நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு
(அதிகாரம்:வான் சிறப்பு
குறள் எண்:20)
பொழிப்பு (மு வரதராசன்): எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
|
மணக்குடவர் உரை:
நீரையின்றி யுலகம் அமையாதாயின் யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது.
ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.
பரிமேலழகர் உரை:
யார்யார்க்கும் நீர் இன்று உலகு அமையாது எனின் - எவ்வகை மேம்பாட்டார்க்கும் நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்;
ஒழுக்கு வான் இன்று அமையாது - அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது.
(பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின், இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல்,
நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும் தெளியப்படுதலின், அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார்,
'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை, 'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம்
நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும் அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது.)
வ சுப மாணிக்கம் உரை:
உலக நடப்புக்கு ஒழுக்கம் வேண்டும்; அவ்வொழுக்கம் மழையில்லாவிட்டால் யாரிடமும் இருக்குமா?
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் ஒழுக்கு வான்இன்று அமையாது.
பதவுரை: நீர்-நீர்; இன்று-இன்றி, இல்லாமல்; அமையாது-நிலைபெறாது, முடியாது; உலகு-உலகம்; எனின்-என்றால்; யார்யார்க்கும்-எவருக்குமே, எவ்வகைப்பட்டவர்க்கும்; வான்-வானம், மழை; இன்று-இல்லாமல்; அமையாது-இருக்காது; ஒழுக்கு-ஒழுக்கம்.
|
நீர்இன்று அமையாது உலகெனின்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீரையின்றி யுலகம் அமையாதாயின்;
பரிதி: சலமின்றியே உலகியல் நடவாது ஆதலால்;
காலிங்கர்: இவ்வுலகமானது நீரையின்றி அமையாதாயின்;
பரிமேலழகர்: நீரை இன்றி உலகியல் அமையாது ஆயின்;
பரிமேலழகர் குறிப்புரை: பொருள் இன்பங்களை 'உலகியல்' என்றார், அவை இம்மைக்கண்ண ஆகலின்,
'நீர் இன்றி இவ்வுலகமானது அமையாது என்றால்' என்று பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரையாக மொழிந்தனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இனிய பண்பின்றி உலகம் இயங்காது எனின்', 'நீரில்லாமல் உலகத்தில் ஒரு காரியமும் நடக்காது', 'எப்படிப்பட்டவர்களுக்கும் நீரில்லாமல் உலக வாழ்க்கை நடவாதென்றால்', 'நீர் இல்லாமல் உலகம் வாழமுடியாது என்றால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
'நீர் இல்லாமல் உலகம் இயங்காது என்றால்' என்பது இப்பகுதியின் பொருள்.
யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாவர்க்கும் மழையையின்றி ஒழுக்கம் உண்டாகாது.
மணக்குடவர் குறிப்புரை: ஒழுக்கம்- விரதம். இஃது ஆசாரங்கெடுமென்றது. இவை மூன்றினானும் நான்கறமுங் கெடுமென்று கூறினார்.
பரிதி: சர்வான்மாக்களுக்கும் மழையின்றி ஒரு காரணமில்லை என்றவாறு. [சர்வான்மாக்களுக்கும்- அனைத்து உயிர்களுக்கும்]
காலிங்கர்: இங்குள்ள உயர்ந்தோர் யாவர்க்கும் இழிந்தோர் யாவர்க்கும் மழையையின்றி அமையாது அவரவர் ஒழுகும் ஒழுக்கு.
பரிமேலழகர்: எவ்வகை மேம்பாட்டார்க்கும் அந்நீர் இடையறாது ஒழுகும் ஒழுக்கும் வானை இன்றி அமையாது.
பரிமேலழகர் குறிப்புரை: இடையறாது ஒழுகுதல் எக்காலத்தும் எவ்விடத்தும் உளதாகல், நீர் இன்று அமையாது உலகு என்பது எல்லாரானும்
தெளியப்படுதலின், அது போல ஒழுக்கும் வான் இன்று அமையாமை தெளியப்படும் என்பார், 'நீர் இன்று அமையாது உலகம் எனின்' என்றார். இதனை,
'நீரை இன்றி அமையாது உலகு ஆயின் எத்திறத்தார்க்கும் மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என உரைப்பாரும் உளர். இவை மூன்று பாட்டானும்
அறம் பொருள் இன்பங்கள் நடத்தற்கு ஏதுவாதல் கூறப்பட்டது. 'மழையை இன்றி ஒழுக்கம் நிரம்பாது' என்பது மணக்குடவர் உரை.
