அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
(அதிகாரம்:விருந்தோம்பல்
குறள் எண்:84)
பொழிப்பு (மு வரதராசன்): நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.
|
மணக்குடவர் உரை:
திருவினாள் மனம்பொருந்தி உறையும்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண்.
இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது.
பரிமேலழகர் உரை:
செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண்.
(மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)
இரா இளங்குமரனார் உரை:
விருந்தினரை முகமலர்ந்து வரவேற்று நன்முறையில் பேணுபவன் இல்லத்தில் செல்வம் என்னும் மகள் தன் முகத்தோடு அகமும் மலரத் தங்கியிருப்பாள் (விருந்தோம்பலால் செல்வம் குறையாது.)
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.
பதவுரை: அகன்-உள்ளம், அகம்; அமர்ந்து-மகிழ்ந்து, விரும்பி; செய்யாள்-திருமகள்; உறையும்-வாழும், தங்கும், நீங்காது நிலைத்திருக்கும், வசிக்கும்; முகன்-முகம்; அமர்ந்து-மலர்ந்து; நல்-நல்ல; விருந்து-விருந்து; ஓம்புவான்-பேணுவான்; இல்-மனை, வாழும் இடமாகிய வீடு.
|
அகனமர்ந்து செய்யாள் உறையும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: திருவினாள் மனம்பொருந்தி உறையும்;
பரிதி: லட்சுமி உறையும்;
காலிங்கர்: அகமகிழ்ந்து திருமகள் இனிது வாழும்; [அகம்-மனம்]
பரிமேலழகர்: திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்;
'திருமகள் மனம் பொருந்தி வாழும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அகம் மலர்ந்து திருமகள் தங்கிவிடுவாள்', 'திருமகள் மனம் மகிழ்ந்து வந்து தங்குவாள்', 'திருமகள் மனமகிழ்ந்து தங்கியிருப்பாள்', 'செல்வக் கடவுளாம் திருமகள் மனம் மகிழ்ந்து வாழ்வாள்', என்ற பொருளில் உரை தந்தனர்.
திருமகள் மனம் மகிழ்ந்து உறையும் என்பது இப்பகுதியின் பொருள்.
முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்ல விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண். [போற்றுவானது-பாதுகாப்பானது]
மணக்குடவர் குறிப்புரை: இது கேடின்மையன்றிச் செல்வமுமுண்டா மென்றது
பரிதி: மனமகிழ்ந்து விருந்து செய்வானிடத்தில்.
காலிங்கர்: எவ்விடத்து எனின் முகமலர்ந்து இவ்வாறு நல்விருந்தினராகிய மறையோர்க்கும் வறியோர்க்கும் விருந்தைப் பேணி வழிபடுவான் இல்லிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண்.
பரிமேலழகர் குறிப்புரை: மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு. [கிளைத்தற்கு-பெருகி வளர்தற்கு]
'விருந்தினரை முகம் பொருந்திப் போற்றுவானது மனையின்கண்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். நல்விருந்து என்றதற்கு மணக்குடவர் நல்ல விருந்தினர் என்றும், காலிங்கர் 'நல்விருந்தினராகிய மறையோர்க்கும் வறியோர்க்கும்' என்றும் பரிமேலழகர் 'ஞான ஒழுக்கங்களான் உயர்ந்த தக்க விருந்தினர்' என்றும் உரை செய்வர்.
இன்றைய ஆசிரியர்கள் 'முகம் மலர்ந்து விருந்து செய்பவன் வீட்டில்', 'முகமலர்ச்சியுடன் நல்ல விருந்தினரைப் பேணுவானது வீட்டில்' முக மலர்ச்சியுடன் தக்க விருந்தினரைப் பேணுவானுடைய வீட்டின்கண்', 'முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது வீட்டில்' என்றபடி பொருள் உரைத்தனர்.
