறிந்தவர் வாயிலிருந்து வருவனவே இன்சொற்கள். இனிமை சொல்லில் மட்டுமில்லை; சொல்பவரைச் சார்ந்துமுளது என்பதாகிறது. உண்மைப் பொருள் கண்டவர்கள் வாயிலிருந்து வரும் உரைகள் இனிய சொற்களாகும் என்கிறது பாடல். இன்சொல் என்பது மனித வாழ்க்கைக்கு நன்மையும் இனிமையும் சேர்க்கப் பயன்படும் சொற்களாகும் என்னும் பொருளில் அமைந்தது இக்குறள்.

‘படிறு’ என்பதற்குக் குற்றம், பொய், வஞ்சனை என்று பொருள் கூறினர். இவற்றுள் வஞ்சனை எனும் பொருள் சிறந்தது. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம்... (271) என்ற இடத்திலும் படிறு என்பது இப்பொருளிலேயே ஆளப்பட்டது.
'சொல்' எனலே 'வாயாற் சொல்லும் சொல்' என்பது பெறப்படுகிறது. வாய் என வேண்டாது கூறினார் தீயசொல் பயிலா என்பதறிவித்தற்கு அதாவது அவர் வாயினின்று வருஞ்சொற்களெல்லாம் என்றும் இனியனவே என்பதை உணர்த்தற்கு. இவ்வாறு வேண்டாது சொல்லுஞ் சொல் 'விதப்புக் கிளவி' எனப்படும். 'விதப்புக் கிளவி' வேண்டியது விளைக்கும்' என்பது சூத்திரம்.

அருளோடு கூடியது, வஞ்சனையற்றது, வாய்மை நிறைந்தது என்ற மூன்று பண்புகள் கொண்டதாக இருக்கும் இன்சொல் என்கிறது பாடல். மேலும் அவை அறம் உணர்ந்தார் கூறுவதாக இருக்க வேண்டும் எனவும் சொல்கிறது.
மணிமேகலைக் காப்பியத்தில் மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதையில் சொல்லப்பட்டுள்ள ஒரு நிகழ்வு இக்குறட் பொருளை நினைவூட்டுவதாக உள்ளது. அக்காட்சியில் சுதமதி, தன் தந்தையை மாடு முட்டியபோது இங்கு எங்களுக்கு உதவி செய்பவர் யாருமே இல்லையா என அழுது புலம்புகிறாள். அச்சமயம் அங்கு வந்த தவ முனிவன் சங்கதருமன் அவர்களுக்கு இன்சொல் கூறி உதவி செய்கிறான். சங்கதருமன் உரை சுதமதியின் செவிகளுக்கு இனிமை பயப்பதோடு அவளது நெஞ்சத்தைக் குளிர்வடையவும் செய்கிறது. அவள் கூறுகிறாள்: 'எமை நோக்கி -என்ன துன்பம் எய்தினீர் என்று அன்பொடு கலந்த அருள் மிகுந்த இன் மொழிகளால், செவியகத்தை நிறைத்து உள்ளத்தைக் குளிரச்செய்தது.' அந்தப் பாடல்:
என்னுற் றனிரோ என்றெமை நோக்கி
அன்புட னளைஇய அருண்மொழி யதனால்
அஞ்செவி நிறைத்து நெஞ்சகங் குளிர்ப்பித்து


'செம்பொருள் கண்டார்' யார்?

'செம்பொருள் கண்டார்' என்றதற்கு உண்மைப் பொருளைக் கண்டார், நடுவு சொல்வான், உபதேசத்தோடே கூடிய நல்லோர், வீட்டின்பமாகிய மெய்ப்பொருளினை நோக்குதற்குரியவர், அறத்தினை உணர்ந்தார், தருமத்தினை அறிந்தவர்கள், நல்ல உபதேசத்தோடு பொருந்திய நல்லோர், செவ்விய பொருளை உணர்ந்தவர், மெய்ப்பொருள் கண்டவர், அறநெறி திறம்பாதவர், மெய்ம்மைப் பொருளை உணர்ந்த சான்றோர், மெய்ப்பொருளை அறிந்த சான்றோர், அறம் உடையவர், அறம் உணர்ந்தார், இல்வாழ்க்கையின் பெருமையையும் பயனையும் செம்மையாக உணர்ந்தவர், மெய்ப்பொருள் உணர்ந்த பெருமக்கள், மெய்ப்பொரு ளுணர்ந்தவர், நல்லனவற்றை நாடி உணர்ந்தவர், உலகில் உண்மைப்பொருளை நன்கறிந்த பெரியோர்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

