ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்
(அதிகாரம்:தவம்
குறள் எண்:264)
பொழிப்பு (மு வரதராசன்): தீமை செய்யும் பகைவரை அடக்குதலும், நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.
|
மணக்குடவர் உரை:
இவ்விடத்துப் பகைவரை தெறுதலும், நட்டோரை யாக்குதலுமாகிய வலி ஆராயின் முன்செய்த தவத்தினாலே வரும்.
இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது.
பரிமேலழகர் உரை:
ஒன்னார்த் தெறலும் - அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், உவந்தாரை ஆக்கலும் - அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும் எண்ணின் தவத்தான் வரும் - தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம்.
(முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.)
கா சுப்பிரமணியம் பிள்ளை உரை:
அறத்திற்குப் பகையாய் உள்ளவரைத் தண்டித்துத் தொலைத்தலும் அறத்தை விரும்பியவரை உயர்த்தலும் ஆகிய இரண்டும் தவமுடையார் நினைப்பின் அவரது தவவலியால் நேரும்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும்.
பதவுரை: ஒன்னார்-பகைவர்; தெறலும்-செருக்கு அடக்கலும், கெடுத்தலும், அழித்தலும், ஒறுத்துத் தொலைத்தலும்; உவந்தாரை-வேண்டியவரை; ஆக்கலும்-மேலாகச் செய்தலும்; எண்ணின்-நினைத்தால், ஆராயின்; தவத்தான்-தவவலியால்; வரும்-வந்தடையும்.
|
ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்விடத்துப் பகைவரை தெறுதலும், நட்டோரை யாக்குதலுமாகிய;
பரிப்பெருமாள்: இவ்விடத்துப் பகைவரை தெறலும், நட்டாரை யாக்குதலுமாகிய;
பரிதி: சத்துருக்களைச் செயிப்பதும், மித்துருக்களை அழிப்பதும்;
பரிமேலழகர்: அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், அதனை உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும்;
'பகைவரை தெறுதலும், நட்டோரை யாக்குதலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் ஒன்னார் என்றதற்கு 'அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தார்' எனப் பொருள் தந்தார்.
இன்றைய ஆசிரியர்கள் 'பகைவரை அழிக்கலாம்; நண்பரை ஆக்கலாம்', 'வேண்டாதாரை அழித்தலும் வேண்டியவரை உயர்த்தலும்', 'அவனுக்கு விருப்பமில்லாதவர்களுக்குச் சாபமிட்டுக் கெடுப்பதும், அவனுக்கு விருப்பம் உள்ளவர்களுக்கு வரம் கொடுத்து வாழ வைப்பதும்', 'பகைவரை அழித்தலும் நண்பரை உயர்த்தலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
பகைவரை அழித்தலும் வேண்டியவரை உயர்த்தலும் என்பது இப்பகுதியின் பொருள்.
எண்ணின் தவத்தான் வரும்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வலி ஆராயின் முன்செய்த தவத்தினாலே வரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது.
பரிப்பெருமாள்: வலி ஆராயின் முன்செய்த தவத்தினாலே வரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறரை யாக்குதலும் கெடுத்தலுந் தவத்தினாலே வருமென்றது.
பரிதி: தவத்தால் வரும் என்றவாறு.
பரிமேலழகர்: தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ வலியான் அவை அவர்க்கு உளவாம்.
பரிமேலழகர் குறிப்புரை: முற்றத் துறந்தார்க்கு ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்கு அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார் பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும் நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார் மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு. [முற்றத் துறந்தார்க்கு அகப்பற்று, புறப்பற்று அனைத்தையுந் துறந்தார்க்கு; ஏற்றியுரைத்தல் --ஒருபொருள் இல்லாத குணத்தை யாதானுமோர் இயைபுபற்றி அவற்றிற்குளவாகச் சொல்லுதல்]
'ஆராயின்/நினைப்பராயின் தவத்தினாலே வரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'இந்த ஆற்றல் நினைப்பின் தவத்தால் வரும்', 'நினைத்த அளவிலே தவ ஆற்றலால் கைகூடும்', 'தவசி நினைத்தால் செய்ய முடியும்', 'நினைத்தால் தவத்தால் முடியும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
நினைத்தால் தவத்தால் முடியும் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
பகைவரை அழித்தலும் வேண்டியவரை உயர்த்தலும் நினைத்தால் தவத்தால் முடியும் என்பது பாடலின் பொருள்.
தவத்தால் அழிக்கவும் ஆக்கவும் முடியுமா?
|
கொடியோரை ஒடுக்கவும் நல்லோர்க்குத் தேவையான உதவிகளைச் செய்யவும் விரும்புகிறீர்களா? அவை தவத்தால் கைகூடும்.
தீங்கு செய்யும் பகைவரை ஒடுக்கவும், நன்மையாயிருப்போரை ஆக்கமுடையராக்கலும் எண்ணினால் அவ்வாற்றல் தவவலிமையாலே எளிதாக வரும்.
