இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0089உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:89)

பொழிப்பு (மு வரதராசன்): செல்வ நிலையில் உள்ள வறுமை என்பது விருந்தோம்புதலைப் போற்றாத அறியாமையாகும்; அஃது அறிவிலிகளிடம் உள்ளதாகும்

மணக்குடவர் உரை: உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதைமையார் மாட்டேயுளதாம்.

பரிமேலழகர் உரை: உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை -உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை; மடவார்கண் உண்டு - அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். (உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார்.பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: செல்வமுடைய காலத்து வறுமை யாதெனின் விருந்தோம்புதலைக் கைக்கொள்ளாது இகழும் பேதைமை யாகும். அஃது அறிவில்லாதவ்ரிடத்து உள்ளதே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை மடவார்கண் உண்டு.

பதவுரை: உடைமையுள்-செல்வத்தில்; இன்மை-இல்லாமை; விருந்து-விருந்தினர்; ஓம்பல்-பேணுதல், புறந்தருதல்; ஓம்பா-செய்யாத, புறக்கணிக்கும், இகழும்; மடமை-அறியாமை; மடவார்கண்-அறிவிலிகளிடத்து; உண்டு-உளது.


உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருந்தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை,
பரிதி: செல்வத்துள் இல்லின் தன்மையாவது விருந்து ஓம்பல். அங்ஙனம் ஓம்பாத மடமை சில பெண்களிடம் உண்டு.
பரிமேலழகர்: உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை;
பரிமேலழகர் குறிப்புரை: உடைமை - பொருளுடையனாம் தன்மை. பொருளால் கொள்ளும் பயனை இழப்பித்து உடைமையை இன்மை ஆக்கலின், மடமையை இன்மையாக உபசரித்தார். பேதைமையான் விருந்தோம்பலை இகழின் பொருள் நின்ற வழியும் அதனால் பயன் இல்லை என்பதாம்.

'உடைமைக் காலத்து இன்மையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் உடைமையின் கண்ணே இல்லாமைபோல என்று உவமையாகக் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'செல்வத்தில் வறுமை விருந்திடா மடமையாம்', 'செல்வக்காலத்து வறுமையாவது விருந்தோம்புதலைச் செய்யாத பேதைமை', 'பணம் இருந்தும் விருந்தோம்பாவிட்டால்) விருந்தினரை உபசரிக்காதவர்கள் பணக்காராக இருந்தாலும் அவர்கள் தரித்திரர்கள்தாம்', 'செல்வம் உள்ள காலத்தும் வறுமை உள்ளவராகுதல் விருந்தினரை ஓம்பாத அறியமையால் உண்டாகும்', என்ற பொருளில் உரை தந்தனர்.

செல்வநிலையில் இல்லாமையாய்த் தோன்றுவது விருந்தோம்பலை இகழும் பேதைமையாம் என்பது இப்பகுதியின் பொருள்.

மடவார்கண் உண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதைமையார் மாட்டேயுளதாம்.
பரிதி: ஸ்தீரியும் புருஷனும் ஒரு மனமாகச் செய்வது விருந்து. அல்லது பிரயோசனம் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: அஃது அறிந்தார் மாட்டு உளதாகாது; பேதையார் மாட்டே உளதாம். பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பா வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.

'பேதைமையார் மாட்டேயுளதாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இக்குணம் முழுதும் அறிவிலியிடமே இருக்கும்', 'அது அறிவிலிகளிடையே காணப்பெறும்', 'அவர்களுக்கு முட்டாள்தனந்தான் மிச்சம்', 'அறியாதாரிடம் இந்நிலைமை யுண்டாகும். அறிந்தவரிடம் இராது' என்றபடி பொருள் உரைத்தனர்.

