அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
(அதிகாரம்:கடவுள் வாழ்த்து
குறள் எண்:1)
பொழிப்பு (மு வரதராசன்): எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.
|
மணக்குடவர் உரை:
எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
பரிமேலழகர் உரை:
எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
(இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)
நாமக்கல் இராமலிங்கம் உரை:
எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாக இருப்பதுபோல உலகத்திலுள்ள எல்லாவற்றிற்கும் இறைவன் முதலாக இருக்கிறான். உலகத்தைக்கொண்டு அதை உண்டாக்கினவரை எண்ண வேண்டும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
எழுத்து எல்லாம் அகரம் முதல, உலகு ஆதிபகவன் முதற்றே.
பதவுரை:
அகர -‘ அ’ என்னும் எழுத்தில் தொடங்கும் அகர வரிசை; முதல-முதலாகயுடையன; எழுத்து-எழுதப்படுவது; எல்லாம்-அனைத்தும்; ஆதி-முதல், மூலம், பழமை, முற்பட்டுள்ள; பகவன்-கடவுள்; முதற்றே-முதலேயுடையது; உலகு-உலகம்.
|
அகர முதல எழுத்து எல்லாம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன;
பரிப்பெருமாள்: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன;
பரிப்பெருமாள் குறிப்புரை: என்பது என்ன சொன்னவாறோ எனின், சொல்லும் பொருளும் என்னும் இரண்டனுள்ளும் சொல்லிற்குக் காரணமாகிய எழுத்தும் சொல்லும் பொருளும் அகரத்தைத் தனக்கு முதலாக உடையவாறு போல;
பரிதி: உயிரெழுத்துப் பன்னிரண்டுக்கும் அகரம் முதலெழுத்தாதல் முறைமைபோல;
காலிங்கர்: அகரமாகிய எழுத்தின்கண் விரிந்தன ஏனையெழுத்துக்களும், அவற்றானாகிய சொற்களும், மற்றைச் சொற்றொடர்புடைய ஏனைத்துக் கலைகளும் மற்றும் யாவையுமாகிய அது மற்றியா தொருபடி அப்படியே;
பரிமேலழகர்: 'எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன. அதுபோல;
பரிமேலழகர் குறிப்புரை: இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார்.
மணக்குடவரும் பரிமேலழகரும் எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன போல என்றும் பரிப்பெருமாள் சொல்லிற்குக் காரணமாகிய எழுத்தும் சொல்லும் பொருளும் அகரத்தை முதலாக உடையனபோல என்றும் பரிதி உயிரெழுத்துப் பன்னிரண்டுக்கும் அகரம் முதலெழுத்து ஆதல் போல என்றும் காலிங்கர் எழுத்து, சொல், சொல் தொடர்புடைய கலைகள் எல்லாம் அகர எழுத்தின் விரிந்தன போல என்றும் இப்பகுதிக்கு உரை தருகின்றனர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அகரஒலி எல்லா எழுத்துக்கும் முதலாகும்', 'எழுத்துகள் எல்லாம் 'அ' என்னும் எழுத்தை முதலாக உடையன', 'எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்னும் ஒலி வடிவை முதலாக உடையன', 'எழுத்துக்கள் எல்லாம் அகர ஒலியை முதன்மையாகக் கொண்டவை' என்ற பொருளில் உரை தந்தனர்
எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை முதலாக உடையன என்பது இப்பகுதியின் பொருள்.
|
ஆதி பகவன் முதற்றே உலகு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
பரிப்பெருமாள்: அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: தோன்றுகின்ற எல்லாப் பொருட்கும் காரணமாகிய உலகமும் நீர் தீ வளி ஆகாயமாகி ஒன்றோடொன்றொவ்வாத பெற்றியதாயிருப்பினும் ஆதி பரமேஸ்வரனைத் தமக்கு முதலாக உடையதாகலால் அவனை வழிபடவேண்டும் என்றவாராயிற்று. அன்றியும் உலகம் என்பதனை உயர்ந்தோர் ஆக்கி எல்லாப் பொருளினும் உயர்வு உடைத்தாகிய உயிர்கள் ஆதி பரமேஸ்வரனைத் தமக்கு முதலாக உடைய என்றும் ஆம். அஃதேல், அவன் முதலாயின வழி யாங்ஙனம் முதலாயினனாகக் கூறினாரென்று பிறிதொன்று தோற்றுதற்கு அடியாய் நிற்பதூஉம் முதலாம். பசு எவையிற்றினும் சிறப்புடைத்தாய் முன்னால் எண்ணப்படுவதூஉம் முதல் ஆண்டு உவமையாகக் கூறிய அகரம் இருபகுதியும் உடைத்தாயினும் ஏனைய எழுத்துக்களுக்கு அடியாய் நிற்றல் எல்லாராலும் அறியப்பட்டமையான் தலைமைபற்றிக் கூறினார் என்று கொள்ளப்படும்.
