இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0056தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:56)

பொழிப்பு (மு வரதராசன்): கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண்.

மணக்குடவர் உரை: தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள்.
இது பெண்களில் சிறந்தாளது இலக்கணம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: தன் காத்துத் தன் கொண்டான் பேணி - கற்பினின்றும் வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி; தகைசான்ற சொல் காத்து - இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண் - மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள்.
(தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் தற்புகழ்தற் சிறப்புக் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: தன்னை மனையறத்தின் வழுவாது காத்துக்கொண்டு, தன் கணவனையும் நெறிபிறழாமல் ஓம்பித் தகுதிவாய்ந்த குடும்பப் புகழ்காத்து உறுதியுடன் உழைப்பவளே மனைவியாவாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
.தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்.

பதவுரை: தற்காத்து-தன்னைக் காப்பாற்றி; தற்கொண்டான்-தன்னைக் கொண்டவன் அதாவது கணவன்; பேணி-நலன் போற்றி வளர், காப்பு அளி, அக்கறை காட்டு; தகை சான்ற-பெருமை அமைந்த; சொல்- சொல் (இங்கு புகழ் எனப்பொருள்படும்); காத்து-காப்பாற்றி; சோர்வுஇலாள்-தளர்வு இல்லாதவள்; பெண்-(இல்வாழ்க்கைக்குரிய) பெண், மனைவி.


தற்காத்துத் தற்கொண்டாற் பேணி:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி; [பேணி-உண்டி முதலியவற்றால் பேணி]
பரிதி: தன் கற்பையும் காத்து, தன்பத்தாவின் குணத்தையும் பேணி;
காலிங்கர்: தன்னையும் கற்பினால் பாதுகாத்து, மற்றுந்தன் கணவனையும் விரும்பி வழிபட்டு;
பரிமேலழகர்: கற்பினின்றும் வழுவாமல் தன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி;

தற்காத்து என்றதற்கு மணக்குடவர் தன்னைக் காத்து என்று குறளில் உள்ளபடியே உரை செய்தார். மற்ற பழம் ஆசிரியர்கள் 'தன் கற்பைக் காத்து' என்று பொருள் கூறினர். தற்கொண்டான் பேணி என்பதற்கு மணக்குடவர் 'தன்னைக் கொண்ட கணவனைப் பேணி' என்று மறுபடியும் பாடலில் உள்ளவாறு உரை பகர்ந்தார். பரிதி 'கணவனின் குணம் பேணி' என்று புதுமையாகக் கூறினார். காலிங்கர் 'கணவனை விரும்பி வழிபட்டு' என்று மாறுபட்ட கருத்துத் தெரிவித்தார். பரிமேலழகர் 'கணவனுக்கு உணவு முதலியவற்றால் பேணி' என்று உரை எழுதினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னையும் கணவனையும் புகழையும் போற்றி', 'தன்னுடைய பெண் பெருமையைப் பிறருடைய உதவியோ அல்லது கட்டாயமோ இல்லாமல் தானே காத்துக் கொள்வதிலும் கணவனுடைய சுக சௌகரியங்களைக் கவனித்துக் கொள்வதிலும்', 'தன்னையும் நெறிவழுவாது பாதுகாத்துத் தன் கணவனையும் போற்றி', 'கற்பினின்றும் தவறாமல் தன்னைக் காப்பாற்றி, தன்னைக் கொண்ட கணவனை விரும்பிக் காத்து' என்ற பொருளில் உரை தந்தனர்.

தன்னைக் காத்து, தன்னைக் கொண்ட கணவன் நலனில் அக்கறை செலுத்தி என்பது இத்தொடரின் பொருள்.

தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்:

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நன்மையமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை யுடையவளே பெண்ணென்று சொல்லப்படுவள். [சோர்வின்மை-மறதியும் வாட்டமும் இல்லாமை]
மணக்குடவர் குறிப்புரை: இது பெண்களில் சிறந்தாளது இலக்கணம் கூறிற்று.
பரிப்பெருமாள் குறிப்புரை: புகழ்படைத்தலாவது அறம் பொருள் இன்பங்களில் உலகத்தார் பழியாமல் ஒழுக அவரால் நன்மை சொல்லப் பெறுதல். சோர்வின்மையாவது அப்பொருளைக் கடைப்பிடித்தல். இஃது ஒழுகும் திறன் கூறிற்று. இதனானே பெண்மை இலக்கணம் எல்லாம் கூறப்பட்டன.
பரிதி: இன்னாள் பதிவிரதை என்னும் சொல்லையும் காத்து, அசைவில்லாத கற்பினாள் வாழ்க்கைத் துணையாம் என்றவாறு.
காலிங்கர்: தன்குலத்தகுதியோடு அமைந்த அடக்கச் சொல்லினையும் நாவிற் பேணி மற்றிம்மூன்றின்கண்ணும் ஒருஞான்றும் ஒரு சோர்வுபாடு இல்லாதவளே இற்கிழத்தி ஆவாள் என்றவாறு.
பரிமேலழகர்: இருவர் மாட்டும் நன்மை அமைந்த புகழ் நீங்காமல் காத்து மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும் கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள்.
பரிமேலழகர் குறிப்புரை: தன் மாட்டுப் புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது. சோர்வு-மறவி. இதனால் தற்புகழ்தற் சிறப்புக் கூறப்பட்டது.

'தகைசான்ற சொற்காத்து' என்பதற்கு மணக்குடவரும் பரிமேலழகரும் 'நன்மை அடைந்த புகழ் காத்து' என்று பொருள் கூறினர். பரிதி 'இன்னாள் பதிவிரதை என்னும் சொல் காத்து' என்றார். காலிங்கர் 'குலத்துக்கேற்றவாறு அடக்கமாகப் பேசுதல்' என்று உரை எழுதினார். சோர்விலாள் பெண் என்றதற்கு மணக்குடவர் 'சோர்வு இல்லாத பெண்' என்றும் பரிதி 'அசைவில்லாதத கற்பினாள் வாழ்க்கைத்துணை' என்றும் காலிங்கர் 'சோர்வுபாடு இல்லாத இற்கிழத்தி' என்றும் பரிமேலழகர் 'நற்குண நற்செய்கைகளில் சோர்வுபாடு இல்லாத பெண்' என்றபடியும் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சுறுசுறுப்பாக இருப்பவளே மனைவி', 'கல்யாண வாக்குறுதியின் சத்தியத்தைக் காப்பாற்றுவதிலும் சோர்ந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்பவளே சரியான பெண்ஜாதி', 'நலம் நிறைந்த (குடிப்) புகழைப் பேணித் தன் கடமைகளைச் செய்வதில் மறதியும் தளர்வு மில்லாதவளே பெண் என்று (சிறப்பித்துக்) கூறப்படுவள்', 'தனக்கும் கணவனுக்கும் புகழ் உண்டாகுமாறு காத்து, தம் கடமைகளில் தவறாமல் இருப்பவளே சிறந்த பெண் (மனைவி) ஆவாள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

நற்பெயர் காத்து, இல்லறக் கடமைகளில் தளர்வு அடையாதவளே நல்ல மனைவியாவாள் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
தன்னைக் காத்து, தன்னைக் கொண்ட கணவன் நலனில் அக்கறை செலுத்தி, நற்பெயர் காத்து, இல்லறக் கடமைகளில் தளர்வு அடையாதவளே நல்ல மனைவியாவாள் என்பது பாடலின் பொருள்.
இக்குறள் பெண்ணடிமை பேசுகிறதா?

குடிப்பெருமை காக்க இல்லாள் மேற்கொள்ளவேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் கூறும் பாடல்.

நல்லநெறியில் நின்று தன்னைக் காத்து, தன் கணவனது நலனில் அக்கறை காட்டி, இருவரது புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே இல்வாழ்க்கைக்குரிய பெண்.

தற்காத்து:
தன்காத்து என்பதற்கு தன்னைக்காத்து என்பது பொருள்.
குடும்பத்துக்கு உள்ளும் வெளியேயும் பல்வகை இடர்ப்பாடுகளை ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால், அவள் உடல் வழியும் உள்ளம் வழியும் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும். உடல்வழி காத்துக்கொள்வது என்பது சத்தான உணவு உட்கொண்டு, நோய்வராமல் உடலைப் பாதுகாத்து வைத்திருத்தலைச் சொல்வது. உடல்வழி காத்துக் கொண்டால்தான் அதாவது நலமுடன் இருந்தால்தான் மனைவி இல்லறக் கடமைகளை நிறைவாகச் செய்ய இயலும். அவள் நலமாக இல்லையானால் குடும்ப நலமும் இல்லை.
உள வழி காப்பது என்பது தன் நிறை காத்தலோடு, மற்ற ஒழுக்கநெறிகளிலிருந்து வழுவாமல் தன்னைக் காத்துக் கொள்வதைக் குறிக்கும்.