முகம் மலர்ந்து நல்ல முறையில் விருந்து செய்வான் இல்லின்கண் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
முகம் மலர்ந்து நல்விருந்து செய்வான் இல்லின்கண் திருமகள் மனம் மகிழ்ந்து உறையும் என்பது பாடலின் பொருள்.
'நல்விருந்து' குறிப்பது என்ன?
|
வருவோரை முகமலர்ச்சியுடன் பேணுவானது செல்வம் பெருகும்.
விருந்தினர்களை முகமலர்ச்சியோடு பேணுகிறவனின் இல்லத்தில் திருமகள் உள்ளம் மகிழ்ந்து அகலாது தங்கியிருப்பாள்.
சென்ற பாடலில் (குறள் 83) நாளும் விருந்தோம்பல் செய்வதால் செல்வம் குறைந்து வாழ்க்கை பாழ்படாது என்று சொல்லப்பட்டது. இங்கு முக மலர்ச்சியுடன் விருந்திடுவோன் வீட்டில் செல்வக்கடவுளான திருமகள் விரும்பிக் குடிகொண்டிருப்பாள் என்று கூறப்படுகிறது. அதாவது அவனது செல்வம் பெருகி வளம் கொழித்து வாழ்வான் எனச் சொல்லப்படுகிறது.
விருந்தளிக்கும் முறையும் இங்கு கூறப்பட்டுள்ளது. மனமகிழ்ச்சியை வெளிப்படையாகக் காட்டுவது முகம். எனவே 'முகன் அமர்ந்து' என்ற தொடர் மனமகிழ்ச்சியைக் குறிப்பதாகும். இன்முகம் காட்டல் வந்த விருந்தினருக்கு மகிழ்வை உண்டாக்கும். விருந்தினர் வேண்டுமளவு உண்ணுகிற காட்சியைப் பார்த்து விருந்தோம்புவான் மேலும் மகிழ்ந்து மனநிறைவு பெறுவான்.
திருப்பாற்கடலைக் கடைந்தபோது முதலில் மூத்த தேவியான மூதேவி பிறந்தாள்; பின் செம்மையான நிறமுடைய திருமகள் பிறந்தாள் என்று தொன்மங்கள் சொல்லும்.
செல்வத்திற்கு உரிய கடவுளாக திருமகளைக் கூறுவது மரபு. அத்தெய்வம் வாழும் இடத்தில் செல்வம் தழைக்கும் என்பது நம்பிக்கை. நல்ல முறையில் விருந்தோம்புவான் இல்லத்தில் செல்வம் மிகுந்து அது நிலைத்திருக்கும் என்ற கருத்து புலப்படுத்தப்படுகிறது. திருமகள் நல்விருந்து ஓம்புவான் இல்லத்தில் உளம் உவந்து தங்குவதே அங்கு பொருள் கிளைத்தற்குக் காரணம். விருந்தோம்புவான் அகமலர்ச்சியை விருந்தினது முகமலர்ச்சியான் அறிதல் போலத் தெய்வமாகிய செய்யவள் அகமலர்ச்சியை அவள் இல்லத்தில் உறைதல் என்பது தெரிவிக்கிறது. 'உறையும்' என்ற சொல்லாட்சி எப்பொழுதும் நீங்காது தங்கியிருக்கும் என்ற குறிப்புணர்த்தியது.
ஏன் நல்விருந்து என்று சொல்லப்பட்டது என்பதற்கு சி இலக்குவனார் 'உணவு இடப்படுகின்ற வீட்டிற்கு நல்லவர் அல்லாதவரும் வரக்கூடும். நல்லவர்க்கே விருந்திடல் வேண்டும் என்பதை வலியுறுத்த 'நல்விருந்து' எனப்பட்டது' என விளக்கம் தந்தார். ஜி வரதராஜன் 'வந்த விருந்தினன் தக்கானாய் நல்லவனாய் இருப்பானாகில் இவனது செல்வம் நாளும் நாளும் நன்றாக வளரவேண்டும் என்று வாழ்த்துவான். வளரவும் வகைசெய்வான். ஆகையால் நல்விருந்து ஓம்புவான் இல்லில் செய்யாள் உறையும் என்றார் எனக் காரணம் காட்டுவார்.
