இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0051



மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம் குறள் எண்:51)

பொழிப்பு (மு வரதராசன்): இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன் கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.

மணக்குடவர் உரை: தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள் இல்வாழ்க்கைத் துணையாவள்.

பரிமேலழகர் உரை: மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான் வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை.
(நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: இல்லறத்துக்கு ஏற்ற பண்புடையவளாய்த் தன்னை மனைவியாகக் கொண்ட கணவனது வருவாய்க்குத் தக்க குடும்பம் நடத்துபவள் வாழ்க்கைத் துணையாவாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

பதவுரை: மனை-மனையறம்; தக்க-தகுந்த; மாண்பு-மாட்சிமை; உடையள்=உடையவள்; ஆகி-ஆய்; தன் -தன்னை; கொண்டான்-கொண்டவன்; வளத்தக்காள்-(பொருள்)வளத்துக்குத் தகுதியாக (வளத்துக்கேற்றபடி) வாழ வல்லவளே; வாழ்க்கைத் துணை- வாழ்க்கைத் துணை.


மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள்;
பரிப்பெருமாள்: தான் பிறந்த குடிக்குத்தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினை யுடையவள்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது ஒழுக்கமும் பகுதிக்குத் தக்க செலவும் உடையளாக வேண்டும் என்றது. [பகுதி - வருவாய்]
பரிதி: இல்லறத்தின் வரவாற்றிற்குத் தக்க இல்லறம் நடத்துவாள் தன் பத்தாவின் பெருமையை நடத்துவாள்; [வரவாறு-பொருள் வரும் வழி, வருவாய்; பத்தாவின் -கணவனின்]
பரிமேலழகர்: மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள்;
பரிமேலழகர் குறிப்புரை: நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும் முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும், அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும் முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது: முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால் இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது கூறப்பட்டது. [கடைப்பிடித்தல்-உறுதியாகக் கொள்ளல், அட்டில் தொழில் - சமையல் கடமை, ஒப்புரவு செய்தல்- உலகநடையை அறிந்து அதற்கேற்பச் செய்தல்; முதல்- கைப்பொருளும் அதன் ஊதியமாக வரும் பொருளும்]

'தான் பிறந்த குடிக்குத்தக்க ஒழுக்கத்தைக் கொண்டு வருவாய்க்குத் தக்க செலவினை உடையவள்' என்றபடி மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'வரவுக்கேற்ற இல்லறம் நடத்துபவள் கணவனின் பெருமையை நடத்துவாள்' என்று பொருள் கூறினார். பரிமேலழகர் மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செயலகளைக் கொண்டு கணவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையாள் என்று உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'குடும்பப் பண்பினள்; கணவன் வருவாய்க்கேற்ப வாழ்பவள்', 'மனையற வாழ்க்கைக்குரிய குணநலன்களைப் பெற்று தன்னைக் கொண்ட தலைவனின் வருவாய்க்குத் தக்கவாறு வாழ்க்கையை நடத்துகிறவள்', 'இல்லறத்துக்குரிய உயர்ந்த பண்புடையவளாய்த் தன் கணவனது வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்து வாழ்கிறவள்', 'மனையறத்திற்கு ஏற்ற நற்குண நற்செயல்கள் உடையவள் ஆகித் தன்னை மனைவியாகக் கொண்ட கணவனுடைய வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையவள்' என்ற பொருளில் உரை தந்தனர்.

இல்லறத்துக்குரிய உயர்ந்த பண்புடையவளாய்த் தன்னை மனைவியாகக் கொண்டவனுடைய வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை நடத்துபவள் என்பது இப்பகுதியின் பொருள்.

வாழ்க்கைத் துணை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இல்வாழ்க்கைத் துணையாவள்.
பரிப்பெருமாள்: இல்வாழ்க்கைத் துணையாவள்.
பரிமேலழகர்: அதற்குத்துணை.

'இல்வாழ்க்கைத் துணை ஆவாள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாழ்க்கைத்துணை', 'வாழ்க்கைத் துணை', 'இல்வாழ்க்கைக்குச் (சிறந்த) துணையாவள்', 'சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள்' என்றபடி பொருள் உரைத்தனர்.

வாழ்க்கைத் துணையாவாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இல்லறத்துக்குரிய உயர்ந்த பண்புடையவளாய்த் தற்கொண்டானது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை நடத்துபவள் வாழ்க்கைத் துணையாவாள் என்பது பாடலின் பொருள்.
'தற்கொண்டான்' யார்?

