இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1308



நோதல் எவன்மற்று நொந்தார்என்று அஃதறியும்
காதலர் இல்லா வழி

(அதிகாரம்:புலவி குறள் எண்:1308)

பொழிப்பு (மு வரதராசன்): நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?

மணக்குடவர் உரை: யான் நோகின்றதனால் பயனென்னை? இவர் நொந்தாரென்று நினைத்து அதனை யறிந்து தீர்க்கும் காதலர் மனமிலாராகியவிடத்து.
இஃது உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் புலந்துழி. அதனையறிந்து அகம்புக்க தோழி அவனுக்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளொடு புலந்து சொல்லியது.) நொந்தார் என்று அஃது அறியும் காதலர் இல்லாவழி - இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினை அறியும் அன்புடையாரைப் பெறாவழி; நோதல் மற்று எவன் - ஒருவர் நோகின்றதனாற் பயன் என்?
('அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது. இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.)

சி இலக்குவனார் உரை: இவர் நம்பொருட்டு வருந்தினார் என்று நம் வருத்தத்தினை அறியும் அன்புடையாரைப் பெறாதபொழுது ஒருவர் வருந்துவதனால் பயன் என்ன?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நொந்தார்என்று அஃதறியும் காதலர் இல்லா வழி நோதல் மற்று எவன்?.

பதவுரை: நோதல்-வருந்துதல்; எவன்-என்னத்துக்கு? மற்று-பின்; நொந்தார்-வருந்தினார்; என்று-என்று கருதி; அஃது-அது; அறியும்-அறிகின்ற; காதலர்-காதலையுடையவர்; இல்லாவழி-இல்லாதபொழுது, பெறாதபோது.


நோதல் எவன்மற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் நோகின்றதனால் பயனென்னை?
பரிப்பெருமாள்: யான் நோகின்றதனால் பயனென்னை?
பரிதி: காதலர் இல்லாவிடத்து நெஞ்சே! மயல் நோய் கொள்ளாதே;
காலிங்கர்: யான் நோகின்ற அதனால் பயன் என்னை?
பரிமேலழகர்: (உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் தலைமகளொடு புலந்து சொல்லியது.) ஒருவர் நோகின்றதனாற் பயன் என்?
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்று' - வினை மாற்றின்கண் வந்தது.

'ஒருவர் நோகின்றதனாற் பயன் என்?' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வருந்திப் பயனென்?', 'ஒருவர் வருந்துவதால் பயன் என்ன?', '(பிணங்கி) வேதனை பொறுப்பதில் என்ன பயன்?', 'பிணங்குவதாற் பயன் என்ன?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வருந்துவது என்னத்துக்கு? என்பது இப்பகுதியின் பொருள்.

நொந்தார்என்று அஃதறியும் காதலர் இல்லா வழி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவர் நொந்தாரென்று நினைத்து அதனை யறிந்து தீர்க்கும் காதலர் மனமிலாராகியவிடத்து.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் புலந்துழி. அதனையறிந்து அகம்புக்க தோழி அவனுக்குச் சொல்லியது.
பரிப்பெருமாள் ('காதலவரில்' பாடம்): இவர் நொந்தாரென்று நினைத்து அதனை யறிந்து தீர்க்கும் அன்பு அவரிலர் ஆகியவிடத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உணர்ப்புவயின் வாரா வூடற்கண் தலைமகன் புலந்து கூறியது.
பரிதி: அவர் இருந்தாலல்லவோ உன் மயல் வருத்தம் அறிந்து விசாரிப்பார் என்றவாறு.
காலிங்கர் (காதலவர்' பாடம்): நொந்தார் என்று நினைந்து அதனை அறிந்து நீக்கும் அன்பு அவர் இலர் ஆகிய இடத்து என்றவாறு.
பரிமேலழகர்: இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினை அறியும் அன்புடையாரைப் பெறாவழி;
பரிமேலழகர் குறிப்புரை: 'அறிதல்' - ஈண்டு ஊடலை இனிது உணர்தல். இவள் நம் காதலியல்லள்; அன்மையின், இந்நோவு அறியாள்; அறியாமையின், நாம் புலக்கின்றதனால் பயனில்லை எனத் தன் ஆற்றாமை உணர்த்தியவாறு.