யார்யார்க்கும் என்ற சொற்றொடர்க்கு 'யாவர்க்கும்' என்று மணக்குடவரும், சர்வான்மாக்களுக்கும் அதாவது 'அனைத்து உயிர்களுக்கும்' என்று
பரிதியும் 'உயர்ந்தோர் யாவர்க்கும் இழிந்தோர் யாவர்க்கும்' என்று காலிங்கரும் 'எவ்வகை மேம்பாட்டார்க்கும்' என்று பரிமேலழகரும் பொருள்
கொள்வர். வான்இன்று என்பதற்கு அனைவரும் மழையின்றி என்ற பொருளிலேயே கருத்துரைத்தனர். ஒழுக்கு என்ற சொல்லுக்கு ஒழுக்கம் என்றனர் மணக்குடவரும் காலிங்கரும்; காரணம் என்று கருத்துப் பொருளாக உரைத்தார் பரிதி; நீர்ஒழுக்கு என்று பரிமேலழகர் கொண்டார்.
இன்றைய ஆசிரியர்கள் 'அப்பண்புக்குரிய ஒழுக்கம் எந்நிலையினர்க்கும் மழையின்றி உண்டாகாது', 'அந்த நீரும் (வாய்க்கால்களை வெட்டியும், மலைகளைக் குடைந்தும், அணைகள் போட்டும் இன்னும் பலவழிகளில்) யார்யார் எப்படி முயன்றாலும் மழையில்லாவிட்டால் கிடைக்காது', 'அந்நீரின் ஓட்டமானது மழை வளம் இல்லாது ஏற்படாது. (கிணறு முதலியனவும் அறவே இல்லையாயின் நீர் சுரக்கமாட்டா. மழையில்லாமல் உடம்பு நிலையாதவாறு போல, அஃது இல்லாமல் வாழ்க்கைச் சிறப்புத் தரும் தவவொழுக்கமும் நிரம்பாது என்றும் கூறலாம். உடம்பிற்கு உணவினை நீர் கொடுப்பது போல, உயிர்க்குறுதி பயக்கும் கடவுட்பூசனை நீராடித் தவஞ் செய்தல் முதலியனவும் தருகின்றது. அவை மழையின்றி நன்கு நிகழா)', 'எவ்வகைப்பட்டோர்க்கும் அந்நீர் இடையறாது உண்டாதல் மழையில்லாமல் இல்லை. (உலகம் வாழ நீர் வேண்டும்; நீர் பெருக மழை வேண்டும்.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.
யாராயிருந்தாலும் மழை இன்றேல் ஒழுக்க வாழ்வு கெடும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
நீர் இல்லாமல் உலகம் இயங்காது என்றால் மழை இல்லாமல் எவருக்குமே ஒழுக்கவாழ்வும் கெடும் என்பது பாடலின் பொருள்.
மழைக்கும் ஒழுக்கத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
|
மழை இல்லாவிட்டால் உலக ஒழுங்குமுறை சிதைவுறும்.
நீர் இல்லாவிட்டால் உலகம் செயல்படமுடியாது; மழை இல்லாமல் எத்தகையோருக்கும் ஒழுங்கான வாழ்வுமுறை இருக்காது.
நீரில்லாமல் உலகம் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை மழையில்லாவிடில் ஒழுக்க உலகு இல்லை என்பதும் என்கிறது இப்பாடல்.
உயிர்கள் நிலைபெற்றிருக்க மட்டுமல்ல, அவற்றின் ஒழுக்கத்திற்கும் மழையே காரணம் என்று இங்கு அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் வள்ளுவர்.
'நீர்இன்று அமையாது உலகெனின்' என்ற பகுதிக்கு நீரின்றி இவ்வுலக அமைப்பு இல்லை அதாவது நீர் இல்லாமல் உலகம் இயங்காது என்பது பொருள்.
