இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0081



இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

(அதிகாரம்:விருந்தோம்பல் குறள் எண்:81)

பொழிப்பு: (மு வரதராசன்) வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவிசெய்யும் பொருட்டே ஆகும்.

.

மணக்குடவர் உரை: இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம் வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.

பரிமேலழகர் உரை: இல் இருந்து ஓம்பி வாழ்வது எல்லாம் - மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்; விருந்து ஓம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு - விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு.
(எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: வீட்டில் தங்கிப் பொருளைப் போற்றி இல்லறம் நடத்துவதெல்லாம் விருந்தினரைப் பேணி உதவி செய்தற் பொருட்டேயாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு.

பதவுரை: இருந்து-நிலைபெற்று இருந்து, தங்கி இருந்து, இருந்துகொண்டு; ஓம்பி- பேணி, பாதுகாத்து; இல்வாழ்வது-இல்லறத்தில் வாழ்தல்; எல்லாம்-அனைத்தும்; விருந்து-விருந்தினர்; ஓம்பி-போற்றி; வேளாண்மை-உதவுதல், பிறவுயிர்க்கு நல்லது செய்கை; செய்தற்பொருட்டு-செய்வதற்காக.


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம்;
பரிப்பெருமாள்; இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம்;
பரிப்பெருமாள் குறிப்புரை: எல்லாம் என்றது வாழ்க்கைப் பன்மை.
பரிதி: இராதசரீரத்தை இருப்பது என்றும், நில்லாத செல்வம் நிற்பதென்றும் வாழ்வர்;
காலிங்கர்: ஒருவன் இல்லறத்திருந்து இல்வாழ்க்கையைப் பாதுகாக்கும் காரணம் யாதோவெனின்........
பரிமேலழகர்: மனைவியோடு வனத்தில் செல்லாது இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்;

'இல்லின்கண் இருந்து பொருளைப் போற்றி வாழும் வாழ்க்கை யெல்லாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள 'குடும்பமாக இருந்து சிறந்து வாழ்வதெல்லாம்', 'வீடுவாசலோடு இருந்துகொண்டு பொருள்களைப் பாதுகாத்து மனைவிமக்களுடன் குடும்பம் நடத்துவதன் நோக்கமெல்லாம்', 'மனைவியுடன் வீட்டிலிருந்து பொருள்களைப் போற்றி வாவதெல்லாம்', 'இல்லின்கண் இருந்து பொருள்களைப் போற்றி வாழும் செய்கை எல்லாம்' என்ற பொருளில் உரை தந்தனர்.

குடும்பமாக இருந்து சிறந்து வாழ்க்கை நடத்துவதெல்லாம் என்பது இப்பகுதியின் பொருள்.

விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.
பரிப்பெருமாள்; வந்தவிருந்தினரைப் போற்றி அவர்க்கு உபகரித்தற்காக.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இல்வாழ்க்கையின் பயன் விருந்தோம்பல் என்றது.
பரிதி: இதனை அறியாமல் விருந்து செய்தல் வேளாண்மை செய்வதற்கு ஒக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு.
பரிமேலழகர் குறிப்புரை: எனவே, வேளாண்மை செய்யாவழி இல்லின்கண் இருத்தலும் பொருள்செய்தலும் காரணமாக வரும் துன்பச் செய்கைகட்கு எல்லாம் பயன் இல்லை என்பதாம். [வேளாண்மை- உதவுதல்]

'விருந்தினரைப் பேணி அவர்க்கு உபகாரம் செய்தற் பொருட்டு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விருந்துபேணி உதவி செய்தற்கே', 'வீட்டுக்கு வந்தவர்களை உபசரித்து உலகத்துக்கு உபகாரமாக இருப்பதற்காகத்தான்', 'விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டேயாம்', 'விருந்தினரைப் பேணி அவர்க்கு உதவி செய்யும் பொருட்டு' என்றபடி பொருள் உரைத்தனர்.

விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குடும்பமாக இருந்து சிறந்து வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தோம்பி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டு என்பது பாடலின் பொருள்.
'விருந்தோம்பி' குறிப்பது என்ன?

நாடி வருவோரது பசியாற்றல் இல்வாழ்வானின் தலையாய கடமையாம்.

