இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0026



செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:26)

பொழிப்பு (மு வரதராசன்): செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர். செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யமாட்டாதவர் சிறியோர்.

மணக்குடவர் உரை: செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர். அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர்.
செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.

பரிமேலழகர் உரை: செயற்கு அரிய செய்வார் பெரியர் - ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;செயற்கு அரிய செய்கலாதார் சிறியர் - அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர்.
(செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின. செயற்கு அரிய ஆவன, இயமம்,நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, 'நாலிரு வழக்கின் தாபதபக்கம்' (புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.)

வ சுப மாணிக்கம் உரை: அரிய செயல்களைச் செய்பவர் பெரியவர்; அவற்றைச் செய்ய முயலாதாவர் சிறியவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெரியர் செயற்கரிய செய்வார்; சிறியர செயற்கரிய செய்கலா தார்.

பதவுரை: செயற்கு-செய்தற்கு; அரிய-அருமையானவைகளை, எளிதில் செய்யமுடியாதவைகளை; செய்வார்-செய்பவர்கள்; பெரியர்-பெரியவர், பெருமையுடையவர்; செயற்கு-செய்தற்கு; அரிய-அருமையானவைகளை; செய்கலாதார்-செய்ய முடியாதவர்; சிறியர்-சிறியர்.


செயற்கரிய செய்வார் பெரியர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர்;
மணக்குடவர் குறிப்புரை: செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் நீத்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று.
பரிப்பெருமாள்: செயற்கு அரியன செய்வாரைப் பெரியரென்று கொள்ளப்படும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: செயற்கரியன- இயம நியம முதலாயின. இவ்வதிகாரம் துறந்தார் பெருமையென்று கூறப்பட்டதாயினும், துறவு மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரையே பெரியரென்று கொள்ளப்படுவதென்று கூறப்பட்டது.
பரிதி: ஒருவராலுஞ் செயற்கரிய துறவறத்தைச் செய்வார் பெரியார்;
காலிங்கர்: யாவரானுஞ் செய்தற்கரியவாகிய தவநெறித் திறத்தைச் செய்துமுடிப்பார் உலகத்துப் பெரியோரென்று சொல்லப்படுவார்;
பரிமேலழகர்: ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற்கு எளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியர்;
பரிமேலழகர் விரிவுரை: செயற்கு அரிய ஆவன, இயமம், நியமம் முதலாய எண்வகை யோக உறுப்புகள். நீரிற் பலகால் மூழ்கல் முதலாய, 'நாலிரு வழக்கின் தாபதபக்கம்'(புறப்பொருள் வெண்பாமாலை, வாகைத்திணை14) என்பாரும் உளர்; அவை நியமத்துள்ளே அடங்கலின், நீத்தாரது பெருமைக்கு ஏலாமை அறிக.

இப்பகுதிக்கு மணக்குடரும் பரிமேலழகரும் செயற்கு அரியன என்பதற்கு இயமம், நியமம் முதலாய யோக உறுப்புக்களைக் கூறுவர். பரிதி துறவறமே செயற்கரியதுதான் என்றபடி கொள்வார். காலிங்கரும் செய்தற்கரிய தவநெறித் திறம் என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரிய செயல்களைச் செய்பவர் பெரியவர்', 'செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியவர்கள்', 'மற்றவர்கள் செய்யமுடியாத அபூர்வ காரியங்களைச் சாதிக்கக் கூடியவர்களே நீத்தார் எனப்பட்ட பெரியவர்கள்', 'செய்தற்கு அரியவற்றை செய்து முடிப்பவர் பெரியர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியவர்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

செயற்கரிய செய்கலாதார் சிறியர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர்.
பரிப்பெருமாள்: அதனைச் செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியரென்று கொள்ளப்படும் பரிதி: சிறியவர் செய்யுந்தொழிலாகிய இல்லறமுஞ்செய அறியார் என்றவாறு.
காலிங்கர்: மற்றிவற்றை முயன்று முடிக்கலாகாரே சிறியரென்று சொல்லப்படுவார் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர்.
பரிமேலழகர் விரிவுரை: செயற்கு எளிய ஆவன, மனம் வேண்டியவாறே அதனைப் பொறி வழிகளால் புலன்களில் செலுத்தலும், வெஃகலும், வெகுள்தலும் முதலாயின.

