வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம்; ,
பரிப்பெருமாள்: நாடோறும் வந்தவிருந்தினரைப் போற்றுவானது ஆக்கம்;
பரிதி: வருகிற விருந்தைப் பார்த்து நாளும் உபசரிப்பது நன்று. அங்ஙனம் உபசரிக்கிறவன் வாழ்க்கை;
காலிங்கர்: தன்னில்லத்து வருகின்ற விருந்தினை நாடொறும் குறிக்கொண்டு பூசிக்கும்; அவன் இல்வாழ்க்கையானது;
பரிமேலழகர்: தன்னை நோக்கி வந்த விருந்தை நாள்தோறும் புறந்தருவானது இல்வாழ்க்கை; [புறந்தருவானது-பாதுகாப்பானது]
'தன்னில்லத்து வருகின்ற விருந்தினை நாடோறும் போற்றுவானது இல்வாழ்க்கை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நாளும் வருகின்ற விருந்தைப் போற்றுக;', 'தம் இல்லம் நோக்கி வருகின்ற விருந்தினரை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை', 'தினந்தினம் வருகிற விருந்தினர்களுக்கெல்லாம் உணவளித்து உபசரிகின்றவனுடைய வாழ்க்கை', 'நாடோறும் வருகின்ற விருந்தினரைப் பேணி வாழ்பவனது இல்வாழ்க்கையானது' என்ற பொருளில் உரை தந்தனர்.
வருகின்ற விருந்தினை நாள்தோறும் பேணுவானது வாழ்க்கை என்பது இப்பகுதியின் பொருள்.
பருவந்து பாழ்படுதல் இன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.
பரிப்பெருமாள்: வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: விருந்தோம்பலால் பயனென்னை? என்றார்க்குப் பயன் கூறுவார் முற்படச் செல்வங் கெடாது எனக் கூறினார்.
பரிதி: வருந்திப் பாழாதல் இல்லை என்றவாறு.
பரிதி குறிப்புரை: அது எது எனில், சரீரத்தில் ஒரு பரு வந்து விதனமான காலத்துச் சீப்பரிய விதனம் மாறுவது போல வருவிருந்து உபசரிக்கில் வினையறும் என்றவாறு. [பரு- வெப்பத்தால் முக முதலிய இடங்களிற் கிளைக்கும் நோய்; விதனம்- துன்பம்; சிப்பரிய- நீக்கற்கு அரிய]
காலிங்கர்: துயருற்று நசிக்குமாறு வருதல் இல்லை என்றவாறு. [நசிக்குமாறு-அழியும் வகையில்]
பரிமேலழகர்: நல்குரவான் வருந்திக்கெடுதல் இல்லை. [நல்குரவு-வறுமை]
பரிமேலழகர் குறிப்புரை: நாள்தோறும் விருந்தோம்புவானுக்கு அதனான் பொருள் தொலையாது; மேன்மேல் கிளைக்கும் என்பதாம்.
'வருத்தமுற்றுக் கேடுபடுவதில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'வாழ்வு துன்பப்பட்டு அழியாது', 'துன்புற்றுக் கெடுதல் இல்லை', 'அதனால் வறுமையுற்றுக் கெட்டுப் போகுமென்பது இல்லை', 'வறுமையால் வருந்திக் கெடுவதில்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.
துயருற்று கெட்டுப் போவதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|