இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1305நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து

(அதிகாரம்:புலவி குறள் எண்:1305)

பொழிப்பு (மு வரதராசன்): நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சில் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.

மணக்குடவர் உரை: நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம், பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல்.
நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.

பரிமேலழகர் உரை: (தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது) நலத்தகை நல்லவர்க்கு ஏர் - நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது; பூ அன்ன கண்ணார் அகத்துப் புலத்தகை - தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே.
(சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான், 'நலத்தகை நல்லவர்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல் தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.)

வ சுப மாணிக்கம் உரை: நற்பண்பு உடைய ஆடவர்க்கு அழகு மலரன்ன மகளிரின் ஊடலை நீக்குதல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் பூஅன்ன கண்ணார் அகத்து புலத்தகை.

பதவுரை:
நல-நற்குணங்களால்; தகை-சிறந்த; நல்லவர்க்கு-நன்மையுடையவர்க்கு; ஏஎர்-அழகு; புலத்தகை-ஊடலினை அறியும் மாண்பு; பூ-மலர்; அன்ன-போன்ற; கண்ணார்-கண்களையுடையவர்; அகத்து-இடத்து.


நலத்தகை நல்லவர்க்கு ஏஎர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு ஓரழகாம்;
பரிப்பெருமாள்: நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு அழகாம்;
பரிதி: நல்ல ஆபரணம் இராக்காலம் நல்ல பெண்மை உடையர்க்காம்;
காலிங்கர்: பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி சொல்லுமாறு நலத்தகையினானே நல்ல கற்புடைய மகளிர்கள் மாட்டுப் புலத்தல் தீது;
பரிமேலழகர்: (தலைமகளைப் புலவி நீக்கிக் கூடிய தலைமகன் தன்னுள்ளே சொல்லியது) நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது;
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'தவறில்லார்க்கும் புலவி இனிது' என்பான், 'நலத்தகை நல்லவர்க்கும்' என்றான். அழகு - இன்பப் பயனைத் தலைப்படுதல்.

'நலத்தகையினானே நல்லாரான பரத்தையர்க்கு அழகாம்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் ஆகிய பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'நல்ல ஆபரணம் இராக்காலம் நல்ல பெண்மை உடையர்க்காம்' எனப் பொருந்தா உரை கூறுகிறார். காலிங்கரும் 'நலத்தகையினானே நல்ல கற்புடைய மகளிர்கள் மாட்டுப் புலத்தல் தீது' என ஏலா உரை கூறினார். பரிமேலழகர் 'நற்குணங்களால் தகுதியுடையராய தலைவர்க்கும் அழகாவது' என்றார். இவர் நல்லவர்க்கு என்பதை நல்லவர்க்கும் எனக் கொண்டார்; நல்லவர் என்பதற்குத் தலைவர் எனப் பொருள் உரைக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நற்குணங்கள் நிறைந்த காதலர்க்கு அழகாகும்', 'அன்புள்ள காதலனுக்கும் இன்பம் தருவதாகும்', 'நற்குணங்களால் சிறந்த தலைவர்க்கு அழகாவது', 'நற்குணங்களால் தகுதியுடைய தலைவர்க்கு அழகாவது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நற்குணத் தகுதியுடைய காதலர்க்கு அழகாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல்.
மணக்குடவர் குறிப்புரை: நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.
பரிப்பெருமாள்: பூ வன்னகண்ணார்மாட்டுப் புலத்தல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: நமக்கு ஆவார்மாட்டுப் புலத்தல் தீதென்றவாறு. இது பரத்தையரோடு புலந்து கூறிய தலைமகட்குத் தோழி கூறியது.
பரிதி: நல்ல...................ம் என்றவாறு. (இவ்வுரை சிதைந்துள்ளது)
காலிங்கர்: எனவே மற்றுப் பரத்தையர்க்கு அழகாம் பூவன்ன கண்ணார்மாட்டுப் புலத்தல் என்றவாறு.
பரிமேலழகர்: தம் பூவன்ன கண்ணார் நெஞ்சின்கண் நிகழும் புலவி மிகுதியன்றே.
பரிமேலழகர் குறிப்புரை: தான் நுகர்ந்த இன்பத்திற்கு ஏதுவாகிய புலவியை வியந்து கூறியவாறு.

