இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1303அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்

(அதிகாரம்:புலவி குறள் எண்:1303)

பொழிப்பு (மு வரதராசன்): தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்பநோய் செய்து வருத்தினாற் போன்றது.

மணக்குடவர் உரை: ---------------------------------------------------------------.

பரிமேலழகர் உரை: (பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் - தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்; அலந்தாரை அல்லல் நோய் செய்தற்று - பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்.
('பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.

வ சுப மாணிக்கம் உரை: பிணங்கிய மகளிரைத் தழுவாது விடுதல் வருந்தியவரை மேலும் வருத்துதல் போலாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல் அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்.

பதவுரை:
அலந்தாரை-துன்புற்றாரை; அல்லல்-வருத்தம்; நோய்-துன்பம்; செய்து-இயற்றி; அற்று-போன்றது; ஆல்-(அசை) தம்மை-தம்மை; புலந்தாரை-பிணங்கியவரை; புல்லாவிடல்-தழுவாமல் விட்டுச் செலல்.


அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்;
பரிப்பெருமாள்: முன்பே கலக்கம் உற்று அழிந்தாரை அதன் மேலும் அல்லல் செய்யும் நோயைச் செய்தாற் போலும்.
பரிதி: நல்லோற்குத் துன்பம் செய்தற்கு ஒக்கும்;
காலிங்கர்: முன்பு கலக்கம் உற்று அழிந்தாரை அதன் மேலும், அல்லல்நோயைச் செய்தாற்போலும்;
பரிமேலழகர்: (பரத்தையர் இடத்துநின்றும் வந்த தலைமகனொடு தலைமகள் புலந்து சொல்லியது.) பண்டே துன்பமுற்று அழிந்தாரை அதன் மேலும் மிக்க துன்பத்தினைச் செய்தாற்போலும்;

'முன்பு கலக்கம் உற்று அழிந்தாரை அதன் மேலும், அல்லல்நோயைச் செய்தாற்போலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன்பே துன்பத்தினால் வருந்தியவரை மேலும் துன்பப்படுத்தினாற் போலும்', '(முன்னாலேயே) நொந்து போயிருக்கிற (ஒருவருடைய நிலைமையைத் தெரிந்து கொண்டே இரக்கமில்லாமல்) மேலும் அவரை நோகச் செய்வதற்குச் சமானம்', 'துன்பமுற் றழிந்தவர்க்கு மேன்மேலும் துன்பநோய் விளைவித்தல் போலாகும்!', 'துன்பமுற்றாரை மேலும் துன்பம் செய்தாற் போன்றது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வருந்தியவரை மேலும் துன்பம் செய்தாற் போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

தம்மைப் புலந்தாரைப் புல்லா விடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள் ('காமம் புலந்தாரைப்' என்பது பாடம்): காமத்தில் புலந்தாரை முயங்காது விடுதல் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உணப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் புலந்துழி அதனை அறிந்து அகம்புக்க தோழி தலைமகற்குச் சொல்லியது. பரிதி: முடியப் பிணக்கறுத்துக் கூடாத இன்பம் என்றவாறு.
காலிங்கர் ('புல்லா'- 'புல்லார்' என்பது பாடம்): காமத்தினால் புலந்தாரை முயங்காது விடுதல் என்றவாறு.
பரிமேலழகர்: தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என்பதாம்.

'காமத்தினால் புலந்தாரை முயங்காது விடுதல்'/'தம்மைப் பெறாது புலந்த மகளிரைப் புலவி நீக்கிக்கலவாது ஆடவர் சேறல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம்மிடம் புலவி கொண்ட மகளிரைப் புலவி நீக்கிக் கூடாமல் நீங்குதல்', 'தம்முடன் பிணங்கிய காதலியை (காதலன் அவளுடைய பிணக்கத்தை விடச் செய்து) புணராமல் (பிணக்கத்தை அப்படியே) விட்டுவிடுவது', 'பிணங்கின மகளிரைப் பிணக்கு நீக்கித் தழுவாது விடுதல்', 'தம்மை அடையாது ஊடல் செய்த மகளிரைத் தழுவாது விடுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தம்மிடம் ஊடல் கொண்டவரைத் தழுவாது விடுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்மிடம் ஊடல் கொண்டவரைத் தழுவாது விடுதல் அலந்தாரை மேலும் துன்பம் செய்தாற் போன்றது என்பது பாடலின் பொருள்.
'அலந்தார்' யார்?

ஊடல் கொண்டவரைத் தழுவாவிட்டால் அது ஏற்கனவே வருந்திக் கொண்டிருப்பவரை மேலும் துன்பத்துக்குள்ளாக்குவதாகும்.

