இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0265



வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்

(அதிகாரம்:தவம் குறள் எண்:265)

பொழிப்பு (மு வரதராசன்): விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

மணக்குடவர் உரை: விரும்பின விரும்பினபடியே வருதலால், தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும்.
இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.

பரிமேலழகர் உரை: வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் - செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும்.
('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: விரும்பியனவற்றை விரும்பியவாறு அடைதலால், தவத்தால் அஃது இவ்வுலகில் முயன்று செய்யப்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப்படும்.

பதவுரை:
வேண்டிய-விரும்பியவை; வேண்டியஆங்கு-விரும்பியவாறு; எய்தலால்-பெறலாம் ஆதலால்; செய்தவம்-தவம்செய்தல்; ஈண்டு-இங்கேயே (இல்லறத்திலேயே); முயலப்படும்-முயற்சிக்கப்படும்.


வேண்டிய வேண்டியாங்கு எய்தலால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விரும்பின விரும்பினபடியே வருதலால்;
பரிப்பெருமாள்: விரும்பினவற்றை விரும்பினபடியே வருதலால்;
பரிதி: தான் வேண்டின காமியத்தைத் தவம் தருகையினாலே;
காலிங்கர்: அணிமாதியாகிய சித்திகளும் சுவர்க்கமும் முத்தியும் என்பனவற்றுள் தாம் விரும்பியவற்றை மற்றவ் விரும்பிய வண்ணமே ஒரு குறைபாடின்றிப் பெறுதலினான்;
காலிங்கர் குறிப்புரை: வேண்டிய என்பது விரும்பிய.
பரிமேலழகர்: முயன்றால் மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்;

'விரும்பின விரும்பினபடியே வருதலால்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்' என மறுமைப்பயனை இணைத்துக் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வேண்டுவன வேண்டியபடி பெறலாம் ஆதலின்', 'தாம் விரும்பிய பயன்களை விரும்பியவாறே பெறலாம் ஆதலால்', 'வெறுப்பு விருப்புகளினால் சாபமிடுவதையோ வரங்கொடுப்பதையோ நினைத்ததை நினைத்தபடி செய்துவிட்டால்', 'விரும்பியவற்றை விரும்பியவாறே தவத்தாற் பெற்க் கூடுமாதலால்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விரும்பியவற்றை விரும்பியவாறே பெறலாம் ஆதலால் என்பது இப்பகுதியின் பொருள்.

செய்தவம் ஈண்டு முயலப்படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும்.
மணக்குடவர் குறிப்புரை: இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
பரிப்பெருமாள்: தவஞ்செய்தலை இவ்விடத்து முயல வேண்டும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.
பரிதி: மேன்மேலே தவம் பண்ணுவான் என்றவாறு.
காலிங்கர்: மற்றவை அவற்றிற்குரியதாகச் செய்யத்தக்கது; தவமாவது உலகத்து மக்களுள் சிறந்தாரால் செய்ய அடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக் கூறப்பட்டது.

'தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் ஈண்டு என்பதற்கு இம்மை எனப் பொருள் கொண்டு உரைக்கின்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உரிய தவத்தை உடனே முயலுக', 'செய்ய வேண்டிய தவத்தை இல்வாழ்க்கையிலேயும் செய்ய வேண்டும்', 'செய்த தவத்தை மீண்டும் தொடங்க வேண்டும்', 'தான் செய்யக்கூடிய தவத்தை ஒருவன் இம்மையிலே முயலல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உரிய தவத்தை இங்கேயே முயற்சிக்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
விரும்பியவற்றை விரும்பியவாறே பெறலாம் ஆதலால் உரிய தவத்தை ஈண்டு முயற்சிக்க வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'ஈண்டு' என்ற சொல்லின் பொருள் என்ன?

தவம் செய்பவர் தாம் விரும்பியவற்றை விரும்பியவாறே பெறுவராதலால், செய்தற்குரிய தவத்தை இப்பொழுதே இங்கேயே முயற்சிக்க வேண்டும்.