இல்லத்து வரவு செலவுத் திட்டம் வகுத்து அதை நன்கு செயல்படுத்தவும் மனைவிக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

ஒருவனது வாழ்க்கைத் துணையாகும் பெண் இல்லற வாழ்க்கைக்குத் தகுந்த நற்குண நற்செய்கைகளையுடையவளாயும் தன் கணவனது வளமைக்குத் தக வாழ்க்கையை நடத்தக் கூடியவளாகவும் இருக்க வேண்டும்.
இப்பாட்டில் வாழ்க்கைத் துணையாக அமையும் பெண்ணிற்கு வேண்டிய இரண்டு சிறப்பியல்புகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒன்று இல்லறத்துக்கு ஏற்ற குணம் கொண்டவளாதல், மற்றொன்று கணவன் வளத்துக்கேற்ற வாழ்க்கை நடத்தத் தெரிதல்.
மனைத்தக்க மாண்பு உடையளாகி:
மனைத்தக்க மாண்புகள் என்றது மனைமாட்சியைக் குறிக்கும். இதற்கு மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் என்பது பொருள். நற்குண நற்செய்கைகள் இல்லத்துக்கு இல்லம் மாறுபடும் தன்மையன. வாழ்க்கைத்துணையாக கணவன் இல்லம் செல்லும் பெண் தான் பிறந்த வீட்டில் கற்றுக்கொண்டபடி நடந்துகொள்வாளா அல்லது புகுந்த இடத்து அதாவது கணவன் இல்லத்து பழக்கவழக்கங்களைக் காப்பாளா? சொல்லப்பட்ட இரண்டு குடும்ப பண்பாட்டு நிலைகளுக்குள்ளும் ஏற்றத் தாழ்வு இருக்கும். இரண்டிலிருந்தும் சிறந்தனவற்றைத் தெரிந்து அவை இரண்டும் ஒன்றுபட்ட பண்பாட்டை இருவரும் பேணுதல் வேண்டும் என்பது நடைமுறைக்குச் ஏற்றதாம்.
மனையறத்துக்குரிய பண்புகளாக இன்புறு காதல் வாழ்க்கை நிகழ்த்துதல், நல்வாழ்வுக்கு வேண்டும் பொருள்களை அறிந்து அவற்றில் உறுதி கொள்ளல், உலக நடையை அறிந்து நடத்தல், சமையல் திறன் வளர்த்துக் கொள்ளல், இல்லத்தையும் இல்லத்தில் உள்ள பொருள்களையும் தூயனவாகவும் அழகு பெறவும் அமைத்துக் கொள்ளுதல், விருந்தினர்/சுற்றம் பேணுதல், இல்லாதார்மாட்டு அருள் காட்டுதல், பழி வராத வாழ்க்கை நடத்துதல் முதலாயினவாம். 'மனைத்தக்க மாண்புடையள் ஆகி' என்று கூறியிருத்தலுக்கு இல்லறப் பண்புகளில் பயின்று வந்தவளாகி என்று பொருள் கொள்ள வழியுண்டு.
உடையள்' என்று கூறும் அளவில் நில்லாது, 'உடையள் ஆகி' என்று கூறப்பட்டுள்ளது. இது இல்லற மாண்பை அகத்தில் உடையவளாகி என்பதைச் சொல்வது. 'அகத்தே தக்க மாண்பு ஊறி ஊறிக் குருதி, ஊண், நாடி, நரம்பு, என்பு, தோல் முதலியவற்றில் ஒன்றுதல், ஈண்டு 'உடையளாகி' என்பதால் உணர்த்தப்பட்டது' என்பார் திரு வி க.
வளத்தக்காள்:
தற்கொண்டான் வளத்தக்காள் என்பது தன்னை வாழ்க்கைத்துணையாகக் கொண்டவனது பொருள்வளத்துக்கேற்றபடி வாழ்க்கையை நடத்துபவள் என்ற பொருள் தருவது. அதாவது கைஇருப்பையும் வரும் பொருளையும் முறையாகப் பங்கீடு செய்து குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றி எதிர்காலச் சேமிப்புக்கும் வழிவகுக்கும் நிதிநிலை மேலாண்மையைச் சொல்வது. தக்காள் என்ற சொல் தன் வாழ்வைப் பண்படுத்தித் தகுதி செய்து கொள்பவள் என்று பொருள்படும்; கொண்டவனது செல்வநிலை/ வருவாய்க்கு ஏற்றவண்ணம் தன் வாழ்வைப் பண்படுத்தித் தகுதி செய்து கொள்பவளைக் குறித்தது.
'மனைத்தக்க மாண்புடையாள்' என்பது பெண்ணின் நிறைநிலை என்றால் 'வளத்தக்காள்' என்பது பெண்ணின் இயங்குநிலையாகும். பெண்ணானவள் பெருகிய செல்வ நிலையில் பிறந்து வளர்ந்தவளாக இருந்தாலும் சரி, அல்லது எளிய சூழலில் வளர்ந்தவளாக இருப்பினும் புகுந்த வீட்டின் பொருள் நிலைக்குத் தகுந்தவாறுத் தன்னை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டவளாக இருக்க வேண்டும். புகுந்த வீட்டின் வளத்துக்குத் தக்க தன்னை மாற்றிக் கொள்வதை 'வளத்தக்காள்' என்ற சொல் குறிக்கிறது. வருவாய்க்குத் தக்கவாறு செலவு செய்ய வேண்டும். ஊதியத்திற்கு மிஞ்சி செலவழிக்கும் குடும்பம் சீரழிந்துவிடும். ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை போகாறு அகலாக் கடை (வலியறிதல் 478 பொருள்: வருவாய் வரும் வழியின் அளவு சிறிதாயினும் கெடுதி இல்லை, செலவாகும் வழியின் அளவு விரிந்து பெரிதாகாவிட்டால்) எனப் பிறிதோரிடத்தில் குறள் கூறும்.
வளத்தக்காள் என்ற தொடர்க்குக் 'கணவனை வளப்படுத்தத்தக்கவள்' எனவும் உரை கண்டுள்ளனர்.

