இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0266



தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார்
அவம்செய்வார் ஆசையுள் பட்டு

(அதிகாரம்:தவம் குறள் எண்:266)

பொழிப்பு (மு வரதராசன்): தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமைகளைச் செய்கின்றவர் ஆவர்; அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு வீண்முயற்சி செய்கின்றவரே.

மணக்குடவர் உரை: தங்கருமஞ் செய்வார் தவம் செய்வார்; அஃதல்லாதன செய்வாரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார்.
இது தவம்பண்ண வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: தம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார், மற்று அல்லார் ஆசையுள் பட்டு அவம் செய்வார் - ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார்.
(அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.)

தமிழண்ணல் உரை: தமது கடமையைச் செய்பவரே தவம் செய்பவர் ஆவார்; அவ்வாறல்லாமல் பிறவாறு முயல்பவரெல்லாம் தத்தமது ஆசைகளுக்கு ஆட்பட்டு, அவற்றையடைவான் வேண்டி வீண்வேலை செய்பவரே ஆவார்.
யோகத்திலமர்ந்து தவம் செய்வோரேயாயினும் அதைத் தம் கடமையாகக் கருதிச் செய்தல் வேண்டும். 'தவம் செய்பவர் மட்டுமே தம் கடமையைச் செய்பவர்' என்று பொருள் சொல்வது 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை', 'முயல்வாருள் எல்லாம் தலை' போலும் வள்ளுவக் கருத்துக்களுக்கு முரணாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தம்கருமம் செய்வார் தவஞ்செய்வார்; மற்றல்லார் ஆசையுள் பட்டு அவம்செய்வார்.

பதவுரை:
தவம்-நோன்பு; செய்வார்-இயற்றுவார்கள்; தம்-தமது; கருமம்-செயல்; செய்வார்-செய்பவர்கள்; மற்று-அவ்வாறன்றி; அல்லார்-அல்லாதவர்; அவம்-வீண்செயல்; செய்வார்-இயற்றுவார்கள்; ஆசையுள்பட்டு-ஆசையுள் அகப்பட்டு.


தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தங்கருமஞ் செய்வார் தவம் செய்வார்;
பரிப்பெருமாள்: தங்கருமஞ் செய்வார் ஆவார் தவம் செய்வார்;
பரிதி: நிலையாமை, நோய், மூப்புச் சாக்காடு என்று எண்ணித் தலையாவார் தங்கருமஞ் செய்வர்;
பரிதி குறிப்புரை: தங்கருமமாவன: தவம், பூசை, நியதி, தானம், தன்மம் என்பன.
பரிமேலழகர்: தம் கருமம் செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார்;

'தங்கருமஞ் செய்வார் தவம் செய்வார்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'துறந்து தவத்தைச் செய்வார்' எனச் சொல்வதால் துறவியரை மட்டுமே குறிக்கின்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தவஞ்செய்பவரே தங்காரியம் செய்பவர்', 'தவம் செய்வோர் என்பார் ஆசை யற்றுத் தமக்குரிய செயல்களைச் செய்வாராவர்', 'தவத்தை மேற்கொண்டவர்கள் தம்முடைய தவக் காரியத்தையே செய்துகொண்டிருக்க வேண்டும்', 'தன் கடன்களைக் குறைவறச் செய்கின்றவர் தவம் செய்வாரே ஆவார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் கடமைகளைக் கருத்துடன் செய்கின்றவர் தவம் செய்வார் ஆவார் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதல்லாதன செய்வாரெல்லாம் ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார்.
மணக்குடவர் குறிப்புரை: இது தவம்பண்ண வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அஃதல்லாத செய்வாரெல்லாம் ஆசையிலே யகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தவம்பண்ண வேண்டுமென்றது.
பரிதி: மற்றல்லாதார் செனனவழி தேடி ஆசை விலங்கிட்டு அவம் செய்வார் என்றவாறு.
பரிமேலழகர்: ஒழிந்த பொருள் இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார்.
பரிமேலழகர் குறிப்புரை: அநித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம் வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப் பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம் செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள் அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும் துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம் செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண் வந்தது.

'மற்றல்லாதார் ஆசை விலங்கிட்டு அவம் செய்வார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் ஆசையால் வீண்காரியம் செய்பவர்', 'தவம் செய்யாதவர் ஆசை வலையுட் சிக்கி வீண் வேலை செய்பவராவார்', 'அதைவிட்டுச் சாபமிடுவதிலும் வரங்கொடுப்பதிலும் இறங்கிவிடுகிறவர்கள் மறுபடியும் முன் அவர்கள் விட்டுவிட்ட உலக ஆசைகளில் சிக்கிக் கொண்டு தமக்கும் பிறருக்கும் தீங்கு செய்கிறவர்கள் ஆவார்கள்', 'மற்றவர்கள் ஆசைக்கு அடிமையாகி பயனில் முயற்சிகளைச் செய்வார் ஆவார்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பிறர் ஆசையுள் மாட்டிக்கொண்டு வீண்செயல் செய்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன் கடமைகளைக் கருத்துடன் செய்கின்றவர் தவம் செய்வார் ஆவார்; பிறர் ஆசையுள் மாட்டிக்கொண்டு வீண்செயல் செய்பவர் என்பது பாடலின் பொருள்.
'அவம்செய்வார் ஆசையுள் பட்டு' என்ற பகுதி குறிப்பதென்ன?

