இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0054



பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மையுண் டாகப் பெறின்

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:54)

பொழிப்பு (மு வரதராசன்): இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

மணக்குடவர் உரை: பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள? கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.

பரிமேலழகர் உரை: பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப் பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின்.
(கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: கற்புத் திண்மை செறிவாக இருப்பின் ஆணுக்கு மனைவியினும் நற்பேறு உண்டா?


பொருள்கோள் வரிஅமைப்பு:
கற்பென்னும் திண்மை யுண்டாகப் பெறின் பெண்ணின் பெருந்தக்க யாவுள?

பதவுரை: பெண்ணின்-மனைவியைவிட, பெண்ணைக் காட்டிலும், பெண்ணைப்போல்; பெருந்தக்க-பெருமை மிக்க, பெருந் தகைமையான; யாவுள-எவை இருக்கின்றன; கற்பு-கற்பு; என்னும்-என்கின்ற; திண்மை-கலங்கா நிலைமை; உண்டாகப்பெறின்-இருக்கப் பெறுமானால்.


பெண்ணின் பெருந்தக்க யாவுள:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள?
பரிப்பெருமாள்: பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள?
பரிதி: ஸ்திரிசாதி என்றும் பெரும்பாவக் கன்னியராயினும் பெண்பிறப்பு தெய்வப்பிறப்பு;
காலிங்கர்: இல்வாழ்வானுக்குத் தன் மனையாளின் பெருந்தன்மை உடையன மற்று யாவை?
பரிமேலழகர்: ஒருவன் எய்தும் பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள;

இவற்றிலும் மேம்பட்டன யாவை உள? என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பெண்ணின் என்றதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் பெண் பிறப்புப்போல் என்றனர்; காலிங்கரும் பரிமேலழகரும் மனையாளின் என்று உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆணுக்கு மனைவியினும் நற்பேறு உண்டா?', 'ஒருவன் பெறும் பொருள்களுள் மனைவியினும் மேம்பட்ட பொருள்கள் என்ன இருக்கின்றன?', 'பெண்மையினும் மேம்பட்டனவாய்ப் பொருள் எவை உள்ளன?', 'பெண்ணிலும் பெருமை மிக்கன யாவை? ஒன்றும் இல்லை' என்ற பொருளில் உரை தந்தனர்.

மனைவியினும் பெருமை மிக்கன எவை உள்ளன? என்பது இப்பகுதியின் பொருள்.

கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின். [திண்மை-உறுதி]
பரிப்பெருமாள் கற்பாகிய திண்மை யுண்டாகப் பெறின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் வேண்டும் என்ற நிறையுடைமை குலமகளிர்க்கு இயல்பன்றோ என்றார்க்கு அஃது எல்லார்மாட்டும் உளதாகாது என்று கூறப்பட்டது.
பரிதி: அது எது எனில், பெண்ணிடத்தில் பதிவிரதா பாவகம் உண்டாகில் என்றவாறு.
காலிங்கர்: அவள்பால் கற்பு என்னும் திறமை ஒருவழிப்பட உளதாய் நிற்கப்பெறின் என்றவாறு.
பரிமேலழகர்: அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா நிலைமை உண்டாகப் பெறின்.
பரிமேலழகர் குறிப்புரை: கற்புடையாள் போல அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.

திண்மை என்பதற்கு திண்மை என்று மணக்குடவரும், பாவகம் என்று பரிதியும், காலிங்கர் உறுதி திறமை என்றும் பரிமேலழகர் கலங்கா நிலைமை என்றும் பொருள் கண்டு உரை கூறினர். 'கற்பு எனப்படும் திண்மை உளதானால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கற்புத் திண்மை செறிவாக இருப்பின்', 'கற்பு என்னும் உறுதிப்பாடு வாய்க்குமாயின்', 'மனைவியிடம் கற்பு என்னும் கலங்கா நிலைமை ஏற்பட்டிருக்குமாயின்', 'மனைவியிடம் கற்பு என்று சொல்லப்படும் கலங்கா நிலைமை இருக்குமானால்' என்றபடி பொருள் உரைத்தனர்.

கற்பு என்னும் உறுதிப்பாடு இருந்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனைவியினும் பெருமை மிக்கன எவை உள்ளன? கற்பென்னும் திண்மை பெற்றிருந்தால் என்பது பாடலின் பொருள்.
கற்பென்னும் திண்மை என்றால் என்ன?

