இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0261



உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு

(அதிகாரம்:தவம் குறள் எண்:261)

பொழிப்பு (மு வரதராசன்): தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.

மணக்குடவர் உரை: தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம்.

பரிமேலழகர் உரை: தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று.
(மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே,' எனத் தேற்றேகாரம் கொடுத்தார். 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' 'என்பதனை,' யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தவத்தின் வடிவு தாம் அடைந்த துன்பங்களைப் பொறுத்தல், பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமல் இருத்தல் ஆகிய அவ்வளவிற்று.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு.

பதவுரை:
உற்ற-நேர்ந்த; நோய்-துன்பம்; நோன்றல்-பொறுத்தல்; உயிர்க்கு-உயிருக்கு; உறுகண்-துன்பம்; செய்யாமை-செய்யாதிருத்தல்; அற்றே-அத்தன்மைத்தே; தவத்திற்கு-தவத்தினது; உரு-வடிவு.


உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே;
பரிப்பெருமாள்: தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே;
பரிதி: தவஞ்செய்யும் நெறியைச் சொல்லும்.
காலிங்கர்: தமக்குத் தந்துற்ற நோயைத் தாம் பொறுத்தலும் தாம் பிற உயிர்க்கு இடுக்கண் செய்யாமையுமாகிய அத்தன்மைத்தே;
காலிங்கர் குறிப்புரை: 'உறுகண்' என்பது இடுக்கண். 'நோன்றல் என்பது பொறுத்தல்.
பரிமேலழகர்: உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ்வளவிற்று.
பரிமேலழகர் குறிப்புரை: மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே அடங்குதலின், 'அற்றே,' எனத் தேற்றேகாரம் கொடுத்தார்.

'தமக்கு உற்றநோயைப் பொறுத்தலும் பிறவுயிர்க்கு நோய் செய்யாமையுமாகிய அத்தன்மையே' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'உற்றநோய் நோன்றல்' என்பதற்கு, உண்டி சுருக்கல் முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தல் என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன் துன்பத்தைப் பொறுத்தல்; எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாமை', 'தமக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும் பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமையும் ஆகிய அவ் வளவினதே', 'தனக்கு வரும் துன்பங்களைச் சகித்துக் கொள்ளுதலும், தான் பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமலிருப்பதும் ஆகிய அவ்வளவும்தான்', 'தனக்கு நேரிட்ட துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும், பிற உயிர்களுக்குத் துன்பஞ் செய்யாமையும் ஆகிய அவ்வளவேயாம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தனக்கு நேரிட்ட துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதலும், பிற உயிர்களுக்கு ஊறு செய்யாமையும் ஆகிய அவ்வளவேயாம் என்பது இப்பகுதியின் பொருள்.

தவத்திற்கு உரு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவத்திற்கு வடிவமாம்.
பரிப்பெருமாள்: தவத்திற்கு வடிவமாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய தவம் எத்தன்மைத் தென்றார்க்குக் கூறப்பட்டது.
பரிதி: தவமாவது
காலிங்கர்: ஒருவரொருவர் செய்யுந் தவத்திற்கு வடிவாவது என்றவாறு.
பரிமேலழகர்: தவத்தின் வடிவு.
பரிமேலழகர் குறிப்புரை: 'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது' 'என்பதனை,' யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால் தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.

'தவத்திற்கு வடிவமாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தவத்தின் வடிவு', 'தவத்தின் வடிவம்', 'தவத்தின் இலக்கணம்', 'தவத்திற்கு வடிவம் யாதெனில்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தவத்திற்கு வடிவம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தனக்கு நேரிட்ட துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதலும், பிற உயிர்களுக்கு ஊறு செய்யாமையும் அற்றே தவத்திற்கு உரு என்பது பாடலின் பொருள்.
'அற்றே தவத்திற்கு உரு' என்ற பகுதியின் பொருள் என்ன?

ஒருவரொருவர் துன்பம் உணரப்படா உலகை அடைய முயல்வது தவமாம்.

