தகையணங்குறுத்தல் என்பதனை 'அணங்கு தகை உறுத்தல்' என்று மாற்றி 'அணங்கு' என்றால் பெண்; 'தகை' என்பது அழகு முதலியன; 'உறுத்தல்' வருத்தத்தை உண்டாக்குதல்; எனவே இச்சொற்றொடர் 'மங்கையின் அழகு முதலியன வருத்தத்தைச் செய்தல் என்ற பொருள் தந்து நிற்கிறது என்று சொற்பொருள் விளக்கம் தந்தனர். 'தலைவியின் அழகு தலைவனுக்கு வருத்தத்தை உண்டாக்குதல்' என்பது பெரும்பான்மையர் கருத்தாகிறது.
இச்சொற்றொடர்க்கு 'தகுதியுடைய பெண்ணின் அழகு துன்புறுத்தல்' என்றும் பொருள் கொள்வர். தகுதி என்பதற்குப் பல்வேறு மாறுபட்ட வரையறைகள் கூறப்பட்டுள்ளன. தகுதி என்பது பருவினாலும் (பருவத்தாலும் அதாவது வயதாலும்) உருவினாலும் (உருவ அமைப்பாலும் அல்லது எழில்நலன்களாலும்) திருவினாலும் (செல்வநிலையாலும் அல்லது சமுதாயப் படிநிலையாலும்) ஒத்தவரான ஆடவனும் பெண்ணும் எனக் கொள்வது மரபான அணுகுமுறை. தலைவியின் உடல்அழகு மட்டும் அவனைக் கவரவில்லை. அவளது உள்ள அழகும் ஈர்ப்பை உண்டாக்கியது என்று இவ்வதிகாரத்தில் வள்ளுவர் குறிப்பால் உணர்த்தியமை நோக்கத்தக்கது. குறளின் தகையணங்குறுத்தல் அதிகாரப் பாடல்களை நோக்கும்போது தகுதி என்பது 'அழகிலும் பண்பிலும்' ஒத்த என்றாகிறது.
அதிகாரத்துப் பத்துப் பாடல்களையும் தலைவன் கூற்றாகவே கொள்ள முடியும். ஆனால் உண்டார்கண் அல்லது....(1090) என்ற இறுதிப்பாடலை தலைவன்-தலைவி இருவர் கூற்றாகக் கொள்ள இடமிருக்கிறது. அந்த வகையில் இருவரும் 'அழகிலும் பண்பிலும்' ஒத்தவர்கள் என்று ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதாக இவ்வதிகாரம் அமைகிறது. இதனால்தான் பரிப்பெருமாள் 'தகையணங்குறுத்தலாவது தலைமகனும் தலைமகளும் எதிர்ப்பட்ட இடத்துத் தலைமகளது கவின் தலைமகனை வருத்துதலும் தலைமகனது கவின் தலைமகளை வருத்துதலும்' என்று தகையணங்குறுத்தல் என்னும் அதிகாரத் தலைப்பை விளக்கினார் போலும்.
காமத்துப்பால் முழுக்கவே நாடக ஆக்கம்தான். தகையணங்குறுத்தல் அதிகாரப் பாடல்களையும் நாடகக் காட்சிகளாக நோக்குவது சுவை பயக்கும்.
தகையணங்குறுத்தல் அதிகாரத்தின் நாடகக் காட்சிகள் இவை:
அவளைக் கண்ட மாத்திரத்திலேயே அவளது அழகு பற்றி அணங்கோ என்றும் சாயல் பற்றி மயிலோ என்றும் மொத்தத்தில் மாதர்தானோ என்று வியக்கிறான்.
அடுத்த காட்சியில் இருவரும் ஒருவரை ஒருவர் ஒரே நேரத்தில் நோக்கினார்கள். அப்பொழுது அவள் அவனை படைகொண்டு தாக்குவது போல இருந்தது.
எனினும் இது அவள் சினம் கொண்டு நோக்கியதல்ல. இவனது கணையை சமமாக எதிர்கொள்ளவே எதிர்பார்வையாக அப்படிப் பார்க்கிறாள். இருவரது நோக்கும் முன்பின் அறிமுகமில்லாத ஓர் ஆணும் பெண்ணும் இயல்பாகப் பார்க்கும் பார்வை அல்ல என்பதையும் இக்காட்சி உணர்த்தியது. அப்பொழுது அவளது பெண்மை நிறைந்த தன்மையையும் உணர்கிறான். எனவேதான் அவள் பெண்டகை அதாவது அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கொண்டவள் என்று பெருமிதம் கொள்கிறான். அதே நேரத்தில் அவளது கண்கள் கூற்றுவன் அவன் உயிரைக் கவர வந்தது போல் இருந்தது என்று வேதனை தாங்காது அரற்றுகிறான். இந்தக் 'கொல்லும்' கண்கள் இவளுக்குப் பொருந்தி வரவில்லையே எனப் புலம்புகிறான். எமன், மனிதக்கண், மருண்ட பார்வை என மாறி மாறி தோறறமளித்து அவனை வதைக்கிறாள் என்கிறான். புதியவனிடம் கனிவுப் பார்வை செலுத்தினோமே என்ற குற்ற உணர்வாலோ, அவனிடம் பார்வை மாற்றிக் கொளவதை மற்றவர் கவனிக்கிறார்கள் என்ற அச்சத்தாலோ மான்போன்று
மருண்டு பார்க்கிறாள். இக்காட்சியில் நாணமுற்ற தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முரிவின் அழகும் அந்தச்
சுளித்த பார்வையும் அவனை நிலைகொள்ளாதபடி செய்கிறது. இச்சமயம் அவளது முலைகள் பகுதியானது அவன் கண்ணில் தென்படுகின்றன. அப்போது சொல்கிறான்:
"அவள் அணிந்துள்ள மேலாடை விலகினால் அவை தன்னைக் கொல்லுமே' என்று. அதன்பின் அவள் தலை கவிழ்ந்து நிலன் நோக்கியபோது புருவத்தின்மேல் தோன்றிய நுதல் அழகில் துவண்டு, 'தன் வீரம் எல்லாம் எங்கே மறைந்தது?' என்று அவளிடம் சரணடைந்ததை ஒப்புகிறான். வெட்கமுற்ற தலைமகள் பேசாமல் நின்று என்ன செய்வதென்று அறியாது தன் அணிகலனைத் தொட்டு நிற்கின்றாள். அப்பொழுது அவன் வினவுவது, 'பார்வையும் நாணமும் இவளுக்கு அழகு கூட்டும்பொழுது வேறு
அணிகள் என்ன கருதி அணிந்தனர்?' என்று. இப்பொழுது, ஒருவரை ஒருவர் பார்ப்பதிலே பெரும் மகிழ்ச்சியும் மயக்க உணர்வும் உண்டாவதைச் சொல்கின்றனர்.
இவ்வாறு இருவர் உள்ளங்களும் நெருங்கி வருவதைச் சுருக்கமாகவும் இனிமையாகவும் சொல்வது தகையணங்குறுத்தல் அதிகாரக் குறட்பாக்கள்.
சிலர் தகையணங்குறுத்தலில் தலைமகள் ஏதும் சொல்வதாக இல்லையே என்று கருதி இது கைக்கிளை கூறும் பகுதி அதாவது ஒருதலைக் காதல்
என முடிவுக்கு வருகின்றனர். மேற்கூறியவாறு வள்ளுவரின் படைப்பாற்றல் உணர்ந்து தெளிந்தால் இது கைக்கிளை பற்றியது அல்ல என்று அவர்கள் உடன்படுவர்.