நிலைபெற்ற குடும்ப வாழ்க்கை உடையவர்கள் இல்லறநெறி சிறக்க வாழ்தல் விருந்தினரைப் பேணி அவர்கட்கு உதவி செய்வதற்கு.
'இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம்' என்றது குடும்பத்துடன் இருந்து இல்லற வாழ்வு நடாத்துவது எல்லாம் எனப்பொருள்படும். இருந்தோம்பி என்ற தொடர் இல்லறத்தில் இருந்து மனைவி, மக்கள் முதலாயினோரைப் பாதுகாத்து என்ற பொருள் தருவது. இதிலுள்ள 'இல்' என்னும் சொல்லுக்கு இல்லாள், இல்லம், இல்லறம் எனப் பொருள் கூறினர். இவற்றுள் இல்லறம் எனக் கொண்ட பொருள் சிறக்கும். 'வாழ்வதெல்லாம்' என்பதை இடம் பொருள் ஏவலாகிய அனைத்துவிதச் செல்வங்களோடும் வாழ்கின்ற வாழ்வனைத்தும் என விளக்குவர்.
'விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்பதிலுள்ள விருந்து என்பது உறவு நட்பு ஆகிய சார்புகள் இல்லாத, புதியதாக அறிமுகம் ஆகியவர்களைக் குறிக்கும் என்றாலும். அறிந்து தம் இல்லந்தேடி வருபவர்கள், அறியாது வருபவர்கள் என இருதிறத்தாரையும் சுட்டுவதாகாதாகவே கொள்வர். விருந்தோம்பல் என்பது அவர்களை அன்போடு வரவேற்று, இன்சொல்பேசி அவர்களுக்கு உணவு, உடை, இடம் தந்து பேணுதலைக் குறிக்கும். வறியவர்கள், தன்னலங் கருதாத துறவிகள், ஆதரவற்று அலைவோர் ஆகியோரும் இவ்விருந்தினருள் அடங்குவர். விருந்தினரது பசி நீக்கும் பொறுப்பு இல்லறத்தார்க்குரியது என்பது முன்னோர் கொள்கை. பசி தீர்த்தல் என்பது மிகச் சிறந்த அறம் என்பதால், விருந்தோம்பலை இல்வாழ்வார்க்குரிய தலையாய அறக்கடமையாக விதிக்கிறார் வள்ளுவர். இல்லறத்தைப் போற்றி வாழ்தலின் நோக்கம் விருந்தினரைப் பேணி மனம் மகிழ்வதாக இருக்க வேண்டும் என்பது அவரது விழைவு. விருந்து என்பதை இக்காலத்து மணவிழா போன்ற மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் அளிக்கப்படும் உயர்வகை உணவு என்று பொருள் கொள்ளக்கூடாது.
வேளாண்மை என்ற சொல் உதவுதல் அல்லது உயிர்களுக்கு நல்லது செய்கை என்ற பொருளில் இங்கு ஆளப்பட்டது. இது எந்தவிதமான வேறுபாடுகளுமின்றி யாவருக்கும் யார் மாட்டும் யாண்டும் எஞ்ஞான்றும் உதவக்கூடிய செய்கையைக் குறிப்பது. இந்தச் சமுதாயப் பண்பினை இல்லறத்தார் மேற்கொள்ள வேண்டிய கடப்பாடாக வள்ளுவர் வற்புறுத்துகிறார். தனதன்பை இல்லறத்திற்கு வரும் விருந்தினர்களோடு பகிர்ந்து கொண்டு வாழ்வது என்பது விருந்தோம்புவானது குடும்பத்திலுள்ளோர் உள்ளத்திலும் பிறர்மாட்டு அன்பு செலுத்தும் மனநிலையையும் சமுதாய உணர்வையும் வளர்க்கவும் துணைசெய்யும்.

இப்பாடல் இல்வாழ்க்கைக்கும் விருந்தோம்பலுக்கும் உள்ள தொடர்பை உணர்த்துகிறது.
இல்லறவாழ்வு என்பது ஒரு ஆணும் ஒரு பெண்ணும் மணம் செய்து பொருள் ஈட்டி இன்பம் துய்ப்பதைச் சொல்வது. ஆனால் இதுமட்டுமே இல்வாழ்வின் நோக்கமாக இருக்க முடியுமா? கூடாது. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது என்று இல்வாழ்க்கை அதிகாரத்துக் குறள் (45) ஒன்று முன்பு கூறியது. மனைவி, மக்கள் ஆகியோரோடு கூடி வாழும் அன்பு வாழ்க்கையில் விருந்தோம்பல் பண்பு சிறக்க வேண்டும். அப்பொழுது அது அறமாகி அவர்கள் வாழும் வாழ்க்கையின் பயனுமாகிறது. விருந்தோம்பாதார்‌ இல்லறமும்‌ பொருள்வாழ்வும்‌ பயனற்றனவாம். ‌
இல்லறத்தில் ஈடுபட்டுப் பொளீருட்டி வாழ்வது மற்றவர்க்கு நன்மை செய்யவே என்னும் உயரிய நிலையைக் கூறும் இக்குறட்கருத்து ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற அறவாணர்களின் உள்ளத்தைத் தொட்ட ஒன்றாகும்.

பொருட்டு என்னும் பின்னுருபைப் பயன்படுத்தியது புதிய ஆட்சி என்றும் இந்நான்காம் வேற்றுமைச் சொல்லுருபு புதிய வரவாகும்.என்றும் கூறுவார் இ சுந்தரமூர்த்தி.