அறிவிலிகளிடையே உள்ளதாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உடைமையுள் இன்மையாவது விருந்தோம்பல் செய்யா பேதைமையாம்; அது அறிவிலிகளிடையே உள்ளதாகும் என்பது பாடலின் பொருள்.
'உடைமையுள் இன்மை' என்றால் என்ன?

பணம் இருந்தும் பசியாற்றல் அறம் செய்ய மனம் இல்லையே இந்த முட்டாள்களுக்கு.

விருந்தோம்பல் பண்பு இல்லாமை பொருள் இருந்தும் வறிய நிலையாம்; செல்வர் இவ்விதம் வறிய நிலையில் இருப்பது அவரது அறியாமையாகும்; அது மூடர்களிடத்து உள்ள குணமாகும்.
விருந்தோம்பலைப் புறக்கணிக்கும் செல்வர்களை எண்ணும்போது வள்ளுவர் மிகுந்த சினம் கொண்டவராகிவிடுகின்றார். இங்கு விருந்தோம்பாமையை மடமை என்றும், விருந்து பேணாதாரை மடையர்கள் என்றும் நேரடியாகவே கடுஞ்சொற்களால் சாடுகின்றார். மன அளவில் வறுமையில் வாடுகிறார்கள் என்று சொன்னதோடு விட்டுவிடாமல் 'மடமை" என்றும் "மடவார்" என்றும் ஒரே குறளில் ஒன்றிற்கு இரண்டாகச் சொல் பயின்று விருந்தோம்பாமையின் அறிவுகெட்ட தன்மையை அவர் அழுத்திச் சொல்கிறார். இத்தகைய அறிவிலாச் செல்வர்கள் பொருளியல் தெரியாதவர்கள். வாழ்வியல் பொருள் புரியாதவர்கள். மாந்த நேயம் அறியாதவர்கள் ஆவர் என்கிறார்.

பொருளில்லாத வறுமையாளன் விருந்தினரைப் போற்ற முடியாது. பொருளிருந்தும் விருந்தோம்பதவனும் வறுமையாளனே. பொருள் உடைமையுள்ளும் ‘இல்லாமை’ என்பது விருந்தோம்பலைப் பேணாத மடமையே எனவும் அது மடவாரிடையே காணப்பெறும் என்றும் சொல்லப்படுகிறது. மடமை என்ற சொல் அறிவிற் குறையுடைமையாம். மடவார் என்பது அறிவில்லாதார் எனப்பொருள்படும். விருந்தினைப் பேணாமல் அப்பொருளை இறுகப்பிடித்து சேமித்து வைத்துக்கொள்ளலாம் என்பதற்காகவோ அல்லது விருந்தறம் செய்தால் வறுமைப் பட்டுவிடுவோம் என்று அஞ்சி அதைக் காத்துக்கொள்வதும் மூடத்தனம். அதை அறிவிலிகளின் சிந்தனை என்பதல்லாமல் அன்றி வேறு என்ன சொல்லி அழைப்பது? செல்வம் படைத்திருந்தும் வறுமையாளர்போல் காட்டி விருந்தோம்பலைப் புறக்கணிப்பது மூடர்களிடம் உள்ள பண்பு. சிலர் தாங்கள் இவ்வறத்தை ஏன் பேணவில்லை என்பதற்கு ஏற்கமுடியாத காரணம் ஒன்றையும் கண்டுபிடித்துச் சொல்வார்கள். இவ்வாறு செல்வத்தை வைத்துக்கொண்டு விருந்தினரை ஓம்பாதவர் 'இல்லாதவர்' மட்டுமல்ல; அவர் மூடரும் கூட என்பது வள்ளுவர் கருத்து. விருந்தோம்பி வேள்வி தலைப்படாதார்தம் மடமை இவ்விதம் விளக்கப்படுகிறது.

'உடைமையுள் இன்மை' என்றால் என்ன?

