இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0025ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி

(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:25)

பொழிப்பு (மு வரதராசன்): ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான்.மணக்குடவர் உரை: நுகர்ச்சியாகிய ஐந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று.
இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

பரிமேலழகர் உரை: ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று.
(ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

தமிழண்ணல்: ஒருவன் தன் தவ வலிமையால் இந்திரபதவி அடைவானென்பது சமயம் சார்ந்த புராணவழி நம்பிக்கை. ஐம்பொறிகளின் வேகத்தை அடக்கி ஆள்பவனது பேராற்றலுக்கு, அகன்ற வானுலகில் உள்ளார்க்குத் தலைவனாகிய இந்திரனே சான்று; அவன் அத்தவ வலிமையால் அப்பதவியை அடைந்தானாகலின்.
புத்த சமயத்தில் இந்த நம்பிக்கை இருந்தது. ஐந்து பொறி, புலன்களைப் பக்குவப்படுத்தினால் இந்திர பதவியையும் அடையலாம். மேன்மேல் உயரலாம் என்பது கருத்து.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஐந்து அவித்தான் ஆற்றல், அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி.

பதவுரை: ஐந்து- ஐந்து (புலன்கள்); அவித்தான்-பக்குவப்படுத்தியவன், அடக்கியவன், அறுத்தவன்; ஆற்றல்-வலிமை; அகல்-விரிவான; விசும்புளார்-வானிலுள்ளவர்கள்; கோமான்-மன்னவன்; இந்திரனே- இந்திரனே; சாலும்-அமையும்; கரி-சான்று.


ஐந்தவித்தான் ஆற்றல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நுகர்ச்சியாகிய ஐந்தினையுந் துறந்தானது வலிக்கு;
பரிதி: பொறிவழியிலே புலன் செல்லாமல் தன்வழி மனசிருப்பானுக்கு;
காலிங்கர்: கீழ்ச்சொன்ன பரிசே ஐம்புலனையும் வென்றவன் சித்தவலிமைக்கு;
பரிமேலழகர்: புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு;
பரிமேலழகர் கருத்துரை: ஐந்தும் என்னும் முற்று உம்மையும் ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன.

இப்பகுதிக்குப் பழம் ஆசிரியர்கள் புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினவனது வலிமைக்கு என்று பொருள் கூறினர்

இன்றைய ஆசிரியர்கள் 'ஐந்தும் அடக்கியவன் ஆற்றலுக்கு', 'ஐந்து அவாக்களையும் அடக்கினவனது வலிமைக்கு', 'ஐம்பொறிகளையும் அடக்கினவனது வல்லமைக்கு', 'ஐம்பொறிகளின் வேகத்தை அடக்கி ஆள்பவனது பேராற்றலுக்கு' என்று உரை தந்தனர்

ஐம்பொறிகளையும் அடக்கினவனது வல்லமைக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

அகல் விசும்புளார் கோமான் இந்திரனே சாலுங் கரி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று.
மணக்குடவர் விரிவுரை: இந்திரன் சான்றென்றது இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால் அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.
பரிதி: இந்திரனே சாட்சி என்றவாறு.
காலிங்கர்: பரந்த வானில் வாழும் தேவர்கட்கெல்லாம் அரசனாகிய இந்திரனே அமையுஞ் சான்று என்றவாறு.
காலிங்கர் விரிவுரை: மற்று இது என்சொல்லியவாறோ எனின், ஈண்டுத் தன் பதங்கருதித் தவஞ்செய்யும் நீத்தார்மாட்டுத் திலோத்தமை முதலிய தெய்வமகளிரை விடுத்து, மற்று அத்தவமழித்துத் தவம் அழியாமைநிலைநிற்கையாலும், தனது பதம் விரும்பாமையாலும் தானே சான்றாய் அமையும் என்றவாறு.
பரிமேலழகர்: அகன்ற வானத்துள்ளார் இறைவன் ஆகிய இந்திரனே அமையும் சான்று.
பரிமேலழகர் விரிவுரை: தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்.

இப்பகுதிக்கு 'பரந்த வானில் வாழும் தேவர்கட்கெல்லாம் அரசனாகிய இந்திரனே அமையுஞ் சான்று' என்ற பொருளில் பழைய ஆசிரியரகள் உரை கண்டனர். ஆனால் ஒவ்வொருவரும் வேறுவேறு இந்திரனைக் குறிப்பிடுகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வானவர் தலைவனாம் இந்திரனே தக்க சான்று', 'பெரிய விண்ணுலகத்திலுள்ள தேவர்கள் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்றாவன்', 'அகன்ற வானத்துள்ளார் தலைவனாம் இந்திரனே சான்றாவான்', 'அகன்ற வானுலகில் உள்ளார்க்குத் தலைவனாகிய இந்திரனே சான்று' என்றபடி உரை வழங்கினர்.

