இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0087



இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:87)

பொழிப்பு (மு வரதராசன்): விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்திக் கூறத்தக்கது அன்று; விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

மணக்குடவர் உரை: விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை. அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்.

பரிமேலழகர் உரை: வேள்விப்பயன் இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை - விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று; விருந்தின் துணைத்துணை - அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.
(ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.)

தமிழண்ணல்உரை: விருந்தின் பயன் இத்துணை அளவினது என அளப்பதற்கோர் அளவுகோல் இல்லை. இங்கு செய்யும் விருந்தின் அளவு எவ்வளவோ, அதன் அளவு வேள்வி செய்ததன் பயன் உண்டு.
தேவர்களுக்கு விருந்து படைப்பது வேள்வி. திருவள்ளுவர் உலகில் வைக்கப்படும் விருந்தும் வேள்வியே என்ற கருத்துடையவர். மேலும் கண்காணாத தேவர்களுக்குச் செய்யும் வேள்வியைவிடக் கண்கண்ட மானிடர்க்குச் செய்யும் விருந்தாம் வேள்வி சிறந்ததென்பது அவர் கருத்து. வேள்வியின் பயன் விருந்திலேயே கிடைக்குமென்பது அவ்வேள்வியை மறுக்காமல் மறுப்பது. நுட்பமாய்ச் சிந்திக்கச் சிந்திக்க இவ்வுண்மை புலனாகாமற் போகாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன் .

பதவுரை: இனை-இன்ன; துணைத்து-அளவினையுடையது; என்பது-என்று சொல்லப்படுவது; ஒன்று-ஒன்று; இல்லை-இல்லை; விருந்தின்-விருந்தினது; துணைத்துணை-உதவியஅளவு; வேள்வி-விருந்தோம்பல்; பயன்-நன்மை.


இனைத்துணைத்து என்பதுஒன்று இல்லை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை;
பரிதி: அறங்களில் மேலானது விருந்துபசரிப்பது; .
பரிமேலழகர்: விருந்தோம்பல் ஆகிய வேள்விப் பயன் இன்ன அளவிற்று என்பதோர் அளவுடைத்தன்று;

விருந்தினர்க்கு அளித்ததனால் வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவது ஒன்றில்லை என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'விருந்தின் பயன் இதுவென்று அளக்க முடியாது', 'விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவு உடையது என்று கூற முடியாது', 'விருந்தோம்பலாகிய உதவியின் பயன் இன்ன அளவுடையதென்று கூறமுடியாது', 'விருந்திடுதலாகிய வேள்வியின் பயன் இன்ன பெருமையினையுடையது என்று கூற முடியாது' என்ற பொருளில் உரை தந்தனர்.

இன்னஅளவு என்று சொல்லுமாறு ஒன்றுஇல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

விருந்தின் துணைத்துணை வேள்விப் பயன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்விருந்தினரின் தன்மை யாதோ ரளவிற்று அத்தன்மை யளவிற்று விருந்தோம்பலின் பயன்
பரிதி: முற்காலத்துத் துணைவரும் தன்னுறவு துணைவரும் என்றவாறு.
பரிமேலழகர்: அதற்கு அவ்விருந்தின் தகுதியளவே அளவு.
பரிமேலழகர் கருத்துரை: ஐம்பெரு வேள்வியின் ஒன்றாகலின் 'வேள்வி' என்றும், பொருள் அளவு தான் சிறிது ஆயினும் தக்கார்கைப் பட்டக்கால் , வான் சிறிதாப் போர்த்து விடும் (நாலடி.38) ஆகலின், இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை என்றும் கூறினார். இதனான் இருமையும் பயத்தற்குக் காரணம் கூறப்பட்டது.

விருந்தின் தன்மையளவே விருந்தோம்பலின் பயன் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விருந்தினர் பெருமையே விருந்தின் பெருமை', 'அப்பயன் விருந்தினரின் தகுதியையே அளவாகக் கொண்டது', 'விருந்தினரின் தகுதியே அதற்கு அளவாகும்', விருந்தினரின் தகுதிக்கேற்பப் பெருமை மிகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

விருந்தளவே விருந்தோம்பலின் பயன் அளவு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இன்னஅளவு என்று சொல்லுமாறு ஒன்றுஇல்லை; விருந்தளவே வேள்விப் பயன் அளவு என்பது பாடலின் பொருள்.
'வேள்விப் பயன்' குறிப்பது என்ன?