இல்வாழ்க்கையின் வெற்றிக்குப் பக்கபலமாக நின்று தனது பண்புகளாலும் செயல்களாலும் கணவனுக்கு உறுதுணையாக இருக்கும் குடும்பத்தலைவியை வள்ளுவர் ‘வாழ்க்கைத் துணை‘ என்று அழைக்கிறார். மனைமாட்சியில் தேர்ந்து குடும்பப் பொருள்நிலைக்குத் தக வாழ்வுமுறையை மாற்றிக் கொள்பவள் வாழ்க்கைத் துணை என இப்பாடலில் வரையறை செய்கிறார் வள்ளுவர். மனைத்தக்க மாண்பும், வளத்தக்க வாழ்வும் இல்லாதாள் வாழ்க்கைத்துணையாவாள் போல வந்து, வழி பறித்து, படுகுழியில் தள்ளும் கொலைஞர் போல்வாள் என எதிர்மறை நயமும் தோற்றுவிக்க வள்ளுவர் கருதிச் செய்தனராதல் வேண்டும் என்பார் கா அப்பாத்துரை.

'தற்கொண்டான்' யார்?

தற்கொண்டான் என்பதற்குத் 'தன்னைக் கொண்டவன்' என்பது நேர் பொருள். தன்னைக் கொண்டவன் என்பவன் தன்னை வாழ்க்கைத்துணையாகக் கொண்டவன் அதாவது கணவன் ஆவான்.

இத்தொடர்க்குத் 'தன்னைக் காதலால் அகங்கொண்டவன்' என்று பொருள் கூறித் 'தன்னையன்றிப் பிறரை மனைவியாகக் கொள்ளாதவன் என்பது குறிப்பு' என்ற கூடுதல் விளக்கமும் தருவார் திரு வி க.
தற்கொண்டான் என்பது தன்னை முழுமையாக உரிமையாக்கிக் கொண்டவன் என்பதைக் குறிப்பது என்று சொல்லி, இது பெண்ணடிமைத்தனத்தை உணர்த்தவந்த தொடர் என்று பெண்ணுரிமைபேசுவோர் கூறி வருகின்றனர். 'தற்கொண்டான்' என்றால் அப்பெண்ணை விற்கும் உரிமையும் பெற்றவன் என்றும் அவன் பயனற்ற சோம்பேறியாக இருந்தால் அவளை விற்கவும் செய்வான் என்ற கருத்தையும் முன்வைப்பர்; தற்கொண்டான் என்றதற்கு இணையாக மனைவியைக் குறிக்கத் தற்கொண்டாள் என்ற சொல்லாட்சியும் குறளில் இல்லை என்பதையும் இவர்கள் சுட்டிக் காட்டுவர். ஆனால் பெண்ணை இல்லத்தின் மிக உயர்ந்த இடத்தில் ஏற்றிப் போற்றியவர் வள்ளுவர். அவர் பெண்ணில் பெண்மையைக் காண்பவர். பெண்மையில் ஆண்மையைக் காண விரும்பும் பெண்ணியவாதி அல்லர் அவர். தற்கொண்டான் என்பது பெண்ணைத் தாழ்த்தவந்ததாக வள்ளுவரால் ஆளப்பட்ட தொடர் அல்ல என்பது உறுதி.

'தற்கொண்டான்' என்பது தன்னை உள்ளத்தில் கொண்டான் என்ற பொருள் தருவது.

இல்லறத்துக்குரிய உயர்ந்த பண்புடையவளாய் ஆகி, தன்னை மனைவியாகக் கொண்டவனுடைய வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை உடையவள் வாழ்க்கைத் துணையாவாள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வாழ்க்கைத்துணை நலத்தின் இலக்கணம்‌ கூறுவது.

பொழிப்பு

இல்லறத்துக்கு ஏற்ற பண்புடையவளாய் ஆகித் தன்னை மனைவியாகக் கொண்டவனது பொருள்நிலைக்குத் தக்க குடும்பம் நடத்துபவள் வாழ்க்கைத் துணையாவாள்.