ஒருவர்க்குத் தன் செல்வ பலத்தாலோ செல்வாக்கினாலோ ஒன்னாரைத் தெறலும் உவந்தாரை ஆக்கலும் ஆகும் என்பது உலகியல். ஆனால் தவத்தின் பயனாகவும் அவ்வலிமையைப் பெறமுடியும் என்கிறார் வள்ளுவர். தீயோரை அடக்கித் திருத்துவதற்கும் அன்பிற்குரியவர்களை உயர்த்துவதற்கும் ஆற்றல் தவத்தால் அதாவது தன் துன்பம் பொறுத்து, பிற உயிர்க்குத் துன்பம் செய்யாமல் வாழும் இல்லறத் தவவாழ்க்கையால் கிடைக்கும் என்கிறது பாடல்.
இக்குறளுக்குப் பலரும் 'பகைவரைத்தெறுதலும், நட்டோரை யாக்குதலும் தவத்தின் பயன்' என்ற கருத்திலேயே உரை தந்தனர். இதிலே அறம் உள்ளதா? என்று ஐயுற்றவர்கள் 'தம் அறவொழுக்கத்திற்கு இடையூறாக இருந்தவரைக் கெடுத்தலும், தாம் செய்யும் தவவொழுக்கத்தை உவந்தாரை ஆக்கலுமாகிய இரண்டும் தவத்தின் பயன்’ என்று மாற்றி உரைத்தனர்.
ஒன்னார்த் தெறல் என்பதற்கு பகைவரை அழிக்கத் தவம் ஒரு கருவியாகக் கொள்ளப்படும் என்பதினும் அவர்களைத் திருத்தித் தீமைகளை அழித்தலுக்குத் தவம் பயன்படும் என்னும் பொருள் சிறக்கும்.
'எண்ணின்' என்றதனால், தவம் செய்வார் தெறலும் ஆக்கலும் இயல்பாகவே எண்ணமாட்டார் என்பது பெறப்படும்.
|
தவத்தால் அழிக்கவும் ஆக்கவும் முடியுமா?
தொன்மங்களில் வரும் முனிவர்கள் சினங்கொண்டு சாபங் கொடுத்து அழிப்பதையும் வரங்கொடுத்து வாழவைப்பதையும் சொல்கிறதா இப்பாடல்?
பிறருக்குச் சாபமிடுவதோ அல்லது வரங் கொடுப்பதோ தவம் செய்வதனால் பெற்ற மிகப்பெரும் ஆற்றலால் என்று முன்பு நம்பப்பட்டது. அதைத் தவவலிமை என்றழைத்தனர். ஆனால் வள்ளுவர் கூறும் ஆற்றல் அது அல்ல. தவ வலிமையால், பகைவரை அடக்கலாம்; நண்பரை உயர்த்தலாம் என்று அவர் கூறுவது தத்துவம் சார்ந்த அறக் கருத்தும் அல்ல.
பகைவரைக் கெடுத்தல் வேண்டியவர்க்கு ஆக்கம் தருதல் ஆகியன தவமுடையார் எண்ணிய அளவிலேயே செய்ய இயலும் என்றால் அது இறைஆற்றலுக்கு நேர் அல்லவா? அது தவத்தின் பயன் என்று வள்ளுவர் எப்படிச் சொல்வார்?
பின் தவம் செய்வோரால் தெறலும் ஆக்கலும் எப்படி முடிகிறது?
தவத்தின் பயன் என்ன அதாவது தவத்தால் என்ன செய்ய முடியும்? என வள்ளுவர் ஆய்கிறார்.
தவம் பேராற்றல் தரவல்லது எனச் சொல்ல வருகிறார் இங்கு.
தவம் என்ற சொல்லுக்கு முயற்சி, கடுமையான உழைப்பு என்றும் பொருள் கொள்ளலாம்.
விடாமுயற்சியால் மிகுதியான் மிக்கவை செய்தாரை வள்ளுவர் கூறியபடி (குறள் 158) நாம் நம் தகுதியால் வென்றுவிடலாம். இது 'ஒன்னார்த் தெறல்' என்பதை விளக்கும். கடுமையான உழைப்பின் மூலம் முதலில் தன்னுடைய நிலையை உயர்த்திக்கொண்டு பின் நல்லோர்க்கு நன்மை செய்ய இயலும்; இதுவே 'உவந்தாரை ஆக்கல்' என்பதாம்.
|
பகைவரை அழித்தலும் வேண்டியவரை உயர்த்தலும் நினைத்தால் தவத்தால் முடியும் என்பது இக்குறட்கருத்து.
தவம் செய்வதால் பெறப்படும் பெரும் ஆற்றல் ஒன்று சொல்லப்படுகிறது.
நினைத்தால் பகைவரை அழித்தலும் வேண்டியவரை உயர்த்தலும் தவ ஆற்றலால் கைகூடும்
|