'விருந்தோம்பி' குறிப்பது என்ன?

இல்லறம் மேற்கொள்வோர் சமுதாய உணர்வுகொண்டு உதவி தேவைப்படுவோர்க்கு அதைச் செய்தே ஆகவேண்டும் என்று முன்னாட்களில் விதிக்கப்பட்டது. 'இக் காலத்திற்போல் உண்டிச் சாலைகளும் தங்கல் விடுதிகளுமில்லாத பண்டைக் காலத்தில், பணம் பெற்றேனும், இல்லறத்தாரையன்றி விருந்தினரைப் பேண ஒருவரு மின்மையின், இல் வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் விருந்தோம்பலே என்றார்' என்பது இப்பாடலுக்கான தேவநேயப்பாவாணர் உரை.
குடும்ப அமைப்பில்லாமல் வாழ்பவர் இல்லறத்தாராகக் கருதப்படுவதில்லை; அவரை நாடி விருந்தினர் செல்வதுமில்லை; விருந்தோம்பல் என்ற கேள்வி அங்கே எழுவதுமில்லை. ஆனால் இல்லறத்தில், காதல் வாழ்வைத் தொடங்கிய ஆணும் பெண்ணும் மக்கட்பேறு அடைந்து அன்புடைமையால் தம்மொடு தொடர்புடையார்கண் நெகிழ்ச்சி கொண்டு அதன் அடுத்த நிலையான விருந்தோம்பலுக்குச் செல்கின்றனர். அதாவது அன்பு முதிர்ந்து ஆர்வமுடைமை நிலையில் மலர்வது விருந்தோம்பல். இங்கு அவர்கள் பிறர்க்கு உதவி செய்யத் தொடங்குகின்றனர். இல்லையென்றால் அவர்கள் மேற்கொள்ளும் அன்பு வாழ்வு பொருளற்றதாகிவிடும். எனவே எத்தகைய வாழ்வானாலும் விருந்தோம்பலை ஒரு தலையாய நோக்கமாகக் கொள்க எனச் சொல்லப்பட்டது.

ஒருவன் இல்லறம் மேற்கொள்வதே விருந்தினரை வரவேற்று உதவி செய்வதற்குத்தான் என்று இப்பாடல் கூறுவது இன்றைய வாழ்க்கை முறைக்குப் பொருந்துமா?
விருந்தோம்பல் அறத்தை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் இன்று பின்பற்றி நடக்க முடியுமா? நாட்டு மக்கள் இதற்கேற்ற வாழ்க்கை வளம் பெற்றிருக்கிறார்களா? இருக்க உறைவிடம் இல்லாமல், போற்றப் பொருளும் இல்லாமல் கணவனும் மனைவியுமாக வாழ்வோர் பலர் உண்டு. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருளும் இடமும் வேண்டும். இவைகள் இல்லாமல் என்ன செய்ய முடியும்?
விருந்தோம்பலைச் சமுதாயத்திற்கு நன்மை செய்யும் ஒரு தொண்டாகவே வள்ளுவர் வலியுறுத்துகிறார். துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்பான் துணை (இல்வாழ்க்கை 42 பொருள்: துறவிகளுக்கும், வறியவர்கட்கும், ஆதரவற்றோர்க்கும் இல்லற வாழ்க்கையில் உள்ளவன் துணையாவான்) என்னும் குறட்பாவை நினைக்க. தேவைப்படுவோர்க்கு உதவி செய்தல் என்பதை பசியாற்றல் போன்ற அறமாக நோக்கினால் இக்குறட்கருத்து பின்பற்ற முடியாததல்ல என அறியலாம். இப்பாடலில் வரும் வேளாண்மை செய்தல் என்ற தொடர் பிறர்க்கு உதவி செய்தல் என்ற பொருளைத் தருவதாகும். வந்த விருந்தினருக்கு வயிறார உணவளித்து மகிழ்வோடு அனுப்புதலான விருந்தோம்பல் இல்லறத்தானின் வாழ்க்கை வளப்பத்துக்கு உட்பட்டே அமையும். அதை அவனது இல்லத்தின் பொருள் நிலைக்கேற்பவும் காலச் சூழ்நிலைகேற்பவும் செய்யஇயலும்.

'விருந்தோம்பி' என்ற தொடர் மணக்குடவர் வரையறுத்தவாறு உண்ணுங் காலத்துப் புதியார் வந்தால் பகுத்து உண்ணுதல் குறித்தது.

குடும்பமாக இருந்து சிறந்து வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவிசெய்தற் பொருட்டு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இல்லறத்தின் சிறப்பியல் விருந்தோம்பல்.

பொழிப்பு

வீட்டில் தங்கி சிறந்து வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்துபேணி உதவி செய்வதற்காம்.