இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0269



கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு

(அதிகாரம்:தவம் குறள் எண்:269)

பொழிப்பு (மு வரதராசன்): தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர் இடையூறும் இல்லையாகையால்) யமனை வெல்லுதலும் கைகூடும்.

மணக்குடவர் உரை: கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்; தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு.
இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.

பரிமேலழகர் உரை: கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு.
(சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: தவத்தின் ஆற்றல் கைகூடியவர்கட்கு யமனைத் தாண்டுதலும் இயலும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்குக் கூற்றம் குதித்தலும் கைகூடும்.

பதவுரை:
கூற்றம்-எமன்; குதித்தலும்-கடத்தலும் அல்லது தாண்டுதலும்; கைகூடும்-இயலும்; நோற்றலின்-தவம் காரணமாக; ஆற்றல்-வலிமை; தலைப்பட்டவர்க்கு-எய்தியவர்க்கு.


கூற்றம் குதித்தலும் கைகூடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்;
பரிப்பெருமாள்: கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்;
பரிதி: தலை எழுத்து முடிந்த நாள்வர அப்போது கூற்றுவனையும் வெல்லலாம்;
பரிமேலழகர்: கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம்;
பரிமேலழகர் குறிப்புரை: சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும்.

'கூற்றத்தைத் தப்புதலுங் கைகூடும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூற்றுவனிடமிருந்து தப்பிப் பிழைத்தலும் வாய்க்கும்', 'எமனை வெல்லுவதும் சித்திக்கும்', 'யமனை வெல்லுவதும் இயல்வதேயாம்', 'சாவையும் வெல்லுதல் முடியும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கூற்றுவனைத் தாண்டுதலும் இயலும் என்பது இப்பகுதியின் பொருள்.

நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு.
மணக்குடவர் குறிப்புரை: இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.
பரிப்பெருமாள்: தவத்தினாகிய வலியைக் கூடினார்க்கு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மார்க்கண்டேயன் தப்பினாற்போல வென்றது.
பரிதி: தவத்திற் பெரியோர்க்கு என்றவாறு.
பரிதி குறிப்புரை: அதற்கு நந்திகேசுவர தேவனையும், மார்க்கண்டனையுங் கண்டு கொள்க என்பது.
பரிமேலழகர்: தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு.
பரிமேலழகர் குறிப்புரை: ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.

'தவத்தான் வரும் ஆற்றலைக் கூடினார்க்கு' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்கு (நெடிது வாழ்வர் என்பது கருத்து)', 'தவ வலிமையில் தலைசிறந்தவர்களுக்கு', 'தவஞ் செய்தலால் வரும் உயர்ந்த வலிமையை அடைந்தவர்க்கு', 'தவம் செய்தலினால் வலிமை மிகுந்தவர்க்கு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தவத்தின் ஆற்றல் கைவரப் பெற்றவர்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தவத்தின் ஆற்றல் கைவரப் பெற்றவர்க்குக் கூற்றுவனைத் தாண்டுதலும் இயலும் என்பது பாடலின் பொருள்.
'கூற்றம் குதித்தல்' என்றால் என்ன?

தவம் செய்து வல்லமை பெற்றவர்க்குக் கூற்றுவனையும் சுற்றிச்செல்ல முடியும்.

தவம் செய்வதால் பெற்ற ஆற்றலால் கூற்றை மேற்செல்வதும் இயலும். கூற்றுவன் என்பது சாவுக்குப் பொறுப்பாகிற கடவுள் என்று தொன்மங்கள் கூறும். இது யமன், எமன், காலன் என்ற பெயரகளாலும் அறியப்படுவது. பரிதி 'தலை எழுத்து முடிந்த நாள்வர, அப்போது கூற்றுவனையும் வெல்லலாம், தவத்திற் பெரியோர்க்கு. அதற்கு நந்திகேசுவர தேவனையும் மார்க்கண்டேயனையும் கண்டுகொள்க' என உரை பகன்றார்.

