இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0053



இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:53)

பொழிப்பு (மு வரதராசன்): மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?

மணக்குடவர் உரை: ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?

பரிமேலழகர் உரை: இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது?
('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: மனைவி நற்பண்பே வடிவமாகத் திகழ்வாளாயின் அவளைப் பெற்ற கணவனுக்கு இல்லாதது என்ன? அவள் பண்பில்லாதவள் ஆயின் அவனுக்கு உள்ளது என்ன?


பொருள்கோள் வரிஅமைப்பு:
இல்லவள் மாண்பானால் இல்லதென்? இல்லவள் மாணாக் கடை உள்ளதென்?

பதவுரை: இல்லது-இல்லாதது, இல்லாத பொருள்; என்-என்ன?, யாது?; இல்லவள்-வீட்டிற்கு உரியவள், மனைவி; மாண்பு-நற்குண்நற்செய்கை; ஆனால்-ஆயினால்; உள்ளது-இருப்பது, இருக்கின்ற பொருள்; என்-என்ன?; இல்லவள்-(இல்லாத) மனைவி,; மாணாக்கடை-மாண்புகள் இல்லாதபோது, சிறவாதஇடத்து.


இல்லதென் இல்லவள் மாண்பானால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால் எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது?
பரிதி: இல்லறத்தின் வரலாறு அறிந்து இல்லறம் நடத்தும் பதிவிரதை இல்லத்தில் ஏதும் உண்டு. [ஏதும்-எல்லாம்]
காலிங்கர்: இல்வாழ்வானுடைய மனைவியானவள் கற்பு என்னும் மாட்சிமை உடையாளானால் அவ் இல்லத்திற்கு இல்லாதது என்? எல்லா நன்மையும் உளவாம்.
பரிமேலழகர்: ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது?
பரிமேலழகர் குறிப்புரை: 'மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது.

மணக்குடவர் மாண்பு என்பதற்கு 'மாட்சிமை' என்றும் பரிதி 'வரலாறு அறிந்து இல்லறம் நடத்துவது' என்றும் காலிங்கர் 'கற்பு என்னும் மாட்சிமை' என்றும் பரிமேலழகர் 'நற்குண நற்செய்கை' என்றும் பொருள் கூறி, மனைவி மாண்பு உடையளானால் அவ்வில்லத்தில் என்ன இல்லை? என்றபடி இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவிக்குப் பண்பிருப்பின் எது இல்லை?', 'மனைவி நற்பண்புடையவளானால் இல்லாதது யாது?', 'மனைவி பெருமைக் குணங்கள் உடையவளாயிருந்தால் இல்லாதது ஒன்றும் இல்லை', 'மனைத்தலைவி மாண்பு மிக்கவளாக இருந்தால் அவ்வில்லத்தில் இல்லாதது எதுவும் இல்லை' என்ற பொருளில் உரை தந்தனர்.

இல்லாள் மாண்பாக இருந்தால் இல்லாதது என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.

உள்ளதென் இல்லவள் மாணாக் கடை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?
பரிதி: இல்லறம் நடத்தும் முறையை அறியாதாள் இருக்கும் இல்லத்தில் ஏதும் உண்டாயிருந்தும் ஒன்றும் இல்லை என்றவாறு. [ஏதும்-எல்லாம்]
காலிங்கர்: மற்று அம்மனையாள், கற்பு மாட்சிமை இல்லாத இடத்து அவ் இல்லத்திற்கு உள்ளது என்? மற்று எல்லா நன்மையும் உளவாயினும் இல்லையாம் என்றவாறு.
பரிமேலழகர்: அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது?
பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.

'மனைவி மாண்பு இல்லாதவளானால் இல்லத்தில் உள்ளது என்ன? ஒன்றுமில்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனைவிக்குப் பண்பில்லை எனின் எது உண்டு?', 'அவள் அதிலே சிறப்பில்லாதவளாய விடத்து உள்ளது யாது?', '.மனைவி பெருமைக் குணங்கள் அற்றவளாய் இருந்தால், எல்லாம் பெற்றிருந்தும் ஒன்றும் இல்லையாம், 'அவள் பண்பில் குன்றி இருந்தால் அங்கு மதிப்புள்ளது எதுவும் இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

இல்லாள் பெருமைக் குணங்கள் அற்றவளாய் இருந்தால், உள்ளது என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இல்லாள் மாண்பானால் இல்வாழ்க்கையில் இல்லாதது என்ன?; அவள் பெருமைக் குணங்கள் இல்லாதவளாய் இருந்தால், இல்லத்தில் உள்ளது என்ன? என்பது பாடலின் பொருள்.
'மாண்பானால்' குறிப்பது என்ன?

குடும்பம் ஆவதற்கும் அழிவதற்கும் இல்லாளின் மாண்பே ஏதாம்.