தனக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்தினது வடிவம்.
ஒருவர்க்கு உடலுக்கோ உள்ளத்துக்கோ, இயற்கையாகவோ செயற்கையாகவோ துன்பங்கள் நேர்கின்றன. அவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ளுதலே உற்றநோய் நோன்றல் ஆகும். துன்பங்கள் நம்மை வாட்டும்போது அல்லது பிறர் நமக்குச் செய்த தீமைகளை நினைக்கும்போது, ஆற்றமுடியாமல் பொங்கி எழுவது இயல்பு. தம்துயரைப் பொறுக்காமையால்தான் பலப்பல துயர்களும் உலகை, உயிர்களைச் சூழ்கின்றன. துயர் தாங்குதற்கு மனத்திண்மை பெற்றிருக்க வேண்டும். துன்பம் பொறுத்தல் தவமிருப்பதாகும்.
அதுபோலவே மற்ற உயிர்களுக்குத் தீங்கிழையாது வாழ்தலும் தவச்செயல்தான் என்கிறது பாடல். தன்னலம் கருதித்தான் மற்றை உயிர்களுக்கு ஒருவன் துன்பம் செய்கின்றான். அத் தன்னலம் அற்றுவிட்டால் துன்பம் செய்யும் எண்ணம் எழாது. மேலும் தமக்கு உண்டாகும் துன்பங்களைத் தாங்கிப் பழகியவர்க்கு அதன் வேதனை புரிவதால் அத்துன்பத்தைப் பிறர்க்குத் தர மாட்டார். நல்லது செய்ய முடிந்தால் செய்யலாம்; இல்லை என்றால் அடுத்தவர்க்குக் கெடுதல் செய்யாமல் இருக்கலாம். இது தவத்தின் இன்னொரு கூறு என்கிறார் வள்ளுவர்.
தனக்குற்ற துன்பம் பொறுத்துக் கொள்வதையும், பிறருக்கு துன்பம் செய்யக்கூடாது என்னும் எண்ணத்தையும் ஒரு தவமாக - உறுதிப்பாட்டுடன் மேற்கொள்ள வேண்டும்.
உடல் வலி, மன வலியைத் தாங்குதல் மற்றும் பிற உயிர்களை ஓம்பும் நல்லுணர்வை வளர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றைப் பயின்று கொள்ளுவதே தவம். வள்ளுவர் கூறும் நடைமுறை நோன்புகளான இவற்றை மேற்கொள்ளல் மிகக்கடினம் அல்ல.

இந்நாளில் நோன்பு என வழக்கில் உள்ளதையே தவம் என்ற சொல் குறிக்கிறது. நோன்றல் என்றும் நோற்றல் என்றும் சொல்லப்படுவனவும் அதுவே.
தவம் அதிகாரத்து அனைத்துக் குறள்களுக்கும் அவர் கூறிய இந்த இலக்கண வழியிலே நின்றுதான் பொருள் காண வேண்டும்.

'அற்றே தவத்திற்கு உரு' என்ற பகுதியின் பொருள் என்ன?

