இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1306



துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று

(அதிகாரம்:புலவி குறள் எண்:1306)

பொழிப்பு (மு வரதராசன்): பெரும்பிணக்கும் சிறுபிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

மணக்குடவர் உரை: உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின் காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்: காய்போலத் துவர்க்கும் ஆதலால்.
இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) துனியும் புலவியும் இல்லாயின் - முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; காமம் கனியும் கருக்காயும் அற்று - காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும்.
(மிகமுதிர்ந்திறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் துனியில்லையாயின், 'கனியற்று' என்றும், கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின் புலவியில்லையாயின் 'கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு.)

இரா சாரங்கபாணி உரை: முதிர்ந்த பூசலாகிய துனியும் அளவாகிய புலவியும் இல்லாவிட்டால் காமமானது முறையே கனியும் இளங்காயும் போன்றிருக்கும். துனி இல்லாதாயின் காமம் கனிபோல இனிக்கும். புலவி இல்லாதாயின் காமம் காய் போலத் துவர்க்கும். ஆகவே துனி கூடாது. புலவி வேண்டும் என்பது கருத்து.


பொருள்கோள் வரிஅமைப்பு:
துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.

பதவுரை: துனியும்-முதிர்ந்த பூசலும், அளவு கடந்த பிணக்கும்; புலவியும்-சிறு பிணக்கும்; இல்லாயின்-இல்லாவிடில்; காமம்-காதல் இன்பம்; கனியும்-பழமும்; கருக்காயும்-பழுக்காத காயும்; அற்று-போன்றது.


துனியும் புலவியும் இல்லாயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர மீள்கின்ற புலவியும் இல்லையாயின்;
பரிப்பெருமாள்: உணராது நீட்டிக்கின்ற துனியும் உணர்த்த மீளுகின்ற புலவியும் இல்லையாயின்;
பரிதி: துனியும் புலவியும் இல்லாத;
காலிங்கர்: தலைமகள் நீட்டித்த பெரும் பிணக்கு ஆகிய துன்பம் இல்லை ஆயின், மற்றுச் சில பிணக்காகிய புலவி இல்லையாயின்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) முதிர்ந்த கலாம் ஆகிய துனியும், இளைய கலாம் ஆகிய புலவியும் இல்லையாயின்; [முதிர்ந்த கலாம் - அளவு கடந்த பிணக்கு; இளைய கலாம் - அளவிற்கு உட்பட்ட பிணக்கு]

'துனியும் புலவியும் இல்லையாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துனியில்லாக் காமம் பழம் ஒக்கும்; புலவியில்லாக் காமம் பிஞ்சு ஒக்கும்', '(நீண்ட காலப் பிரிவின்) துன்பமும் (புணருமுன்) பிணக்கமும் இல்லாவிட்டால்', 'பெரும் பிணக்குஞ் சிறு பிணக்கும் இல்லாமற் போனால்', 'ஊடல் முதிர்ச்சியும் (துனி) ஊடல் தொடக்கமும் (புலவி) இல்லாவிட்டால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

முதிர்ந்த பூசலும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால் என்பது இப்பகுதியின் பொருள்.

காமம் கனியும் கருக்காயும் அற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்: காய்போலத் துவர்க்கும் ஆதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உணர்தற்கு நல்லது உளதென்று தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: காமமானது பழத்தையும் முற்றாத காயையும் ஒக்கும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, தலைமகள் புலவி நீட்டித்தவழித் 'துனி இல்லையாயின் பழம்போல இனிமை தரும்; புலவி இல்லையாயின் காய்போலத் துவர்க்கும்; ஆதலான் இஃது உணர்தற்கு நல்லளவு' என்று கூறியது.
பரிதி: காமம் பழத்தைப் போட்டுக் காயைத் தின்றதற்கு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: கனிந்த பழம் போல இனிமை தரும்; காமம் பசுங்காய் போலத் துவர்க்கும் ஆதலால் என்றவாறு.
பரிமேலழகர்: காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும்.
பரிமேலழகர் குறிப்புரை: மிகமுதிர்ந்திறும் எல்லைத்தாய கனி நுகர்வார்க்கு மிகவும் இனிமை செய்தலின் துனியில்லையாயின், 'கனியற்று' என்றும், கட்டிளமைத்தாய காய் நுகரும் செவ்வித் தன்றாகலின் புலவியில்லையாயின் 'கருக்காயற்று' என்றும் கூறினான். இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு. [கட்டிளைமைத்தாய் காய் - மிகவும் இளமை உடையதாய காய் (பிஞ்சு); இவ்விரண்டும் - துனி இன்மையும் புலவியும்]