யார் வேண்டுமானாலும் இன்சொல் கூறலாமே! பின் ஏன் இன்சொல் கூற செம்பொருள் கண்டாராக இருக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது?
இன்சொல் கூறுவதும் சிறந்த அறமாகும் என்பது வள்ளுவர் கருத்து. சொல்லை வைத்து இன்சொல் என எண்ணவேண்டாம். இனிக்கப் பேசுவதெல்லாம் இன்சொல் ஆகாது. பேசும் சொல் பயன் அளிப்பதாக இருக்க வேண்டும். சொல்பவரும் உண்மை உணர்ந்தவராய் இருக்க வேண்டும் என்பது அவர் எண்ணம். எனவேதான் அறம் உணர்ந்தார் வாயினின்று வரும் சொல் இன்சொல்லாம் எனச் சொல்லப்பட்டது.
எந்தத் துறையானாலும் அதில் உள்ள உண்மைகளை கண்டறிதல் செம்பொருளாம். அவ்வுண்மைப் பொருளை அன்போடும் வஞ்சனை இல்லாமல் சொல்லப்படுவது இனிய சொல். உண்மையை அறியாமல் பேசும் எந்த சொல்லும் இனிய சொல் ஆகாது. மெய்யை உணராமல் பேசும் போது அது கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும் அது இன்சொல் ஆகாது. இக்குறட்பாவில் இன்சொல் பிறக்குமிடம் அறம் என்பதும் அது அன்புவழி வெளிவருவது என்பதும், அதன் இயல்பு வஞ்சனையில்லாதது என்பதும் விளங்குகின்றன. அன்பற்ற சொல் இனியதாகாது. அது அறங்கண்டவர் வாயில் பிறவாது. அது வெறும் உதட்டளவில் தோன்றி அழிவதாகும். உதட்டளவில் பிறப்பது வஞ்சனை புரிவதாகும். செம்பொருள் கண்ட சீரியர் வாய்ச்சொல் இன்சொல்லாகவே அமையும். அவர் தீச்சொல் வழங்கார். அவர் மொழியில் அன்பு கலந்திருக்கும். வஞ்சனையிராது. அவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசார். உண்மை மட்டுமே சொல்வர்.

செம்பொருள் கண்டார் வாய்ச்சொல் என்பதற்கு, 'இருவரது மாறுபட்ட பேச்சைக் கேட்டு உண்மைப் பொருள் கண்டார் கூறும் மெய்யாகிய சொல்' எனப் பொருள் கூறி 'ஒருவனைக் கடிந்து சொல்ல வேண்டுமிடத்தும் இன்சொல்லாலே கடியவேண்டும்' என விளக்கமும் தந்தனர் மணக்குடவரும் பரிப்பெருமாளும். தேவநேயப்பாவாணர் 'எப்பாலவரும் இயையும் உண்மைப்பொருள் என்றும் மாறாது நேராயிருத்தலின் 'செம்பொருள்' என்றார் என உரைக்கிறார்.
செம்பொருள் கண்டார் என்பதற்கு அறத்தினை உணர்ந்தார் எனப் பொருள் கூறி செம்பொருள் என்பதை மெய்யுணர்ந்தார் நெஞ்சிற் கெல்லாம் செம்மையுடைத்தாய்த் தோன்றலின் செம்பொருள் எனப்பட்டது என்று பரிமேலழகர் தெளிவுபடுத்தினார்.

இன்சொல்லானது அருளோடு கலந்து வஞ்சனை இல்லாதனவாய் அறம் உணர்ந்தாரது வாய்மை மொழி என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இனியவைகூறல் என்பது அறம் உணர்ந்தவற்றை மொழிதல்.

பொழிப்பு

இனிய சொல்லாவது அருளோடு கலந்து வஞ்சனையில்லாததாய், அறம் உணர்ந்தாருடைய மெய்ம்மை மொழியாம்.