எத்துணை பேர்க்கு எத்துணை தன்மையான சோறிடுகிறாயோ அத்துணை அளவு பயன் உண்டு.

விருந்தோம்பலின் பயன் இவ்வளவு என்று சொல்லக்கூடிய ஒன்று இல்லை; அது விருந்தின் தன்மையின் அளவினது ஆகும்.
வேள்வி என்ற சொல் இங்கு விருந்தோம்பல் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது; விருந்தோம்பல் என்ற சொல் விருந்தினர் பசியாற்றிப் பேணுவது குறித்தது. விருந்தோம்பல் தன்னலமற்ற அந்தண்மை என்பதால் விருந்தோம்பல் வேள்வியாகிறது. இல்லற வேள்வியான விருந்தோம்பலின் பயன் விருந்தின் துணைத் துணை அதாவது விருந்தின் அளவின் அளவு என்கிறது பாடல். விருந்தளவின் அளவு என்பது விருந்தின் தன்மை அதாவது விருந்தின் சுவை மற்றும் விருந்தினரின் எண்ணிக்கை பற்றியது எனக் கூறலாம்.
துணை என்ற சொல்லுக்கு உதவி என்றும் அளவு என்றும் பொருள் உள. துணைத்துணை என்ற தொடர்க்கு உதவியின் அளவு எனக் கொண்டு உதவியின் அளவு பயன் என அதற்குப் பொருள் காணலாம். விருந்தினருக்கு எந்த அளவு உண்டி உதவியதோ அந்த அளவு விருந்தின் பயன் உண்டு எனலாம்.
விருந்தோம்பல் என்பது பசி தீர்க்கும் அறத்தைச் சொல்வது. இன்று அன்னதானம் என்ற அறியப்படும் உணவுக்கொடையை நினைவிற் கொள்ளலாம்.

முதலில் 'இனைத்துணைத் தொன்றில்லை' என்று விருந்தின் பயன் இன்ன அளவினது என்று சொல்லவியலாது என்று கூறிவிட்டு அடுத்து வேள்விப்பயன் 'விருந்தின் துணைத்துணை' என்று அளவு சொல்லப்படுகிறது. ஏன்? இதற்கு விளக்கமாக திரு வி கலியாணசுந்தரம் (திரு வி க) இவ்விதம் கூறுகிறார்: 'முன்னையது அளவிறந்தது போலத் தோன்றுகிறது. பின்னையது அளவுடையது போலத் தோன்றுகிறது. இரண்டும் ஒன்றே. முறை மட்டும் வேறு. இறைவன் பெருமை அளவு கடந்ததென்று மறை முழங்குகிறது. அவனை வேறு முறையிலுங் கூறுதல் கூடும். எப்படி? இறைவன் பெருமை மறைமுழங்கும் அளவினதன்று. இதன் பொருளென்ன? அளவிறந்ததென்பதே. இது போன்றதே இத்திருக்குறளின் நுட்பமுமென்க.'

'வேள்விப் பயன்' குறிப்பது என்ன?

வேள்விப் பயன் என்ற தொடர்க்கு விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் என்பது பொருள். வேட்டு (விரும்பி)ச் செய்வது வேள்வி. விரும்பிச் செய்யப்படும் விருந்தோம்புதலும் வேள்வியாகிறது. விருந்தோம்பலை இக்குறளிலும் (87) இதற்கு அடுத்த பாடலிலும் (88) வேள்வி என்ற சொல்லால் குறிக்கிறார் வள்ளுவர். வடவர் வேள்வி என்பதை யக்ஞம், ஹோமம் என்ற பெயர்களால் குறிப்பிடுகின்றனர். தீ வளர்த்துத் தேவர்களுக்கு விருந்து படைப்பதாக எண்ணிக்கொள்ளப் படுவதால் இது எரியோம்பல் எனவும் அறியப்படும். சங்கநூல்களில் வேள்வி என்ற சொல் யாகத்தினைக் குறிக்கும். குறளில் இது உணவுக்கொடை என்ற பொருளில் 87, 88-ஆம் ஆகிய குறள்களில் பயிலப்பட்டுள்ளது. யாகம் என்ற பொருளிலும் இச்சொல் வேறு இடத்தில் பயன்படுத்தப்பெற்றுள்ளது. மாந்தர் பசியாற்றலை விருந்தோம்பல் என வள்ளுவர் அழைக்கிறார். 'கண்காணாத தேவர்களுக்குச் செய்யும் வேள்வியைவிடக் கண்கண்ட மானிடர்க்குச் செய்யும் விருந்தாம் வேள்வி சிறந்ததென்பது வள்ளுவர் கருத்து' என்பார் தமிழண்ணல்.