இப்பாடலிலுள்ள செய்தவம் என்பது இல்லற நெறியில் இருந்துகொண்டே மேற்கொள்ளும் முயற்சித் தவத்தைக் குறிக்கும். துறவில்தான் தவம் செய்யவேண்டும் என்பதில்லை. இந்நிலையிலும் அதாவது இல்வாழ்விலிருந்தே தவம் முயற்சிக்கலாம் என்கிறது பாடல்.
உற்றநோய் நோன்று, உயிர்க்கு உறுகண் செய்யாமல், நன்மை பயக்கும் தவத்தை-ஒரு குறிக்கோளை, விருப்பாற்றலை, முயற்சியுடன் செய்தால், விரும்பியவையெல்லாம் விரும்பியவாறே பெறக்கூடிய வலிமை அத்தவத்துக்கு உண்டு எனச்சொல்லி அதைச் செய்ய இக்குறள் விரைவுபடுத்துகிறது. பல்வேறு சூழ்நிலைகளிலும், துன்பங்களிலும் தான் மேற்கொண்ட குறிக்கோளின் சிந்தனையிலேயே ஆழ்ந்து வெற்றிபெறுதலே முயற்சித்தவம். கட்டுப்பாடுடனும் ஒருமுக எண்ணத்துடனும் அக்கறையுடனும் விடாமுயற்சிகொண்டு உழைத்தால் ஒருவர் எந்தத் துறையில் ஈடுபட்டிருந்தாலும் எண்ணியவாறே தாம் எண்ணியதைப் பெற்று உயர்வர். இதுவே தவத்தால் வந்த பயன் எனப்படுவது. தம் கருமம் செய்து முடித்தல் தவமாகிறது. தவத்தாலும் தாம் வேண்டியவற்றை வேண்டியவாறே பெற முடியும் என உறுதியோடு உரைக்கின்றார் வள்ளுவர் இப்பாடலில்.

'ஈண்டு' என்ற சொல்லின் பொருள் என்ன?

'ஈண்டு' என்ற சொல்லுக்கு இவ்விடத்தே, இவ்விடத்து, மேன்மேலே, அவற்றிற்குரியதாக, இம்மைக்கண், இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்), இல்லறத்திலேயே, இப்பொழுதே, உடனே, இல்வாழ்க்கையிலேயும், மீண்டும், இங்கு, இம்மையிலே, இவ்வுலகில், இந்தப் பிறவியிலேயே என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர் 'போக நுகர்ச்சியும் இதனானே வரும்' என விளக்கம் தருவதால் ஈண்டு என்பதற்கு இல்லறத்திலேயே என்றே அவர் குறிக்கிறார் எனத் தெரிகிறது.
இச்சொல்லுக்கு 'இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்)' என உரை பகன்றார் மு வரதராசன். 'ஈண்டும் என்பதற்கு இல்லறமாகிய இந்நிலையிலும் என்று பொருள் கொள்ளுதலும் ஏற்புடைத்தே; பலரும் நின்ற நிலை, இல்லற நிலையாதலின், அதனை அண்மைச் சுட்டால் குறித்தல் தக்கதேயாம்' என்பார் தெ பொ மீனாட்சிசுந்தரம்.
'ஈண்டு முயலப்படும்' என்றது காலந்தாழ்தாது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காம் என்ற பொருளில் இப்பொழுதே, உடனே என்றும் பொருள் கூறுவர்.
சிலர் 'செய்தவ மீண்டு முயலப்படும்' என்பதை மீண்டும் எனப் பிரித்து மேன்மேலும் என்றும் மறுபடியும் என்றும் பொருள் கூறியுள்ளனர்.
'ஈண்டு முயலப்படும் ' என்றதனால் மறுமையிற் பயன்படும் என்பது பெறப்படும் என உரைப்பார் பரிமேலழகர். இம்மைக்கண் செய்த தவம் மறுமையில் பயன்படும் என்கிறார் இவர்.
ஈண்டு என்ற சொல்லுக்கு இங்கேயே அதாவது இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) என்ற பொருள் பொருத்தமாகப்படுகிறது.

'ஈண்டு' என்றதற்கு இல்லறமாகிய இந்நிலையிலும் என்பது பொருள்.

விரும்பியவற்றை விரும்பியவாறே பெறலாம் ஆதலால் உரிய தவத்தை இங்கேயே முயற்சிக்க வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இல்லறநிலையில் செய்யப்படுவதும் தவம்தான்.

பொழிப்பு

விரும்பியவற்றை விரும்பியவாறே பெறலாம் ஆதலால் உரிய தவத்தை இங்கேயே முயலவேண்டும்.