'காமம் அழுகிய பழம்போலப் புளிக்கும்: காய்போலத் துவர்க்கும்' என்று மணக்குடவர் இப்பகுதிக்கு உரை கூறினார். இதில் அழுகிய பழம் என்று பொருள் கொண்டது பொருந்தவில்லை. பரிப்பெருமாளும் காலிங்கரும் 'காமமானது பழத்தையும் முற்றாத காயையும் ஒக்கும்' என பொருந்திய உரை கூறுகின்றனர். பரிமேலழகர் 'காமம் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போலும்' என்று பொழிப்புரை கூறி சிறப்புரையில் 'இவ்விரண்டும் வேண்டும்' எனக் குழப்பமான உரை கூறியுள்ளார்.

இன்றைய ஆசிரியர்கள் 'துனியில்லாக் காமம் பழம் ஒக்கும்; புலவியில்லாக் காமம் பிஞ்சு ஒக்கும்', 'காம இன்பம் பதனழிந்த பழத்தையும் பச்சைப் பிஞ்சுக் காயையும் போல (சுவை கெட்டதும் சுவை அற்றதும்) ஆகிவிடும்', 'காமவின்பமானது தகுதி முதிர்ந்த கனியும் இளங்காயும் போலாம்', 'காதல் செவ்வி முதிர்ந்த பழமும் இளங்காயும் போன்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காதலின்பம் (முறையே) கனியும் பழுக்காத காயும் போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
முதிர்ந்த பூசலும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காதலின்பம் (முறையே) கனியும் பழுக்காத காயும் போன்றது என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

காதலின் பயனைச் சிறப்புறத் துய்க்கவேண்டுமானால் கால அளவறிந்து ஊடல் மேற்கொள்க.

பெரும்பிணக்கமும் சிறுஊடலும் இல்லாமற் போனால், காமமானது, மிக முதிர்ந்த பழமும், பழுக்காத காயும் போன்றதாம்.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாக அயல் சென்றிருந்த கணவர் நீண்ட பிரிவிற்குப் பின் இல்லம் திரும்பியுள்ளார். படுக்கையறையில் உள்ள தலைவி அவர் வந்தால் கூடலின்ப மிகுதிக்காக ஊடல் கொள்ளலாம் எனக் காத்திருக்கிறாள். புலவி விளையாட்டு நிகழப்போகிறது.
தலைவர் வருகிறார். மனைவி அவரைத் தழுவாமல் (புலந்து) அவர் தவிப்பைக் கண்டு மகிழ நினைக்கிறாள்; ஊடல் உப்பளவே இருக்க வேண்டுமென்பதையும் அதை நீட்டித்தல் உப்பு மிகுந்த உணவுபோல் கரித்துவிடும் என்பதையும் அவள் அறிந்தவளே; கணவரும் ஊடலை அறியாதவர்போல் இருந்து அவளைத் தழுவாது நின்று அவள் துன்பமடையச் செய்கிறார்; தலைவி ஊடல் கொண்டுள்ளாள் என்பதை அறியாதிருத்தல் வாடிய வள்ளிக் கொடியை அடியோடு அரிந்ததை ஒக்கும்; தலைவியிடம் ஊடல் மிகுந்து தோன்றுவது நற்குணங்கள் நிரம்பப் பெற்ற தலைவர்க்குக் கூடுதல் அழகாம்; இவ்வகையில் ஊடலின்பத்தை இருவரும் துய்க்கத் தொடங்கிவிட்டனர்.