'இவர் நம்பொருட்டாக நொந்தார் என்று அந்நோவினை அறியும் அன்புடையாரைப் பெறாவழி' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூடுவதற்கு வருந்தினார் என்று ஊடலைப் புரியும் காதலர் இல்லாத போது', 'நமக்காக வருந்துகிறார் என்று அதனை அறியும் காதலர் இல்லாதவிடத்து', '(பிணங்கி) காமவேதனை அடைந்திருக்கிறாளே என்று அந்த நிலைமையை அறியக்கூடிய கணவன் இல்லாத ஒரு பெண்', 'சினந்து பிணங்கினார் என்று அப்பிணக்கினைத் தெரியுங் காதலர் இல்லாதவிடத்து' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வருந்தினார் என்று துயரத்தை உணராத காதலர் இல்லாத போது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நொந்தார் என்று துயரத்தை உணராத காதலர் இல்லாத போது நாம் வருந்துவது என்னத்துக்கு? என்பது பாடலின் பொருள்.
'நொந்தார்' யார்?

தாம் ஊடிக்கொண்டிருக்கிறோம் என்பதுகூட தம் இணை அறியாமல் இருந்தால் என் செய்ய!

நம்பொருட்டு இவள் வருந்தினாள் என்று உணர்ந்து, அதைத் தீர்க்க முயலும் காதலுடையார் இல்லாத போது, வருத்தம் அடைவது எதற்கு?
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகத் தொலைவு சென்றிருந்த கணவர் நீண்ட இடைவெளிக்குப் பின் இல்லம் திரும்பியுள்ளார். கூடலின்ப மிகுதிக்காக ஊடல் கொள்ளலாம் எனத் தலைவி பள்ளியறையில் அவருக்காகக் காத்திருக்கிறாள்.
தலைவர் வரும்போது அவரைத் தழுவாமல், புலந்து, அவர் தவிப்பதைக் கண்டு இன்பமுற எண்ணுகிறாள்; உணவுக்கு உப்பு எவ்வளவு தேவையோ அதுபோலவே ஊடல் நீட்டிப்பதும் இருக்கவேண்டும், மிகுந்தால் உணவு கெட்டுவிடும் என்பதைத் தலைவி அறிவாள்; கணவரும் இவளது ஊடலை அறியாதவர்போல் இருந்து அவளைத் தழுவாதிருந்து துன்பமடையச் செய்யலாம்; மனைவி ஊடல் கொண்டுள்ளாள் என்பதை உணராதிருத்தல் வாடிய வள்ளிக் கொடியை அடியோடு அரிந்துவிடுவது போலாம்; தலைவியிடம் ஊடல் மிகுந்திருந்தால் நற்குணமான தலைவருக்கு அதுமேலும் அழகு சேர்க்கும்; ஊடல் முதிர்ச்சியும் அதாவது துனியும் புலவியும் இல்லாவிட்டால் காதல் மிகவும் பழுத்த கனியும் இளங்காயும் போன்றது; கூடுதல் விரைவில் நடக்கவேண்டும் எனக் கருதினால் ஊடலிலும் ஒரு துன்பம் உண்டாகும். இவ்விதம் ஊடல்-கூடல் இவற்றை எண்ணிக் கொண்டிருக்கிறாள் தலைவி.

இக்காட்சி:
அவருடன் ஊடுவதா ஊடாமல் கூடுவதா என்ற மனப் போராட்டத்தில் இருக்கும் தலைவி ஊடி இன்பம் காணவே விழைவாள். ஆனால் இன்னொரு எண்ணமும் தோன்றுகிறது. இவள் நம்மை நினைத்துத்தான் துயருற்றிருக்கிறாள் என்பதைக் கணவர் புரிந்து கொள்ளாவிடில் ஊடல் முயற்சித் துன்பம் என்ன பயன் விளைவிக்கும்? ஊடலுக்குப் பின் நிகழும் கூடல் இன்பம் மிகுதியாக இருக்கும் என்பதும் ஊடல் கொள்ள நினைப்பதற்குக் காரணம்; ஊடினாலும் அதை அவர் உணர வேண்டுமே! பிணக்கம் கொண்டுள்ளாள் மனைவி என்பதை அறியும் தலைவர் இல்லாதபோது நாம் ஊடல் கொள்வது எதற்கு?
ஊடுதல் காமத்திற்கு இன்பம் என்றாலும் அதை உணர்ந்து புலவி நீக்காத காதலரிடம் ஊடுதல் பயனில்லை என்பதை இக்குறள் அறிவுறுத்துகிறது. இன்னும் ஊடி யவரை உணராமை வாடிய வள்ளி முதல்அரிந் தற்று (1304 பொருள்: ஊடல் கொண்டவரை உணராமல் இருத்தல் வாடிய கொடியைத் தூரிலே அரிந்ததை ஒக்கும்) என இவ்வதிகாரத்து முந்தைய குறளின் கருத்தையும் நினைக்கலாம்.