இல்லாள் மாட்சிமையுடையாளானால் அவ்விடத்தில் இல்லாதது என்பது என்ன?, இல்லவள் மாட்சிமை இல்லாதவளானால் அங்கு உள்ளதுதான் என்ன?
இல்லம் பொலிவு பெற மனைவிக்கு மாட்சிமை இன்றியமையாதது என்று மீண்டும் வேறொருவகையாகக் கூறப்படுகிறது. இல்லவள்‌ என்ற சொல் வீட்டுக்குத்‌ தலைவியான மனைவி குறித்து வந்தது. மாண்பு என்பது நற்குணநற்செய்கைகளைக் குறிக்கும் சொல். கணவனுடனான காதல் வாழ்வு, இல்வாழ்வுக்கு வேண்டுவன அறிந்து அவற்றில் உறுதியாய் நிற்றல், உலக நடை அறிந்து நடத்தல், உணவு படைக்கும் திறன், விருந்தினர்/சுற்றம் பேணுதல், ஏழைகளிடம் இரக்கம் காட்டுதல், பழி வராத வாழ்க்கை நடத்துதல் வீட்டின் வளத்திற்கேற்ப செலவு செய்தல் முதலியன இதில் அடங்கும்.
நல்லியல்புகளைக் கூறும் போது எல்லோரும் அந்நல்லியல்புகளுடையரல்லர் என்பதை யுட்கொண்டு நல்லியல்புடையார் இல்லார் இரு திறத்தாரின் தன்மையையும் கூறுவது குறளின் இயல்பு. நல்ல இல்லத்தலைவியையுடைய குடும்பங்களும் உள. நல்ல இல்லத்தலைவியைப் பெற்றிராத குடும்பங்களும் உள. முன்னவற்றில் சிறப்புற்ற பொருள் ஒன்றும் இல்லாவிட்டாலும் எல்லாம் உள்ள போல் அவ்வில்லம் சிறப்புடன் துலங்கும். பின்னவற்றில் அதாவது மாண்பில்லா மனைவி உள்ள இடத்தில் வேண்டிய பிறயாவும் இருப்பினும் ஒன்றும் இல்லாதது போலப் பொலிவற்றிருக்கும். மாண்பில்லா மனைவி யார்? கணவனிடம் அடிக்கடி இணக்கமற்று இருத்தல், எல்லோரிடமும் மென்மை அற்று நடப்பது, இல்லத்தைப் பிரித்தாள நினைப்பது, குடும்பத்துக்கு எதிராக கூட்டணிகள் அமைப்பது, இழிவான செயல்களில் ஈடுபடுதல், தன்னிச்சையாய் செயல்படுதல், சினம் காக்க இயலாமை - இன்ன பிற குணங்கள் கொண்ட பெண்ணை மாண்பில்லாதவள் என அழைக்கலாம்.
இக்குறளிலுள்ள 'இல்லாதது' 'உள்ளது' ஆகிய சொற்கள் 'மனைவியாகப் பெற்றவனுக்கு இல்லாதது/உள்ளது', 'இல்லத்தில் இல்லாதது/உள்ளது', 'இல்லறத்தில் இல்லாதது/உள்ளது' என்னும் பொருள் தருவதாகக் கூறினர். கணவனது வாழ்க்கைக்குத் துணையாவது மனைவி ஆதலால் அவள் மாண்பினள்/மாண்பற்றவள் ஆனால் கணவனுக்கு இல்லாதது/உள்ளது என்ற பொருள் சிறக்கும் என்றாலும், இதனினும் கணவன் -மனைவி இருவருக்குமே இல்லாதது என்று ஒன்று இல்லை/உள்ளது ஒன்றும் இல்லை எனக் கொள்வதே பொருத்தம். எனவே 'இல்லாதது' 'உள்ளது' ஆகிய சொற்களுக்கு 'இல்வாழ்க்கையில் இல்லாதது/உள்ளது' என்ற பொருள் பொருந்தும்.
படிப்பவர் சிந்தனையைத் தூண்டும் முறையில் இரண்டு வினாக்கள் இக்குறளில் எழுப்பப்பட்டன. இல்லாள் மாண்புடையவளானால் இல்லறவாழ்வில் இல்லாதது என்ன? அவள் மாண்பில்லாதவளானால் அங்கு உள்ளது என்ன? என்பன அவை. இரண்டுக்கும் குறளிலே உள்ளுறையாக உள்ள ஒரே பதில்- 'ஒன்றுமில்லை' என்பதுதான். மாட்சிமைக் குணம் பெற்ற மனைவி வாய்க்கப் பெற்றால், இல்வாழ்க்கையில் எல்லாம் பெற்றுள்ளமை போன்றதாம்; மாண்பில்லாத மனைவி வாய்த்துவிட்டால், எதுவும் பெறாத நிலைமை போன்றதாம்.
இல்லத்து வளம் என்பது பொருள் சார்ந்தில்லை; பெற்ற மனைவியே எல்லா வளமாகவும் இருக்கிறாள். இல்லத்தின் சிறப்பு அல்லது தாழ்வு எல்லாம் மனைவியைப் பொறுத்ததே என்பது கருத்து.

