இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0057



சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:57)

பொழிப்பு (மு வரதராசன்): மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம் காக்கும் காப்பே சிறந்தது.

மணக்குடவர் உரை: மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்? அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.

பரிமேலழகர் உரை: மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் - மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை - அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல்.
(சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பெண்கள் தம்மை நிறையால் காக்கும் காவலே தலை சிறந்த காவல். அவர்களைச் சிறையால் காப்பது என்ன பயனைத் தரும்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.

பதவுரை: சிறை-சிறை செய்து, கட்டுப்படுத்தல், காவல்; காக்கும்-காப்பாற்றும்; காப்பு-காவல்; எவன்-என்ன, யாது; செய்யும்-செய்யும்; மகளிர்-மகளிர், இல்வாழ்க்கைக்குரிய பெண்; நிறை-கற்பு, நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்துதல்; காக்கும்-காப்பாற்றும்; காப்பே-காவலே; தலை-முதன்மை.


சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்?
பரிப்பெருமாள்: மகளிரைச் சிறைசெய்து காக்குங்காவல் யாதினைச் செய்யும்?
பரிதி: உட்காவல், புறக்காவல் மனைக்குத்தான். அவற்றான் காவற்படுவது கற்பன்று;
காலிங்கர்: மதில் சிறையும் காவற் சிறையும் என்கின்ற காப்பெல்லாம் என் செய்யும்; அதனால் யாதொரு பயனும் இல்லை.
பரிமேலழகர்: மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்?
பரிமேலழகர் குறிப்புரை: சிறை : மதிலும், வாயில்காவலும் முதலாயின.

'சிறையால் காக்கும் காவல் என்ன பயனைச் செய்யும்?' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீட்டுச் சிறை என்ன பயன் செய்யும்?', 'பெண்டிரைப் புறக்கட்டுப்பாடுகளினால் நெறி வழுவா வண்ணம் தடுத்துக் காக்குங்காவல் என்ன நன்மையை உண்டாக்கும்?', 'பெண்களை வெளியே போகவிடாமல் வீட்டுக்குள்ளேயே சிறைவைத்துக் காக்கின்ற காவல் எதற்காகும்?', 'மனைவியைச் சிறையில் வைத்துக் காக்கும் காவல் என்ன பயனைத் தரும்?' என்ற பொருளில் உரை தந்தனர்.

சிறைசெய்து காக்கும் காவல் என்ன செய்யும்? என்பது இப்பகுதியின் பொருள்.

மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.
பரிப்பெருமாள்: அவரது கற்புக் காக்குங் காவலே தலையான காவல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய ஒழுக்கம் சிறைசெய்து காக்க உண்டாகாதோ என்றார்க்கு, அது செய்தாலும் நிறையிலராகில் அழியும். இரண்டும் வேண்டும் என்று கூறிற்று.
பரிதி: மடவார் பதிவிரதா பாவகத்தில் உண்டாவதே கற்பு என்றவாறு. [பதிவிரதா பாவகம்-கற்புடைமையைக் கடைப்பிடித்தல்]
காலிங்கர்: மற்றுத் தம் இல்வாழ்க்கைக்குரிய மகளிரது கற்புக்காக்கும் காப்பே அவ்வில்லறத்திற்குத் தலைமையுடைய காவல் என்றவாறு.
பரிமேலழகர்: அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய காவல்.
பரிமேலழகர் குறிப்புரை: நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார், 'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம் பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக் கூறப்பட்டது.

'கற்புக்காக்கும் காப்பே தலையாய காவல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவியர்க்குக் கற்புக் காவலே காவல்', 'அவர்கள் தமது நிறையாகிய மன உறுதியினால் தம்மைக் காத்துக் கொள்ளுங் காவலே முதன்மையான காவலாகும்', 'தாங்களைத் தாங்களே காத்துக் கொள்ளுகிற அவர்களுடைய கற்புணர்ச்சிதான் அவர்களுக்குச் சிறந்த காவல்', 'மனைவி தனது கற்பால் காக்கும் காவலே தலைசிறந்த காவல்' என்றபடி பொருள் உரைத்தனர்.

