காதலர் ஒருவர்க்கொருவர் பிணக்கம் கொள்வது புலவி எனப்படும். இதை ஊடல் என்றும் சொல்வர். புலவி காதற்பூசலின் தொடக்கநிலை; ஊடல் அதற்கு அடுத்த நிலை. இவை வேறுபாடின்றி ஒரு பொருளிலே இப்பொழுது ஆளப்பட்டுவருகின்றன. மூன்றாவதான துனி இன்பத்திற்கு மாறான துன்பந்தரும் முதிர்ந்த காதற்பூசல். அது விலக்கப்படவேண்டியது.
அவ்வப்போது ஒன்றுபட்டும், மனவேறுபாடு வந்து வேறுபட்டு ஊடியும் பின் மீண்டும் கூடியும் வாழ்வது காதல் வாழ்வின் மிகச்சுவையான பகுதி ஆகும். கூடிப்பெறும் இன்பத்திற்குச் செயற்கையாகத் தடை ஏற்படுத்தி ஏக்கம் பிறப்பிக்க வைப்பது காதலர் இருவருக்கும் இன்பம் தருவதாகும். புலத்தல் தலைவிக்கு மட்டுமன்றித் தலைவனுக்கும் உரியது. இவ்வதிகாரப் பாடல்களில் பெரும்பான்மை இருசாரார்க்கும் பொருந்துமாறே அமைந்துள்ளன. ஆனாலும் வள்ளுவர் புலவி என்பதைப் பெண்ணுக்கு மட்டுந்தான் உரியதாக்குகிறாரோ என எண்ணத் தோன்றுகிறது.
ஊடலுக்கு உண்மையான காரணம் இருக்க வேண்டுவதில்லை. புலவியும் ஊடலும் காதலின் அடிப்படையில் தோன்ற வேண்டும். காதல் அடிப்படையில்லா ஊடல் இன்பம் நல்காது; அது வெறும் பூசலாய் முடியும். ஊடலை உணர்ந்து காதலுடைய மற்றவர் அதை நீக்க வேண்டும். குளிர்ப்பக் கூறல், தளிர்ப்ப முயங்கல் முதலியவற்றால் புலவி நீங்கும் என்றும், ஊடல் அதற்குக் காரணமாகிய பொய்மை அல்லது உண்மையைத் தெரிவிக்க நீங்கும் என்றும் சொல்வர். ஊடல் என்னும் பாயற் சிறு பிரிவு பின் வரும் புணர்ச்சி இன்பத்தை மிகுவிக்கக் கூடியது.
காதலரிடையே உண்டாகும் பிணக்கமான மனநிலை ஊடல் எனப்படுகிறது. பிணக்கம் என்று சொல்லப்பட்டாலும் காதல்கொண்டவர்களின் உள்ளத்து வேர்ப்பகுதியில் ஐயம் இல்லை, வெறுப்பில்லை, பிணக்கம் இங்கு பிணைப்பான உளநிலையை உண்டாக்கக் காரணமாகின்றது. பிணக்க நீட்டிப்பு உணவுக்கு உப்பு போன்ற அளவில் அமையவேண்டும். மிகையாகிவிட்டால் உணவு கரித்துப் போய் கெட்டுவிடுவதுபோல் ஆகிவிடும். ஊடல் தீர்க்கப்படாவிட்டால் ஏற்கனவே வாடியுள்ள கொடியைத் தூரில் அரிந்ததது போலாம். ஊடல் உணர்தல் மிகையாகப் பேசப்படுகின்றது. நீரும் நிழலிடத்து இருந்தால் நன்றாக இருப்பதுபோல் ஊடலும் தன்னை விரும்புவாரிடத்தே இனிதாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
காதலர் தவறு செய்யாதபோதும் தவற்றைக் கற்பனை செய்து ஊடுவதாகவே வள்ளுவர் புலவிக் காட்சிகளை குறளில் அமைத்துள்ளார். இவ்வதிகாரமும் காதலி தலைவனின் தவிப்பை வேடிக்கை பார்க்கலாம் என்று சொல்வதாகத்தான் தொடங்குகிறது.
உண்மை வாழ்க்கையில் கணவன் -மனைவி இடையே ஏற்படும் ஊடல் எல்லாமே வேடிக்கைக்காக நடப்பதில்லை. இங்குள்ள பாடல்கள் மணவாழ்வின் உளநிலைக் கூறுகளை ஆராய்ந்து கூறப்பட்டுள்ளனவாக உள்ளன. ஊடல் நீடிக்கும் கால அளவு, ஊடலை உணர்தல், அதை நீக்குதல் எனச் சொல்லப்பட்டவை எல்லாம் காதலர்களுக்கு நல்ல பாடங்களாக அமைகின்றன.