இப்பாடலில் இல்லவள் என்ற சொல் இருமுறை பயின்று வந்துள்ளது.
முதல் 'இல்லவள்' மாண்புடைய இல்லாள் குறித்தது. இரண்டாம் 'இல்லவள்' மாண்புஇல்லாதவள் எனப்பொருள்படுவது. இவ்வேற்றுமை யுணர்த்த ஒரு சொல்லே இருமுறை பெய்யப்பட்டது. மாண்புப் பொருளுடையவளே இல்லவளாவாள் என்பதை விளங்கச் செய்யவே இவ்விதம் அச்சொல் ஆளப்பட்டது. முன்னைய 'இல்லவள்' என்னுஞ்சொல் மாண்புப் பொருளுடையது. பின்னையது வெறுஞ் சொல் வழக்குடையது' என்று ஒரே சொல் ஒரே குறளில் இருமுறை பயன்படுத்தப்பட்ட நோக்கத்தை திரு வி க விளக்குவார்.

'மாண்பானால்' குறிப்பது என்ன?

மாண்பானால் என்பது மாண்பு+ஆனால் என்று விரியும். இதற்கு 'மாண்பு உளதானால்' அல்லது 'பண்பு இருப்பின்' என்பது நேர் பொருள்.
மாண்பு என்பது பண்புப் பெயர். இங்கு மாண்பு என்னும் குணத்தை உடையவளாகிய மனைவியை உணர்த்திற்று.
இப்பண்பு இயற்கையாக அமையவும் கூடும். ஆனால் பொதுவாக இது கல்வி, பட்டறிவு, சுற்றுச்சூழல் போன்றவற்றைப் பொறுத்து செயற்கையில் அடையப்பெறுவது. இல்லாளது நற்சார்பினால் மாண்பும், தீச்சார்பால் மாண்பின்மையும் எய்தப்படும். 'மாண்பு ஆனால்' என்று ஆக்கம் கொடுத்துச் சொல்லப்பட்டதால் இங்கு அது சிறப்புப் பண்பாக விளங்குவது என்று கொள்வர்.
'‘இல்லவள் மாண்பானால்’ என்பது மனைவி மாண்பின் திருவுருவ மாகவே அமைந்து விட்டால் என்னும் பொருளைத் தருவது. ‘ஞானத்தின் திருவுரு’ அன்பின் திருவுரு’ என்னும் ஆட்சி காண்க. குணத்தின் பெயர் குணிமேல் நின்றது எனக் கொள்வதினும் குணத்தையே உருவ மாகக் கொள்ளுதலில் பொருள் சிறந்து நிற்றல் காண்க' என்பார் இரா சாரங்கபாணி.

ஒருவனது இல்வாழ்க்கைக்கு முதன்மையாக வேண்டுவது மனைவியின் குணச் சிறப்பே என்கிறது பாடல். ஒரு குடும்பத்துக்கு மதிப்பு உண்டாவது இழிவு ஏற்படுவது எல்லாம் மனையாளைப் பொறுத்தது. நற்பண்புடைய மனைவி அமைந்துவிட்டால், வாழ்வில் இல்லாததே இல்லையென, நிறைந்துவிடும். வாழ்க்கைத் துணை மாண்புள்ளவளாக அமையாதவரின் வாழ்க்கை சிறப்பு எதுவும் இல்லாது போய்விடும். இக்குறள் இல்லாளுக்கு மிகப் பெரிய மதிப்பைத் தருகிறது.
மாண்ட என மனைவியொரு மக்களும் நிரம்பினர் (புறநானூறு 191) என்ற பாடல்வரியில் சிறந்த மனைவி அமைந்தால் வாழ்வில் கவலை தோன்றுவதற்குக் காரணமேயிருக்காது என மாட்சிமைப் பட்ட குணங்களையுடைய தன் மனைவியைப் போற்றிக் கூறுகிறார் பிசிராந்தையார் என்ற சங்கப்புலவர்.

'ஆனால்' என்ற சொல்வடிவம் குறள் காலத்திற்கு முன் இல்லை என்று அறிஞர்கள் கூறுவர். வள்ளுவர் அறிமுகப்படுத்திய இச்சொல் இன்று வழக்கத்தில் உள்ள 'ஆயினால்' என்ற பொருள் தரும்.

இல்லாள் மாண்பாக இருந்தால் இல்வாழ்க்கையில் இல்லாதது என்று ஒன்றுமில்லை; இல்லாள் பெருமைக் குணங்கள் அற்றவளாய் இருந்தால், இல்லத்தில் உள்ளது ஒன்றுமில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இல்லத்திற்கு நிறைவு தரும் வாழ்க்கைத்துணை நலம்.

பொழிப்பு

மனைவி நற்பண்பே உருவாகத் திகழ்வாளாயின் இல்வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் பண்பில்லாதவள் ஆயின் அங்கு உள்ளது என்ன?