கடமை முடித்து, நீண்ட இடைவெளிக்குப் பின், இல்லம் திரும்பியுள்ளான் தலைவன். பின் வரப்போகும் கூடலின்பத்தைப் பெருக்கும் நோக்கத்துடன், தலைவி அவனுடன் பிணக்கம் கொள்கிறாள். ஆனால் அதை உணராமல் காதலன் ஊடலை நீடிக்கவிட்டால், பிணக்குகள் பெரிதாகி, கூடல் விலகிப்போகலாம்; இருவர் உறவிலும் விரிசல் ஏற்படலாம். எனவே கூடலுக்கு முன் புலவியை தலைவன் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். அப்பொழுதுதான் புணர்ச்சி இனிதாகும். ஊடியிருக்கும் காதலியின் மனநிலையை அறிந்து அதைத் தீர்ப்பது, காதலனது கடமை என இக்குறள் காட்டுகிறது.
காதலனும் காதலியும் தமக்குள் பிணங்கியிருக்கின்றனர். அப்பிணக்கத்தால் அவர்கள் இருவரும் இன்பத்திலிருந்து விலகியிருக்கின்றனர். பிணங்கியிருப்பவரைத் தழுவி ஊடல் தீர்க்கவேண்டும். இல்லாவிட்டால் முன்பே துன்புற்று வருந்தியவரை மேலும் துன்ப நோயால் வருத்துவது போலாம். இவ்வுண்மை காதலர் இருவரிடையேயும் அப்பொழுது தோன்றுகிறது எனலாம்.
புலந்தவரை நேரடியாகப் புல்லிப் புலவியை நீக்கலாம் என்னும் செய்தியும் இங்கு கிடைக்கின்றது. 'புலந்தாரைப் புல்லா விடல்' என்ற தொடரில் 'தழுவி ஊடல் நீக்குக' என்ற குறிப்பும் அடங்கியுள்ளது.

'அலந்தார்' யார்?

'அலந்தார்' என்ற சொல்லுக்கு முன்பே கலக்கம் உற்று அழிந்தார், நல்லோர், பண்டே துன்பமுற்று அழிந்தார், துன்பத்தால் வருந்தியவர், முன்பே துன்பமுற்று வருத்தத்தில் ஆழ்ந்து கிடப்பவர், வருந்தியவர், முன்பே துன்பத்தினால் வருந்தியவர், (முன்னாலேயே) நொந்து போயிருக்கிற ஒருவர், துன்பமுற்றவர், துன்பமுற் றழிந்தவர், துன்பமுற்றார், துன்பத்தால் முன்னே வருந்தினவர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அலந்தார் என்ற சொல் துன்பத்தால் வருந்தியவர் என்ற பொருள் தரும். யார் அந்தத் துன்பத்தில் வருந்தியவர்?
'தம்மிடம் புலவி கொண்ட மகளிரைப் புலவி நீக்கிக் கூடாமல் நீங்குதல், முன்பே துன்பத்தினால் வருந்தியவரை மேலும் துன்பப்படுத்தினாற் போலும்' என்று அலந்தார் தலைவியைக் குறிக்கும் என்று பெரும்பான்மையர் பொருள் கூறினர்.
‘காமம் புலந்தாரை’ என்று பாடங் கொண்டு பரிப்பெருமாள் தணியாத பிணக்குடையன் ஆகிய இடத்து தலைமகன் புலந்துழி அதனை அறிந்து அகம்புக்க தோழி தலைமகற்குச் சொல்லியது என்று உரை செய்தார். 'தலைமகன் புலந்துழி' என்றதால் அலந்தார் என்று தலமகனை இவர் குறிக்கிறார் என்றாகிறது.
இஃது இரு சாரார்க்கும் பொருந்தும் என்கின்றனர் மற்றும் சிலர்.
'அலந்தாரை' (1303) என்பதற்கு 'முன்பு கலக்கம் உற்று அழிந்தாரை' எனப் பலரும் பொருளுரைக்கப் பரிதி 'நல்லோர்க்கு' எனப் பொருள் தருகிறார். ‘நல்லோர்க்கு’ என்னும் சொல் என்னும் சொல் மூலத்தோடு இயையவில்லை.
'பிறர்பால் சேறலின் நும்மைப் பெறாது புலந்தூடியிருக்கின்ற பரத்தையரைப் போய்ப் புலவி நீக்கிப் புல்லீராயின், அவராற்றார்' என அலந்தார் என்பது பரத்தையர் குறித்தது எனக் கருத்துரைக்கின்றார் பரிமேலழகர். பரத்தையர், அதாவது விலை கொடுப்பார் யாவர்க்கும் தம் நலத்தை விற்பவர், வீட்டிலிருந்து வந்த தலைவன் பரத்தையது புலவியை நீக்க வேண்டும் என்பதாக இவர் கூறுகின்றார். குறளின் காமத்துப்பாலில் பரத்தையர்க்கு இடமேயில்லையாதலால் இவரது விளக்கம் முற்றிலும் பொருந்தாது.

அலந்தார் என்பது தலைவியைக் குறிக்கும் என்பது சிறக்கும்.

தம்மிடம் ஊடல் கொண்டவரைத் தழுவாது விடுதல் வருந்தியவரை மேலும் துன்பம் செய்தாற் போன்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புலவி ஒரு தழுவலில் தீர்ந்துவிடும்.

பொழிப்பு

தம்மிடம் ஊடல் கொண்டவரைத் தழுவாது விடுதல் வருந்தியவரை மேலும் வருத்துதல் போலாம்.