தொல்லாசிரியர்களில் மணக்குடவர் இப்பகுதிக்கு 'அரிய செயல்கள் செய்யமாட்டாதார் துறந்தாராயினும் சிறியரே' என்றும் பரிதி 'செய்யுந்தொழிலாகிய இல்லறமும் அறியார் சிறியர்' என்றும் காலிங்கர் 'துறவறத்தை முயன்று முடிக்கமாட்டாதவர் சிறியர்' என்றும் பரிமேலழகர் 'செய்தற்கு எளிய செயல்களைச் செய்பவர் சிறியர்' என்றும் பொருள் கூறுவர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவற்றைச் செய்ய முயலாதாவர் சிறியவர்', 'அங்ஙனம் செய்யாமல் எளிய செயல்களைச் செய்பவர்கள் சிறியவர்கள்', 'அப்படிச் செய்ய முடியாத துறவிகள் நீத்தாரல்லர். இங்கே சொல்ல வந்தது அந்தச் சிறிய துறவிகளைப் பற்றியல்ல', 'செய்ய முடியாதவர்கள் சிறியர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் சிறியவர்கள் என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியர்; அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் சிறியர் என்பது பாடலின் பொருள்.
பெரியர் - சிறியர் குறிப்பது என்ன?

நீத்தாரான பெரியர் செய்தற்கு அரிய செய்வர்.

செய்தற்கு அருமையான செயல்களைச் செய்வோர் தந்நலம் நீத்த பெரியோர் ஆவர்; அரிய செயல்களைச் செய்ய மாட்டாதவர்கள் சிறியார் ஆகிறார்கள்.
அதிகாரம் நீத்தார் பெருமை. இதில் சொல்லப்பட்டுள்ள நீத்தார் என்பவர் தந்நலம் நீத்துப் பிறர்நலன் கருதி நற்செயல்களில் ஈடுபடுபவர்கள் ஆவர். அந்நீத்தார் செயற்கரிய செய்வர் என்கிறது பாடல். அரிய செயல்கள் என்பன பொதுநலன் நல்கும் செயல்களே ஆகும்; அச்செயல்கள் செய்யும் நீத்தாரைப் பெரியர் என அழைக்கிறார் வள்ளுவர். தந்நலம் துறந்தோருக்குச் செயற்கரிய செயல்களை மேற்கொண்டு முடிக்க இயலும் என்பது கருத்து.
நலிந்தோர் குறை தீர்த்தல், நீதிக்காகப் போராடுதல், அறிவியல் சாதனை புரிதல், இன்ன பிற அரிய செயல்களாம். எவையெல்லாம் உலக நன்மைக்காக அமைகின்றனவோ அவை அனைத்துமே அரிய செயல்கள் எனலாம்.
தந்நலம் மட்டுமே கருதிச் செயல்படுகிறவர் சிறியர் ஆகின்றனர். இவர்கள் செய்வதற்கு எளிய செயல்களையே செய்யக்கூடியவர்கள். மாறாத அன்றாட வேலைகள், உலகத்தொழில், கேளிக்கை நிகழ்வுகளில் ஈடுபடல் போன்றவை எளிய செயல்களாம்.