கற்புடைமையைக் கடைப்பிடித்தலே பெண்ணுக்குச் சிறந்த காவல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:

சிறைகாக்கும் காப்பு என்ன செய்யும்? கற்புடைமையைக் கடைப்பிடித்தலே பெண்ணுக்குச் சிறந்த காவல் என்பது பாடலின் பொருள்.
'சிறைக்காக்கும் காப்பு' குறிப்பது என்ன?

சிறைவைத்து ஒரு பெண்ணின் பாலியல் ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது.

புறக்கட்டுப்பாடுகளால் பெண்களைக் காவல் செய்வது என்ன பயனைத் தரப்போகிறது? அவர்கள் தமது நெஞ்சைக் கற்பு நெறியில் நிறுத்தித் தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் காவலே மேலானது.
கற்பொழுக்கம் என்பது பெண் தாமாக விரும்பி ஏற்றுக் காக்கப்படும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று சொல்லும் பாடல். பெண் தன் இல்லத்தில் உரிமையுடன் வாழ்தல் வேண்டும் என்பதை வலியுறுத்தி, அதே நேரத்தில், அவளுக்குண்டான நிறை என்ற கடப்பாட்டையும் சுட்டுகிறது இது. நிறை என்ற சொல் நிறுத்தல் எனப் பொருள்பட்டு மனத்தை நிறுத்தலை அதாவது உள்ளத்தை கண்டபடி ஓடவிடாது ஒருவழி உறுதியில் நிறுத்தல் என்ற பொருள் தருவது.

சிறைக்காவல் என்ற புறக்காவலால் கற்பைக் காப்பது என்பது எங்கும் நடக்கக்கூடியது இல்லை; உட்காவலான நிறை என்ற மனத்திட்பம் ஒன்றே ஒரு பெண்ணின் கற்பைக் காக்கவல்லது. நிறை காத்தலும் காவாமையும் பெண்ணின் உளநிலையைப் பொறுத்து அமைவன. அது பிறர் கட்டுப்பாட்டால் வருவது அன்று; அது இயற்கையாக மகளிர் தம் மனத்தைத் திண்மையாக நிறுத்தித் தன்னைக் கொண்டவனுக்கு உண்மையாக இருப்பதில் இருக்கிறது.
பெண்ணின் பாலியல் ஒழுக்கம் தானாகவே கடைப்பிடிக்கவேண்டியது; அதை வெளியிலிருந்து கட்டுப்படுத்த முடியாது என்பது கூறப்பட்டது.

கற்பு என்னும் பெயரால் பெண்களைக் குறுகிய இடத்துக்குள் அடைத்து அவர்களது மனநல வளர்ச்சியைத் தடை செய்யும் சமூகக் கொடுமை சாடப்பட்டு, பெண்ணுரிமை காக்கப்பட வேண்டுமென்பது அழுந்தக் கூறப்பட்டது. பெண்ணுக்கு இழைக்கப்பட்ட வன்முறைக்கு எதிராக வாதாடிய முதல் பெண்ணியவாதி வள்ளுவர் என்பர்.
'வீட்டிலடைப்பதனை இற்செறித்தல் எனக்கூறாது சிறை என இழித்துரைப்பதனாலாயே வள்ளுவரது உள்ளக்கிடக்கை நன்கு புலனாகிறது' என்பார் தெ பொ மீ.

'தம் இல்வாழ்க்கைக்குரிய மகளிரது கற்புக்காக்கும் காப்பே அவ்வில்லறத்திற்குத் தலைமையுடைய காவல்' என்று காலிங்கர் உரை கூறுகிறது. பெண் தன்னைத் தான் காத்துக்கொள்ளல் என்பது பெண்ணிற்குக் காவல் என்றல்லாமல் இல்லறத்திற்குக் காவல் என்று இவர் உரை கூறுவதால் அப்பெண்ணின் நிறை இன்றி இல்லறம் என்பது ஒன்று இல்லை என்பதும் தெளிவாக்கப்பட்டது.

'சிறைக்காக்கும் காப்பு' குறிப்பது என்ன?