'அந்நீரோ, வானில்லாமல் இல்லை' என்ற பொருளில் குறளின் இரண்டாவது பகுதி உள்ளது. அப்பகுதிக்கு 'மழையில்லாமல் நீர் கிடைக்காது என்றால், தண்ணீருக்காக ஆற்றில் அணைகட்டி வாய்க்கால் வெட்டினாலும் சரி, மலைகளைக் குடைந்தும், அணைகள் போட்டும், கிணறு வெட்டியும், ஊற்றுநீர் தேடினாலும் சரி, இன்னும் பலவழிகளில், யார்யார் எப்படி முயன்றாலும் மழையில்லாவிட்டால் நீர் கிடைக்காது' என நீராதாரங்களில் நீரின் வரத்து மழையில்லாமல் உண்டாகாது என்று விளக்கம் தந்தனர்.
நீர் என்பதற்கு குணம் என்று பொருள் கண்டு 'உலக அமைதிக்கு நீர்மை அதாவது குணம் வேண்டும்; மாந்தர் ஒழுக்கத்துக்கு ஊற்றாக மழை அமையும்' என இக்குறட்பொருளை விளக்குவார் திரு வி க. இவ்விளக்கத்தை வழிமொழிவது போல, 'நீர் என்ற சொற்கும் தண்ணீரென உரையாது, நீர்(மை)-பண்பு என உரைத்தலே தகும். நீர்மை-மை விகுதியின்றி நீரென வந்துள்ளது. தமர் நீரும் இன்னாவாம் இன்னா செயின்..... (உட்பகை 881) என்புழிப்போல, பண்புடையார்ப் பட்டுண்டுலகம்............ (பண்புடைமை 996) என்றபடி, ‘ஒழுக்கு’ என்பதற்கு விரதம், அவரவர் ஒழுகும் ஒழுக்கு, தவம், நடுவுநிலைமை எனக் குறிப்பிட்ட ஒன்றைக் கொள்வதினும் குணத்துக்குரிய ஒழுக்கம் எனக் கொண்ட திரு வி க பொருள் ஏற்புடையது' என்றார் இரா சாரங்கபாணி. 'இனிய பண்பின்றி உலகம் இயங்காது எனின், அப்பண்புக்குரிய ஒழுக்கம் எந்நிலையினர்க்கும் மழையின்றி உண்டாகாது' என்ற இவரது உரையும் சிறப்பாக உள்ளது.
'வானின்றி அமையாது ஒழுக்கு' என்ற பிற்பகுதியிலுள்ள ஒழுக்கு என்ற சொல்லுக்குப் பண்புப் பொருளான 'ஒழுக்கம்' என்றும் 'இடையறாது ஒழுகும் ஒழுக்கு' அதாவது இடையறாத நீரோட்டம் என்றும் இருதிறமாகப் பொருளுரைத்தனர். இவை மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது, நீரின் பெருக்கு மழை இல்லாமல் உண்டாகாது என இருவேறு கருத்துக்களை வழங்குகின்றன.
வானின்றி என்ற தொடரே 'மழையின்றி' என்பதை விளக்குகிறது. அதன்பின் இடையறாது ஒழுகும் ஒழுக்கு என்பது தேவையற்றதாகிறது. எனவே மழை இன்றேல் உலகத்தார் ஒழுக்கமும் கெட்டுவிடும் என்று இப்பாடலுக்குப் பொருள் கொள்வதே நேரிது. ஒழுக்கு என்ற சொல்லுக்கு 'நீர் ஒழுக்கம்' என்றோ 'ஒழுகிவந்த நீர்' என்றோ கொள்வதைவிட 'ஒழுக்கம்' என்று பொருள் கொள்வது பொருத்தம்.
நீரின்றமையா யாக்கைக் கெல்லாம்.. (புறநானூறு, 18 பொருள்: நீரை யின்றியமையாத உடம்பிற்கெல்லாம்..) என்றும் நீரின்றமையா உலகம் போல...(நற்றிணை குறிஞ்சி 1 பொருள்: நீரையின்றியமையாத உலகியல் போல...)என்றும் மழையின்றி மாநிலத்தார்க்கு இல்லை... (நான்மணிக் கடிகை 46 பொருள்: மழையில்லாமல் இப் பேருலகத்தின் மக்கட்கு நலமில்லை..) என்றும் நீரில்லாமல் எவையெல்லாம் அமையா எனப் பழம்பாடல்கள் கூறின. ஆனால் குறளோ இதனினும் சிறப்பாக மழையின்மையால் ஒழுக்கமும் உண்டாகா என்று கூறுகிறது.
