குணமென்னும் குன்றேறி நின்றார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார்மாட்டு உளதாகிய; [மேற்கொண்டு- தாங்கி, சுமந்து].
பரிதி: சற்குணம் என்னும் மலையின் உச்சியிலே நின்றார்; [சற்குணம்-நல்லகுணம்]
காலிங்கர்: ராசத தாமத சாத்துவிதம் என்கின்ற குணங்களும், காம வெகுளி மயக்கம் என்கின்ற குணவிகாரங்களும், அழல்சீதம் இடர் இன்பம் மானம்
அவமானம் என்று எண்ணப்படுகின்ற குணம் அனைத்தின் தொகையுமாகிய குன்றைக் கடந்து வீட்டின்பத்து நிலைநின்றோராகிய நீத்தோரை;
பரிமேலழகர்: துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற்குணங்கள் ஆகிய குன்றின் முடிவின்கண் நின்ற முனிவரது
பரிமேலழகர் குறிப்புரை: சலியாமையும், பெருமையும் பற்றிக் குணங்களைக் குன்றாக உருவகம் செய்தார். குணம் சாதியொருமை. [சலியாமை-அசையாமை அல்லது நடுங்காமை]
பழைய ஆசிரியர்கள் குணம் என்கின்ற மலையில் நின்றார் என்று இப்பகுதிக்குப் பொருள் தந்தனர். காலிங்கரும் பரிமேலழகரும் குணம் குறித்தது என்ன என்பதற்கு விளக்கம் தந்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'குணக்குன்று போலும் சான்றோரின்', 'நற்பண்புகளாகிய மலையுச்சியில் நின்றவரது', 'நல்லியல்பு என்னும் மலையின் உச்சியில் நின்றவர்கட்கு', 'உயர்குணம் என்னும் மலையுச்சியில் ஏறி நின்றார்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
குணமாகிய குன்றின்மேல் நின்றவர் என்பது இப்பகுதியின் பொருள்.
வெகுளி கணமேயும் காத்தல் அரிது:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும் வாராமற் காத்தலரிது.
மணக்குடவர் குறிப்புரை: நகுஷன் பெரும்பாம்பாயினன். இது வெகுளி பொறுத்தலரிதென்றது.
பரிதி: கோபம் கணமேனுங் காக்கமாட்டார் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவ்வெகுளியானது தன்மாட்டுச் சிறுதுபொழுது நிறுத்திக்கொண்டு நிற்கமாட்டாது என்றவாறு.
பரிமேலழகர்: தான் உள்ள அளவு கணமே ஆயினும், வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது.
பரிமேலழகர் குறிப்புரை: அநாதியாய் வருகின்றவாறு பற்றி ஒரோ வழி வெகுளி தோன்றியபொழுதே அதனை மெய்யுணர்வு அழிக்கும் ஆகலின்,கணம் ஏயும்
என்றும், நிறைமொழி மாந்தர் ஆகலின், 'காத்தல் அரிது' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவர் ஆணை கூறப்பட்டது. [அநாதி-தோற்றம் இன்றி அல்லது தொன்று தொட்டு]
மணக்குடவர் 'சிறுபொழுதாயினும் வெகுளியால் உண்டாகும் தீமையை காத்தல் அரிது' என்றார். இதைத் தழுவி பரிமேலழகர் 'கணமே ஆனாலும்
வெகுளப்பட்டாரால் தடுத்தல் அரிது' என்றார். பரிதியும் காலிங்கரும் 'கணப்போதும் நீத்தார் சினம் கொள்ளார்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'சினத்தைச் சிறுபொழுதும் யாரும் தாங்கமுடியாது', 'சினத்தை அச்சினத்திற் சிக்கியோரால் கணப்பொழுதும் தடுத்து நிறுத்துதல் இயலாது', 'சினமானது ஒரு கணப்பொழுதுதான் தோன்றும். அப்படித் தோன்றியபோது அதனைத் தடுத்தல் முடியாததே', 'சீற்றம் நிலைப்பது ஒரு நொடிதான் எனினும் அதன் ஆற்றலைத் தடுத்தல் இயலாது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
ஒரு கணப்பொழுதும் சினத்தைத் தன் மாட்டு வைத்துக் காத்தல் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.
|