பரிதியார்: ஆதியான பகவன் முதலாம் உலகத்துக்கு என்றவாறு.
காலிங்கர்: மூலகாரணனாகிய இறைவன்கண்ணே நுண்பூதமும், மற்று அவற்றின்வழி விரிந்த வான் வளி தீ நீர் நிலம் என்கிற ஐம்பெரும் பூதமும், அவற்றின்வழி விரிந்த நடப்பன நிற்பனவாகிய இருவகைப் பல்லுயிர்களும், மற்றும் இவ்வுயிர்கள் வாழ்கின்ற உலகங்களனைத்தும் என்றவாறு.
பரிமேலழகர்: உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.
பழைய ஆசிரியர்கள் அனைவரும் உலகம் இறைவனை முதலாக உடையது என்ற கருத்திலேயே உரை பகர்கின்றனர். ஆதிபகவன் என்ற சொற்றொடரை விளக்குவதில் அவர்கள் சிறிது வேறுபடுகின்றனர். ஆதிபகவன் என்றதற்கு ஆதியாகிய பகவன் என்று மணக்குடவரும் பரிதியும், ஆதி பரமேஸ்வரன் என்று பரிப்பெருமாளும், மூலகாரணனாகிய இறைவன் என்று காலிங்கரும் ஆதிபகவன் என்று பரிமேலழகரும் கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'ஆதிபகவன் உலகுக்கெல்லாம் முதலாவான்', 'அதுபோல உலகம் ஆதி பகவனை(இறைவனை) முதலாக உடைத்து', 'அதுபோல உலகம் ஆதியாகிய பகவனை முதலாக உடையது. (ஆதிபகவன் -முற்பட்டுள்ள கடவுள்)', 'உலகம் ஆதி பகவனாகிய இறைவனையே முதன்மையாகக் கொண்டது' என்றபடி பொருள் உரைத்தனர்.
உலகம் இறைவனை முதலாக உடைத்து என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை முதலாக உடையன; உலகம் இறைவனை முதலாக உடைத்து என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறவரும் கருத்து என்ன?
கடவுள் இயல்பும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பும் கூறப்படுகிறது. நூலின் முதற்பாடல் என்பதால் பலராலும் இது மிக நுணுக்கமாக ஆராயப்பட்டுள்ளது.
அகர முதல எழுத்தெல்லாம்:
எழுத்துக்கள் 'அகர'த்தை முதலில் வைத்துத் தொடங்குகின்றன. 'அகரம்' நெடுங்கணக்கின் எழுத்துக்களுக்கு அடிப்படையானது, காரணமானது, முதற்பொருளானது, முதன்மையானது என்பர். எழுத்தெல்லாம் என்றது உலக மொழிகள் எல்லாவற்றினது எழுத்துக்களிலும் என்று பொருள்படும். உலக மொழிகளில் பெரும்பான்மை 'அ' என்ற ஒலியுடன் தொடங்குவதாக உள்ளன என்று மொழியியல் வல்லுநர்கள் கூறுவர். மாறுபட்ட பண்பாடுடைய பல்வேறு நாட்டு மக்கள் பேசும் வெவ்வேறு மொழிகள் அகர ஒலியை முதலாகக் கொண்டுள்ளன என்பது வியக்கத்தக்க உண்மை. இதை வள்ளுவர் உவமப் பொருளாக்கினார். எழுத்துக்கள் எல்லாம் எனக் கொள்ளாது எழுத்துக்களுக்கு எல்லாம் அகர முதல எனின், அகர ஒலி பலவாகாமையான், அகரம் என்ற ஒருமை எழுவாய், 'முதல' என்ற பன்மைப் பயனிலை கொண்ட வழு ஆகும். பலவேறு மொழிகளிலுள்ள பல எழுத்துக்களுக்கு எல்லாம் எனக்கொள்ளினும் ஒலிஅகரம் ஒன்றே ஆதலால் அதுவும் முற்கூறிய வழுவாகும். அதனாலேயே பரிமேலழகர் 'எழுத்துக்களுக்கு எல்லாம் அகரம் முதலாம் என்பது கருத்தாகக் கொள்க.' என்றார்.