செயற்கரிய செய்தல் என்பதற்கு நீரில் பல முறை மூழ்கல், வெறு நிலத்தில் உறங்கல், மான் தோலை ஆடையாகத் தரித்தல், சடை தரித்தல், எரி ஓம்புதல், ஊர் அடையாமை, கானகத்து உண்டல், கடவுளைப் போற்றல், ஐம்பொறிகளை அடக்குதல் போன்ற எண்வகை யோகநெறிகள் எனப் பழம் உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவர்கள் கூறுவனவற்றுள் உடற்பயிற்சி உள்ளப்பயிற்சி இரண்டும் உள்ளன என்றாலும் உடற்பயிற்சி தொடர்பானவையே மிகையாக உள. சிறிதளவு பயிற்சி பெற்றாலே இவர்கள் சொல்வனவற்றைச் செய்து முடிக்கமுடியம். 'பெரியர்' எனப் பெயர்பெறத்தக்க அளவிலான அரிய செயல்கள் அல்ல இவை. ஐம்பொறி அடக்கம் செயற்கரிய செயலாகுமா? மனம் ஒன்றிய நிலை அடைய புலனடக்கம் துணை செய்யும்; ஆனால் அதுவே செயற்கரிய செய்தல் ஆகாது.
'துறவறம் செயற்கரியது', 'யாவரானுஞ் செய்தற்கரியவாகிய தவநெறித் திறத்தைச் செய்துமுடிப்பார்' என்றவாறும் இக்குறளுக்கு உரை செய்தனர். இது, துறவறத்தில் நின்று அதை முடிப்பதுவே செயற்கரிய செய்தல் என்றாகிறது. ஒருவர் தனது தனிப்பட்ட ஆன்மீக விடுதலைக்காக துறவுநெறி மேற்கொள்பவர். அது செயற்கரிய செயலாக மாட்டாது. பொது நலம் கருதித் தம் நலம் விட்டவரே பெரியர் எனப்படுவர். அவர்களே செயற்கரியன செய்வர். 'துறந்த மாத்திரத்தானே பெரியரென்று கொள்ளப்படார். செயற்கரியன செய்வாரே பெரியரென்று கொள்ளப்படுவரென்று இது கூறிற்று' என்பது மணக்குடவர் உரை. துறந்தவர் என்றாலும் செயற்கு அரியன செய்வாராக இருந்தால் பெரியோரென்று சொல்லப்படுவர். அவற்றை செய்யமாட்டாதாரைத் துறந்தாராயினுஞ் சிறியோரென்று சொல்லுவர் என்பது கருத்து.
'அரிய செயல்களைச் செய்ய முயலாதாவர் சிறியவர்' எனவும் 'செய்யக் கல்லாதார் செய்கலாதார் என்று நின்றது' எனவும் சிறியர் என்பதற்குப் பிறர் விளக்கம் கூறினர்.

இரு நேர் முரண்கள் கொண்டு இருவாக்கியங்களில் அமைந்த குறட்பா இது.
செயற்கரிய செய்வர் பெரியர் என்று சொல்லிவிட்டபொழுதே, அவை செய்யமாட்டாதார் சிறியர் என்பது சொல்லாமலே விளங்குகிறதே; பின் ஏன் மீண்டும் கூறப்பட்டது?
தந்நலம் கருதாதோரை மிகப் பெரிய இடத்தில் வைக்க எண்ணுகிறார் வள்ளுவர். அதுபோல் உலக மேம்பாட்டிற்கு தனது பங்களிப்பாக எதுவும் செய்யாமல் செல்பவர்களை சிறியர் எனப் பெயரிட்டு அவர்களுக்கு மறுதலையான தாழ்ந்த இடமே தருகிறது குறள். மனத்தின் ஆற்றலை அடக்கிப் பயன்கொள்ளாமல் வெறிதே அலைந்து கெடவிடுவது பெருமை தாராது என்பதற்காக, “செயற்கரிய செய்வார் பெரியர்” என்றதனோடு நில்லாமல், “செயற்கரிய செய்கலாதார் சிறியர்” என வள்ளுவர் தெளியவுரைக்கிறார். அதாவது இந்தப் பெரிய வேறுபாடு தெளிவாக அறியப்படுவதற்காகவே பெரியர்-சிறியர் என்று குறிப்பிட்டுச் சொல்கிறார்.
இனி, முதலடி உடன்பாட்டு வகையானும், இரண்டாம் அடி எதிர்மறை வாய்ப்பாட்டானும் பெரியர்-சிறியர் இலக்கணத்தை வலியுறுத்தியது ஆதலின், கூறியது கூறலாகாது. 'முன் சொன்ன கருத்துக்கு வலிவு தேடும் முறையிலேயே அதன் பின்வரும் தொடர் அமைந்துள்ளது. 'பெரியார் செயற்கரிய செய்வார்' என்னும் உடன்பாட்டுக் கருத்து 'சிறியார் செயற்கரிய செய்கலாதார்' என்னும் எதிர்மறைக்கருத்தால் மேலும் தெளிவு பெறுவதைக் காணலாம். எனவே ஒரு கருத்து நன்கு தெளிவுற இருவகை நடைகளையும் (உடன்பாடு-எதிர்மறை) வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார்.' (இ சுந்தரமூர்த்தி).

பெரியர் - சிறியர் குறிப்பது என்ன?

