இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0010



பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:10)

பொழிப்பு (மு வரதராசன்): இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.

மணக்குடவர் உரை: பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர், இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதவ ரதனு ளழுந்துவார்.

பரிமேலழகர் உரை: இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் - இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்; சேராதார் நீந்தார் - அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.
(காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: இறைவனடி வழிபடுபவர் பிறப்பாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர். வழிபடாதவர் அக்கடலை நீந்திக் கடக்கமாட்டார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இறைவன் அடி (சேர்ந்தார்) பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; சேராதார் நீந்தார்.

பதவுரை:
பிறவி-பிறப்பு, இங்கு வாழ்க்கை என்ற பொருளில் ஆளப்பட்டது; பெரும்-பெரியதாகிய; கடல்-கடல்; நீந்துவர்-நீந்துவார்கள்; நீந்தார்-நீந்தமாட்டார். இங்கு கடக்க மாட்டாதவர் என்ற பொருள் தரும்; இறைவன் அடி சேராதார்-கடவுள் தாள் சென்றடையாதார், இங்கு கடவுளை இடைவிடாது நினையாதவர் எனப் பொருள்படும்.


பிறவிப் பெருங் கடல் நீந்துவர் :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறவியாகிய பெரிய கடலை நீந்தியேறுவர்.
பரிதி: பிறவியாகிய சமுத்திரத்தை நீந்துவர் சிவனடி சேர்ந்தார்.
காலிங்கர்: பிறவியாகிய பெரிய பௌவத்தினைக் கடந்து முத்தராவர் இறைவனடியைச் சேர்ந்தார்.[பௌவம்-கடல்]
பரிமேலழகர்: (இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார்) பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவர்.
பரிமேலழகர் குறிப்புரை: காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம். உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன.

பழைய ஆசிரியர்கள் அனைவரும் 'பிறவிப் பெருங்கடல்' என்பதற்கு பிறவி ஆகிய பெருங்கடல் என்று பொருள் கூறினர். பரிதி சமயச் சார்பாக சிவனடி சேர்ந்தார் பிறவிச் சமுத்திரத்தை நீந்துவர் என்கிறார். காலிங்கர் 'பிறவியாகிய பெரிய பௌவத்தினைக் கடந்து முத்தராவர்' என்று வீடு பேறு பெறுதல் கருத்தை முன்வைக்கிறார். பரிமேலழகர் தனது விரிவுரையில் 'காரண காரியத் தொடர்ச்சியாய் கரை இன்றி வருதலின், 'பிறவிப் பெருங்கடல்' என்றார். மேலும் அவர் 'உலகியல்பை நினையாது இறைவன் அடியையே நினைப்பார்க்குப் பிறவி அறுதலும், அவ்வாறன்றி மாறி நினைப்பார்க்குப் அஃது அறாமையும் ஆகிய இரண்டும் இதனான் நியமிக்கப்பட்டன' என்றும் கூறினார். அதாவது முற்பிறப்பின் வினையால் அடுத்த பிறப்பும் அப்பிறப்பின் பயனால் மறு பிறப்புமாகத் தொடர்ந்து முடிவில்லாமல் வரும் கரைகாணாப் பிறவிக் கடல் என்று உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இறைவன் அடியை நினைந்தவர் பிறவிக்கடலைக் கடப்பர்', 'இறைவனை வணங்கி அவனைச் சரணடைகிறவர்களே பிறவித் துன்பம் என்ற கடலிலிருந்து கரையேறுவார்கள்', 'முழுமுதற் கடவுளுடைய திருவடிகளைப் பற்றினவர்கள் பிறவியாகிய பெரிய கடலை நீந்திக் கரையேறுவர்', 'இறைவனடிகளைத் துணையாக அடைந்தவர்கள் பிறவியாகிய பெருங்கடலைக் கடப்பர்' என்ற பொருளில் உரை தந்தனர்.

(இறைவனை மறவாது நினைந்தவர்) பிறப்பாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

நீந்தார் இறைவன் அடி சேராதார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இறைவனது அடியைச் சேராதவர் அதனுள் அழுந்துவார்.
காலிங்கர்: மற்று இங்ஙனம் சேராதார் எஞ்ஞான்றும் பிறவிப் பௌவத்தைக் கடத்தல் இலர் என்றவாறு.
பரிதி: சிவனடி சேராதவர் பிறவியாகிய சமுத்திரத்தை நீந்தமாட்டார் என்றவாறு.
பரிமேலழகர்: அதனை (இறைவன் அடியை)ச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்.