விருந்தோம்பல் என்னும் இந்த வேள்வியின் பயன் இவ்வளவு என்று சொல்லக்கூடிய ஒன்று இல்லை. அது அளவிடற்குரியது அன்று. இதன் பொருள் வேள்விப் பயன் என்பது இந்த அளவுதான் என்கிற ஓர் அளவு உடையதுஅன்று என்பது. விருந்தினது தகுதி அளவும், எண்ணிக்கை அளவும் விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் என்பர்.

விருந்தின் பயன் வரும் விருந்தினரின் தகுதியும் சிறப்பும் சார்ந்து அமையும் என இக்குறள் சொல்வதாகப் பல உரையாளர்கள் எழுதினர். வேள்விப்பயன் விருந்தினரின் தன்மைக்கேற்ற அளவினது என்று கொள்வது விருந்தோம்பும் பண்பைச் சிறுமைப்படுத்துவதாகிறது. விருந்தினர் குணத்தகுதி அளவே விருந்தின்‌பயன்‌ என்றவர்கள் 'நல்லோராயின் விருந்தளித்தாரைப் பலவழிகளில் வாழ்த்துவர். அஃதிலாதார் பரிமாறிய உணவின் அளவுக் குறையையும் சுவைக் குறையையும் இன்ன பிற செய்திகளையும் எடுத்துக் கூறிப் பழி தூற்றுவர்; உண்ணும் பொழுதே களவு முதலிய செய்யவும் துணிவர். ஆதலால் தேர்ந்து தெளிந்து தக்காரல்லாரைத் தவிர்த்தல் வேண்டும்' என்று கூறினர். இக்கருத்து ஏற்கத்தக்கதாக இல்லை.
விருந்து அன்பு முதிர்ந்த நிலையில் செய்யப்படுவது. தொண்டுள்ளம் கொண்டு விருந்து தரப்படுவதால் விருந்தோம்புவான் விருந்தினர் தகுதியை ஆராயமாட்டான். எனவே விருந்தினர் தகுதி-தகுதியின்மைகளைக் குறித்துப் பேசுதல் நன்றாகாது. மற்றும் சிலர் விருந்தோம்பலின் பயன் விருந்தினரை உபசரிக்கும் அளவினதாகும் என்றனர் இதுவும் இயல்பாக இல்லை. சிலர் இப்பாடல் .........உதவி செய்யப்பட்டார் சால்பின் வரைத்து (குறள் 105) என்றது போல என்றனர். அக்குறளில் உதவி செய்யப்பட்டார் என்று தெளிவாக உள்ளது. ஆனால் இங்கு விருந்து என்று மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. எனவே விருந்தினர் தன்மை என்பதை விட விருந்தின் தன்மை என்று பொருள் கொள்வது சிறக்கும்.

திரு வி க 'வேள்விப் பயன் என்பது விருந்தோம்பலால் விளையும் இன்பம் குறித்தது' என்பார்.
'இங்குப் பயன் என்பது செல்வம், செல்வாக்கு, புகழ் போன்றவற்றைக் குறிப்பதன்று. இத்தகைய பயன்களை நாடலாகாது' என்பார் காமாட்சி சீனிவாசன்.
நாமக்கல் இராமலிங்கம் 'எந்த அளவுக்குச் செய்தாலும் அந்த அளவுக்கு நல்ல காரியம் செய்த பலன் உண்டு' என்று பொருள் கூறுவார்.
'விருந்தினர் உவக்கும் உவகையின் அளவே விருந்தின் பயனாகும்' என்பது குழந்தையின் உரைப்பொருளாகும்.
இவ்வுரைகள் தெளிவு பயப்பன.