அகன்ற வானுலகில் உள்ளவர்களுக்குத் தலைவனாம் இந்திரனே சான்றாவான் என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
ஐம்பொறிகளையும் அடக்கினவனது வல்லமைக்கு அகன்ற வானுலகில் உள்ளவர்களுக்குத் தலைவனாம் இந்திரனே சான்றாவான் என்பது பாடலின் பொருள்.
இங்கு குறிப்பிடப்படும் இந்திரன் யார்?

தவமுயற்சியுடன் செயல்பட்டு இந்திரபதவி பெற்றவன் போல ஐம்பொறிகளையும் அடக்கிய தன்னலம் நீத்தார் தமது குறிக்கோளை அடைவர்.

ஐம்பொறிகளையும் பக்குவப்படுத்தினவனது வல்லமைக்கு அகன்ற வானுலகில் உள்ளவர்களுக்குத் தலைவனாம் இந்திரனே சான்று.
ஐந்தவித்தான் எனப்படுபவன் கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலன்களால் ஆகும் அவாக்களைக் கட்டுப்படுத்தி அவற்றை அவித்தவன் ஆவான். அவித்தல் என்பது புலன்களின் செயல்களை ஒழித்து அழித்தல் என்பதல்ல; அவற்றால் முளைக்கும் ஆசைகளைப் அடக்குதல் என்பதாகும். உலக வெறுப்பு பேசப்படவில்லை; ஐம்பொறிகளை அடக்கி ஆளும் அறக் குணமே கூறப்படுகிறது. அவித்தல் என்ற சொல்லுக்குப் பக்குவப்படுத்தல் (கிழங்கு அவித்தல் போல) என்று விளக்கம் அளிப்பர்.
நீத்தார் ஆற்றல் அளவு கடந்தது என்று கூற வரும் வள்ளுவர் அதற்கு எடுத்துக்காட்டாக இந்திரன் என்பவனைக் குறிப்பிடுகிறார். இது இந்திரனைப் பெருமைப்படுத்தும் முறையில் அமைந்தது. வானவர்களின் தலைவனான இந்திரன் என்று பாடல் சொல்வதால் அவன் தொன்மங்களில் வரும் கதைமாந்தனாகவே இருக்கவேண்டும் என்று கொண்டனர். பழம் நூல்களில் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற பல இந்திரன் கதைகள் காணக்கிடக்கின்றன. அவற்றில் இக்குறட்கருத்துக்கு முற்றிலும் பொருந்துவதாக எதுவும் இல்லை.
பரிதி தனது உரையில் 'ஐந்தவித்து நோற்ற தவச் சிறப்பான இந்திரபதம் பெற்றிருப்பது பற்றி இந்திரனே சாலுங்கரி என்றார்' எனச் சொல்லிச் செல்கிறார். இதன்படி இந்திரன் என்பவன் இந்திர பதவி அடைந்தவன் என்ற பொருளில் ஆண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. இந்திரபதவி என்பது புலனடக்கம் மேற்கொண்டு, பெருமுயற்சியின் விளைவாய்ப் பெறப்படுவது என்பது பொதுவாகத் தொன்மங்கள் கூறுவது. இந்திரனே போதிய சான்று எனக் கூறப்பட்டதால், ஐந்தடக்கல் என்ற தவத்தின், வலிமையால் யாவருமே இந்திரனாக அதாவது, வானுலகத்தாருக்குத் தலைவனாக, கோமகன் பதவியைப் பெற்றுப் புகழ் பெறமுடியும் என்பதை உணர்த்துவதாகத் தோன்றுகின்றது. புலன்களை அடக்கினால் இந்திர பதவி கிட்டும் அதாவது மேன்மேல் உயரலாம் என்பதாகக் கொள்ளலாம். புத்த சமயத்தில் இந்த நம்பிக்கை உள்ளது.

இந்திரபதவி அடைந்தவன் எப்படி முனைப்புடன் செயல்பட்டு அதைப் பெற்றானோ அது போலப் பொதுநலத் தொண்டாற்றும் நீத்தார் தமது குறிக்கோளை அடைவர் என்பதை இக்குறளுக்கான குறிப்புப் பொருளாகக் கொள்ள முடியும்.