பழைய ஆசிரியர்கள் அனைவரும் 'இறைவனது அடியைச் சேராதவர் பிறவிக் கடலுள் அழுந்துவார்' என்ற பொருளில் உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நினையாதவர் கடவார்', 'மற்றவர்கள் அந்தப் பிறவித் துன்பக் கடலிலேயே கரையேற மாட்டாமல் தத்தளிக்க வேண்டியதுதான்', 'அவற்றைப் பற்றாதவர்கள் அங்ஙனம் கரையேறாது அதனுள் அழுந்துவர்', 'துணையாக அடையாதவர்கள் கடக்க மாட்டார். (அதனுள் ஆழ்ந்துவிடுவர்)' என்றபடி பொருள் உரைத்தனர்.

இறைவன் அடியை நினையாதவர் கடக்கமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
(இறைவனை மறவாது நினைந்தவர்) பிறப்பாகிய பெருங்கடலை நீந்துவர்; இறைவனை நினையாதவர் வாழ்க்கை என்னும் அக்கடலைக் கடக்கமாட்டாதாவார் என்பது பாடலின் பொருள்.
'நீந்துவர்-நீந்தார்' யாவர்?

இறைவன் அருள் பெற்றவர் மட்டுமே வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க முடியும்.

கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது.
பிறவிப் பெருங் கடல்:
பிறவி என்ற சொல் குறளில் பல பொருள்களில் பயின்று வந்துள்ளது. பிறவி என்ற சொல் வாழ்க்கை என்ற பொருளில் இக்குறளிலும் வேண்டா பிறப்பு (357)), பிறப்பு ஒக்கும் (972) என்ற இரு குறள்களிலும், இப்பிறப்பில் என்ற பொருளில் இம்மைப் பிறப்பில் (1315) என்ற குறளிலும், தலைமுறை என்ற பொருளில் எழுபிறப்பு ....எழுமை(62, 107) என்ற பாடல்களிலும், குடி என்ற பொருளில் பிறப்பாய் விடும் (133) என்ற குறளிலும், மக்கட்பிறப்பு என்ற பொருளில் பிறப்பு ஒழுக்கம் (134) என்ற குறளிலும், தோற்றம் என்ற பொருளில் பிறப்பறுக்கல்....பிறப்பறுக்கும் (குறள் 345, 349)ஆகிய குறள்களிலும், துன்பம் என்ற பொருளில் மாணாப் பிறப்பு (351) என்ற பாடலிலும் ஆளப்பட்டுள்ளது (இரா சாரங்கபாணி).
பிறவி என்பது நாம் பிறந்து வாழும் வாழ்க்கையைக் குறிக்கிறது. எளிதில் நீந்திக் கடக்கமுடியாத அளவிலான கடல் என்பதைத் தெரிவிப்பது பெருங்கடல் என்ற சொல். பிறவிப் பெருங்கடல் என்றது வாழ்க்கையாகிய பெரிய கடல் என்ற பொருள் தரும். பிறவியை அதாவது வாழ்க்கையைக் கடப்பது கடலை நீந்திக் கடப்பது போன்ற கடினமான செயல். கடவுளின் அருள் இருந்தால் மட்டுமே அது முடியும் என்கிறது பாடல்.