யார்யார்க்கும் என்றது எத்தகைய மாந்தர்க்கும் என்ற கருத்தில் அமைந்தது. எங்கு வாழ்பவராயினும், எந்நிலையில் உள்ளவரானாலும் எப்படிப்பட்டவராக இருந்தாலும், எத்தொழில் இயற்றுபவர் ஆயினும் - உயர்ந்தோர், தாழ்ந்தோர், கற்றவர், கல்லாதவர், ஏழை, செல்வர், அரசாள்பவர், குடிமக்கள் என்ற வேறுபாடு இன்றி என்ற பொருள் தருவது. யார்யார்க்கும் என்ற தொடர் இக்குறள் மனித ஒழுக்கத்தைச் சொல்கிறது என்பதைத் தெரிவிப்பதாக உள்ளது.
ஒழுக்கம் எவர்க்கும் தேவை. ஒழுக்கம் பொது. அஃது இன்னார்க்குத் தேவை இன்னார்க்குத் தேவையில்லை என்பதாக இல்லையாதலால் 'யார்யார்க்கும்' எனச் சொல்லப்பட்டது.
'இன்றி' என்ற வினையெச்சம் 'இன்று' எனத் திரிந்து நின்றதாம்.
வானின்று என்ற தொடர் வானத்திலிருந்து அதாவது மழையின் மூலம் நீர் உலகிற்குக் கிடைக்கிறது என்ற கருத்தைத் தெளிவாகக் கூறுகிறது. உலகுக்கு மழை இல்லாமல் நீர் கிடைக்காதா?
நீரியல் (Hydrology) அறிஞரும் கல்வியாளருமான வா செ குழந்தைசாமி இவ்வாறு கூறுகின்றார்:
'பொதுவாக உலகில் பல இடங்களில் பல உயிர் ஊற்றுகள் (Life Springs) காணப்படுகின்றன. எண்ணற்ற உயிர் நதிகள் (Perenennial Rivers) ஓடுகின்றன.
இவற்றில் வருடத்திற்கு 365 நாள்களிலும் நீருக்குப் பஞ்சமில்லை....ஊற்றுகளிலும் நதிகளிலும் தொடர்ந்து தண்ணீர் எப்படி வருகிறது என்ற கேள்வியை
மேலைநாட்டுச் சிந்தனையாளர்கள் 2500 ஆண்டுகட்கு முன்பே எழுப்பினர். மேலும் அவர்கள் தங்களுடைய யூகத்தினால் தெரிந்துகொண்ட அளவில்,
மழையினால் வரும் நீரைவிட வருடம் முழுவதும் ஓடும் ஊற்றின் நீரும் அளவில் அதிகம் என்று நம்பினார்கள். இந்த நம்பிக்கை 17-ஆம் நூற்றாண்டின்
பிற்பகுதி வரை இருந்தது. இரண்டு வகையான தத்துவங்கள் மேலை நாடுகளில் நிலவி வந்தன. கடலிலிருக்கும் நீர், நிலத்தினடியில் இருக்கும் குகைவழிகள்
மூலமாக நிலத்திலிருந்து மலைப்பகுதிகளை அடைந்து அங்கு மலைகளின் அழுத்தம் காரணமாக ஊற்றாக வெளிவருகின்றது என்பது ஒரு நம்பிக்கை.....
....மத்தியகாலப் பகுதி வரை மேலைநாட்டுத் தத்துவஞானிகள் அனைவரும் ஊற்றுகள் அனைத்தும் கடலில் இருந்து நிலத்திற்கு அடியில் வரும் நீரின்
மூலம் உருவாகின்றன என்று நம்பினர். ...17-ஆம் நூற்றாண்டில் பெரோ(லட்) (Perraault) என்பவரும் எட்மே மாரியோட் (Edme Marriotte) என்பவரும் இந்தப் புதிருக்கு இறுதியான விடை கண்டவர் ஆவர். பெரோ(லட்) பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்தவர். செய்ன் (Seine) நதியின் நீர்ப்பகுதியில் பெய்யும் மழையையும் அந்தப் பகுதியில் ஓடும்
நீரையும் கணக்கிட்டார். அதன்படி பெய்யும் மழை நீர் நதியில் ஓடும் மொத்த நீரைவிட ஆறு மடங்கு அதிகம் ஆகும் என்று தெளிந்தார். இதே போன்றதொரு
சோதனையை இந்த நதியின் வேறு இடத்தில் மாரியோட் (Marriotte) என்பவரும் செய்தார். அவர்கள் வாழ்ந்தது 17-ஆம் நூற்றாண்டு.
