இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0267



சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு

(அதிகாரம்:தவம் குறள் எண்:267)

பொழிப்பு (மு வரதராசன்): புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல், தவம் செய்கின்றவரைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.

மணக்குடவர் உரை: நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போலத் துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும்.
இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.

பரிமேலழகர் உரை: சுடச்சுடரும் பொன் போல் - தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும். தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.
( 'சுடச்சுடரும் பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.)

தமிழண்ணல் உரை: தங்கத்தை நெருப்பிலிட்டுச் சுடச்சுட அது மாசு நீங்கி ஒளிவிடும். அதுபோல் துன்பமானது சுடச்சுட அதைத் தாங்கிக் கொள்பவர்களுக்கு வாழ்க்கை ஒளிவீசித் திகழும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
சுடச்சுடரும் பொன்போல் துன்பம் சுடச்சுட நோற்கிற் பவர்க்கு ஒளிவிடும்.

பதவுரை:
சுட-காய்ச்ச; சுடரும்-ஒளி வீசுகின்ற; பொன்-தங்கம்; போல்-போல்; ஒளிவிடும்-ஒளி மிகும்; துன்பம்-துயரம்; சுடக்சுட-வருத்த வருத்த; நோற்கிற்பவர்க்கு-நோன்பு இயற்றும் ஆற்றலுடையவர்க்கு.


சுடச்சுடரும் பொன்போல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போல;
பரிப்பெருமாள்: நெருப்பின்கண்ணே இட்ட இடத்துத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போல;
பரிதி: சுடவைத்த பொன் களங்கமற்றது போல;
காலிங்கர்: தீப்பெற்று நின்று ஒளிவிட்டு விளங்கும் பொன்னைப்போல விளங்கா நிற்கும்;
பரிமேலழகர்: தீயின்கண் ஓடும் பொன்னுக்கு அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு போல,
பரிமேலழகர் குறிப்புரை: 'சுடச்சுடரும் பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது.

'நெருப்பின்கண்ணே இட இடத் தன்னோடு கலந்த மாசற்று ஒளிவிடுகின்ற பொன்னைப்போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காய்ச்சக் காய்ச்சப் பொன் ஒளிமிகும்', 'சுடச்சுட புடம்போட்ட தங்கம் ஒளிமிகுதல் போல', 'தீயிலிட்டுக் காய்ச்சக் காய்ச்சக் களிம்பு நீங்கி ஒளி அதிகப்படுகிற தங்கத்தைப் போல', 'சுடச்சுடப் பொன் ஒளி மிகுவதுபோல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தீயில் சுடப் பொன் ஒளிமிகுதல் போல் என்பது இப்பகுதியின் பொருள்.

ஒளிவிடும் துன்பம் சுடக்சுட நோற்கிற் பவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: துன்பம் நலிய நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.
பரிப்பெருமாள்: துன்பம் நலியத் தவஞ்செய்வார்க்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினைவிட் டொளி யுண்டாம் என்றது.
பரிதி: கன்மம் விடும் தவம் செய்கையினாலே விக்கினம் வந்தால் அந்த விக்கினத்தைப் பாராமல் தவம் பண்ணுவார்க்கு என்றவாறு.
காலிங்கர்: யாதோவெனில் வீட்டின்பமாகிய ஒரு பெரும் பொருள்; யார்க்கு எனின் முன் தம் மாட்டு வந்து மயங்கிக் கிடக்கின்ற அவங்களானவற்றை உருவழியச் சுடுமாறு பலயாண்டும் பயிலக் குறிக்கொண்டு நோற்றலை வல்லாற்கு என்றவாறு.
பரிமேலழகர்: தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும்.
பரிமேலழகர்: ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.

'துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு மருவின வினை விட்டு ஒளிவிடும்/வீட்டின்பமாகிய ஒரு பெரும் பொருள்/கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும் என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'துறவிக்குத் துன்பம் தாக்கத் தாக்க மெய்யறிவு மிகும்', 'தவம் செய்ய வல்லவர்க்குத் துன்பம் வருத்த வருத்த மெய்யறிவு (ஞானம்) வரும்', ' எவ்வளவு துன்பங்கள் அடுத்தடுத்து வந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் தவம் செய்கிறவர்களுக்குத் தவ வலிமை அதிகமாகும்', 'துன்பங்கள் வருத்தத் தவம் செய்கின்றவர்க்கு அறிவு விளக்கம் உண்டாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தவம் செய்கிறவர்களுக்குத் துன்பம் வருத்த வருத்த சிறப்பு மிகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தீயில் சுடப் பொன் ஒளிமிகுதல் போல் துன்பம் சுடக்சுட தவம் செய்கிறவர்களுக்குத் துன்பம் வருத்த வருத்த ஒளிவிடும் என்பது பாடலின் பொருள்.
'ஒளிவிடும்' என்ற சொல் குறிப்பது என்ன?

சுட்டால் பொன் மிளிரும்; துன்பத்தால் தவம் சிறக்கும்.