ஆதிபகவன்:
இப்பாவில் கூறப்பட்டுள்ள ஆதிபகவன் யார்?
இக்குறளில் உள்ள 'ஆதிபகவன்' என்றது தத்தம் சமயம் சார்ந்த கடவுளைக் குறிப்பது என்று அனைத்துச் சமயத்தாரும் உரிமை கொண்டாடுகின்றனர்.
வள்ளுவர் எந்தச் சமயத்தையும் மனதில் கொண்டு குறளைப் படைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவு. ஆகவே ஆதிபகவன் என்று சொல்லப்பட்டது இப்பூமியில் பிறந்து வாழ்ந்த எந்த ஒரு சமயத்தைச் சார்ந்த மனிதரையோ அல்லது அச்சமயத்தார் நம்பும் கடவுளரையோ குறித்தது அல்ல. ஆதிபகவன் என்றது 'மூலகாரணன்' என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது;
வள்ளுவர் தம் அன்னை ஆதியையும் தந்தை பகவனையும் மனத்தில் கருதியே ஆதிபகவன் முதற்றே உலகெனக் கூறினார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. ஆதி, பகவன் என்பது வள்ளுவரது பெற்றோரின் பெயர்கள் என நிறுவுவதற்கு எந்தவகையான ஆதாரங்களும் இல்லை. உலகப் பொதுமறை கூறவந்த வள்ளுவர் அவருடைய தாய்தந்தையரை உலகுக்கு முதல் என்று தன் நூலில் கூறியிருப்பாரா என்று சொல்லி அறிஞர்களும் ஆய்வாளர்களும் அக்கருத்தை ஒதுக்கித் தள்ளினர்.
தனக்கோர் மூலம் இன்றி எல்லா உலகும் தோன்றி நின்று இயங்குவதற்குத் தானே மூலமாய் நிற்றலால் இறைவன் ஆதி எனப்படுகிறான். பகவன் என்னும் சொல்லிற்கு நேர் பொருள் கடவுள் என்பதாகும். இந்த உலகின் தொடக்கத்துக்குக் கடவுள் காரணம். அந்த முதன்மையைக் காட்டும் நோக்கில் அவன் பெயரைச் சொன்னாலே எளிதில் விளங்கும்படி ஆதிபகவன் என்ற சொல்லால் கடவுளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
முதற்று:
'முதற்று' என்பதும் முதல் என்பதை அடியாகக் கொண்டுவந்த சொல்லாகும். இதற்கு 'அடிப்படையானது', 'முதலானது' எனப் பொருள் கொள்வர். இங்கு முதல் என்பதன் பொருள் என்ன? நாட்டிற்கு மன்னன் தலைவன் போல தலைமையா? அல்லது குடத்துக்கு மண்போல மூலகாரணமா? அன்றி குயவன் குடம் செய்தல் போலப் படைத்தலா?
இங்கு முதன்மை தனித்து நிற்கும் ஆற்றலையும் எல்லாமாகி நிற்பதனையும் யாவற்றையும் இயக்குவதையும் குறிக்கும். குடத்தை ஆக்கும் குயவனைப் போலக் கடவுள் உலகத்து வேறாக நிற்பவரல்லர் என்பதும் பெறப்படும். முதற்று என்ற சொல் தலைமை, மூலகாரணம், படைப்பின் தொடக்கம் என அனைத்தையும் குறிக்கும்.
உலகு:
உலகு என்னும் சொல்லுக்கு இடப்பொருளும் உயிர்கள் என்னும் பொருளும் உண்டு. சிலர் இப்பாடலில் கூறப்பட்டது உயிர்ப்பொருளே; அதுவே கடவுளை உணர்ந்து அறியத்தக்கது எனக் கூறுவர். இவ்விருவகை உலகும் கடவுள் உண்டாக்கியவை. எனவே இக்குறள் குறிப்பது உயிருள்ளதும், உயிரில்லாததுமான இருவகைப்பட்ட உலகையேயாகும்.
தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் 'இறைவன் தனித்தும் இயங்குகிறான்; எல்லா உயிர்களின் உள்ளே நின்று அவற்றையும் இயக்குகிறான். அதனால் அவன் உயிர் எழுத்தான அகரத்தைப் போன்றவன். அகரம் எல்லா எழுத்துக்களிலும் கலந்து இயக்கியும் தானும் தனித்து இயங்குகிறது. ஆதிபகவனும் எல்லாப் பொருள்களிலும் இரண்டறக் கலந்து இயக்கியும் தனித்தும் இயங்குகிறான். அகரம் இயங்கவில்லையானால் அனைத்து எழுத்துக்களும் இயங்கமுடியாது. அகரத்தால் மெய்கள் ஒலித்து வருகின்றன. அகரத்தோடு பொருந்தியே மெய்கள் இயங்கும். 'அ'கரம் எழுத்துக்களிலெல்லாம் கலந்து இருப்பது போல் இறைவன் உலகில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்' என்று முதற்குறளில் சொல்லப்பட்ட கடவுளுக்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பை விளக்குவார்.
"திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும்போதே உலகமும் உடன் தோன்றுகிறது" என்பார் திரு வி க. வள்ளுவர் உலகுக்கென்றே குறள் படைத்தார். உலகு என்ற சொல்லை வள்ளுவர் முதற் குறளில் பெய்துள்ளமை எண்ணி மகிழத்தக்கது.
|
இக்குறள் கூறவரும் கருத்து என்ன?
எடுத்துக்காட்டு உவமையணியில் அமைந்த பாடல் இது என்பர் இலக்கண ஆசிரியர்கள். எடுத்துக்காட்டு உவமையாவது உவமானத்தையும் உவமேயத்தையும் தனிவாக்கியங்களாக நிறுத்தி இது பொருள் இது உவமை என்பது தோன்ற இடையில் அதுபோல என்னும் உவமஉருபு கொடாமல் கூறுவது. அகர முதல எழுத்து எல்லாம் என்ற வாக்கியமும் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற வாக்கியமும் இக்குறளில் தனித்தனியாக நிற்கின்றன. இவற்றை இணைக்கும்படியான 'போன்ற', என்பது போன்ற உவம உருபு எதுவும் இல்லையாதலால் எடுத்துக்காட்டு உவமை ஆயிற்று..
‘அ’ என்று சொல்லக்கூடிய எழுத்து ஆரம்ப முதல் எழுத்து. ‘ஆதி பகவன்’ என்பது கடவுள். அகர என்பது எழுத்துக்களுக்கு முதல். ஆதி பகவன் என்பது உலகுக்கும் உயிர்களுக்கும் முதல். இதுதான் இங்கு கூறப்பட்டுள்ள உவமை. அகரம் தனித்தும் அகர ஒலியா யெழுந்தும் மெய் எழுத்துக்களை இயக்கி வருவது போல ஆதிபகவனும் தனித்தும் உலகெலாமாகியும் அவைகளை இயக்கியும் வருகிறான். இது இக்குறள் உவமைக்கான பொதுவான விளக்கவுரை.
இப்பாடலிலுள்ள உவமை பொருத்தமாக அமைந்துள்ளதா?
மொழி-அகரம், உலகம்-கடவுள் என உவமை விளக்கப்பட்டாலும் அதன் பொருத்தம் துலங்கவில்லை என்று கூறி அது குறித்து சில ஐயவினாக்கள் எழுப்பப்படுகின்றன:
உவமை சொல்லப்பட்டதே முதலில் கேள்விக்கு உரியதாகிறது. இதே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவரே இறைப் பண்பாக 'கடவுள் தனக்குவமை இல்லாதவன்' என்று கூறியிருக்கிறார். தனக்கு உவமை இல்லாதவன் கடவுள் என்ற கருத்தைப் பின்னர் (குறள் 7) சொல்ல வருபவர் அப்படிப்பட்ட கடவுளுக்கு “அ” எழுத்தை உவமை சொல்லி, முதல் குறளை எப்படி அமைத்தார்?
