விருந்து புறத்ததாத் தானுண்டல்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல்;
பரிப்பெருமாள்: விருந்தினர் இற்புறத்தாராகத் தானே யுண்டல்;
பரிதி: விருந்து புறத்திலே இருக்கத் தான் உண்பது நன்றல்லது;
காலிங்கர்: விருந்து தன்கடைப் புறத்ததாகப்பெற்று வைத்துத்தான் அகத்திலிருந்து உண்டாலாகின்ற இது;
பரிமேலழகர்: தன்னை நோக்கி வந்த விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்;
'விருந்து தன் இல்லின் புறத்ததாகத் தானே உண்டல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள 'வந்த விருந்து வெளிப்புறம் இருக்க', 'விருந்தினர் வெளியே இருக்க', 'ஏதானாலும் பிறருக்கும் கொடுத்து உண்ணவேண்டும்', 'தன்னிடம் வந்த விருந்தினர் வீட்டுக்கு வெளியே இருக்கத் தானே தனியாக உண்டல்' ,என்ற பொருளில் உரை தந்தனர்.
விருந்து தன்இல்லத்துப் புறத்து இருக்கத் தானே உண்பது என்பது இப்பகுதியின் பொருள்.
சாவா மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.
பரிப்பெருமாள்: சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் வேண்டும் பகுதி யுடைத்தன்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: சாவா மருந்தாவது தன்னளவிற்கும் குறைந்து இதனானே இவ்வுயிர் கிடக்கும். இதனிற் குறையிற்சாம்; என்னும் அளவிற்றாய சில்லுணவு இதனை உலகத்தார் உயிர்போகாக் கஞ்சி என்பர். அமிழ்து என்பாரும் உளர். இது வாழ்வோர்க்கேயன்றி வாழாதாரும் விருந்து ஓம்பிட வேண்டும் என்றது.
பரிதி: நஞ்சாகிலும் கூடவிருந்து புசிப்பது நன்று என்றவாறு.
காலிங்கர் சாவாப்பதம் தருவதாகிய அமரர் உலகத்து அமுதமே ஆயினும் தான் விரும்பும் பான்மை நன்றன்று.
காலிங்கர் குறிப்புரை தானுண்டு சாகின்ற சோற்றினை மற்றில்லறத்திற்கு நல்வழிப்பாடாகிய விருந்து தன்கடைப் புறத்ததாகப் பெற்று வைத்து மற்றிதனைத் தானுண்டல் எக்கூற்றினிடத்ததோ அறிகிலேன் என்றவாறு.
பரிமேலழகர்: உண்ணப்படும் பொருள் அமிழ்தமே எனினும் விரும்புதல் முறைமையுடைத்து அன்று.
பரிமேலழகர் குறிப்புரை: சாவா மருந்து: சாவாமைக்குக் காரணமாகிய மருந்து. 'விருந்து இன்றியே ஒருகால் தான் உண்டலைச் சாவா மருந்து என்பார் உளராயினும் அதனை ஒழிக' என்று உரைப்பினும் அமையும். இவை இரண்டு பாட்டானும் விருந்தோம்பலின் சிறப்புக் கூறப்பட்டது.
'சாவாமைக்கு உண்ணும் மருந்தாயினும் விரும்புதல் முறைமையுடைத்து அன்று' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'தனக்குச் சாவாமருந்து கிடைப்பினும் உண்ணல் ஆகாது', 'கிடைத்தற்கரிய அமிழ்தமே ஆயினும் தான் மட்டும் தனியே உண்டல் விரும்பத்தக்கது அன்று', 'சாகாமல் இருக்கச் செய்வதான தேவாமிர்தத்தை உண்பதானாலும் விருந்தாளி இல்லாமல் தானே உண்பது விரும்பத்தக்கதல்ல', 'உண்ணப்படும் பொருள் சாவைப் போக்கும் அமிழ்தமாக இருந்தாலும் விரும்பத்தக்கது அன்று 'என்றபடி பொருள் உரைத்தனர்.
சாகாமல் இருக்கச் செய்வதான மருந்தேயானாலும் விரும்பத்தக்கது அல்ல என்பது இப்பகுதியின் பொருள்.
|