இங்கு குறிப்பிடப்படும் இந்திரன் யார்?

இப்பாடலில் கூறப்படும் ஐந்தவித்தான் ஆற்றலைச் சொல்லும் அந்தப் பழங்கதை எது? இந்திரன்தான் ஐந்தவித்தவனா? அல்லது வேறு யாரோவா? முற்றும் துறந்த முனிவர்களின் தவவலிமையைப் பணிந்து போற்றும் இந்திரன், நீத்தாரின் தவவலிமையை அழித்துத் தன் பதவியைக் காத்துக் கொள்ளும் வல்லமை கொண்ட இந்திரன், தான் ஐந்தவியாது சாபம் எய்தி நின்று ஐந்தவித்தானது ஆற்றலை உணர்த்திய இந்திரன், தானே ஐம்புலன்களையும் அடக்கி இந்திரபதவி பெற்ற இந்திரன் என்றவாறு பல இந்திரன்கள் தொன்மங்களில் காணப்படுகின்றனர். இப்பாடலில் கூறப்பட்டுள்ள அந்த இந்திரன் யார்?

"இந்திரன் சான்று என்றது, இவ்வுலகின்கண் மிகத்தவஞ் செய்வார் உளரானால், அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான், இது தேவரினும் வலியன் என்றவாறு" என்கிறது மணக்குடவர் உரை. சமணத் தொடர்புடைய இலக்கியங்கள் கூறும் கதையை இவர் சுட்டுவதாக உள்ளது. சமண இந்திரன் பெருமை பெற்றவன். சமண நூல்களில் இந்திரனின் பண்பும் பணிவும் அன்பும் ஆர்வமும் குறிக்கப்பட்டுள்ளன. சமணர் கூறும் கதைப்படி, தவத்தால் உயர்ந்த தேவர் வானவர் எனப்படுகின்றனர். வானவர்க்குத் தலைவனே இந்திரன் என்பவன். நிலஉலகில் ஒருவன் ஐம்புல வகைகளை ஆய்ந்து, தெளிந்து, புலன்களைக் காத்து, அடக்கி, வென்று, மனமாசுகளினின்றும் விடுதலையடைந்து நீத்தாராயின், அவரது நிலை தேவர்களுக்குத் தலைவனான இந்திரனுக்கு நன்கு புலனாகும். அப்போது உலகில் பல நற்குறிகள் தோன்றும். அவ்வுயிர் இறை நிலை அடையும்போது இந்திரனது பாண்டு கம்பளம் எனும் வெண்போர்வை நடுங்கும். இதை அறிந்து இறை நிலை அடைவோர் நடந்துசெல்லத் தாமரை மலர்களைப் பரப்பி அத்துறவியாரை, இந்திரன் தேவர் சூழ எழுந்து, வரவேற்று வழிபடுவான். இது மேருமந்தர புராணம் முதலிய நூல்களில் காணப்படும் கதை.
ஐந்தவித்தானது ஆற்றல் உயர உயர இந்திரனுக்கு ஊறுபாடு நேர்தல் பற்றி அவ்விந்திரன் மூலம் ஐந்தவித்தான் ஆற்றலை அறியலாம் எனவும் கருத்துக் கொள்வர். இங்கு முற்றும் துறந்தவர் ஆற்றலைக் கண்டு இந்திரனும் அஞ்சுவான் என்பதைச் சான்றாக கருதுகிறார் மணக்குடவர். இந்திரனே வரவேற்று வழிபடும் வலிமை கொண்டது நீத்தார் ஆற்றல் என இதை விளக்குவர்.