'அ' என்பது 'இ', 'உ' போன்ற மற்ற குற்றெழுத்துக்களைப் போன்றதுதானே? 'இ'யைவிட 'அ' முதலில் வருவது என்பது தவிர வேறு எந்தவிதத்தில் சிறப்பானது? வேறுபட்டது? மேலும் எழுத்துக்களின் முதல் எழுத்துத் தான் ‘அ’ எழுத்தே தவிர, மற்ற எழுத்துக்களின் தோற்றத்திற்கோ ஒலிஅமைப்புக்கோ ‘அ’ எழுத்து அடிப்படையானதன்று. ‘உ’ என்ற எழுத்துக்கு ‘அ’ எழுத்து எப்படி அடிப்படையாக அமைய முடியும். ‘உ’ எழுத்தில் ‘அ’ எழுத்து எங்ஙனம் நுண்ணியதாகக் கலந்திருக்க முடியும்? ‘அ’ என்பதும் உயிர் எழுத்து; ‘உ’ என்பதும் உயிர் எழுத்து; இரண்டும் தனித்து நிற்கவல்லன; அதன் காரணம் பற்றியே அவை உயிர் எழுத்து எனப்பெயர் பெற்றன. ஒர் உயிர் இன்னொரு உயிருடன் கலவாது. உயிர் மெய்யுடன் மட்டும்தானே கலக்கும்? ஒவ்வொரு உயிரும் மெய்யெழுத்துடன் சேர்ந்து உயிர் மெய்யெழுத்தை உருவாக்கும். அப்படியிருக்க ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கொள்வது எப்படிச் சரியாகும்? ‘இ’ என்ற எழுத்தை எப்படி உச்சரித்தாலும் ‘அ’ ஒலி நுண்ணியதாய்க் கலப்பதை, கலந்திருப்பதை அறிய முடியவில்லையே. க்+அ=க என்று சொல்லும்பொழுது ‘க’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளது வெளிப்படும். ஆனால், ‘இ’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளதை எவ்வாறு புலப்படுத்த இயலும்? அல்லது எவ்வாறு புரிந்துக் கொள்ள இயலும்? இவை ஆய்வாளர்கள் எழுப்பும் வினாக்களில் சில.
அகரத்தின் பண்புகள் வேறு, இறைவனின் பண்புகள்வேறு என்பது வெளிப்படை. முதற்குறளின் சொற்பொருள்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன. உவமையின் வாயிலாக எழுத்தின் பெருமையும் புலனாகிறது. ஆனால் அகரம், கடவுள் என்ற இரு கருத்துக்களையும் ஒப்புமை செய்வதை முழுதாக உணர இயலவில்லை. எங்கும் எல்லாப் பண்புகளிலும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனுக்கு உவமை சொல்ல, ஒலி போல் நிறைந்துள்ளான் என்று ஒரு பண்பு மட்டுமே கொண்டு சொன்ன மொழி-அகரம், உலகம்-கடவுள் என்பதை நிறைவான உவமை என்று சொல்ல முடியாது. எனினும் அளவையால் அளக்கப்படும் பொருள் அளக்கப்பட்ட அளவு அறியப்படும். இறைவனே மூல முதல்; அவனே எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பன மொழியியல் துணைகொண்டு அளக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் எல்லையில்லாச் செம்பொருளாக இறைவன் ஒருவன் உளன் என்பதும் நிறுவப்பட்டது.
இச்செய்யுள்ளில் கூறப்பட்டுள்ள உவமைக்கு என்ன அமைதி?
காலமெல்லாம் நிலைத்து நிற்கக்கூடிய நூலைப் படைக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் குறள் எழுதத் தொடங்கிய காலை வள்ளுவர் நினவிற்கு வந்தவர்கள் அவரது பெற்றோரும் தொல்காப்பியரும் ஆவர் என்பதாகத் தெரிகிறது. அடுத்து, உலகு என்ற நினவும் இயல்பாக அவர்க்குத் தோன்றியது. பெற்றோர், ஆசிரியர், உலகு- மூன்றையும் முதற் குறளில் ஒருசேரக் கூற முனைந்திருக்கலாம். ஆனாலும் வள்ளுவர் நேரடியாக பெற்றோர்- தொல்காப்பியர் பெயரை தம் நூலில் குறிப்பிட விரும்பமாட்டார். வித்தகக் கவிஞரான அவர் தன் கவிதை ஆற்றலைக் காட்டி மூன்றும் குறிப்பால் தோன்றும்படி முதற்குறளைப் படைக்கிறார்.