இவ்வதிகாரம் நீத்தார் பெருமை பேசுவது. அதிகார இயைபு நோக்காவிடில், இப்பாடலைச் செயல்திறன் கூறும் செய்யுளாகவே கருதத் தோன்றும். பெரியர் என்ற சொல் ஒன்றே இது நீத்தார் பற்றிய பாடல் என்பதற்குக் குறிப்பு தருகிறது.
அதிகாரத்து மற்றப் பாடல்களில் ஒழுக்கத்துநீத்தார், ஈண்டறம்பூண்டார், ஓரைந்தும் காப்பான், ஐந்தவித்தான், ஐந்தின்வகைதெரிவான், நிறைமொழிமாந்தர், குணமென்னும் குன்றேறி நின்றார், அறவோர் என வேறுவேறு பெயர்களில் நீத்தார் குறிக்கப்பெறுகின்றனர். நீத்தார் என்னும் சொல்லை தந்நலம் கருதாது பொதுத்தொண்டு ஆற்றும் தியாகிகள் அல்லது அறத்தை வாழ்க்கைப் பணியாகக் கொண்டவர்கள் என்ற பொருளில்தான் வள்ளுவர் ஆண்டுள்ளார். இப்பாடலில் நீத்தார் பெரியர் என அழைக்கப்படுகிறார்.

அரிய செயல்களை ஆற்ற நீத்தாராக வேண்டும் என்னாமல் நீத்தார் அரிய செயல் ஆற்றவல்லவர்கள் என்று கூறுவதாக இக்குறள்நடை அமைகிறது. அரிய செயல்கள் ஆற்றிய முன் தோன்றியவர்களை எண்ணி, அவர்கள் நீத்தாராகவே இருந்திருப்பதாக முடிவு கண்டிருக்கிறார் வள்ளுவர். நீத்தார் அரிய செயல்களைச் செய்ய வல்லவர். இந்நீத்தார் பெருமையுடையவர். அதனாலேயே அவர்கள் பெரியர். பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின், அருமையுடைய செயல் (பெருமை 975 பொருள்: பெருமைப்பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலைச் செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.) என்று பிறிதோரிடத்தில் குறள் சொல்லும்.
தந்நலம் துறவாதவர்கள் புலன் ஈர்க்கும் வழியில் சென்று ஆற்றலை இழப்பதால், அரிய செயல்களைச் செய்ய மாட்டார்கள்; அவர்கள் சிறியர்.

ஒருசிலர் இக்குறளுக்கு மறுப்புக் குரல் எழுப்பியுள்ளனர். இது மக்களுள் பெரியர், சிறியர் என்ற பெரும் பாகுபாட்டை உணர்த்துகிறது; இப்பாகுபாட்டின்படி எல்லோராலும் செய்யவியலாத அருஞ்செயல்களைச் செய்பவர்தான் பெரியோர், மற்றோரெல்லாம் சிறியர் எனப் பொருள் அமைகிறது. இது சரியா? எனக் கேட்கின்றனர் இவர்கள்.
இந்தப் பாகுபாட்டைத் துறந்தார் செய்பவையெல்லாம் அரியன; அவர்களே பெரியவர்கள்; மற்றவரெல்லாம் அரிய செயல்கள் செய்யமுடியாதவர்கள்; அதனால் சிறியவர்கள் என்று இக்குறளுக்குப் பொருள் கொள்பவர்களே குறை கூறுவர். ஆனால் நீத்தார் என்பதற்குத் துறந்தார் எனக் கொள்ளாமல் தந்நலம் நீத்தார் எனக் கொண்டால் இம்முரண் அகலும். தன்னலம் துறந்தவர்களால் அரிய செயல்களைச் செய்யமுடியும்; அக்குணம் இல்லாதவர்களுக்கு அரிய செயல்கள் செய்தல் எளிதானதல்ல என்று இப்பாடலுக்குப் பொருள் கொள்ளவேண்டும். மற்றப்படி சிறியவர் என்றால் இழித்துக் கூறப்பட்டவர் என்பதல்ல.

செய்வதற்கு அரிய செயல்களைச் செய்பவர்கள் பெரியவர்கள்; அரிய செயல்களைச் செய்ய இயலாதோர் சிறியர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அரிய செயல்களை ஆற்றி பெரியர் ஆகும் நீத்தார் பெருமை கூறும் பாடல்.

பொழிப்பு

அரிய செயல்களைச் செய்யும் நீத்தார் பெரியர்; அவற்றைச் செய்ய இயலாதாவர் சிறியவர்.