இக்காட்சி:
பூசலே இல்லாத இல்லறவாழ்க்கை எவ்வளவு சுவையாக இருக்கும் என்பதை தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி (தனிப்படர்மிகுதி 1191 பொருள்: தாம் விரும்பியவர் தம்மையும் காதலிக்கப்பெற்றவரானால் அடைந்தாரே காமஇன்பம் என்னும் விதை இல்லாத கனியை) என்று வேறொரு சூழலில் கனியை உவமையாக்கிக் குறள் கூறியது. ஆனாலும் இல்லறவாழ்வில் மணங்கொண்ட இருவரிடை சிறுசிறு சண்டை உண்டாவதும் இனிமையூட்டுவதே; அது தேவையான ஒன்றும்கூட என்ற கருத்துக் கொண்டவர் வள்ளுவர். அச்சண்டையை துனி என்னும் பெரும்சினம் அல்லது வெறுப்பு நிலைக்கு எடுத்துப் போவது கூடாது என்பதும் அவர் தரும் அறிவுரையாகும். இதைத் துனி இல்லையென்றால் காமம் கனி போன்றது; புலவி இல்லையென்றால் காமம் கருக்காயய் போன்றது என உவமைகள் மூலம் விளக்குகிறார் இங்கு.
கனி அதாவது பழம் இனிக்கும். கனி என்பதற்கு எதிர்ச்சொல் காய் என்பது. காய் பழுத்தால் கனியாகும். காய் துவர்க்கும், சுவை குறைவானது; கனிகள் பதமறிந்து உண்ணப்படுவன. மிகமுதிர்ந்த பழம் குழைந்துபோய் புளிப்பாகவும் துய்ப்பதற்கேற்றதல்லாததாகவும் இருக்கும். பழமாகவும் இல்லாமல் கனியாத இளங்காயாகவும் இல்லாமல் அளவாகக் கனிந்த பழமே உண்ண இனியதாகும். துனிநிலை நேராமல் காத்தால் காமம் இனிதான கனியாகும். புலவி இல்லாத நிலை சுவை குறைந்த கருக்காயாம். இவை முறையே காம முறிவுக்கும், இன்பமற்ற காமத்துக்கும் ஒப்பாகக் காட்டப்படுகின்றன இங்கு. துனிநிலையில் காமம் நிகழாதாதலால் அது கூடாதென்பதும் புலவி காம வாழ்வுக்குச் சுவை கூட்டுமென்பதால் அது வேண்டுமென்பதும் விளக்கமாகிறது.

இக்குறள் புலவியின்‌ தேவையையும் ஊடல் உணர்தற்கான நல்லளவையும் குறித்துக்‌ கூறுகின்றது.
இணையரிடையே தோன்றும் பிணக்கு புலவி, ஊடல், துனி என்று மூவகையாகக் குறிக்கப்படும். புலவி காதற்பூசலின் தொடக்கநிலை என்றும் ஊடல் அதற்கு அடுத்த நிலை என்றும் முதிர்ந்த நிலை துனி என்றும் சொல்லப்படும். புலவி உள்ளத்தளவில் நிகழும் மனமாறுபாடு என்றும் ஊடல் குறிப்பாக அன்றி வெளிப்படையாகச் சொற்களால் மாறுபாட்டைத் தெரிவிப்பது என்றும் துனி மாறுபாடு தீராமல் விலகி நிற்பது என்றும் விளக்குவர். புலவியும் ஊடலும் இளங்கலாம் எனவும் துனி முதிர்ந்தகலாம் எனவும் அறியப்படும். உணர்தல் என்பது ஊடல் காரணத்தையறிந்து அதைத் தீர்த்தலைச் சொல்வது. ஊடல். உணர்தல், புணர்தல் என்பன காமம் விழைவார் பெறும் பயன்களாம் என்பார் வள்ளுவர்.
பிணக்கு புலவியாகத் தொடங்க வேண்டும். அது ஊடல் வரை வளர்ந்து உணர்வு நிலைக்குத் திரும்பிவிட வேண்டுமே ஒழிய அதனைத் ‘துனி’யாக முதிரவிடக் கூடாது. காமத்தில் ஈடுபடும் தலைமக்கள் தம் இணையிடம் நீடித்த பெரும் பிணக்காகிய துன்பத்திற்கு இடந்தராமல் நடந்து கொள்வார்களேயாயின் அவர்கள் காதல் வாழ்வு, பக்குவமாய்ப் பழுத்த நறுங்கனிபோல் இன்பந்தரும். புலவியுடன் கூடியதாகவும் துனி இல்லாததாகவும் காமத்தை அமைத்து இன்புற்று வாழ வேண்டும் என வள்ளுவர் வழிகாட்டுகிறார்.