தற்கொண்டாற் பேணி:
தன் கொண்டான் பேணி என்பதற்கு நேர் பொருள் தன்னைக் கொண்டவனது அதாவது கணவனது நலன் காத்து என்பது.
இத்தொடர்க்குப் பரிதி 'பத்தாவின் குணத்தைப் பேணி' என உரை கண்டார். அவன் எவ்வித குறைச்சொல்லுக்கும் ஆளாகாது காத்து என்பதும் இதில் அடங்கும். கணவன் தீய வழியில் சென்றாலும், அதற்கு மனைவியையும் பழி கூறுவர். ஆதலின் மனைவியின் பொறுப்பு மிகையாகி விடுகின்றது. தன் கொழுநனை அவனுடைய தாய்போலத் தானும் அன்புடன் போற்றி அவனைப் போற்றிப் பேணுவாள் மனையாள்.

தகைசான்ற சொற்காத்து:
தகைசான்ற சொல்காத்து என்ற தொடர் பெருமை அமைந்த புகழைக் காத்து என்ற பொருள் தருவது. மற்றவர்கள் கூறும் சொற்களை-புகழுரைகளைக் காத்து என அமையும். சொல் என்ற சொல்லுக்கு வாய்மை என்றும் புகழ் என்றும் இருவகையாகப் பொருள் கூறப்பட்டது. 'தகை சான்ற' என்ற அடையே புகழ் என்று பொருளைப் பெற வைக்கிறது. எனவே புகழ் அதாவது நற்பெயர் என்பது பொருத்தம்.
பரிதி 'இன்னாள் பதிவிரதை என்னும் சொல்லையும் காத்து' என்று இத்தொடர்க்கு உரை கூறினார். 'தன்னைக் காத்தலாலும் கணவனைக் காத்தலாலும் வருகின்ற புகழைக் காத்து' என்றவாறும் 'பிறந்த குடும்பம் புகுந்த குடும்பம் இரண்டிற்கும் இயல்பாயுள்ள புகழை அழியாமல் காப்பவள்' என்றபடியும் உரை உள்ளது. மற்றவர்கள் பாராட்டும் சொற்களைப் பெறுவது, பெற்ற சொற்களைப் பாதுகாப்பது. மற்றவர்கள் பழி தூறாமல் பார்த்துக் கொள்வது இவற்றையும் உள்ளடக்கியது இத்தொடர். சொற்காத்து என்பதற்குத் தன் வாய்ச்சொல் அடக்குமுடையதாகவும் வாய்மையுடையதாகவும் இருக்குமாறு தன் பேச்சைக் காத்து எனவும் ஒருவருக்கொருவர் செய்துகொண்ட திருமண வாக்குறுதியினைக் காப்பாற்றிக்கொண்டு என்றும் பொருள் காண்கின்றனர்.
கணவன் - மனைவி இருவருள் ஒருவர் குற்றம் செய்தால், அதனைப் பொறுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், குடிநலன் நோக்கி, பொறுத்துப்பின் மீண்டும் குற்றம் நிகழாமல் இருக்க, அன்பால் இடித்து திருத்துதலும் அவர்தம் கடமையாகும். தவறான வழிச் செல்லும் கணவனைத் திருத்தும் கடமை மனைவிக்கும் தலைவியின் குறையைப் போக்கும் கடமை கணவனுக்கும் உண்டு. 'இருவருக்குமுள்ள நற்பெயரைக் காத்து' என்பது 'தகைசான்ற சொற்காத்து' என்ற தொடர்க்குச் சிறந்த பொருளாகும்.
இவளைப்பெற அவன் 'கொடுத்து வைத்திருக்க' வேண்டும் என்று சொல்லும் அளவு அவள் பெயர் பெற்றிருக்கிறாள்; அதுபோல் இப்படிப்பட்ட கணவனை அடைந்த அவள் பேறு பெற்றவள் என்ற அளவு அவன் பெருமை கொண்டவன். இருவர் எய்திய புகழும் கெடாமல் காத்தற்கு மனைவியின் பங்கு பெரிது என்று இங்கு சொல்லப்படுகிறது.