உடைமை என்பது பொருளுடையனா யிருக்குந்தன்மையைக் குறிப்பது, ‘இன்மை’ என்ற சொல் வறுமையைச் சுட்டுவது. 'உடைமையுள் இன்மை' என்ற தொடர் கையில் பணமிருந்து வறுமையால் வாடுபவர்கள் நிலை குறித்தது. பொருளுடைமையுள் இல்லாமை என்பது இதன் பொருள்.
ஒருவரது தகுதிக் கேற்றபடி விருந்திடுவர். செல்வம் படைத்தவர்களுக்கு விருந்தோம்புவதற்கான வசதிகள் மிகை. 'உடைமை' என்றால் அவ்வுடைமையால் கொள்ளும் பயனையும் பெறத்தக்கதாய் இருத்தல் வேண்டும். இன்றேல், அவ்வுடைமையும் இன்மையாகவே கருதப்படும். அந்நிலையைத் தான் 'உடைமையுள் இன்மை' என்றார். பொருள் பெற்றிருக்கும் காலத்திலும் விருந்தோம்பாவிட்டால் அது இருந்தும் அல்லாத நிலை; வளமையில் வறுமையாம். செல்வத்தைப் பயன்தரத் தக்க வழியாகிய விருந்தோம்புதலுக்குச் செலவிடாததால் பொருளுடைமையும் வறுமையாயிற்று. பொருளால் ஆகிய பயன்‌ விருந்தோம்பல்‌. அதற்குப்‌ பயன்படாப்‌ பொருள்‌ பொருளன்றாம்‌. ஆதலால்‌ அப்‌ பொருள்‌ இல்லையெனவே கருதப்படும்‌, இதனால்‌ விருந்தோம்பாதான்‌ பொருளுடையனாயினும்‌ ௮வனது உடைமை இன்மையெனப்‌ படுதலால் 'உடைமையுள் இன்மை' எனப்பட்டது‌.
இக்குறள் உடைமையுள் இன்மை என்பது விருந்தோம்பா மனநிலை என்கிறது. பிறிதோரிடத்தில் இன்மையுள் இன்மை என்பது விருந்தோம்பாமை எனக் குறள் சொல்லும். அது: இன்மையுள் இன்மை விருந்தொரால் ................... (பொறையுடைமை 153 பொருள்: இல்லாமையிலும் இல்லாமை வந்த விருந்தினை ஓம்பாது கைவிடுதல்..........).

பரிதி இன்மை என்பதை இல்லின் தன்மை என விரித்து 'உடைமையுள் இன்மை' என்ற தொடர்க்குச் 'செல்வத்துள் இல்லின் தன்மை' எனப் பொருள் கொள்கிறார். 'விருந்தோம்பாத மடமை சில பெண்களிடம் உண்டு; மனைவியும் கணவனும் ஒரு மனமாகச் செய்வது விருந்து; அப்படிச் செய்யவில்லையானல் பயன் இல்லை' என உரை செய்கிறார். இவர் மடவார் என்னும் சொல் பெண்பாலைக் குறிப்பதாகக் காண்கிறார். புதிய கோணத்தில் பார்க்கப்பட்ட இவரது உரை சுவைக்கத்தக்கதாக இருந்தாலும் அது வள்ளுவரின் கூற்றாக இருப்பதற்கில்லை. உடைமையுள் இன்மை என்பதற்குப் பொருள் செல்வத்துள் வறுமை என்பது. இப்பொருளிலேயே இக்குறளுக்கு உரை காண்பது பொருத்தம்.

செல்வநிலையில் இல்லாமையாவது விருந்தோம்பலை இகழும் பேதைமையாம்; அது அறிவிலிகளிடையே உள்ளதாகும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

செல்வமிருந்தும் விருந்தோம்பல் ஓம்பாதது மூடத்தனம்.

பொழிப்பு

செல்வத்தில் வறுமை விருந்தோம்புதலைச் செய்யாத மடமையாம்; அது அறிவிலிகளிடையே இருக்கும்