கற்புநலம் காக்கும் மனைவி மேம்பட்டவள்.

ஒருவன் அடையக்கூடிய நற்பேறுகளுள் தன் கற்பு நெறியில் உறுதியுடன் நிற்கும் மனைவியினும் பெருமைப்படத்தக்கது வேறு ஒன்றும் இருக்கமுடியாது.
'பெண்ணின் பெருந்தக்க யா உள' என்ற தொடர்க்கு இருதிறமாகப் பொருள் கூறப்பட்டது. 'பெண் பிறப்புப்போல் மேம்பட்டன யாவையுள' என்றும் '(ஒருவன் எய்தும் பொருள்களுள்) இல்லாளின் மேம்பட்ட பொருள்கள் யாவை உள' என்றும் பொருள் கொண்டனர். 'கற்பு என்னும் உறுதி உண்டாகப் பெற்றால், பெண்ணைப் போல் பெருமையுடைய நிலை வேறு இல்லை' என்று பொதுமையில் கற்புடைய பெண் அனைவரையும் போற்றும் பாடலாகவும் 'ஒருவனுக்குத் தன்னுடைய கற்புடைய மனைவியைவிட மேன்மையான ஒரு பொருள் வேறு எதுவும் இல்லை' என்று கற்புடைய மனைவி வாய்க்கப்பட்டது கணவன் பெற்ற பேறு என்ற பொருள்படும்படியான பாடலாகவும் இக்குறள் அமைந்தது. பெண் என்பதற்கு மனைவி என்றும் ஒரு பொருள் உண்டாதலாலும், அதிகாரம் வாழ்க்கைத்துண நலம் என்பதாலும் இப்பாடலிலுள்ள பெண் என்ற சொல்லுக்கு மனைவி அல்லது இல்லாள் என்று பொருள் கொள்வதே பொருத்தம்.
பின்வரும் பாடலில் (குறள் 58) 'தனக்கே உரியவனாகக் கணவனைப் பெற்றால் அது சொர்க்க உலக இன்பம் அடைவது போல' என்று பெண் கூறுவாள்.

யாஉள என்ற வினாவானது, எதுவுமே இல்லை என்ற பதிலையும் இங்கு தந்து நிற்கிறது. அதைவிடப் பெருமைக்குரியதும் தகுதியுடையதும் உலகத்தில் வேறு எதுவுமே இல்லை என்பது கருத்தாதலால், கற்பு என்ற பண்பிற்கு வள்ளுவர் கொடுத்த மிக உயர்ந்த இடம் புலனாகிறது. உண்டாகப் பெறின் என்ற தொடர் 'பெண்ணுக்குக் கற்பு பண்பு இயல்பாக அமைவது, அது பிறர் முயற்சியால் உண்டாக்கப்படுவதன்று' என்பதை உணர்த்திற்று என்பர்.
பாடலின் முதற்பகுதி 'யாஉள' என்று அஃறிணை பன்மையில் முடிவதால் இதற்கு ஏற்பப் பெண் என்பதை பெண்பிறப்பு (மணக்குடவர்) என்றும் பெண் போன்ற பொருள் (பரிமேலழகர்) என்றும் கொண்டு உரை தந்தனர். அஃறிணை பன்மையில் முடிபை நேர்செய்யும் நோக்கில் திரு வி க வும் பெண் என்பது கடைக்குறை என்று கூறி பெண்மை என்று அதை மாற்றினார். இவரது உரை 'பெண்மையினும் பெருந்தகையன எவை இருக்கின்றன' என்றாயிற்று.
வ உ சிதம்பரம் பிள்ளை ‘பெருந்தக்க’ என்பது ஏடு பெயர்த்தெழுதியவரால் நேர்ந்த பிழை என்று சொல்லி 'பெறுந்தக்க' எனப் பாடங்கொள்கிறார்; இவர்து உரையின்படி 'பெண்ணின் பெறும் தக்க யாஉள' என்பது 'பெண்ணைப் போல (ஒருவன்) பெறும் தகுதியான பேறுகள் யாவை யுள்ளன? (ஒன்றும் இல்லை)' என்ற பொருள் தரும். பரிமேலழகர் உரையை நோக்கும்போது 'பெறுந்தக்க' என்று அவரும் பாடம் கொண்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.

