‘தவம்’ என்ற சொல் நோன்பு, பொறுத்தல், பேறு என இடத்திற்குத் தக்கவாறு பல பொருள்களை வழங்குவது. தவத்தின் இலக்கணம் இன்னது என்பதை உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு (261) என்னும் குறட்பா கூறுகின்றது. இதன்மூலம் புறவணியும் புறக்குறியும் புறவேடமும் தவத்தின் வடிவங்கள் என்றிருந்த கருத்தாக்கம் பெரிதும் மாற்றம் பெற்றது.
தவம் என்பதனைக் குறிக்கும் நோன்பு என்னும் சொல்லும் இவ்வதிகாரத்தில் நான்கு இடங்களில் வழங்கப்பட்டுள்ளது. நோன்றல் என்றும் நோற்றல் என்றும் சொல்லப்படும் உறுதிப்பாடே நோன்பு ஆகும். இவ்வுறுதிப்பாடே தன் துயர் பொறுத்தலும் பிறவுயிர்க்குத் துன்பம் செய்யாமையுமாம் இயல்பை ஆக்கும்.
“பிறர் துன்பத்தினைக் கண்டு மனம்பொறாமையும், தான் பிறர்க்குத் துன்பம் செய்யாமையுமே தவத்தின் உண்மை வடிவு” என்று பரிதி விளக்கினார். 'தன் துன்பத்தைத் தான் பொறுத்தல் பெரியதவமாகாது. துன்பத்தை மாற்றக் கூடுமாயின் மாற்றிக் கோடலும் அங்ஙனமன்றெனின் பொறுத்துக் கோடலும் உலகியற்கை, அதனைப் பெரிய தவமாகக் கருதுதல் அத்துணை உயர்ந்த கருத்தினதன்றாதலால் இவ்விளக்கவுரை போற்றற்பாலது' என்பார் தண்டபாணி தேசிகர். மேலும் இவர் தவம் என்பது 'மன அடக்கம் நிலைக்க விரதம், உடலை ஒறுக்கும் முயற்சிகள் இவைகளை மேற்கொள்ளுதல்' எனச் சொல்லி 'இங்ஙனம் 'தடுத்தலும் ஒறுத்தலுமே தவமாகாது தெய்வவழிபாடுகளை ஒருமனப்பட்டு ஊன்றிப்பயிறலே தவம்' என்னும் மணக்குடவர் உரை சிறந்தது' என்றும் கருத்துரைப்பார்.
தொன்மங்களில் ஈடுபாடுடையோர்க்குத் தவம் என்றவுடன் காட்டிடை தனித்துறைதல், ஊண் உறக்கம் குறைத்தல், வெயில், மழை, பனி தாங்கல், நீர்நிலை நிற்றல், கனி நுகர்ந்து, ஐந்து நெருப்பின் நடுவில் இருந்து உடல் வாட்டும் கடும் பயிற்சிகளை மேற்கொள்ளல், ஞானம் தேடி கோயில் குளம் சுற்றல், யாகம் இயற்றி இறைவனிடம் வேண்டுவன பெறுதல் என்பதும் தவம் செய்பவர் தனியே காட்டிலோ அல்லது மலையிலோ அல்லது யாருமில்லாத தனித்துள்ள குகைகளிலோ அமர்ந்து தியானித்து இருந்து, வரம் கொடுக்கும் ஆற்றல் பெற்றவராக அல்லது சாபங்கள் இடும் சினம் கொண்டவராக இருப்பார் என்பனவே மனக்காட்சியில் தோன்றும்.
ஆனால் குறளில் அப்பொருளில் 'தவம்' கையாளப்பெறவில்லை; தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார் என்று சொல்வது குறள்; தம் கடமை பற்றி ஒருமுகமாக எண்ணிச் செயல்படுவதையே தவம் என்கிறது குறள்.
தவம் என்பதற்கு இன்றைய நாளில் கடின உழைப்பு, முயற்சி, ஒரு நோக்கத்திற்காகத் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ளுதல் என்று விளக்கம் கூறி அதை 'முயற்சித் தவம்' என்று அழைக்கின்றனர். ஒரு கடமையில் ஈடுபடுபவன் அதைத் தவம் போலக் கருதி அதே நினைவாய்-ஓர்மையுடன் வரும் இடையூறுகளை யெல்லாம் பொறுத்து முன்னேறிச் செல்வது தவத்தின் இயல்பு என்பர் இவர்கள். நாமக்கல் இராமலிங்கம் 'தவம் என்பது ஒருவனுடைய மனம் முழுவதும் ஒரே நோக்கத்தில் ஈடுபட்டு, வேறு எண்ணங்களுக்கு இடங்கொடுக்காமல் இருப்பதற்காகச் செய்யப்படும் முயற்சிகளின் தொகை' என விளக்கினார்.
ஆனால் முயற்சியையே வள்ளுவர் தவம் என்ற சொல்லால் குறிக்கின்றார் என்பதை மறுப்போரும் உண்டு. பொருட்பாலில் ஊக்கம் உடைமை, மடியின்மை, ஆள்வினை உடைமை, இடுக்கண் அழியாமை ஆகிய அதிகாரங்கள் முயற்சியின் பெருமையையே வலியுறுத்துவன ஆதலால் தவம் என்ற அதிகாரம் துறவுத்தவத்தைப் பற்றித்தான் கூறுகிறது என்பர் இவர்கள்.
முயற்சியும் ஒருவகைத் தவம்தான் என்பதும் வள்ளுவர் கருதுவதே.
துறவுத் தவம் பற்றியும் இவ்வதிகாரக் குறள் ஒன்று 'துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி..'(263) எனப் பேசுகிறது.
..... துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர் என்று கடுந்தவம் செய்வோர் பற்றி மற்றொரு பாடல் (267) கூறுகிறது.
,,,,,,மன்னுயிர் எல்லாம் தொழும் என்று தொழத்தக்க வகையில் மிக உயர்நிலையில் தவம் மேற்கொள்வார் பற்றியும் குறள் (268) பாடுகிறது.