இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து
குறள் எண்:5)
பொழிப்பு (மு வரதராசன்): கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம், அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
|
மணக்குடவர் உரை:
மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா; தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
பரிமேலழகர் உரை:
இருள்சேர் இருவினையும் சேரா - மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா;
இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.
(இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா' என்றும் கூறினார். இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே
பொருள் சேர் புகழ் எனப்பட்டது. புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்)
தமிழண்ணல் உரை:
நற்குணங்கள் அனைத்தையும் பெற்ற இறைவன் புகழே மெய்யான புகழாகும். அதனை எப்பொழுதும் விரும்பிச் சொல்வாரிடம், அறியாமையோடு கூடிய நல்வினை தீவினை இரண்டும் சென்றடையா.
இறைமைப் பண்புகளை முற்றப் பெறாத மனிதர்களைப் புகழ்வன புனைந்துரைகளே; பொருளுரை ஆகா. இருளுள்ள இடத்தில் ஒளியும் ஒளியுள்ள இடத்தில் இருளும் கலந்து நிற்கக் காண்பது இவ்வுலகம். இவற்றிற்கு அப்பாற்பட்ட பேரொளி நிலையை எய்துதற்கு இருவினையுமற்ற தனிநிலை ஒன்றை எய்துதற்கு உயிர்கள் முயலவேண்டும். அதற்கு இறைவனின் உயரிய பண்புகளைச் செயலில் சொல்லிப் பாடிப்பாடி உருவேற்றி நாமும் அந்நிலை நோக்கி உயர்தல் வேண்டும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு இருள்சேர் இருவினையும் சேரா.
பதவுரை: இருள்-அறியாமை, மயக்கம்; சேர்-கலந்த; இரு-இரண்டு; வினையும்-வினைகளும்; சேரா-நெருங்கா; இறைவன்-கடவுள்; பொருள்-மெய்ப்பொருள்; சேர்-சேர்ந்த; புகழ்-புகழ் அல்லது பெருமை; புரிந்தார்-சொல்வார்; மாட்டு-இடத்து.
|
இருள்சேர் இருவினையும் சேரா:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னும் இரண்டு வினையுஞ் சேரா; [மயக்கத்தைச் சேர்ந்த-மயக்கத்தால் விளைந்த]
பரிப்பெருமாள்: மயக்கத்தைச் சேர்ந்த நல்வினை தீவினையென்னு மிரண்டு வினையுஞ் சேரா;
பரிதி: மும்மல வித்து ஆகிய பாவமானது இல்லை; [மும்மலம்: ஆணவம், கன்மம், மாயை]
காலிங்கர்: அறியாமையாகின்ற இருள் காரணமாக வந்து இயைகின்ற நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் சேரா;
பரிமேலழகர்: மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினையும் உளவாகா;
பரிமேலழகர் குறிப்புரை: இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை 'இருள்' என்றும், நல்வினையும் பிறத்தற்கு ஏதுவாகலான் 'இருவினையும் சேரா. [அவிச்சை-அறியாமை]
பழம் ஆசிரியர்கள் மயக்கம்/அறியாமை சேர்ந்த நல்வினை, தீவினை என்ற இருவினையும் சேரா என்று இத்தொடரை விளக்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அறிவில்லாத வினைகள் நெருங்கா', 'அறியாமையால் வருகின்ற நல்வினை தீவினையென்னும் இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள் சென்றடையமாட்டா', 'அறியாமையால் உண்டாகும் இருவகைப்பட்ட வினைகளும் உளவாகா.', 'அறிவை மயக்கும் நல்வினைகளும் தீவினைகளும் சேரமாட்டா' என்ற பொருளில் உரை தந்தனர்.
அறியாமையால் உண்டாகும் இருவினைகளும் நெருங்கா என்பது இப்பகுதியின் பொருள்.
இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை:
மணக்குடவர்: தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு. [மெய்ப்பொருள் சேர்ந்த-நிலையான பொருள் பொதிந்த]
பரிப்பெருமாள்: தலைவனது ஆகிய மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்களைப் பொருந்தினார் மாட்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: தலைவனதாகிய மந்திரங்கள் எனினும் அமையும். புரிதல்-இடைவிடாமல் ஓதுதல். இனி வினை கெடும் என்றது.
காலிங்கர்: அவ்விறைவனால் பெற்ற உபதேசப் பொருளோடு பொருந்திப் புகழ்தங்கி நின்றவரிடத்து.
பரிதி: சிவகீர்த்தி பாராட்டுவாரிடத்து.