இந்தக் காலப் பகுதியில்தான் நீரின்றி அமையாது உலகு எனின், அந்த நீரும் மழையின்றி அமையாது என்பது உறுதியாக்கப்பட்டது. இதே கருத்தை 2000
ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக வள்ளுவர் கூறியிருக்கிறார்.'
|
மழைக்கும் ஒழுக்கத்துக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?
வானிலிருந்து மழை பொழிதற்கும் ஒழுக்கப் பண்புக்கும் என்ன இயைபு?
உலகம் சீராக இயங்க ஒழுக்கம் இன்றியமையாதது. மழையில்லாமல் நீரில்லை. நீரில்லாமல் அந்த உலக இயல்பு இல்லை; உலக ஒழுக்கம் இல்லை.
வானின்று வழங்கி வரும் மழை இல்லையேல் துய்ப்பு இல்லை; மழைநீரின்றி பசும்புல் தலைகாட்டாது; உழவர் ஏர் உழார்; கடல் வளமும் குன்றும். விண் பொய்ப்பின் உலகில் வறுமையும் பசியும் மிகும். வளமான பொருளியல் வாழ்க்கையில்தான் மனிதப்பண்பு மிளிரும் என்பதும் சமூகவொழுக்கம் உயர்வடையும் என்பதும் உலகப் பொதுவான உண்மை.
இவ்வாறு மழையில்லையானால் நிலவளம் மறையும், கடல் வளம் தேயும் என்று ஒவ்வொன்றாகக் கூறி வந்த வள்ளுவர் மழை இல்லாமல் மக்களது பொருளாதாரநிலை கெடுவதால் விழாக்கள் இல்லை, பூசனை இல்லை என்று மாந்தரின் இறையுணர்வு குன்றும் எனவும் கூறினார். மனவளம் குறைவது மட்டுமல்ல தானம் தவம் என்ற பொது அறங்களும் தங்காமல் விலகிப்போகும்; மனிதப்பண்புகளும் மறக்கப்படும் என்றார். வளம் இல்லாத வாழ்க்கையில் மனித உலகம் ஒழுக்கநெறியைக் கடைப்பிடித்தல் அருமையிலும் அருமையாம். வாழ்க்கைப் போராட்டத்தில் சிக்குண்டு மக்கள் உழலும்போது கட்டுப்பாடு மறைந்து ஒழுக்கச்சீர் கேடு உண்டாகும்.
எனவேதான் மழையின்றேல் உயிரினும் மேலாக ஓம்பப்படவேண்டிய ஒழுக்கம் நிலைபெறாது என்ற பொருளில் வானின்றி அமையாது ஒழுக்கம் என்று சொல்லப்பட்டது.
மழையில்லையேல் வளமில்லை. வளமில்லையேல் நல்வாழ்வில்லை. வாழ்வுப் போராட்டம் எங்கு எழுகிறதோ அங்கு நல்லொழுக்கமிராது.
உணவு இறையுணர்வு தானம் தவம் முதலியனவெல்லாம் நீரால் ஆகுதலை முற்குறள்கள் விளக்கின. இப்பாடல் அவற்றையெல்லாம் தொகுத்தது போன்று உலகியல் ஒழுக்கம் என இவ்விரண்டும் மழையின்றி நடவா எனக் கூறுகிறது.
உலகம் நிலை பெறுவதற்கு மட்டுமல்ல. ஒழுக்கம் நிலைபெறுவதற்கும் மழை மிக இன்றியமையாதது என்பது இப்பாட்டால் விளக்கப்பட்டது.
|
உலகம் நீர் இன்றி வாழ இயலாது என்பது உண்மை; அதுபோலவே ஒழுக்கவாழ்வும் மழைநீர் இன்றி இல்லை என்பதுவும் உண்மை என்பது இக்குறளின் பொருள்.
மழை இன்றேல் உலகஒழுக்கமும் இல்லாமல் போகும் என்பது வான்சிறப்பு.
நீர் இல்லாமல் உலகம் இல்லை என்றால் எவர்க்கும் வான்மழையின்றி ஒழுக்கம் இல்லை.
|