கற்பென்னும் திண்மை என்றால் என்ன?

வாழ்க்கைத்துணையின் பெருமையை விளக்கும் முகத்தான் இல்லாளின் கற்பு உறுதிப்பாட்டை வியந்து போற்றிச் செல்கிறது இப்பாடல்.
கற்பு என்பதில் கல்-பகுதி, பு-விகுதி; அது கல்வி அதாவது கற்றல் என்று பொருள்படும்; கற்பு என்றது இருமுது குரவர், கணவர் முதலியோர் கற்பித்தபடி நடப்பது என முன்பு பொருள் கூறினர். ஆனால் இப்பொருளை ஏற்பார் யாரும் இன்றில்லை.
வள்ளுவர் கற்பின் இலக்கணத்தை 'கற்பென்னும் திண்மை' என்று இங்கு விளக்குகிறார். கற்பாவது காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுகும் ஒழுக்கமுடையதொரு மனநிலை. இது பெரிதும் பாலியல் ஒழுக்கத்தைக் குறிக்கும் சொல்லாகவே இன்று உள்ளது.

கற்பு என்பது கல் போன்ற திண்ணிய மன உறுதி என்று பொருள்படும். கல்லென உறுதியாகக் கலங்காமல் இருக்கும் திண்மையே கற்பு. 'கற்பென்னுந் திண்மை' என்பது எந்தவித இடர்வரினும் தன் உறுதியினின்றுங் கலங்காமையை உணர்த்துவது. சிறுது தவற முயல்வாராயினும் இம்மியும் அசைந்து கொடுக்காத கல் போன்ற தன்மை உடையது கற்பு. அது என்ன மன உறுதி?
பிற ஆடவர்பால் செல்லாத உளமுடைய மாதர் ஒருமை மகளிர் எனப்படுவர். அத்தகைய பெண்கள் தன்னைத்தான் கொண்டொழுகி நிறை காக்கும் பண்பு கொண்டவர். இவ்விதம் தம் நெஞ்சத்தை நெறியில் நிறுத்திக் காத்துக் கொள்ளும் மனநிலை அல்லது மனஉறுதி கற்பு எனப்படுகிறது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற மரபில் கற்புக்கு மிகுந்த சிறப்பு கொடுக்கப்பட்டது. கற்புள்ள பெண் கடலன்ன காமம் உழந்தும் தான் கொண்ட கணவணுக்கு உண்மையாய் இருப்பாள். அவள் கணவனின் துணை கொண்டு மட்டுமே காமனை வெல்வாள். அவள் மேலாக மென்மையையும், உள்ளூரத் திண்மையையும் கொண்டவள். ஆண்மை மேவினும் அதனையும் அடக்கியாளக் கூடிய பெண்மையின் வன்மையை இயல்பாகவே உடையவள் அவள். தன் கணவனைவிட செல்வத்திலோ, செல்வாக்கிலோ, அழகு நலத்திலோ, கல்வியிலோ இன்னும் பிற சிறப்புக்களிலே சிறந்த வேறு ஓர் ஆடவனைக் காணுமிடத்து அவன்பால் மனம் செலுத்த மாட்டாள். தன்னைக் கொண்டவனின்றும் உள்ளம் பிரியமாட்டாள். திண்மை கொண்ட நெஞ்சத்தினள் ஆதலால் ஒரு சமயம் பொங்கி வழிந்து, மறு சமயம் தாழ்ந்து போகும் உளப்போக்கு கொண்டவள் அல்லள். இவள் தன் கற்பால் தன்கணவனையும் கற்பில் தளரா வண்ணம் காக்கும் வல்லமை கொண்ட பெண் ஆவாள்.