பரிமேலழகர்: இறைவனது மெய்ம்மை சேர்ந்த புகழை விரும்பினாரிடத்து.
பரிமேலழகர் குறிப்புரை: இறைமைக் குணங்கள் இலராயினாரை உடையர் எனக்கருதி அறிவிலார் கூறுகின்ற புகழ்கள் பொருள் சேராவாகலின், அவை முற்றவும் உடைய இறைவன் புகழே பொருள் சேர் புகழ் எனப்பட்டது.
புரிதல் - எப்பொழுதும் சொல்லுதல்.
மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகியோரும் பரிமேலழகரும் 'கடவுளது மெய்ப்பொருள் சேர்ந்த புகழ்ச்சிச் சொற்கள் சொல்வாரிடத்து' என்ற பொருளில் உரை செய்தனர். பரிதி 'சிவன் புகழ் போற்றுவாரிடத்து' என்றார். காலிங்கர் 'இறைவனது அருள் பெற்ற உபதேசப் பொருளோடு பொருந்தி புகழ்தங்கி நின்றவரிடத்து' என்றார்.
இன்றைய ஆசிரியர்கள் 'இறைவனது உண்மைப் புகழை விரும்புவாரை', 'தலைமைக் குணங்களையுடைய கடவுளது மெய்யான புகழை இடைவிடாது அன்போடு சொல்லுவார்பால்', 'கடவுளுடைய உண்மையான புகழை விரும்பியவரிடம்', 'இறைவனின் நல்லியல்புகளைத் தன்னிடத்துக் கொண்டவனின் அழிவற்ற புகழ் வழியை விரும்பி நடப்பவரிடத்து' என்ற பொருளில் உரை தந்தனர்.
இறைவனது மெய்ம்மையான பெருமையை நினைந்து சொல்வாரிடத்து என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
இறைவனது மெய்ம்மையான பெருமையை நினைந்து போற்றுவாரிடத்து இருள்சேர் இருவினையும் நெருங்கா என்பது பாடலின் பொருள்.
இறைவனைப் போற்றினால் எப்படி வினைகள் அண்டாமல் விலகும்?
|
மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டவரது எல்லாச் செயல்களும் இறைவனுக்கு ஏற்கத் தக்கனவாகவே இருக்கும்.
இறைவனது உண்மையான சிறப்புகளை உணர்ந்து, அவனை இடைவிடாது நினைத்துக் கொண்டிருப்பவரை நல்வினை - தீவினைப் பயன்கள் எவையுமே சென்றடையா.
இக்குறளின் முதற்பகுதி 'இருள்சேர் இருவினையும் சேரா' என்பது. இதிலுள்ள இருள் என்ற சொல்லுக்கு மும்மலம், அஞ்ஞானம், பிறவிமயக்கம், யான் என்னும் இருள், தன்னல மயக்கம் என்றபடி பொருள் கூறினர். சிலர் அதற்கு மயக்கம் எனப் பொருள் உரைத்து 'ஒன்றை இன்னொன்று எனப்பொருள் கொள்வது' அதாவது இருள் நிறைந்த இடத்தில் கயிற்றினைப் பாம்பு எனப் புரிந்துகொள்வது போல என விளக்கம் செய்தனர். இருள் என்பதை விளக்கும் உரைப்பொருளாக அறியாமை என்பதையும் கூறினர். அறியாமையாவது, தெரியாத தன்மை ஆகும்.
'இருள்சேர்' என்பதற்கு மயக்கம் கலந்த அல்லது அறியாமை பொருந்திய என்பது பொருளாகும்.
'இருவினை' என்றதற்கு இன்ப துன்பங்களை உண்டாக்கும் நல்வினையும் தீவினையும், இருவகை வினையும், அறிவில்லாத வினைகள், நல்வினை தீவினையென்னும் இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள், சென்ற பிறப்பில் செய்த வினைகள் இந்தப் பிறப்பில் செய்த வினைகள், நலம் தீங்குகள், பெரிய துன்பங்கள், நன்மை தீமைகள். நல்லது கெட்டது, காதிவினையும் அகாதிவினை, இருவின பற்றிய பாவம், கூற்றும் செயலும், நல்வினை தீவினைகளின் பயனாகிய பிறப்பிறப்புக்கள், தெரிந்தும் தெரியாதும் செய்யும் இருவகைத் தீவினைகள், நன்மை தீமை பற்றிய தவறான கருத்துக்கள், தவறான எண்ணங்களினால் அல்லது பிறழ உணர்தலால் நற்செயல்களையும் தீச்செயல்களையும் கலந்து செய்தல் எனப்பலவாறு உரையாசிரியர்கள் பொருள் உரைத்தனர்.
