இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0052மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினு மில்

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:52)

பொழிப்பு (மு வரதராசன்): இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால். ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை.

மணக்குடவர் உரை: குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.

பரிமேலழகர் உரை: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று.
('இல்' என்றார் பயன்படாமையின்.)

இரா சாரங்கபாணி உரை: இல்லறத்துக்குரிய பண்புகள் மனைவியிடம் இல்லாவிடின், அவ்வில்லறம் வேறுவகையில் எவ்வளவு சிறப்புற்றிருந்தாலும் சிறப்பில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
.மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல்.

பதவுரை: மனைமாட்சி-குடும்பத்துக்கேற்ற நற்குண நற்செய்கைகள், குடிக்கான பெருமைக் குணங்கள், மனையறன்; இல்லாள்கண்-மனைவியிடத்தில்; இல்லாயின்-இல்லாவிடில்; வாழ்க்கை-இல்லற வாழ்வு, வாழ்தல்; எனை-எவ்வளவு (பெரிய); மாட்சித்து-பெருமையுடையது; ஆயினும்-ஆனாலும்; இல்-இல்லை, உடைத்தன்று.


மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில்;
பரிப்பெருமாள்: குடிக்குத்தக்க வொழுக்கம் மனையாள்மாட்டு இல்லையாகில்;
பரிதி: இல்லறம் நடத்தும் திறமில்லாதாள்;
காலிங்கர்: மற்று இங்ஙனம் செலுத்துகின்ற இல்வாழ்க்கையானது செலுத்துமிடத்து மேன்மேலும் தன் நெஞ்சத்து அன்பு மற்று அவனிடத்து இல்லையாயின்;
பரிமேலழகர்: மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்;

மனைமாட்சி என்றதற்கு மணக்குடவர் 'குடிக்குத்தக்க ஒழுக்கம்' என்றும், பரிதி 'இல்லறம் நடத்தும் திறம்' என்றும், காலிங்கர் 'அவள் அவனிடம் செலுத்தும் அன்பு' என்றும் பரிமேலழகர் 'இல்லாளிடத்து மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள்' என்றும் பொருள் கூறினர். இம்மனைமாட்சி மனையாளிடம் இல்லையானால் என்பது இப்பகுதிக்கு இவர்கள் கூறும் உரையாகும்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீட்டுப் பண்பு மனைவியிடத்து இல்லையானால்', 'மனைவியினிடம் (இல்லறத்திற்குரிய) சிறப்பியல்பு இல்லையானால்', 'மனையறத்திற்கு ஏற்ற பெருமைக் குணங்கள் மனைவியிடத்து இல்லையாயின்', 'குடும்பத்துக்கு ஏற்ற பண்புநலன்கள் மனைவியிடம் இல்லாது போனால்' என்ற பொருளில் உரை தந்தனர்.

குடும்பத்துக்கு ஏற்ற பண்புநலன்கள் இல்லாளிடம் இல்லாது போனால் என்பது இப்பகுதியின் பொருள்.

வாழ்க்கை எனைமாட்சித் தாயினு மில்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.
பரிப்பெருமாள்: அவ்வில்வாழ்க்கை எல்லா நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: வருவாய்க்குத் தக்க செலவினளாகவே இல்வாழ்க்கை இனிது நடக்கும். ஒழுக்கக் குறைபாடு உண்டானால் வரும் குற்றம் என்னை? என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: இல்லறத்தில் நானாபதார்த்தம் உண்டாய் இருந்தும் ஒன்றுமில்லை என்றவாறு. [நானாபதார்த்தம்-பலவேறு வகையான பொருட்கள்]
காலிங்கர்: இல்வாழ்க்கை எவ்வகைப்பட்ட மாட்சிமை உடைத்தே ஆயினும் யாதுமில்லை என்றவாறு.
பரிமேலழகர்: வாழ்க்கை எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும் அஃது உடைத்தன்று.
பரிமேலழகர் குறிப்புரை: 'இல்' என்றார் பயன்படாமையின்.