'பூவன்ன கண்ணார்மாட்டுப் புலத்தல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி உரை முழுமையாகக் கிடைக்கவில்லை. மற்ற நால்வரும் பரத்தையரை இணைத்தே பொருள் கூறியுள்ளனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மலர் போன்ற கண்ணை உடைய மகளிர் மனத்தே நிகழும் ஊடலை அறிந்து நீக்குதல்', 'மலர் போன்ற கண்களையுடைய காதலியிடத்தில் பிணக்கம் இருப்பது', 'மலர் போன்ற கண்ணையுடைய தலைவியர்பாலுள்ள பிணக்கு மிகுதியே', '(தம்முடைய) பூவினை ஒத்த கண்ணினை உடையவரிடம் ஊடல் மிகுதி உண்டாதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மலர் போன்ற கண்களையுடைய காதலியின் ஊடலை அறியும் மாண்பு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நற்குணத் தகுதியுடைய காதலர்க்கு அழகாகும், மலர் போன்ற கண்களையுடைய காதலியின் ஊடலை அறியும் மாண்பு என்பது பாடலின் பொருள்.
'புலத்தகை' என்பதன் பொருள் என்ன?

காதலியின் ஊடலை அறிந்து நீக்குதல் நற்குணம் நிரம்பிய தலைவனுக்கு ஓர் அழகாகும்.

தொழில் காரணமாக அயல் சென்றிருந்த தலைவன் நீண்ட பிரிவிற்குப் பின் இல்லம் திரும்பியுள்ளான். இரவு வந்துவிட்டது. தலைவி படுக்கையறையில் உள்ளாள். அவன் வந்தால் சிறுதுநேரம் அவனுடன் ஊடல் கொள்ளலாம் என எண்ணுகிறாள். ஊடலுக்குப் பின் வரும் கூடல் இன்பமிகுதிக்காகவும் கூடலுக்கு முன் காதலனது தவிப்பைப் பார்த்துமகிழ்வதற்காகவும் ஊட நினைக்கிறாள். தன் தலைவன் நற்குணங்கள் நிரம்பப் பெற்றவனாய் இருப்பதுவே அவனுக்கு ஒரு அழகுதான். அதற்குமேலும் தன் ஊடல் அறிந்து அதைத் தீர்க்க முயல்வதைப் பார்க்கும்பொழுது அவன் முன்னிலும் மிகையாக அழகாகத் தோன்றுகிறான் என்கிறாள் அவள். தலைவி இங்கு தன் பூப்போன்ற கண்களாலேயே கணவனோடு பொய்யாகப் பிணங்குகிறாள் என்பது குறிப்பு. நற்குணப் பெருமை வாய்ந்த காதலனுக்கு பூப்போன்ற விழிகளையுடைய தலைவியின் ஊடல் உணர்ந்து நீக்குவது இன்னும் ஓர் அழகாகும்.

இப்பாடலிலுள்ள 'நல்லவர்' என்ற சொல்லுக்குப் பரத்தையர், கற்புடை மகளிர் எனப் பொருள் கூறினர். நல்லவர் என்பது தலைமகனைக் குறிப்பதாகக் கொள்வதே ஏற்புடைத்து.

'புலத்தகை' என்பதன் பொருள் என்ன?

'புலத்தகை' என்றதற்கு புலத்தல், புலவி மிகுதி, ஊடலின் சிறப்பு, புலவியழகு, ஊடலை நீக்குதல், ஊடலை அறிந்து நீக்குதல், பிணக்கம் இருப்பது, ஊடற் சிறப்பு, பிணக்கு மிகுதி, ஊடல் மிகுதி உண்டாதல், ஊடலை மனமுவந்து தீர்ப்பது, புலவிச் சிறப்பு, ஊடலின் காரணம் அறிந்து ஊடல் நீக்கி நன்மை செய்யும், ஊடலினை அறியும் மாண்பு என உரையாசிரியர்கள் உரை கூறினர்.

இக்குறள் தலைவன் புலவி கொள்வது பற்றியது என்றும் சிலர் உரை செய்தனர். ஆனால் இதைத் தலைவியின் ஊடல் பற்றியது எனக் கொள்வதே சிறக்கும். புலத்தகை என்ற சொல்லுக்கு, வாளா புலத்தல் என்றும் புலவிச் சிறப்பு, புலவி அழகு, புலவி நீக்குதல், புலவி மிகுதி எனவும் பலவாறு பொருள் கூறப்பட்டன. இவற்றுள் புலவி மிகுதி என்பதை விட ஊடலை அறியும் மாண்பு என்பது நன்கு பொருந்துகிறது.

'புலத்தகை' என்ற சொல்லுக்கு ஊடலை அறியும் மாண்பு என்பது பொருள்.

நற்குணத் தகுதியுடைய காதலர்க்கு அழகாகும், மலர் போன்ற கண்களையுடைய காதலியின் ஊடலை அறிந்து நீக்குதல் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புலவி உணர்தல் காதலனுக்கு அழகு.

பொழிப்பு

நற்குணங்கள் நிறைந்த காதலர்க்கு அழகு மலர் போன்ற கண்களையுடைய மகளின் ஊடலை அறிந்து நீக்குதல்.