பரிப்பெருமாள் என்ற தொல்லாசிரியர் 'துனி இல்லையாயின் பழம்போல இனிமை தரும்; புலவி இல்லையாயின் காய்போலத் துவர்க்கும்; ஆதலான் இஃது உணர்தற்கு நல்லளவு' என்று தெளிவாக இக்குறளுக்கு உரை பகர்ந்தார்.
இச்செய்யுள் அமைப்பு சில உரையாசிரியர்களுக்குப் பொருள்காண்பதில் இடர் உண்டாக்கிற்று என்பது போல் தெரிகிறது.
பரிமேலழகர் உரைக்கு இரண்டு மாறுபாடான பிரதிகள் கிடைத்தன; ஒன்று பரிப்பெருமாள்/காலிங்கர் உரை போன்றும் மற்றது மணக்குடவர் உரை தழுவியதாகவும் அமைந்துள்ளன. ஒன்றில் ‘மிகவும் இனிமை செய்தலின்’ என்ற பாடமும் மற்றதில் ‘செய்யாது ஆகலின்’ என்ற பாடம் இருந்ததாலும், அவரது சிறப்புரையில் 'இவ்விரண்டும் வேண்டும் என்று வியந்து கூறியவாறு’ என்பதில் உள்ள இரண்டும் எனக்காணப்படுவதும் குழப்பம் உண்டாக்கியது. இவ்விரண்டும் 'துனியின்மையையும் புலவியையும் சுட்டும்’ எனக் கொண்டால் அவருரையில் தெளிவு கிடைக்கும்.
'துனியும், ஊடலும் இல்லாமலிருந்தால், காதலால் வரும் கலவியின்பம் முதிர்ந்த கனிபோன்று அழுகிப்போயும், இளம்பிஞ்சுக் காயைப்போல் துவர்ப்பாயும் இருக்கும் எனவே இவ்விரண்டுமே கலவிக்குத் தேவை' என்றவாறு சிலர் மயக்க உரை கூறினர். இது போன்ற உரைகள் பொருந்தா.
இக்குறளைத் "துனி இல்லாயின் காமம் கனி அற்று' என்றும், "புலவி இல்லாயின் காமம் கருக்காய் அற்று' என்றும் கூட்டி, "துனி இல்லாவிட்டால் காமம் கனிபோல் இனிப்பது என்றும்; புலவி இல்லாவிட்டால் காமம் கருக்காய்போல் சுவையற்றது' என்றும் பொருள் காணும்போது துனி விலக்கத் தக்கது என்பதும் புலவி கொள்ளத்தக்கது என்பது தெளிவாகும்.

இக்குறளைத் தலைமகன் கூற்றாகப் பரிமேலழகரும் தலைவி கூற்றாக மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகியோரும் கொள்வர். ஆசிரியர் கூற்றாகக் கொள்வது பொருத்தமாகும்.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

சிறந்த காமஇன்பம் பெறுவதற்குப் புலவியும் துனியின்மையும் வேண்டும் என்பது இக்குறள் கூறும் செய்தி. கணவன்-மனைவி இடையே காமம் சிறக்க வேண்டுமானால் அவர்கள் தமக்குள் ஊடல் கொண்டு உறவாட வேண்டும். ஊடலுக்குப் பின் கூடும்போதுதான் உயரிய இன்பத்தை அடைய இயலும். இன்றேல் காயை நுகர்வது போன்று சுவையற்று இருக்கும். கலவி நடைபெற்றாலும் அவர்கள் இன்பம் காண மாட்டார்கள். அதே நேரத்தில் புலவி மிகுதியானாலும் காதலின்பம் சுவைக்காது என்பதை விளக்க மிகுதியான ஊடல் அதாவது துனி இன்மையே கனி போல் சுவைக்கத்தக்கது எனவும் சொல்லப்பட்டது.

புலவியில்லாக் காமம் சிறவாது; புலவியை முதிர்ந்த துனி வரை கொண்டுசெல்வது காதலின்பத்திற்குக் கேடு என்பது செய்தி.

முதிர்ந்த பூசலும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காதலின்பம் (முறையே) கனியும் பழுக்காத காயும் போன்றது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புலவியின் நல்லளவு காமத்தின் சுவை.

பொழிப்பு

முதிர்ந்த பூசலாகிய துனி இல்லாவிட்டால் காமம் கனிபோல இனிக்கும்; அளவாகிய ஊடல் இல்லாதாயின் காமம் காய் போலத் துவர்க்கும்.