அடுத்து, இந்து சமயத் தொடர்புடையதாகச் சொல்லப்படும் பழங்கதைகளில் தோன்றும் மூன்று இந்திரன்களை நோக்கலாம்:
காலிங்கர் "மற்று இது என்சொல்லியவாறோ எனின், ஈண்டுத் தன் பதங்கருதித் தவஞ்செய்யும் நீத்தார்மாட்டுத் திலோத்தமை முதலிய தெய்வமகளிரை விடுத்து, மற்று அத்தவமழித்துத் தவம் அழியாமைநிலைநிற்கையாலும், தனது பதம் விரும்பாமையாலும் தானே சான்றாய் அமையும் என்றவாறு." என்று தம் உரையில் கூறுகிறார்.
இங்கு நீத்தார் தவமழிக்க இந்திரன் திலோத்தமையை அனுப்பிய கதை காட்டப்பெறுகிறது. தவமிருப்போர் ஆற்றலால் தன் பதவிக்கு ஆபத்து என்பதால் இந்திரன் திலோத்தமை போன்ற அழகிய வானவர் பெண்களை அனுப்பி அவர்களது தவத்தைக் கலைக்க முயற்சிப்பானாம். கோசிகன் மேற்கொண்ட தவத்தை அழிக்க நினைத்து, தேவர்களுக்குத் தலைவனாகிய இந்திரன் திலோத்தமையை அனுப்ப, அவளைக் கண்டு மயங்கித் தவத்தைக் கைவிட்டு அவளுடன் இன்பத்தில் ஈடுபட்டான் கோசிகன். அதனால் அவனது தவம் அழிந்தது. இவ்வாறு, தவம் செய்து இந்திரபதவி அடைய நினைக்கும் மற்ற நீத்தாரையும் இந்த இந்திரன் தடுத்து நிறுத்தித் தன் பதவி காக்கும் வல்லமை கொண்டவன்.
இரண்டாவது, "தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், 'இந்திரனே சாலும் கரி' என்றார்" என்ற பரிமேலழகர் உரையில் சொல்லப்பட்டுள்ள குறிப்பு கொண்டு இராமயணத்தில் சொல்லப்பட்டுள்ள அகலிகை கதையைத்தான் இக்குறள் கூறுகிறது எனச் சொல்லப்பட்டது. அகலிகை கதையானது: வானுலக தேவர்களின் தலைவனான இந்திரன், முனிவரான கெளதமரின் மனைவி அகலிகையின் அழகில் மயங்கி அவளைக் கூடுகிறான். இதைக் காணநேரிட்ட கெளதமர் வெகுண்டு சபித்ததால் ("எந்தப் பெண் குறியில் நீ ஆசைப்பட்டு இங்கு வந்தாயோ, அந்த உறுப்பு உன் உடலெங்கும் ஆயிரக்கணக்கில் உருவாகட்டும்") வெட்கக் கேடான தண்டனையை அடைந்து இந்திரன் இறவாப் பழிக்கு ஆளாகிறான்; அகல்யாவையும் நோக்கி "விலைமகள் அனைய நீயும் கல்லியல் ஆதி" (கம்பர்) என்று கல்லாய்க் கிடக்கும்படி சபிக்கிறார். (அகல்யாவுக்கு சாப மீளுகை பின்னாளில் அயோத்தி இராமனால் கிடைத்தது).
இந்தக் கதையில் சொல்லப்படும் கெளதமர்தான் ஐந்தவித்தானாகக் குறளில் குறிக்கப்பட்டுள்ளார்; இதன்படி கௌதமரே ஐந்தவித்தான் ஆகிறார்; வானவர்களுக்குத் தலைவனான இந்திரனையே ஒறுக்கத்தக்க ஆற்றல் கொண்டவர் கௌதமர்; இந்த ஆற்றல் ஐம்புலன்களையும் அடக்கி ஆண்டதால் அவருக்குக் கிடைத்தது அதையே வள்ளுவர் இக்குறளில் குறிப்பிடுகிறார் என்பது பரிமேலழகர் உரையின் பொருளாக விளக்கப்பட்டது. பரிமேலழகர் உரையில் எந்த இந்திரன் என்று வெளிப்படையாகச் சொல்லப்படவில்லையாதலால் சாபம் விட்ட அகத்தியர் வரலாற்றில் காண[ப்படும் இந்திரனைப் (இக்கதை அடுத்துச் சொல்லப்பட்டுள்ளது) பரிமேலழகர் குறித்திருக்கலாம் எனவும் அறிஞர் கருதுவர்.
மூன்றாவதான வைதிக சமய இந்திரன் கதை மகாபாரதத்தில் உள்ளது. நகுடன் என்பான் நூறு குதிரைவேள்வி செய்து இந்திரபதவி பெற்றபின் இந்திராணியை நாடிச் சென்றான். இந்திராணி ஒரு நிபந்தனை விதித்தாள். ஏழு முனிவர்கள் சுமந்து கொண்டுவரும் பல்லக்கில் ஏறி நகுடன் அவளிடம் வரவேண்டும். அகத்தியர் உட்பட ஏழு முனிவர்களைப் பல்லக்கு தூக்க வைத்தான் நகுடன். இந்திராணியை விரைவில் அடையும் காமவெறியில்-புலனடக்கமின்றி- பல்லக்கு தூக்கி வந்த அகத்தியரின் தலையை உதைத்து 'சர்ப்ப! சர்ப்ப' (ஓடு, ஓடு) என விரைந்து செல்லும்படி ஏவினான். இதனால் அகத்தியர் வெகுண்டு நகுடன் பாம்பாக மாற சாபமிட்டார். பாம்பாய் ஓடிய நகுடன் தான் அடைந்த இந்திர பதவியையும் இழந்தான்.
இம்மூன்றையும் (கோசிகன்-திலோத்தமை, கெளதமர்-அகலிகை, நகுடன்-இந்திராணி) வைதீக இந்திரன் கதைகள் என்று நாம் அழைக்கலாம்.