ஊடலை உணராதவரோடு ஊடல் கொள்ளற்க என்பது தலைவிக்கு வள்ளுவர் தரும் அறிவுரை, பெண்கள் ஊடல் செய்தால் தம் மனநிலையை ஆராய்ந்து தீர்ப்பவராக உள்ள கணவரிடம் ஊடல் செய்ய வேண்டும். அல்லது ஊடல் செய்யாததே நன்று. தலைவர் தன்துன்பத்தைப் பற்றி எண்ணிக் கவலைப்படாது. தலைவி உற்ற துன்பத்தை எண்ணி வருந்துகிறவனாகவும் விரைந்து போக்க முற்படுபவனாகவும் இருக்க வேண்டும். பெண்ணின் புலவியை உணர்ந்து ஊடலைத் தீர்க்காத கணவரிடம் அவள் ஊடுதல் கூடாது.

புலவி பெரும்பாலும் தலைவிக்குரியதாயினும், ஓரோவழி தலைவனுக்கும் உரித்தாகப் பண்டை உரையாசிரியர்கள் கூறுவர். 'காதலர்' என்னும் சொல் கணவர், மனைவி இருவர்க்கும் பொது என்பதால் இக்குறள் தலைவர்-தலைவி இருவருக்கும் பொருந்துவதாகவே உள்ளது. காதலர் ஊடல் செய்பவள் மனநிலையை உணர்ந்து புலவியைத் தீர்ப்பவராக இருக்க வேண்டும்; அதுபோல காதலி ஊடல் செய்பவரின் மனநிலையை அறிந்து புலவி தீர்ப்பவளாக இருக்க வேண்டும் என்பதாகவும் கொள்ளமுடியும்.

'நொந்தார்' யார்?

'நொந்தார்' என்ற சொல்லுக்கு நொந்தார், நம்பொருட்டாக நொந்தார், நம்மால் இவர் வருந்தினார், கூடிமகிழ்தற்கே ஊடல் கொண்டு துன்புற்றாள், கூடுவதற்கு வருந்தினார், நமக்காக வருந்துகிறார், (பிணங்கி) காமவேதனை அடைந்திருக்கிறாளே, துன்புற்றார், சினந்து பிணங்கினார், நம்பொருட்டு வருந்தினார், கூடி மகிழும் இன்பம் பெருகவே ஊடல்கொண்டார், ஊடல் கொண்டு வருந்தினார், நம் செயல் பற்றி நொந்தார், நம்மால்தான் இவர் வருந்துகிறார் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நொந்தார் என்பதற்கு நேர் பொருள் வருந்தினார் என்பது. மனைவியானவள் தன் தலைவருடன் பிணக்கம் கொள்வதற்குப் பல காரணங்கள் உண்டு. அதிகாரப்போக்கை நோக்கும்போது தலைவி வருந்தியது காமநோயால் என்பது விளங்கும்.
இவர் வருந்தினார் என்பதை எண்ணி அதனை யறிந்து தீர்க்கும் மனமில்லாத கணவர் இருக்கும்போது மேலும் பிணங்கி வருத்தம் கொள்வது எதற்கு? என்று தலைவி கேட்பதாக பாடல் உள்ளது. தலைவியானவள் கணவர் பிரிந்து சென்றபின் தனிமையில் காமநோயுற்று வருந்தினாள். எனவே நொந்தார் என்ற சொல் இங்கே பிரிவின் துயர் ஆற்றாமல் வருந்திய தலைவியைக் குறித்து நிற்கின்றது. அதை அதாவது எதற்காக துன்புறுகிறார் என்பதை அறிந்து தலைவர் அவ்வருத்தத்தை நீக்க வேண்டும். அவ்வருத்தத்தைப் பற்றி அக்கறையில்லாமல் இருந்தால் அவர் அன்பு காட்டாதவராதலால் அவர் அவளது வருத்தத்தை போக்கப்போவதில்லை. அத்தகையவரிடம் ஊடல் கொள்வது பொருளற்றது.

'நொந்தார்' என்ற சொல் காமநோயால் வருந்திய தலைவியைக் குறிப்பது.

வருந்தினார் என்று துயரத்தை உணராத காதலர் இல்லாத போது நாம் வருந்துவது என்னத்துக்கு? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புலவியின் சிறப்பு உணராதவரிடத்து பிணங்குவது எதற்காக?

பொழிப்பு

வருந்துகிறார் என்பதனை அறியும் காதலர் இல்லாதபோது ஒருவர் வருந்திப் பயன் என்ன?