பிறவி என்ற சொல்லுக்கு பெரும்பான்மையான உரையாளர்கள் மறுபிறவி/பல்பிறவி என்று பொருள் கொண்டனர். இவர்கள் 'இக்குறளில், பிறவிவிடுதலை சுட்டப்படுகிறது; மீண்டும் மீண்டும் பிறந்து பிறவித்துன்பங்களில் சுழலாது வீடு-விடுதலை பெறுதலை அதாவது பிறவாவாழ்வைப் பெறும்வழியை இது குறிக்கிறது; வீடுபேறுவரை கணக்கில் கழிநெடுங்காலம் விடாது தொடர்ந்து வருவதாகக் கருதப்படுதலின், எண்ணற்ற பிறவி என்ற பொருளில் பிறவிப் பெருங்கடல் எனப்பட்டது' என்பர். பிறந்து இறக்கும் வினை சுழற்சியாகிய இந்தப் பெருங்கடலினை, கடவுளின் அடிகளைச் சேர்ந்தவரே கடக்கமுடியும்; மற்றவர்களால் முடியாது' என்ற வகையில் உரை கூறினர். இவர்கள் 'வாழ்க்கையின் நோக்கம் மீண்டும் பிறக்கும் சுழற்சியைக் கட்டறுத்து வீடு பேறு பெறுவதாகும்; அது ஒரு கடலைக் கடப்பதற்கு நிகர்; கடவுளைச் சேர்ந்து ஒழுகுபவர் மட்டுமே இக்கடலைக் கடப்பதற்கான புணையயைப் பெறுவர்' எனக் கூறுகின்றனர்.
ஆனால் 'பிறப்பு என்னும் சொல் இருவினைக் கீடாக உயிர் எடுக்கும் பல பிறப்புக்களைக் குறிப்பதன்று' என்றும் 'மறுபிறப்பு என்பது சமயக் கொள்கை' எனவும் தெளிவுபடுத்துவார் இரா சாரங்கபாணி. வள்ளுவர் சமயம் நீங்கியவர் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை; எனவே இப்பாடலில் மறுபிறப்பு/பல்பிறப்பு சொல்லப்படவில்லை என்பது அறியப்படவேண்டும்.
சிலர் பிறவி என்பது துன்பக் கடல் என்று கூறி இறைவனை வணங்கி அவனிடம் அடைக்கலம் தேடாதவர்கள் அந்தப் பிறவித் துன்பக் கடலிலேயே கரையேற மாட்டாமல் தத்தளிப்பர் என்று உரை செய்தனர். பிறவிப் பெருங்கடல் என்பதற்கு அறியாமைக் கடல் என்றும் வேறு சிலர் பொருள் கூறினர்.

இறைவன் அடி சேராதார்:
அடிசேராதார் என்ற தொடர் வெளிப்படையாகவும் அடிசேர்ந்தார் என்றது குறிப்பால் உணரும்படியும் இக்குறளில் சொல்லப்பட்டுள்ளன. அடிசேர்தல் என்ற தொடர்க்குத் தண்டபாணி தேசிகர் தரும் உரை இங்கு நினைக்கத்தக்கது: 'இவ்வதிகாரத்து (கடவுள் வாழ்த்து), 'அடி சேர்ந்தார்', 'தாள்தொழாஅரெனின்' எனப்பல இடங்களில் வருதலால் அதற்கு அருள் எனக் குணப்பொருள் காணாமல் கால் என்னும் உறுப்பு எனக் கொள்வோமாயின், ஏனைய முகம் முதலியனவும் உடன் எண்ணப்பட்டு ஏதாயினும் ஒரு சமயக் கடவுளைக் குறிப்பதாகப் பொதுமையின் நீங்கும் என்க. இதனானே பரிமேலழகர் சேர்தல் என்பதற்கு இடைவிடாது நினைத்தல் எனப் பொருள் கண்டனர் போலும்'. தண்டபாணி தேசிகரின் இவ்விளக்கம் அடிசேர்ந்தார் என்பதற்குக் கடவுளது திருவடியை இடைவிடாது நினைத்தல் அல்லது மறவாது இருத்தல் என்ற பொருள் தருவதோடு வள்ளுவர் தம் நூலில் சமயம் புகுந்துவிடக்கூடாது என்பதில் எவ்வாறு கருத்தூன்றி இருந்தார் என்பதையும் தெளிய வைக்கிறது.