'அற்றே தவத்திற்கு உரு' என்றதற்கு அத்தன்மையே தவத்திற்கு வடிவமாம், தவஞ்செய்யும் நெறி, அத்தன்மைத்தே ஒருவரொருவர் செய்யுந் தவத்திற்கு வடிவாவது, அவ்வளவிற்று தவத்தின் வடிவு, ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும், தவத்திற்கு 'உரு' ஆகும், இவையே தவத்திற்குரிய பண்பியல் வடிவம், தவத்தின் வடிவு, ஆகிய அவ் வளவினதே தவத்தின் வடிவம், ஆகிய அவ்வளவும்தான் தவத்தின் இலக்கணம், ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும், ஆகிய அவ்வளவேயாம் தவத்திற்கு வடிவம், ஆகிய அவ்வளவிற்று தவத்தின் வடிவு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அற்று என்ற சொல் அத்தன்மைத்து அல்லது அவ்வளவிற்று என்ற பொருள் தரும். அற்றே அதாவது 'அத்தன்மைத்தே அல்லது அவ்வளவிற்றே' என்று ஏகாரத்துடன் ஏன் சொல்லப்பட்டது? உற்ற நோய் நோன்றல், உறுகண் செய்யாமை என்னும் இவ்விரண்டனுள் தவத்திற்கு வேண்டிய பிறவெல்லாம் அடங்குதலின் 'அற்றே' எனப்பட்டது எனப் பரிமேலழகர் விளக்கம் தந்தார். இவர் கூறும் பிறவெல்லாம் என்பதில் உண்டி சுருக்குதல், முக்காலமும் நீராடல், பிறர் கடன் செய்தல், தன்னலமின்மை, புணர்ச்சி விரும்பாமை முதலியன அடங்கும் எனப் பொருள் கூறுவர். 'தவத்திற்கு உரு' என்ற தொடர்க்கு தவத்திற்கு வடிவம் என்பது பொருள்.

எல்லாவற்றையும் துறந்து காட்டுக்கோ மலைக்கோ ஓடுவது, துறவுக்கோலம், தாமரை ஆசனம், கண்களை மூடி அமர்தல், மூச்சுப்பிடித்தல், தவம் செய்வோர்க்கான தனி உடை, பாவனை எல்லாம் தவம் என்பதன் தோற்றமாகும் எனச் சமயங்கள் அனைத்தும் சொல்லியுள்ளன. துறவு மேற்கொண்டவரே தவத்தில் அமர்ந்திருப்பர் எனவும் அவர்களுக்கென்று இக்கோலங்கள் உள எனவும் சொல்லப்பட்டன. ஆனால் தான் கூறும் தவத்திற்கு உரு இதுவல்ல என்பதை வலியுறுத்த ”உற்றநோய் நோன்றல்”, “உயிர்க்கு உறுகண் செய்யாமை” என்னும் இவை மட்டும்தான் தவத்தின் உருக்கள் என விதந்து கூறுகிறார் வள்ளுவர். 'அற்றே தவத்திற்கு உரு' என்ற சொல்லாட்சியால் 'புற அணியும் புறக்குறியும் புற வேடமுமே தவத்தின் உரு' என சொல்லப்பட்டதை மறுத்தார்.
தவம் எனும் சொல்லை துறவறத்தோடு தொடர்புபடுத்தியே நாம் பழகிவிட்டோம். வள்ளுவர்க்கோ எதையுந் துறத்தல் வேண்டுவதில்லை. இல்லில் இருந்து கொண்டே தவநெறி பற்றி வாழலாம் என்பவர் அவர். காடுகளையோ குகைகளையோ நோக்கிச் செல்லாமல் மக்களோடு மக்களாய்க் கலந்து வாழ்ந்து தவவாழ்க்கை மேற்கொள்ளச் சொல்வார் அவர். வருகிற துன்பங்களை எல்லாம் எவனொருவன் பொறுத்துக் கொண்டு -தாங்கிக்கொண்டு முன்னேறுகிறானோ அதுவே தவத்தின் திருக்காட்சியாம். யாருக்கும் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்யாதிருத்தலும் தவத்தின் வடிவம்தான்.

'அற்றே தவத்திற்கு உரு' என்பது அத்தன்மைத்தே தவத்தினது வடிவம் என்ற பொருள் தரும்.

தனக்கு நேரிட்ட துன்பத்தைத் தாங்கிக் கொள்ளுதலும், பிற உயிர்களுக்கு ஊறு செய்யாமையும் ஆகிய அவ்வளவேயாம் தவத்திற்கு வடிவம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

துன்பம் நீங்கிய உலகை எண்ணுவதே தவம்.

பொழிப்பு

தவத்தின் வடிவு தமக்கு நேரும் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளுதலும் பிற உயிர்களுக்கு ஊறு செய்யாமையும் ஆகிய அவ் வளவினதே.