உண்மையாயிருத்தல் என்பதே கற்பின் அடிப்படைப் பண்பு. இது ஆண்-பெண் இருவருக்கும் இருக்கவேண்டிய குணம் ஆகும். கற்பு என்பது ஆணுக்கும் உண்டு. ஆணின் மனவுறுதியைப் 'பேராண்மை' என்று வள்ளுவர் அழைப்பார். ஆனால் கற்பு என்ற சொல் பெண் சார்ந்ததாகவே மரபாக வழங்கி வருகிறது.
கற்பு என்னுஞ் சொற்குப் பலவிதப் பொருள் கூறிப் பென்ணடிமையைக் கற்பித்தனர் என்பதும் அறியப்படவேண்டியது. 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்', 'கணவனே கண்கண்ட தெய்வம்' என்று எல்லாம் அவனே எனக் கணவனின் பற்றாளனாக மனைவியை மாற்றி அவன் கீழ் வீழ்ந்து கிடக்க வைக்கும் 'பதிவிரதா தர்மம்' கோட்பாட்டின் கீழ் பெண்ணைக் கொண்டு சென்றனர். பதிவிரதையும் கற்புடையவளே. ஆனால் பதிவிரதையாய் இருப்பது வேறு; கற்புடையவளாய் இருப்பது வேறு. கற்பை மூடத்தனமான உச்சநிலைக்குக் கொண்டு செல்வதே பதிவிரதா தர்மம்-நளாயினி கதையை நோக்குக.

இக்குறள் பெண்ணியம் பேசுபவர்களின் மறுப்புக் குரலுக்கு இடம் கொடுத்திருக்கிறது. இப்பாடல் பெண்ணின் சிறப்பையே பாடுகின்றது என்றாலுங்கூட அது வழக்கமான, மரபு சார்ந்த ஆணினப் பார்வையிலிருந்து கூறப்படும் புகழுரைதானே தவிரப் பெண்ணை ஆணுக்கு நிகராக நிறுத்திய பாராட்டும் தன்மை அதில் இல்லை என்பர் இவர்கள். கற்புக் குணம் கொண்டிருந்தால் மட்டுமே பெருமையுடையவள் என்று ஏன் முன்விதி வரையப்பட்டது? ஆணுக்கு அதுபோல எங்காவது கட்டுப்பாடுடன் கூடிய விதி சொல்லியிருக்கிறாரா? பெண்ணிற் பெருந்தக்கார் யாருளர் என்று கூறாமல் பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்று கூறியிருப்பது ஆடவரின் உடைமைப் பொருளாகவே பெண்னைக் கருதும் உள்ளப் பாங்காகும் என்றும் கூறுகிறார்கள்.
ஆனால் குறளை முழுக்கக் கற்றவர்கள் வள்ளுவர் எந்த அளவு பெண்மையைப் போற்றுபவர் என்பதை உணர்வர். ஆடவருக்கு அறிவுரை கூறும்போது மிகக் கடிந்து கூறும் வள்ளுவர் பெண்ணுக்கு அறிவுரை கூறும்போது மிகக் கனிந்து கூறுவதையும், பிறன் மனைவியை விரும்பும் ஆடவனை ‘அறிவில்லாதவன்’, ‘பிணம்’ ‘பழிநீங்காதவன்’ என்றெல்லாம் கடுஞ் சொற்களால் வசைபாடுபவர், பெண்ணைப் பற்றிப் பேசும்போது ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்று உடன்பாட்டுப் போக்கில் பெருமைப்படுத்திப் பேசுவதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. பிற பண்பாட்டு நூலார் போன்று பெண்களை இகழ்பவர் அல்லர்; பெண் என்பது உயர்நிலை அடைவதற்குரிய பிறவி இல்லை என்றும் சொல்லமாட்டார் வள்ளுவர். இக்குறள் பெண்ணின் கற்பின் சிறப்பைக் கூற வந்தது. ஆண்-பெண் பெருமைகளை ஒப்பு நோக்குவதல்ல; எனவே நிபந்தனை என்ற பேச்சு எழ இடமில்லை. இனி, பொருள் என்றதாலேயே எதுவும் உடைமைப் பொருள் ஆவதில்லை. பெண்ணை வாழ்க்கைத் துணை என்றதாலும், மனைமாட்சி அவளாலேயே அமைகின்றது என்று கூறியதாலும், பெண்ணை உடைமைப் பொருளாக வள்ளுவர் கருதவில்லை என்பது தெளிவாகும்.

பெண்ணிலும் பெருமை மிக்கன எவை உள்ளன? கற்பென்னும் திண்மை பெற்றிருந்தால் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கணவன்கடந்த காமம் நினையாத பெண் மிக்க பெருமைக்குரியவள் என்று வாழ்க்கைத்துணை நலம் கூறும் குறள்.

பொழிப்பு

கற்பு என்னும் உறுதிப்பாடு கொண்ட மனைவியினும் மேம்பட்டன எவை உள்ளன?