'இருவினை' என்ற தொடர் நல்வினை, தீவினை இவற்றைச் சுட்டுவது. நல்வினை என்பது நற்செயல் என்றும் தீவினை என்பது தீச்செயல் என்றும் பொருள்படும். நமது அனைத்துச் செயல்களுக்கும் பயன் உண்டு; நல்வினையானால் புண்ணியம் கிடைக்கும்; தீவினையானால் பாவம் உண்டாகும் என்னும் கோட்பாடு எல்லாராலும் விரும்பப்படுவது; அவ்விதமே உலக இயக்கம் உள்ளது என்ற நம்பிக்கையுடனேயே நாம் வாழ்கிறோம். இவ்விருவினைகளால் உண்டாகும் பயன்களையே 'இருவினை' என்ற தொடர் குறிக்கிறது.
'இருள்சேர் இருவினையும் சேரா' என்ற பகுதிக்கு மயக்கம் கலந்த இருவினைப் பயன்களும் சென்றடையா என்பது பொருள்.
பாடலின் பிற்பகுதி 'இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' என்பது. 'இறைவன் பொருள்' என்ற தொடர் செம்பொருள் குறித்தது. செம்பொருள் என்பது மெய்ப்பொருள் அல்லது இறைத்தன்மை எனவும் அறியப்படுவது. இறைவன் பொருள்சேர் புகழ் என்றது இறைவனது பெருமைகள் அல்லது இறைமைக் குணங்கள் குறித்தது. 'புரிந்தார்' என்ற சொல்லுக்கு தங்கினார், விரும்பினார், வணங்குகிறவர், ஓதுவார் (இடைவிடாது சொல்லுவார்), போற்றுவார் என்று பலவாறாகச் சொல்லப்பட்ட பொருள்களுள் 'போற்றுவார்' என்பது பொருத்தம். 'இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு' என்ற பகுதிக்குக் 'கடவுளது உண்மையான பெருமைகளை உணர்ந்து போற்றுவார்க்கு' என்பது பொருள்.
இருள்சேர் இருவினை என்றதால் நல்வினையையும் தீவினையையும் சேர்த்தே இருள் என்று சொல்லப்பட்டதாகிறது. தீவினை இருள் என்றது சரி. நற்செயலும் இருள்சேர்ப்பது என ஏன் சொல்லப்பட்டது?
நல்வினையும் இருள் தருவது என்பதற்கு விளக்கம் தருபவர்கள், நல்வினைப் பயனைத் துய்க்க துறக்க உலகம் செல்ல வேண்டும்; அதற்கு மறுபிறவி வேண்டும்; பிறப்பு என்றாலே துன்பத்திற்கு இடமாவது என்பது பொருள்; பிறவி நீங்கவேண்டுமானால் நல்வினை, தீவினை என்ற இரண்டினின்றும் நீங்குதல் வேண்டும்; எனவே நல்வினைக்கும் இருள் என்னும் அடைச்சொல் சேர்க்கப்பெற்றது என்றனர். இது ஓர் சமயச் சார்பான விளக்கம். இதுபோன்று, சிறு சிறு மாறுதல்களுடன் சமயம் சார்ந்த வேறு பல உரைகளும் உள. குறளில் சமயம் சார்ந்த கருத்துக்களுக்கு இடம் இல்லை. எனவே சமயச் சிந்தையுள்ள பிறப்பு/பிறப்புச் சுழற்சி சார்ந்த உரைகள் பொருந்தா.
நல்வினை அறம் ஆகும்; அது 'வீட்'டையும் பயக்கும். ஆதலால் இருவினையில் நல்வினையும் அடங்கும் என்பதை வ உ சிதம்பரம். போன்ற சிந்தனையாளர்கள் ஒப்புக்கொள்வதில்லை.
இருள் என்ற சொல்லுக்கு மயக்கம் என்று பொருள் கொள்பவர்கள் 'எது நல்வினை எது தீவினை என்று பாகுபாடு செய்யமுடியாத மயக்க நிலையே இருள் என்பதாகும்' என்பர். நல்வினைகளும் தீவினகளும் திரிவுபட்டே தெரியும். அதாவது பல வேளைகளில் நாம் செய்வது நற்செயலா அல்லது தீச்செயலா என்பது தெரியாமலே செய்கிறோம். அச்செயலின் விளைவுகள் யார் மீது எத்தகைய தாக்கத்தை அல்லது பாதிப்பை உண்டாக்குகிறது என்பதனைப் பொறுத்து அது நல்வினையா அல்லது தீவினையா என்று அறியப்படும். சில சமயங்களில் ஒருவருக்கு நன்மையாய் அமைவது மற்றவர்க்குத் தீமையாய் முடியலாம்; அதுபோல ஒருவர்க்குத் தீமையாய் உள்ளது இன்னொருவர்க்கு நன்மையாகலாம். இதனைத் தெளியாதபோது இருவினையுமே இருள் சேர்ப்பவையே. புலப்படாத் தன்மையினாலே இருவினையும் இருள் எனப்பட்டது. நற்செயலும் இருள் சேர்ப்பது என்பதற்கான இவ்விளக்கம் ஏற்கத்தக்கதாக உள்ளது.