இல்லறத்தில் எவ்வகையான வளம் இருந்தாலும் ஒன்றுமில்லை என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் 'இல்' என்ற சொல்லுக்கு நன்மை/பயன் இல்லை என்று பொருளுரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாழ்வின் பிறநலம் இருந்தும் பயனில்லை', 'இல்வாழ்க்கையானது (பிற) எவ்வகையான சிறப்புடையதாயிருந்தாலும் மாட்சிமைப்படாது', 'வாழ்க்கை செல்வம் முதலியவற்றால் எவ்வளவு சிறப்புடையதாயிருந்தாலும் பயனில்லை', 'அக்குடும்பத்தின் பிற பெருமைகளால் எவ்விதப் பயனும் இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

இல்வாழ்க்கையானது பிற பெருமைகள் எவை இருந்தாலும் ஒன்றும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாவிடில், இல்வாழ்க்கையானது பிற பெருமைகள் எவை இருந்தாலும் ஒன்றும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'மனைமாட்சி' குறிப்பது என்ன?

குடும்ப வாழ்வுக்குரிய பண்புகள் மனைவியிடம் இல்லாவிடில் அவ்வாழ்க்கை பாழ்.

இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த நற்குண நற்செய்கைகள் மனைவியிடத்தில் அமைந்திருக்காவிடில் அந்த இல்லற வாழ்க்கை வளங்கள் பல உடையதானாலும் ஒன்றுமற்றதாகும்.
ஒருவர்க்கு வாழ்க்கைத்துணையாக அமையும் மனைவியானவள் வீட்டுக்குத் தலைவியாதலின் அவளுரிமையைக் குறிக்கும்பொருட்டு அவளை 'இல்லாள்' என வள்ளுவர் அழைக்கிறார். பெண் இல்லத்தை ஆள்பவள் என்ற பொருளில் அவள் 'இல்லாள்' எனப்படுகிறாள்.
இல்லறம் ஏற்று நடத்தும் பெண்ணுக்கு மனைமாட்சி இருந்தே ஆகவேண்டிய நற்பண்பு என்று இப்பாடல் சொல்கிறது. இல்லம் அழகும் பெருமையும் பெற இல்லாளுக்கு முதன்மைப் பொறுப்பும் கடமையும் உண்டு. இதற்குத் தேவையான பண்பாடும் திறமும் முனைப்பும் இல்லத்தலைவியிடம் இல்லாவிடில் அக்குடும்பம் மாட்சிமை பெறாது. இல்லாளது செவ்வியைப் பொறுத்தே அக்குடும்பத்தின் பெருமை புலப்படும். ஒருவனுக்கு வேறு பலவகைகளில் வளம் மிகுந்து வாழ்க்கை சிறப்பாக அமைந்து இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், அவனது மனைவியிடம் மனைத்தக்க மாண்பு இல்லாவிட்டால், அவ்வில்லத்தில் யாதும் இல்லாதது போலவேயாகும் என்று கூறப்பட்டது. இல்வாழ்க்கை பயனுற வேண்டற்பாலது மனைமாட்சி என்று பாடல் முடிவாகச் சொல்கிறது.
இல் என்பதற்கு இல்லை என்று பொருள். இல்வாழ்க்கை மனைவியால் பயன்படுதல் இல்லாமையால், இல்லை என்று சொல்லப்பட்டது.

'எனைமாட்சித்து ஆயினும்' என்ற தொடர்க்கு '(வேறு வகைகளில்) எவ்வளவு பெருமையை யுடையதாயினும்' என்பது பொருள். நிலபுலங்கள், மாடமாளிகைகள், செல்வம், கல்வி, கலைத்திறம், செல்வாக்கு, குடும்பப்பெருமை போன்றவற்றால் ஒருவன் சிறப்பு அடைய முடிகிறது. ஆனால் இச்சிறப்புகள் பயனுடையவனாதல், வாழ்க்கைத் துணைநலத்தின் மாண்புகளில்தாம்; நற்குண நற்செய்கைகள்‌ மனையாளிடத்தில் இல்லையானால்‌, மேற்கூறப்பட்ட பெருமைகளும் இழிவடையும்; இல்வாழ்க்கை மாட்சிமை பெறாது, ஒன்றும் இல்லாதது போலத்தான் என்ற கருத்தை அழுத்தமாகக் கூற 'எனைமாட்சித்து ஆயினும்' என்ற தொடர் ஆளப்பட்டது.

'மனைமாட்சி' குறிப்பது என்ன?