கடவுள் உண்டு என்ற கருத்தமைந்த குறளுடன் நூலையும் அதிகாரத்தையும் தொடங்கிய வள்ளுவர் இங்கு 'அவன் துணையல்லாத வேறு எதனாலும் வாழ்வு என்னும் கடலை நீந்திக் கரை சேர முடியாது' என்கிறார்.
பிறப்பு, இறப்புக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள உயிர் வாழ்க்கையை வள்ளுவர் பிறவி என்கிறார். பிறப்பு-வாழ்க்கை-இறப்பு என்பதையே பெருங்கடல் என்று அவர் இக்குறளில் குறிக்கிறார். வாழ்க்கை எனும் கடல் என்று சொல்லும்போது துன்பக்கடல், அறியாமைக் கடல், பொருளின்பக்கடல் எல்லாம் அதில் அடங்கிவிடும்.
வாழ்க்கை என்னும் பெருங்கடலைக் கடக்க இறைவனின் துணை தேவை என்பது இக்குறள் கூறும் செய்தி. உயிர்வாழ்க்கை போராட்டம் நிறைந்தது. ஆம், பலவற்றைப் போராடித்தான் பெறவேண்டியுள்ளது. எதிர்நீச்சலிட வேண்டிய உலகவாழ்வு என்னும் பெரும் கடலை இறைச்சிந்தனை என்ற தெப்பம் துணை கொண்டுதான் கடக்க முடியும். இறைவன் அருள் இல்லையென்றால் வாழ்க்கைக் கடலைக் கடக்க முடியாமல் அதிலே உழல வேண்டியதுதான்.
உலக வாழ்க்கையில் செல்வங்கள், இன்பங்கள் நிறைய உண்டு. துன்பங்களும் பலவாக உள்ளன. இன்பங்களைத் துய்ப்பதற்கும் இறையருள் வேண்டியுள்ளது. கடவுள் வகுத்த வகையல்லாமல் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. அழுந்தும் துன்பங்களிலிருந்து மீட்சி பெறவும் அவன் தண்ணளி செய்யவேண்டும். அறியாமையைப் போக்குபவனும் அவனே. எல்லாம் அவன் செயல். இறைவன் அருள் பெற அவனை மறவாது எப்பொழுதும் நினைந்துகொண்டே இருக்கவேண்டும்.

'நீந்துவர்-நீந்தார்' யாவர்?

இந்தக் குறளை உரைநடைப்படுத்தினால் அது 'பிறவிப் பெருங்கடல் நீந்துவர்; அடி சேராதார் நீந்தார்' என அமையும். நீந்துவர் என்ற சொல்லுக்கு நீந்திக் கடப்பர் என்பதும் நீந்தார் என்றதற்கு நீந்திக் கடக்கமாட்டாதார் என்பதும் பொருள். பிறவிப் பெருங்கடலை நீந்தார் யார் என்றதற்கு 'இறைவனடி சேராதார்' என்ற விடை குறளகத்தே உள்ளது. 'பிறவிப் பெருங்கடலை நீந்துவர் யார்? என்றதற்கு வெளிப்படையாக எதுவும் கூறப்படவில்லை; இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்தாரெனில் இறைவனடி சேர்ந்தார் பிறவிப் பெருங்கடலை நீந்துவர் என்பது சொல்லாமலே விளங்கும்.
சேர்ந்தார் என்னும் சொல் பாடலில் இல்லை. 'சேர்ந்தார் என்பது சொல்லெச்சம்' என்றொரு குறிப்பு பரிமேலழகர் உரையில் காணப்படுகிறது. சொல்லெச்சம் செய்யுளில் ஒரு சொல்லுக்கு முன்னோ பின்னோ ஒரு சொல் மட்டும் குறைந்து வருவது. பிறவிப் பெருங்கடல் யார் நீந்துவர் என்பதற்குக் விடைகூறச் ''சேர்ந்தார்' என்னும் ஒரு சொல் வருவிக்க வேண்டியிருத்தலின், அது சொல்லெச்சம் ஆகிறது. 'சேர்ந்தார்' எனும் சொல்லை வருவித்துக் கொள்ளும் முறையிலேயே பாட்டின் மற்றச் சொற்கள் அமைந்துள்ளன. உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் (கல்வி 395) என்னும் குறள் நடையை ஒப்பது இக்குறள். அங்கு, ‘கற்றார்’ என்பதற்குத் தலையாயர் என்று ஒரு சொல் வருவித்து முடிப்பது போல, இக்குறளில் வரும் ‘நீந்துவர்’ என்பதற்குச் சேர்ந்தார் என ஒரு சொல் வருவித்து முடிப்பர்.

நீந்துவர் என்பது இங்கு இறைவன் அடிசேர்ந்தாரையும் நீந்தார் என்பது அவனடி சேராதாரையும் குறிக்கும்.

இறைவனை நினைப்பவர் பிறப்பாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர். நினையாதவர் வாழ்க்கை என்ற அக்கடலை நீந்திக் கடக்கமாட்டாதவாரவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

'அவன்' அன்றி ஓர் அணுவும் அசையாது என்பதை உணர்ந்து கடவுள் வாழ்த்துச் செய்க.

பொழிப்பு

இறைவன் அடியை நினைந்தவர் வாழ்வுக் கடலைக் கடப்பர்; நினையாதவர் அதனைக் கடக்க இயலாது.