'செல்வம் பெருகும் என்று சொல்வதைவிட 'அகனமர்ந்து செய்யாள் உறையும்'' என்னும்போது செல்வம் மகிழ்ச்சியாகத் தங்கும் என்ற கூடுதல் கருத்து பெறப்பட்டு விருந்தோம்பலின் பயன் அழுத்தம் பெற்ற ஓசைநயம் கூடிக் கவிதை என்ற தகுதியைப் பெறுகிறது' என்பார் செ வை சண்முகம்.
|
'நல்விருந்து' குறிப்பது என்ன?
'நல்விருந்து' என்ற தொடர்க்கு நல்ல விருந்தினர், நல்விருந்தினராகிய மறையோர் வறியோர், ஞான ஒழுக்கங்களான் உயர்ந்த தக்க விருந்தினர், ரிஷீந்திரர் (முனிவர்களின் தலைவர்), நல்விருந்து, நல்ல விருந்தினர், நல்ல விருந்தினராய் வந்தவர், விருந்து படைத்தற்குத் தகுதியுடையார், விருந்து செய்பவன், தன்னிடம் வரும் உரிமை பற்றிய தகுதியுடைய விருந்தினர், வரவேற்று நன்முறையில் பேணுபவன், அறிவும் ஒழுக்கமும் தன்மானமும் உள்ளோர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
'நல்விருந்து' என்பது வந்த 'நல்ல விருந்தினரை'க் குறிப்பது எனப் பெரும்பான்மையர் உரைத்தனர். மிகச் சிலர் அது 'நல்ல விருந்தோம்புவானை'ச் சுட்டும் என்றனர். மற்றவர்கள் வாளா விருந்து எனக் கூறினர்.
இத்தொடர் விருந்து படைத்தற்குத் தகுதியுடையாரைக் குறிக்கிறது என்றும் நல் விருந்தினர் என்போர் அறிவும் ஒழுக்கமும் தன்மானமும் உள்ளோர் என்றனர். வேறு சிலர்
மக்களுள் உயர்ந்தவர்களான இறைத்தொண்டு புரிவோர், மக்கள் நலம் கருதும் சான்றோர், சமயத் துறவிகள், முனிவர்கள், கல்வியாளர்கள் விருந்தினர்களாகும்போது 'நல்விருந்து' என்று குறிக்கப்படுகிறார்கள் என்றனர். இன்னும் சிலர் அது மறையோர், வறியோர், ரிஷீந்திரர்' (முனிவர்களின் தலைவர்) இவர்களைக் குறித்தது என்றும் பொருள் தந்தனர். இவையாவும் 'நல்' என்பது விருந்தினருக்கு அடையாக நிற்றலைத் தெரிவிக்கின்றன.
இதே அதிகாரத்திலுள்ள மற்றொரு பாடலான .........நல்விருந்து வானத் தவர்க்கு (86) என்பதில் நல்விருந்து என்பது விண்ணுலகத்தார் விரும்பி எதிர்கொள்ளத்தக்க விருந்தினன் ஆவன் என்ற பொருளிலேயே ஆளப்பட்டது. அதாவது அக்குறளில் நல்விருந்து என்பது நல்ல விருந்தினன் என்ற பொருள் தருவதாகிறது.
நல்விருந்து என்ற தொடர் விருந்தோம்புவானைக் குறிக்கிறது என்றனர் சிலர்.