இனி புத்த சமயத்தார் நம்பும் இந்திரன் கதை ஒன்றும் உண்டு.
ஒருவர் கடும் தவம் செய்தால் இந்திர பதவி அடையலாம் என்று புத்தசமயத்தார் நம்பினார்கள். இந்த இந்திரனையே வள்ளுவர் இக்குறளில் சொல்லியிருக்கிறார் என்பது ஒரு கருத்து. புத்த சமய இந்திரனைப் பற்றிக் கு ச ஆனந்தன் சொல்வதாவது: "புத்த சமயம் சாற்றும் தேவர்கள் தலைவனான இந்திரன், இந்து புரணங்கள் கூறும் இழிதகை கொண்ட இந்திரனுக்கு முற்றும் மாறுபட்டவன். புத்த சமய மெய்யியல் நெறிக்கேற்ப ஐம்பொறி-புலன்களை அடக்கி, அனைத்தையும் துறந்தவன்; பேராற்றல் பெற்றவன். சிலப்பதிகாரத்தில் பேசப்படும் "இந்திர விழா", ஐந்தினை அவித்து ஆற்றல் பெற்ற புத்த இந்திரனுக்கு எடுக்கப்பட்ட விழா. இந்து புராண இந்திரன் காமவெறி கொண்டவன். புலனடக்கம் அற்றவன். ஐந்தவித்தான் ஆற்றலுக்குச் சான்றாவதற்கு, எவ்வகையாலேனும் பொருந்தாதவன். ஐம்பொறி-புலன்களை அடக்கிப் பக்குவப்படுத்திய ஞானியின் ஆற்றலுக்கு வானத்தில் உள்ளவர்களின் நாயகனான, (புத்த) இந்திரனே சான்று."

காலிங்கரின் உரைவிளக்கத்தில் (கோசிகன் கதையில்) நீத்தார் பெருமையும் இல்லை; இந்திரனைச் சான்றாகக் கொள்ளவும் ஏதும் இல்லை. இக்கதையை வலிந்து இக்குறட்பொருளுக்குக் காலிங்கர் பொருத்துவதாகத் தோன்றுகிறது. எனவே இக்குறளுக்கான இவரின் உரை தள்ளத்தக்கதாகிறது.
பரிமேலழகர் சொல்லிய இந்திரன் - அகலிகை சாபம் பெற்ற கதையும் முழுமையாகப் பொருந்தவில்லை. துறவுஉள்ளம் கொண்ட நீத்தாரின் புகழ்பாடவே இவ்வதிகாரம் அமைந்தது. கௌதமர்தான் இங்கு குறிப்பிடப்படும் ஐந்தவித்தான் என்பது பரிமேலழகர் உரை. 'எப்படி மனைவியுடன் வாழும் கௌதமரை ஐம்புலன்களையும் அடக்கியவர் என்று அழைப்பது? எனவே கௌதமர் ஐந்தவித்தான் அல்லர்' என்று சிலர் கருத்துத் தெரிவித்தனர். ஆனால் இதை மறுத்து 'கௌதமர் இல்லறத்தின் நின்றுமே மெய்யுணர்ந்த பெரியோர் ஆவர்; அறத்தாற்றி இல்வாழ்க்கை ஆற்றிய துறவறவாளர். எனவே அவரும் வள்ளுவர் வரையறை செய்யும் ஐந்தவித்தான் இலக்கணத்துக்குள் வருகின்றார் என்று சிலர் அமைதி கூறுவர். அடுத்து துறவிகளிடம் விருப்பு, வெறுப்பு, காழ்ப்பு போன்ற குணங்கள் அமையா. அப்படிப்பட்டவர்கள் யாருக்காவது சாபம் விடுவார்களா? அப்படி சாபம் விட்டால் எப்படிக் குணமென்னும் குன்றேறிய நீத்தார் வகையில் அடங்குவர்? சாபம் பற்றியோ அதைக் கொடுத்தது யார் என்பதையோ வள்ளுவர் குறிப்பிட்டுச் சொல்லவுமில்லை. கெளதமரைக் குறிப்பால் உணர்த்தினார் வள்ளுவர் என்றால் கடுஞ்சினப்பட்டு சாபம் கொடுத்தவரான கெளதமரை நீத்தார் பெருமை அதிகாரத்தில் எடுத்துக்காட்டும் அளவிற்கு அவருக்கு உயர்வு தருவார் என்பது ஐயமே
கௌதமர் ஐந்தவித்தான் இல்லையெனில் அது இந்திரனா? கோமான் என்று இந்திரனைச் சிறப்படை மொழி கொடுத்து உயர்த்தியே வள்ளுவர் இங்கு கூறுகிறார். பிறன் மனைவியைக் கூடிய காமுகனை கோமான் என்று அவர் அழைக்கமாட்டார். பரிமேலழகர் இந்திரன் தனது பலமின்மை கொண்டு ஐந்தவித்தானது ஆற்றலை உணர்த்தினான் என்ற கருத்துடன் உரை கண்டுள்ளார் என்பர். சான்று எனக் காட்டப்படுவர் சான்றாக நிற்றல் வேண்டும்; தம் உறுதி குன்றியமையால் உறுதி கொண்ட பிறரைக் கொண்டு சான்று காட்டினார் என்பது பொருத்தமாகுமா? எனவே பரிமேலழகர் சுட்டும் இந்திரனையோ (அல்லது கௌதமரையோ) இக்குறள் குறிப்பதாகக் கொள்ள முடியாது.
இதே அடிப்படையில் நகுடன்-இந்திராணி கதையும் இக்குறளுக்குப் பொருந்திவராது; அதில் காணப்படும் இந்திரனையும் இப்பாடல் குறிக்காது. சாபம் விட்ட அகத்தியரும் நீத்தாருள் அடங்கார்.