தவத்தின் ஆற்றல் கைகூடியவர்கள் 'கூற்றுவனையும்கூட தாண்டிச் செல்ல முடியும்' என வள்ளுவர் தவம் செய்வதை மேம்படுத்தி உரைக்கிறார். தவ வலிமை என்பது மனவலிமையைக் குறிப்பது. உளவலிமை ஏற்படத் தெளிவு உண்டாகும். மனத்தில் அமைதி ஏற்படும். இத்தகைய பயிற்சி பெரு வலிதரும். அப்பயிற்சி பெற்றவர்களுக்குத் தமது சாவு உண்டாவது பற்றிக் கவலை உண்டாகாது. தவம் மேற்கொண்டவேளை அனுபவித்த துன்பங்களைத் தாங்கியவர்களுக்கு மரண வேதனையை எளிதாக எதிர்கொள்ள முடியும். இதைத்தான் கூற்றம் குதித்தலும் கைகூடும் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

'கூற்றம் குதித்தல்' என்றால் என்ன?

'கூற்றம் குதித்தல்' என்ற தொடர்க்குக் கூற்றத்தைத் தப்புதல், கூற்றுவனையும் வெல்லல், கூற்றத்தைக் கடத்தல், யமனை வெல்லுதல், கூற்றத்தை வெற்றிகொள்வது, காலனை எதிர்த்து வெற்றி பெறுதல், கூற்றுவனிடமிருந்து தப்பிப் பிழைத்தல், எமனை வெல்லுவது, சாவையும் வெல்லுதல், காலனையும் கடந்து வெல்லுதல், கூற்றத்தைக் (கடந்து) குதித்தல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இத்தொடர்க்குக் கூற்றுவனையும்கூட அஞ்சவைக்கமுடியும், எமனை வெல்ல முடியும் தவ வலிமையுடையாரின் உயிரைப் பறிக்க முடியாது என்றும், கூற்றையும் கடந்து அழிவில்லாத வாழ்வு வாழ்வர். சிரஞ்சீவியாய் இருப்பர் என்றும் பொருள் கூறினர்.
சாவு இயற்கையின் செயல். இதை யாரும் தடுக்க முடியாது. எனவே சாவை வெல்வது என்பது இயலாதது. அதைத் தள்ளிப் போடவும் முடியாது. தவம் என்பது ஒரு கடுமையான பயிற்சியாதலால் அது உடலுக்கு நேரக்கூடிய புறத்துன்பங்களைத் தாங்ககூடிய வலிவை தந்துவிடும். ஆனால் தவம் ஒருவரை இறவாமல் இருக்கச் செய்யும் என்பது இயற்கைக்கு மாறானது.
சாவு பற்றிய பயம் இல்லாமல் உயிர் எளிமையாகப் பிரியும் என்பதையும் எமவாதனை என்று சொல்லப்படுகிற சாவில் ஏற்படும் வேதனைகளையும் தவம் செய்தவர் உணரமாட்டார் என்பதையுமே கூற்றம் குதித்தல் என வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
குதித்தலும் என்பதிலுள்ள சிறப்பும்மை கூற்றத்தைக் கடத்தல் இயலாது என்பதனையே உணர்த்தும்.

'கூற்றம் குதித்தல்' என்பது சாவு பற்றிய அச்சத்தை வெல்வதையும் மரணகால துன்பங்கள் வருத்தாமல் இருப்பதையும் குறிக்கும்.

தவத்தின் ஆற்றல் கைவரப் பெற்றவர்க்குக் கூற்றுவனைத் தாண்டுதலும் இயலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தவம் செய்து ஆற்றல் அடைந்தவர்க்குச் சாவு பற்றிய பயம் இல்லை.

பொழிப்பு

தவத்தால் வரும் ஆற்றலைப் பெற்றவர்க்குக் கூற்றுவனைத் தாண்டுதலும் இயலும்.