இப்பாடல் பெண்ணுக்குப் புறக்கட்டுப்பாடுகள் செய்து அவளது பாலியல் ஒழுக்கத்தைக் காக்க முற்படுவது பற்றியது. சிறை காப்பாவது இரவும் பகலும் வீட்டைவிட்டு வெளியேறாமற் காவல் செய்தல் அதாவது வீட்டுச் சிறைவைத்தல். இங்கு அது ஒரு பெண்ணை வீட்டிலேயே முடக்கி வைத்து வெளியே போகாமல் தடுத்து வைப்பதைக் குறிக்கும். பழைய இலக்கியங்களில் இது இற்செறித்தல்என குறிப்பிடப்படுகிறது.
ஏன் பெண்களை இவ்வாறு சிறைப்படுத்துகிறார்கள்? ஒரு பெண்ணின் பாலியல் நடத்தையில் ஐயங்கொள்வோர் அவளைப் பிற ஆண்களுடன் பழகவிடாமல் தடுப்பதுடன், வீட்டை விட்டு வெளியே செல்லவிடாமல் அவளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்து மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ அவளைக் காவலுக்கு உட்படுத்துவர்.
பெண்ணைச் சிறைசெய்து பூட்டிவைக்கலாம். ஆனால் அவளது மனத்தைப் பூட்ட முடியுமா? அவள் உள்ளத்தால் பிற ஆடவரை நினைத்தொழுகினாலும் கற்பு நலம் குன்றிவிடும். சிறைப்படுத்தி வைப்பதனால் எதிர்விளைவுகள் நேரவும் வாய்ப்புண்டு. தடை செய்யப்பட்ட பெண்ணுக்கு புறநிலைகளில் ஆர்வம் மிகுந்து அதுவும் கற்பொழுக்கம் கெட வாயிலாக அமையலாம். எந்தவிதமான காவலுக்குட்படுத்தப்பட்ட பெண்ணும் வேலி தாண்டி தன் விருப்பை நிறைவேற்றிக் கொள்ளமுடியும். இவ்விதம் உட்காவல், புறக்காவல் எவை செய்தாலும் அது இல்லத்துக்குக் காவலாக மட்டுமே அமையும்; அவற்றால் அவளது கற்பைக் காக்கமுடியாது. இதனால்தான் சிறை காக்கும் காப்பு என்ன செய்யும்? எனக் கேட்கிறார் வள்ளுவர்.

இக்குறட்கருத்தை வேறு கோணங்களில் நோக்கிய பிற உரைகளும் உள்ளன.
அவற்றில் ஒன்று மு கோவிந்தசாமியின் (மு கோ) 'அரசன் கற்பொழுக்கம் தவறிய மகளிரைச் சிறைசெய்து காத்தல் பயனற்றது' என்கிறது. இதன் கருத்து கற்பொழுக்கங் குன்றிய மாதரைப் சிறைக்கோட்டங்களில் அடைத்தோ அல்லது சட்டங்கள் இயற்றியோ திருத்த முடியாது என்பது. இங்ஙனம் கற்பொழுக்கங் குன்றிய மாதரைச் சிறையிட்டுத் திருத்திய வரலாறுகளோ அரசியல் சட்டங்களோ நம் நாட்டில் முன்பு இல்லை (தண்டபாணி தேசிகர்). மேலும் மு கோ 'மகளிர் கணவன் புறம்போகாது அவனைச் சிறை செய்து கட்டுப்படுத்திக் காப்பதினும், தன் குணங்களால் அவனைப் போகாத வண்ணம் காத்தல் தலையாய கடமையாம்' என்கிறது. இது வாழ்க்கைத்துணையானவள் புறம்பொழுகும் தன் கணவனைத் தன் நிறை குணங்களால் திருத்தும் நலம் அதாவது கணவனைக் கட்டுப்படுத்திக் காப்பதைச் சொல்வதாக அமைகிறது. இவ்வுரை ஒருத்தி ஒருவற்கு வாழ்க்கைத் துணையாயிருந்து திருத்தி நலம் பயப்பதைக் குறிக்கிறது.

சிறைசெய்து காக்கும் காவல் என்ன செய்யும்? கற்புடைமையைக் கடைப்பிடித்தலே பெண்ணுக்குச் சிறந்த காவல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பெண்ணின் கற்பு அரண் அமைத்துப் பிறரால் காக்க இயலாதது என்னும் வாழ்க்கைத் துணைநலம் பாடல்.

பொழிப்பு

சிறையால் காப்பது எப்படி முடியும்? பெண்கள் நிறையால் காப்பதே தலை சிறந்த காவல்.