சமயங்கள் கூறும் இந்திரன்கள் தவிர்த்து பழந்தமிழ்நூல்கள் கூறும் இந்திரனையும் காணலாம். தமிழர்களின் ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு முருகன், பாலைக்குத் துர்கை, முல்லைக்கு திருமால், மருதத்திற்கு இந்திரன், நெய்தலுக்கு வருணன் எனத் தெய்வங்கள் குறிக்கப்பட்டன. தமிழர்களின் மருத நிலத்துத் இறைவனாகவும் மழையை இயக்கும் தெய்வமாகவும் இந்திரன் கருதப்பட்டான் என்பர்.

எந்த இந்திரனை இக்குறள் சான்றாக்குகிறது?
பரிதி 'ஐந்தவித்து மனத்தைத் தன்வயமாக்கி நடத்துவனான இந்திரனே சாட்சி' என்று உரை எழுதினார். அதாவது தனது தவ வலிமையால் இந்திரன் சான்றானான் எனப் பரிதி சொல்கிறார். இவர் கூறும் இந்திரன் கு ச ஆனந்தன் குறிப்பிடும் சமண/புத்த இந்திரனை ஒத்து வருகிறான். சமயக் காலங்களுக்கு முந்தைய பழைய கதைகளில் இந்திரன் தவமிருந்து அப்பதவியைப் பெற்றான் என்று வழங்கி வந்ததும் எண்ணத்தக்கது.
இந்திரனைச் சிறப்பித்த வள்ளுவர் அவன் குறையையன்றி ஏற்றத்தைக் கருதியே அவனைச் சான்றாக ஆக்கினார் என்று கொள்ளுதலே சிறப்புடையதாதலால் பரிதி/ கு ச ஆனந்தன் உரையில் கண்ட இந்திரனே இக்குறளில் கூறப்பட்டுள்ளான் என்று கொள்ள முடியும்.ஐம்பொறிகளையும் அடக்கினவனது வல்லமைக்குப் பரந்த வானுலகத்திலுள்ளவர்களுக்குத் தலைவனாகிய இந்திரனே சான்றாக அமைவான் என்பது குறட்கருத்து. .

அதிகார இயைபு

நீத்தார் பெருமை ஐந்தடக்கல் ஆற்றலில் பெறப்படுகிறது.

பொழிப்பு

ஐம்புலன்களையும் அடக்கியவன் வலிமைக்கு பரந்த வானத்துள்ளார் தலைவனாம் இந்திரனே சான்று.