புடத்தில் இட்டுச் சுடப் பொன்னானது ஒளி மிகுந்து விளங்கும். அதுபோலத் துன்பம் வருத்த வருத்தத் தவம் செய்வோர் சுடர்போன்று ஒளிமிகுந்து விளங்குவர்.
எவ்வளவு சுட்டாலும் சுடச் சுடரும் பொன். பொற்கொல்லர் தங்கத்தைத் தீயிலிட்டுத் தூய்மை செய்வர். அதற்குப் புடம்போடுதல் என்று பெயர். தீயிலிடப்பட்ட பொன் மாசு நீங்கப் பெற்று முன்னிலும் மிகையாக ஒளிரும். பொன் தன் தன்மையிலே ஒளி உடையதாதலால் அதை சுடும்போது ஒளி மிகும் என்று கூறப்படுகிறது. பொன் சுடச்சுட ஒளி மிகுமாப் போலே, தவஒழுக்கம் மேற்கொள்ளும் ஒருவரைத் துன்பம் காய்ச்சக் காய்ச்ச ஒளி மிகுந்து விளங்குவர் என்கிறது பாடல்.

பொறுமையுடன் துன்பத்தைத் தாங்குதல் தவத்தின் முக்கியக் கூறாகக் கருதப்பெறுகிறது. இயல்பாக வரும் துன்பத்தைத் தாங்குதல் என்ற கருத்திலேயே தவம் அதிகாரத்து உள்ள குறட்பாக்கள் அமைந்துள்ளன. உடலை வேண்டுமென்றே வாட்டுவது வள்ளுவர் கருத்தாக இராது. எனவே இயல்பாக உறும் துன்பத்தைப் பொறுத்து அத்துன்பத்தின்மேல் துன்பமாய் வருவதையும் தாங்குபவர் மிகப் பொலிவோடு விளங்குபவர் என்பது சொல்லப்பட்டது.
தவம் என்பது ஒருமுகப்படுத்தும் ஒரு பயிற்சி, முயற்சி. அதை முயல்பவர் எத்தனையோ தடங்கல்களையும், துன்பங்களையும் எதிர்கொள்வது இயல்பே. அவற்றையெல்லாம் தாண்டி, பொறுத்துகொண்டு, குறிக்கோளை அடைந்து ஒளிவீசித் திகழ்வர் என்றபடியும் இக்குறளுக்குப் பொருள் கூறுவர்.

துன்பம் பொதுவாக அழிவுக்கு ஏதுவாக அமைவது. துன்பங்கள் ஒருவரைத் தூய்மைப்படுத்த வருகின்றன என்பதாகவும் உலக மக்களிடை ஒரு நம்பிக்கை உண்டு. வள்ளுவர் வெளிப்படையாக எங்கும் அப்படிச் சொல்லவில்லையென்றாலும் இக்குறள் அதுபோன்ற கருத்தை வழங்குவதைக் காணலாம்.

'ஒளிவிடும்' என்ற சொல் குறிப்பது என்ன?

'ஒளிவிடும்' என்றதற்குத் தம்மோடு மருவின வினை விட்டு ஒளிவிடும் (வினைவிட்டு ஒளியுண்டாம்), கன்மம் விடும், வீட்டின்பமாகிய ஒரு பெரும் பொருள் விளங்கா நிற்கும், தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும், மெய்யுணர்வு மிகும், வாழ்க்கை ஒளிவீசித் திகழும், தவத்தின் ஆற்றலை -ஒளியை வளர்க்கும், மெய்யறிவு மிகும், மெய்யறிவு (ஞானம்) வரும், தவ வலிமை அதிகப்பட்டு ஞான ஒளி உண்டாகும், உள்ளொளி உண்டாகும், பாவம் நீங்கி ஞானம் விளங்கும் (மிகுதிப்படும்), அறிவு விளக்கம் உண்டாகும், மெய்யுணர்வு ஒளியுடன் விளங்கும், தம் தீவினைத் தன்மையும் நீங்கித் தெள்ளறிவு மிகும், தவ ஒளி ஆன்மாவில் ஒளி வீசிக் கொண்டிருக்கும், (அறிவாகிய) ஒளி மிகும் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இச்சொல்லுக்கு 'அறிவு மிகும்' என்றே பெரும்பான்மையர் பொருள் கூறியுள்ளனர்.
சுடப்பட்ட பொன்னிடத்து ஒளிமிகுதியைக் காணுமாறு போலத் துன்பம்பட நோற்றாரிடத்து ஒளிமிகுந்து காணப்படும் என்பதைச் சொல்வது இக்குறள். 'ஒளிவிடும்' என்னும் சொல் பொன்னுக்கும் நோற்கிற்பவர்க்கும் பொதுவாக அமைந்துள்ளது.
உற்றநோய் (நேரும் துன்பம்) நோன்றல் (261) என்பது இங்கு சுடச் சுடரும் என விரித்துரைக்கப்படுகிறது. உற்றநோய் நோன்றல் தவத்திற்கு உரு என்று கூறியதற்கு விளக்கம் இது எனக் கொள்ளலாம். துன்பங்களை- இழப்பை-இடரை-இன்னலை- தடையைத் தாங்கிக் கொண்டு வாழ்பவர்கள் ஒளிமிகுந்தவராய் இருப்பார்கள். வாழ்க்கையில் நேரும் இயல்பான துன்பங்களைப் பொறுமையாகத் தாங்குபவர் உயிரொளி விளங்கத் தோன்றுவர் என்பது கருத்து.

சுடச்சுடப் பொன் ஒளிமிகுதல் போல் தவம் செய்கிறவர்களுக்குத் துன்பம் வருத்த வருத்த சிறப்பு மிகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நெருப்பாற்றில் நீந்துமாறு தவம் செய்பவன் ஒளிவீசித் திகழ்வான்.

பொழிப்பு

சுடச்சுட பொன் ஒளி ஒளிமிகுதல் போல் தவம் செய்கிறவர்களுக்குத் துன்பம் வருத்த வருத்த சிறப்பு மிகும்.