'இவ்வதிகாரம் விருந்தோம்பலைப் பற்றியது. விருந்தினரைப் பற்றியதன்று. ஆதலின் 'நல்' என்பது விருந்தோம்புவான் தன்மையை விளக்குதற்கு ஏதுவாய் நிற்கிறதென்று சொல்வது பொருத்தமுடையதாகும்' எனத் திரு வி க நல்விருந்து என்பதற்கு விளக்கம் தந்தார். இவர் 'நல்விருந்தோம்புவோன் - நல்ல விருந்தோம்புவோன். நல்ல முறையில் விருந்தோம்புவோன்; விருந்தினர் மனம் சிறுதும் எக்காரணம் பற்றியும் திரியா முறையில் விருந்தோம்புவோன்' என்று விளக்கி ''நல்' என்பது பயன் கருதாமையையும் குறிக்கொண்டு நிற்கின்றது. பயன் கருதுவோன் உள்ளத்தில் அன்பு இராது; தன்னலமிருக்கும். அன்பு இல்லாத இடத்தில் அகமலர்ச்சி இராது. அகமலர்ச்சி இல்லாத இடத்தில் முகமலர்ச்சியிராது' என்று மேலும் தெளிவுபடுத்துவார்.
இரா இளங்குமரனார் முகமலர்ந்து வரவேற்று 'நன்முறையில்' பேணுபவன் என்றும் குழந்தை இனியனாய் 'நன்றாக' விருந்தினரைப் போற்றுபவன் என்றும் 'நல்' என்ற சொல்லை விளக்கினர்.
இவ்வாறு 'நல்விருந்து' என்ற தொடர்க்கு நன்முறையில் விருந்து பேணுபவன் என்றும் நல்ல விருந்தினர் என்றும் பொருள் கூறப்பட்டன. நல்விருந்து என்ற தொடர் விருந்தினரைக் குறிக்கிறதா? விருந்தோம்புவானைக் குறிக்கிறதா?
விருந்தினரை நல்லவர், தக்கவர் என்று பொதுமையில் பிரித்துக் கூறியவர்கள் தவிர்த்து விருந்தோம்புவானின் நிலைக்கு மேம்பட்ட நிலையில் உள்ளவர்கள் அல்லது விருந்தினருள் உயர்ந்தவர்கள் (மறையோர், சான்றோர், சமயத் துறவிகள், முனிவர்கள், கல்வியாளர்கள் ஆகியோர்) என்றும் விருந்தோம்புவான் நிலைக்குச் சமமான நிலையுடையவர்களான வணிகர், புலவர், உறவினர், தொழில் காரணமாகப் பயணிப்போர் எனவும் பிரித்துக் கூறினர்.
விருந்தினரைப் பாகுபடுத்தி வகைப்படுத்திக் கூறினார் வள்ளுவர் என்று எண்ண முடியவில்லை. விருந்தினரில் நல்ல விருந்தினர், கேடான விருந்தினர் எனப் பிரித்துப் பார்ப்பது வந்தவர்களையும் விருந்தோம்பலையும் சிறுமைப்படுத்துவதாகும். நல்ல விருந்தினரைப் பேணுபவர் இல்லத்தில் மட்டுமே செல்வம் பெருகும் என இக்குறள் கூறுவதாகச் சொல்லப்படுவது ஏற்கத் தக்கதாக இல்லை.
நல்விருந்து என்பது நல்ல முறையில் விருந்தோம்புவானைக் குறிப்பதாகக் கொள்வதே சிறக்கும்.
|
முகம் மலர்ந்து நல்ல முறையில் விருந்து செய்வான் இல்லின்கண் திருமகள் மனம் மகிழ்ந்து உறையும் என்பது இக்குறட்கருத்து.
நல்ல விருந்தோம்பல் செய்வான் இருப்பிடம் திருமகள் உறையும் தெய்வீக இல்லமாகும்.
முகம் மலர்ந்து நன்றாக விருந்தினரைப் போற்றுபவன் வீட்டில் மனம் மகிழ்ந்து திருமகள் தங்கிவிடுவாள்.
|