'மனைமாட்சி' என்ற தொடர்க்குக் குடிக்குத்தக்க வொழுக்கம், இல்லறம் நடத்தும் திறம், தன் நெஞ்சத்து அன்பு அவனிடத்து, மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள், சம்ஸாரத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள், மனையறத்துக்குத் தக்க நற்குண நற்செய்கை, இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு, இல்லறத்‌துக்குத் தகுந்த நற்குண நற்செய்கைகள், மனையறத்திற்கு ஏற்ற மாட்சிமைகள், மனையறத்திற்குரிய சிறந்த குணங்கள், வீட்டுப் பண்பு, இல்லறத்துக்குரிய பண்புகள், குடும்பத்துக்குப் பெருமை உண்டாக்குவதற்கு அவசியமான நற்குணங்கள், மனைக்குரிய நற்குண நற்செய்கை, (இல்லறத்திற்குரிய) சிறப்பியல்பு, குடும்பத்துக்கு ஏற்ற பண்புநலன்கள், இல்லறத்துக்கு வேண்டிய நல்லொழுக்கம், இல்லறத்திற்கேற்ற நற்குண நற்செய்கைகள், நல்ல குணங்கள் பொருந்தியமைதல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மனைமாட்சி என்பது மனைவிக்கு உரிய ஒரு தனிப் பண்பு. இல்லறத்துக்கு உரிய கடமைகளைச் செய்து முடிக்கும் திறன் குறித்தது.
'மனைத்தக்க மாண்பு' என முந்தைய குறளில் (51) சொல்லப்பட்டது இங்கு சுருக்கமாக 'மனைமாட்சி' என்று குறிக்கப்படுகிறது. தான் கூறவரும் கருத்தை உடன்பாட்டானும் எதிர்மறையானும் வலியுறுத்துவது வள்ளுவர் வழக்கம். முற்குறளில் மனைமாட்சி உடன்பாட்டு முறையால் விளக்கப்பட்டது. இப்பாட்டிலும் வரும் பாட்டிலும் (53) அம்மாட்சி எதிர்மறை முகத்தான் விளக்கப்படுகிறது. அக்குணம் இல்லாளுக்கு அமையவேண்டும் என மீண்டும் வலியுறுத்தப்பெறுகிறது.
மனையறத்திற்குத் தக்க மாண்புகளாவன: கணவருடன் இன்புறு காதல் வாழ்க்கை நிகழ்த்துதல், தம் மக்களிடம் பேரன்பு காட்டி அனைவராலும் பாராட்டும்படி அவர்களை வளர்த்தல், நல்வாழ்வுக்கு வேண்டும் பொருள்களை அறிந்து அவற்றில் உறுதி கொள்ளல், உலக நடையை அறிந்து விட்டுக்கொடுத்து நடத்தல், இல்லத்தைத் தூய்மையாகவும் அழகு பெறவும் அமைத்துக் கொள்ளுதல், அறம்பேணல், விருந்தினர்/சுற்றம் பேணுதல், பழி வராது காத்துக்கொள்ளல் முதலாயினவாம். மனைவியானவள் கணவனுக்கும் தனக்கும் நன்மையமைந்த புகழ் வளருமாறு விரும்பி இல்லறத்தை நன்கு நடாத்தி வருபவளாவாள்.
இல்லப் பொறுப்பு இல்லாளைச் சார்ந்தது. குடும்ப ஆட்சிக்குத் தலைவியின் மாட்சி இன்றியமையாத முதன்மைத்தாம். இல்லறத்தில் ஏற்றம் இனிய வாழ்க்கைத்துணையால்தான் ஏற்படும்.

'மனைமாட்சி' என்பது மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் குறித்தது.

குடும்பத்துக்கு ஏற்ற பண்புநலன்கள் இல்லாளிடம் இல்லாது போனால், இல்வாழ்க்கையானது பிற பெருமைகள் எவை இருந்தாலும் ஒன்றும் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இல்லத்தின் மாண்பு வாழ்க்கைத்துணை நலம் சார்ந்தே அமையும்.

பொழிப்பு

இல்லறத்துக்குரிய பண்புகள் மனைவியிடம் இல்லாவிடின், இல்வாழ்க்கையில் வேறுவகையில் எவ்வளவு சிறப்புற்றிருந்தாலும் ஒன்றுமில்லை.