தொல்காப்பிய இலக்கண வரையறைகளைக் கொண்டே குறள் யாக்கப்பட்டது என்பர். தொல்காப்பியத்தின் நேரடியான தாக்கம் குறளில் இருப்பதை எளிதில் உணரலாம். தொல்காப்பியர் தமிழ் மொழிக்குச் செய்த வரலாற்றுச் சாதனை வள்ளுவரை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும். இவரையே வள்ளுவர் வழிகாட்டியாகக் கொண்டார் என்பதற்கும் சான்றுகள் பல உள்ளன. தொல்காப்பியரது முதல் வரியையே தன் நூலின் முதல்வரியாக அமைத்து 'அகர முதல எழுத்தெல்லாம்' என்று தன் நூலைத் தொடங்குகிறார்;
'கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே' எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்ட கடவுள் வாழ்த்து என்னும் சொற்றொடர் திருக்குறளின் முதல் அதிகாரத்திற்குத் தலைப்பாகவும் அமைந்தது. எனவே நூல் தொடக்கத்தில் தொல்காப்பியர் நினைவு வந்திருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியதே.
அடுத்துத் தாய்தந்தையர் பெயரையும் முதற்குறளில் இணைக்கிறார். இப்படிச் செய்ததால் வள்ளுவர் தன் வரலாறு கூறினார் என்றோ அவருடைய தாய் தந்தையரை உலகிற்கெல்லாம் முதன்மையானவரெனக் கூற வருகிறார் என்றோ பொருளில்லை. பெற்றொர்களின் நினைவின் எதிரொலியாக ஆதிபகவன் என்ற சொற்றொடர் அமையப் பெற்றது என்பதாகத்தான் கொள்ள வேண்டும். ஆதிபகவன் என்ற வடமொழித் தொகைச் சொல், சங்க கால இலக்கியங்களில் காணப்படாத, புது வழக்காகும். தீந்தமிழ் நூல் செய்த வள்ளுவர் முதற்பாவிலேயே வலிந்து ஆதிபகவன் என்ற ஒரு வட சொல்லை ஏன் திணித்தார்? இதற்கு விளக்கமாகச் சொல்லப்படும் 'ஆதி, பகவன் என்று அவரது தாய்-தந்தையரையே மறைபொருளாகக் குறிப்பிட்டார்'
என்ற கருத்தை நம்பமுடியாத கற்பனை என்று தள்ளிவிட முடியாது. பெற்றோர் பெயர்களையும் சொல்லியாகிவிட்டது; அதே நேரத்தில் மூலகாரணன் ஆகிய இறைவன் என்று பொருள்பட உரைத்ததும் ஆயிற்று. ஆதிபகவன் என்ற சொற்றொடர் முதற்குறளில் இடம் பெற்றதற்கு இது அமைதி ஆகலாம்.
தொல்காப்பியம், தாய்தந்தையர், உலகமக்களுக்கான நூல் என்ற நினைவில் நூலைத் தொடங்குகிறார். அதன் பாதிப்பே அளவைக் குறைவுபட்ட முதற்குறளின் உவமை.
|
கடவுள் இந்த உலகத்தையும் உலக உயிர்களையும் இயக்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது என்றாலும் அக்கடவுள் விளக்கப்பட இயலாதவர். கடவுள் உண்மையை உணர்த்துதற்குப் பல உவமைகள் காணப்பட்டாலும் அவை எவையுமே கடவுளை முழுமையாக அளக்க முடியாது.
காலிங்கர் உரையில் கண்டபடி 'உலகமும் உலகிலுள்ள பொருள்களும் இறைவன் கண்ணே விரிந்தன' என்பதே முதற்குறளில் வள்ளுவர் சொல்ல வந்த செய்தியாகும். இறைவனை முதலாகக் கொண்டே இவ்வுலகம் இயங்குகிறது என்றும் கூறுவதால், இப்பாடல் இறைவன் ஒருவன் உளன் என்பதைத் தெளிவாக்கும்; அந்த எல்லையில்லா மெய்ப்பொருளின் முதன்மையும் இச்செய்யுள்ளால் உணர்த்தப்படுகிறது. இவை முதற்குறள் கூறும் கருத்துக்கள்.
|
ஆதிபகவன் என்று இறைமையைப் பொருள்பட உணர்த்தி வள்ளுவர் பாடும் கடவுள் வாழ்த்துப் பா.
மொழிக்கு முதன்மை அகரம்; கடவுள் உலகுக்கு முதல்.
|