கருத்துடன் தம் கடமையாற்றுபவர் செய்வது தவம்; பிறர் செய்வது அவம்.

தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார் என்பதைவிட 'தம் கருமம் செய்வார் தவம் செய்வார்' என்று வாசிப்பது சிறந்த பொருள் தருகிறது. தம் கடமையையே தவமாகச் செய்யவேண்டுமென்பதாம்.
தம்முடைய கடமைகளைச் செய்பவர் தவம் செய்பவர் ஆவர். அவ்விதம் தவம் செய்யாதவர் மற்ற ஆசையுள் மாட்டிக்கொண்டு வீண் செயலைச் செய்கின்றவரே ஆவர் என்கிறது பாடல்.
மனித வாழ்க்கையின் அடிப்படை நோக்கம் தன் கடன் செய்தலும் பிற உயிர்களின் நலம் பேணுவதுமாம். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் கடமை என்று ஒன்று இருக்கிறது. அதை நன்கு உணர்ந்து, உற்றநோய் நோன்று, உயிர்க்கு உறுகண் செய்யாமல், தம் கடமையைச் செய்கின்றவர்கள் தவம் செய்கின்றவர்கள்; மற்றவர்கள் ஆசைகளில் அகப்பட்டு வாழ்க்கைக்கு வேண்டாதவற்றைச் செய்து தனக்கும் தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்கும் கேடு விளைப்பார்கள். தமக்குரிய கடமைகளை முழுமை பெறச் செய்து தாம் ஈடுபட்ட தொழில் சிறக்கப் பாடுபட்டுத் தாமும் சிறப்புறுவதே வள்ளுவர் கருதும் தவமாகும். தத்தம் கடமைகளைச் செய்தல் தவம்; கடமைகளைச் செய்யாதொழித்துப் பிறவற்றைச் செய்தல் அவம் என்கிறார் அவர்.

'அவம்செய்வார் ஆசையுள் பட்டு' என்ற பகுதி குறிப்பதென்ன?

'அவம்செய்வார் ஆசையுள் பட்டு' என்றதற்கு ஆசையிலே அகப்பட்டுப் பயனில்லாதன செய்கின்றார், செனனவழி தேடி ஆசை விலங்கிட்டு அவம் செய்வார், பொருள் இன்பங்களின்கண் ஆசையாகிய வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார், ஆசை வலையில் அகப்பட்டு வீண்முயற்சி செய்கின்றவரே, தத்தமது ஆசைகளுக்கு ஆட்பட்டு, அவற்றையடைவான் வேண்டி வீண்வேலை செய்பவரே ஆவார், கடமையைச் செய்யாது தவம் செய்வார் போலக் காட்டி மாறுபட்டனவற்றைச் செய்து ஆசை வழிப்பட்டுக் கேடு செய்பவராவார், ஆசையால் வீண்காரியம் செய்பவர், ஆசை வலையுட் சிக்கி வீண் வேலை செய்பவராவார், மீண்டும் உலக ஆசைகளில் சிக்கிக் கொண்டு தவத்துக்குக் கேடு செய்கிறவன், ஆசை என்னும் பிடியுள்பட்டு வீண் செயல் செய்பவரே, ஆசையாகிய வலையிற்பட்டு வீண்தொழில் செய்பவர்களே, ஆசைக்கு அடிமையாகி பயனில் முயற்சிகளைச் செய்வார் ஆவார், ஆசைக்கு அடிமைப்பட்டு வீண் செயலைச் செய்வோரே ஆவர் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தவத்திற்கு எதிர்ப்பதம் அவம் என்பது. அவம் என்பதற்கு வீண்முயற்சி என்றும் கேடு என்றும் பழிப்பு என்றும் பொருள் கூறுவர்.
தவ உணர்வு இல்லாதவர்கள், தம் கடமைகளை விட்டு தன்னலத் தேட்டமான ஆசைக்கு ஆட்பட்டு வீணான / கேடானவற்றைச் செய்வார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

தன் கடமைகளைக் கருத்துடன் செய்கின்றவர் தவம் செய்வார் ஆவார்; பிறர் ஆசையுள் மாட்டிக்கொண்டு வீண்செயல் செய்பவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செய்யுந் தொழிலே தெய்வம் எனத் தவம் செய்க.

பொழிப்பு

தமக்குரிய செயல்களைச் செய்பவர் தவஞ்செய்பவர்; பிறர் ஆசையால் வீண்செயல் செய்பவர்