பயன் என்பதற்குப் பலவாறாக பிற உரையாளர்கள் பொருள் கூறினர். அவற்றிலிருந்து சில:
'விருந்தின் பயன் இதுவென்று அளக்க முடியாது. விருந்தினர் பெருமையே விருந்தின் பெருமை.'
'விருந்தின் பயனுக்களவில்லை. ஒவ்வோர் விருந்தும் ஒரு யாகத்தின் பயனைத் தரும்; ஒருவேளையிட்ட விருந்து ஒரு வேள்வியென்க.'
'விருந்தோம்பலின் பயன் விருந்தினரின் நற்குண நற்செயல்களுக்குத் தக்க அளவு பெருமை யுடையது.'
'விருந்தளிப்போர், விருந்தேற்பார், விருந்தோம்பற் பண்பு ஆகிய முத்திறத்தின் பெருக்க அளவாக உடையது.'
'சாதாரண விருந்தாளியானால், புண்ணியம் மட்டும் பயன். அறிஞனானால், அறிவுத் தெளிவு பயன். அனுபவசாலியானால், வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தீர்வு கூறுவான். செல்வன் ஆனால், இவனுக்கும் செல்வம் சேர வழி செய்வான். தவமுனிவன் ஆனால், தவ வலிமையால் இவனுக்கு வேண்டியவற்றை அளிப்பான். அல்லது இவனையும் தவநெறியில் செலுத்துவான். இவனது வாழ்க்கைப் பாதையை மாற்றியமைப்பான்'.

வடவர் நூல்கள் வேள்விகளை ஐந்து வகையாகப் பகுத்தனர். வேள்வியின் வகைகளும் அவை ஏன் இயற்றப்படுகின்றன என்பதற்குக் கூறப்பட்ட காரணங்களும்:
'கிருகஸ்தன் யந்திரம் அல்லது முறம், அம்மி, துடைப்பம், உரல் உலக்கை, தண்ணீர்க்குடம் என்னும் இவ்வைந்தினையும் உபயோகப்படுத்திக் கொள்ளுவதால் அவனுக்கு ஐவகைக் கொலப்பாவங்கள் உண்டாகின்றன. அவ்வைந்து பாவங்கள் போக்குவதற்காக மகரிஷிகளால் தினந்தோறும் ஐந்து மகாயக்ஞங்கள் கிருகஸ்தனுக்குக் கிரமமாக விதிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வைந்து யக்ஞங்களில் வேதமோதுதல் பிரமயக்ஞம், அன்னத்தினாலாவது ஜலதருப்பணத்தினாலாவது பிதிருக்களைக் குறித்துத் திருப்தி செய்வது பிதிர்யக்ஞம். தேவதைகளைக் குறித்து அக்னியில் ஓமஞ்செய்வது தேவயக்ஞம், வாயசபலி முதலானவை வைப்பது பூதயக்கும். அதிதிகளுக்கு உணவிடுவது மானுஷயக்ஞம் ஆக மகாயக்ஞம் ஐந்து'. இவ்வைந்து மகாயக்ஞங்களையும் தன்சக்திக்குத் தக்கபடி எவன் செய்கிறானோ அவன் கிருகஸ்தாச்சிரமத்தில் இருந்தபோதிலும், மேற்சொன்ன ஐந்து கொலைகளின் தோஷங்களையும் அடைவதில்லை' என்ற மனுதர்ம சாஸ்திரம் மூன்றாம் அத்தியாயத்து ஐம்பெரு வேள்வி செய்தற்கு ஏது சொல்லப்பட்டிருக்கிறது.

இன்னஅளவு என்று சொல்லுமாறு ஒன்றுஇல்லை; விருந்தளவே விருந்தோம்பலின் பயன் அளவு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விருந்தோம்பல் பயன் கருதிச் செய்யப்படுவதல்ல.

பொழிப்பு

விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவு உடையது என்று ஒன்றும் இல்லை. விருந்தளவே அளவு.