சோர்விலாள்:
சோர்வு இலாள் என்பது தளர்ச்சி அல்லது அயர்வு அடையாதவள் என்ற பொருள் தருவது.
சோர்வு என்பதற்கு மறத்தல் என்றும் கடைப்பிடி யுடையாள்- அதாவது மறவாது உறுதியாகப் பற்றி நிற்பவள் என்றும் பொருள் கொள்வர். மனைவியானவள் மேற்சொன்ன மூன்று காத்தல் கடன்களையும், உடலுரமும் உள்ள உரமும் கொண்டு, வாட்டம் இல்லாமல்செய்து சுறுசுறுப்பாக இருப்பாள்.

தற்காக்கும் மறம் கொண்டு, தற்கொண்டானிடம் அன்பூட்டியும், இன்பூட்டியும், உணவூட்டியும் அக்கறை காட்டி, பெருமை மிக்க தம் இருவரது நற்பெயரை என்றும் நிலைநிறுத்தப் பாடுபட்டு, இப்பெரும் சுமையை விருப்புடன் ஏற்றுச் சுறுசுறுப்புடன் செயல்படுவாள் மனைவி என்கிறது பாடல்.

இக்குறள் பெண்ணடிமை பேசுகிறதா?

தற்காத்து என்று பெண்ணினது கற்பைக் காப்பது என்று சொல்லி முதல் கடமையாக பாலியல் ஒழுக்கத்தைப் பெண்ணுக்கு விதிக்கும் குறள் அதே விதியை ஆணுக்கு எங்காகிலும் கூறி உள்ளதா? தற்கொண்டான் என்ற சொல் கணவன் மனைவியை உடைமையாகக் கொண்டவன் என்ற பொருளில் குறிக்கப்பெறுகிறான்; மற்றப் பொருள்கள் போல் மனைவியையும் அவன் பெற்று உடைமைப் பொருள் ஆக்கிக் கொள்கிறான் என்பதுதானே இதன் பொருள்? இவைபோன்ற வினாக்களை எழுப்பி இக்குறள் பெண்ணடிமை பேசுகிறது என்று சிலர் குறை காண்கின்றனர். ஆனால் இக்குற்றச்சாட்டுகள் குறள்நூலை முழுமையாகக் கற்றுப் புரிந்து கொள்ளாததால் உண்டானவை.
கற்பைப் பெண்களுக்கு மட்டும் கட்டுப்படுத்திக் குறள் கூறவில்லை. கற்பு ஆண்பாலார்க்கும் வேண்டும் என்று 'பிறன் இல் விழையாமை' அதிகாரக் குறட்பாக்களிலும் பிற இடங்களிலும் சொல்லப்பட்டுள்ளன. தற்கொண்டார் பேணுதல் என்பது மனைவியின் வாழ்க்கைத் துணையாய் உள்ள கணவனின் நலத்தில் ஆர்வம் காட்டுவதைச் சொல்வதே அல்லாமல் அடிமையாய் சேவை செய்யவேண்டும் என்று கூறப்படவில்லை. கணவன் மனைவியின் நலத்தில் அக்கறை காட்டுவது போல மனைவி தன் கொழுநன்பால் அன்பு காட்டுவதே அவனை அவள் பேணுதல் என்பது. பெண்கள் விருப்புடன் ஏற்றுச் செய்யும் இல்லறக் கடமைகளையும் பொறுப்புக்களையும் அடிமையாய் உழைப்பது என்று இக்குறள் சொல்வது என்பது எந்தவித அடிப்படையும் இல்லாத ஒன்று.

குறள் பெண்ணின் பெருமை கூறும் பனுவல்; அதில் பெண்ணடிமை என்கிற பேச்சுக்கு இடம் இல்லை.

தன்னைக் காத்து, தன்னைக் கொண்ட கணவன் நலனில் அக்கறை செலுத்தி, நற்பெயர் காத்து, இல்லறக் கடமைகளில் தளர்வு அடையாதவளே நல்ல மனைவியாவாள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இல்வாழ்வின் புகழைக் காக்கும் பொறுப்பு பெரிதும் மனைவியிடம் உள்ளது என்பதைக் கூறும் வாழ்க்கைத்துணை நலம் பாடல்.

பொழிப்பு

தன்னைக் காத்து, தன் கணவனது நலனில் அக்கறை செலுத்தி, இருவரது புகழ் காத்து சுறுசுறுப்புடன் இருப்பவளே மனைவியாவாள்.