|
இறைவனைப் போற்றிப் பாடினால் எப்படி வினைகள் அண்டாமல் விலகும்?
கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் அடிசேர்ந்தார், தாள் சேர்ந்தார் என்ற தொடர்கள் இறைவனது திருவடிகளை மறவாமல் நினைப்பவர் என்ற பொருளில் ஏழு பாடல்களில் வருகின்றன. இந்தப் பாடலில் உள்ள 'பொருள்சேர் புகழ்புரிந்தார்' என்னும் தொடர் 'மெய்ப்பொருளை உணர்ந்து போற்றுவார்' பற்றிச் சொல்கிறது. மனம் எப்பொழுதும் திருவருள் சார்ந்த அனுபவத்தில் திளைத்தல் போலவே, வாயும் இறைவனை மறவாமல் நினைத்து வாழ்த்த வேண்டும் என்றும் அவ்விதம் போற்றுவோர் வினைப்பயன்களால் தாக்குறுவதில்லை என்றும் இக்குறள் சொல்கிறது.
இறைவனது புகழ் பொருள் நிறைந்தது. பொய்யில்லாதது. இறைவனது உண்மைப் பொருளை அறிந்து போற்றுவது என்பது கடவுளின் பெருமைகளை நன்கு புரிந்து கொண்டவர் சொல்வதாகும். 'எல்லாப் புகழும் இறைவனுக்கே; அத்துணையும் அவனே' என்று தமக்கு வரும் பெருமைகள் எல்லாம் இறைவன் அருளால் கிடைப்பனவே எனப் புரிந்து கொண்டவர்கள் இவர்கள்.
இறைவனது உண்மைப் பொருளை உணர்ந்து அவன் புகழை இசைத்துக் கொண்டு இருப்போர்க்கு நல்வினை, தீவினை என்பனவற்றின் பால் கொண்டுள்ள ஐயங்களும் அச்சங்களும் தீர்ந்த பிறகு அவை பற்றிய கவலை தோன்றுவதில்லையாதலால் அவர்கள் சமன்நிலை பெற்றவர்களாயிருப்பர். நல்வினை எது, தீவின எது என்கிற மயக்கமற்ற அறிவு உண்டாகி இருள் விலகி தெளிவுடையராயிருப்பர். அவர்கள் அறியாமை நீங்கியவர்களாகையால், நல்வினை தீவினையென்னும் இருவினைப் பயன்களாகிய இன்ப துன்பங்கள் அவர்களைச் சென்றடையமாட்டா அதாவது அவர்களுக்கு உண்டாகும் நன்மை தீமை எதுவும் அவர்களிடம் பாதிப்பு ஏற்பபடுத்துவதில்லை.
இருவினையும் சேரா என்பதற்குத் தன்னைப் புகழ்பவர்களைக் கடவுள் இருவினைகள் தொடராமல் காக்கிறார் எனப் பலர் கருத்துரைத்தனர். அதனினும் இறைவனை இடைவிடாது எண்ணிப் போற்றுபவர்களிடம் இருவகை வினைகள் அசைவை ஏற்படுத்துவதில்லை என்ற பொருள் நன்கு, இவர்கள் வினைகளின் விளைவுகளைப் பற்றிக் கருதாமல் செயல் புரிந்து கொண்டிருப்பர் ஆதலின்.
|
இறைவனது மெய்ம்மையான பெருமையை நினைந்து போற்றுவாரிடத்து அறியாமையால் உண்டாகும் இருவினைகளும் நெருங்கா என்பது இக்குறட்கருத்து.
எல்லாப்புகழும் இறைவனுக்கே என்று கடவுள் வாழ்த்து பாடுவோர்க்கு நன்மை, தீமை இரண்டினாலும் பாதிப்பு இல்லை.
இறைவன் உண்மைப் புகழை உணர்ந்தவர்களிடம் அறியாமையால் உண்டாகும் இருவினைகளும் சென்றடையமாட்டா,
|