இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1086கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண்

(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1086)

பொழிப்பு: வளைந்த புருவங்கள் கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால், இவளுடைய கண்கள் யான் நடுங்கும்படியான துன்பத்தைச் செய்யமாட்டா.

மணக்குடவர் உரை: வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின் இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா.
இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது) கொடும் புருவம் கோடா மறைப்பின் - பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்; இவள் கண் நடுங்கு அஞர் செய்யல - அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா.
(நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான். நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.)

இரா சாரங்கபாணி உரை: வளைந்த புருவங்கள் வளையாமல் செம்மையாய் நின்று தடுத்தால், அவற்றைத் தாண்டி இவள் கண்கள் எனக்கு நடுங்கக்கூடிய துன்பத்தைச் செய்யமாட்டா.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொடும்புருவம் கோடா மறைப்பின் இவள் கண் நடுங்கஞர் செய்யல.


கொடும்புருவம் கோடா மறைப்பின்:
பதவுரை: கொடும்-கொடிய; புருவம்-புருவம்; கோடா-கோணாமல்; மறைப்பின்-விலகினால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வளைந்த புருவங்கள் தாம் செப்பமுடையனவாய் விலக்கினவாயின்;
பரிப்பெருமாள்: இக்கொடிய புருவம் இவள் கண்கள் என்னைத் துன்பம் செய்வதன் முன்பே கோடி மறைத்தனவாயின்;
பரிதி: வளைந்த புருவம் அழகு செய்து விரகம் விளைத்தபடியாலே;
காலிங்கர்: இவளது கோடுதலுடைய புருவம் கோடாதவாய் மற்று அவ்வினை மறந்துளவாயின்;
பரிமேலழகர்: பிரியா நட்பாய கொடும் புருவங்கள்தாம் செப்பமுடையவாய் விலக்கினவாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: நட்டாரைக் கழறுவார்க்குத் தாம் செம்மையுடையராதல் வேண்டலின் 'கோடா' என்றும், செல்கின்ற அவற்றிற்கும் உறுகின்ற தனக்கும் இடைநின்று விலக்குங்காலும் சிறிது இடைபெறின் அது வழியாக வந்து அஞர் செய்யுமாகலின் 'மறைப்பின்' என்றும் கூறினான்.

கொடும்புருவம் என்றதற்கு மணக்குடவர், பரிதி, காலிங்கர் ஆகியோர் வளைந்த புருவம் என்று பொருள் கொண்டனர்; பரிப்பெருமாளும் பரிமேலழகரும் கொடும்புருவம் என்று உரைத்தனர்.கோடா மறைப்பின் என்பதற்கு 'செப்பமுடையனவாய் விலக்கினவாயின்' (செப்பம்-நடுவு நிலைமை)என்று மணக்குடவர் சொல்ல, பரிப்பெருமாள் 'முன்பே கோடி மறைத்தனவாயின்' என்றார். பரிதி இத்தொடர்க்கு 'அழகு செய்து விரகம் விளைத்தபடியாலே' என உரை வரைந்தார். காலிங்கர் 'கோடாதவாய் மற்று அவ்வினை மறந்துளவாயின்' என்று உரை தருகிறார். பரிமேலழகர் மணக்குடவர் உரையை ஒட்டியே 'கோடா மறைப்பின்' என்பதற்கு பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வளைந்த புருவம் நேர்நின்று தடுப்பின்', 'வளைந்த புருவங்கள் இன்னும் வளைந்து இமைகள் கண்களைச் சிறுது மறைக்கும்', 'இவளது வளைத்த புருவம் வளையாது நேராக நின்று கண்களை மறைக்குமானால்', 'வளைந்த புருவங்கள் நடுநிலை தவறாமல் மறைத்தால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொடுமை செய்யும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று மறைத்தால் என்பது இப்பகுதியின் பொருள்.

நடுங்கஞர் செய்யல மன்இவள் கண்:
பதவுரை: நடுங்கு-அஞ்சுகின்ற; அஞர்-கொடுந்துயரம்; செய்யல-செய்யமாட்டா; மன்-(ஒழியிசை); இவள்-இவளது; கண்-விழி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா.
மணக்குடவர் குறிப்புரை: இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டுத் தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முறிவு கண்டு அவன் கூறியது.
பரிப்பெருமாள்: அதனக் கடந்து போந்து எனக்கு நடுங்கப்படும் துன்பஞ் செய்யலாற்றாவே அவை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு நாணமுற்ற தலைமகள் தலையிறைஞ்சிய வழி கண்ணை மறைத்துத் தோற்றிய புருவ முரிவு கண்டு தலைமகன் கூறியது.
பரிதி: காமுகர் நடுங்கத்தக்க துன்பம் விளித்தது கண் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சமே! யாம் இங்ஙனம் உன் நடுங்கு துயரஞ் செய்தல் இல்லை இவள் கண் என்றவாறு.
பரிமேலழகர்: அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்கும் துயரைச் செய்யமாட்டா.
பரிமேலழகர் குறிப்புரை: நடுங்கு அஞர் - நடுங்கற்கு ஏதுவாய அஞர். 'தாம் இயல்பாகக் கோடுதல் உடைமையான் அவற்றை மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கமாட்டா' வாயின என்பதுபட நின்றமையின், மன் ஒழியிசைக்கண் வந்தது.

'இவள் கண்கள் நடுங்கும் துயரைச் செய்யமாட்டா' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். விளக்கவுரையில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் தலைமகள் நாணித் தலைகுனிந்தபோது மறைத்துத் புருவ முறி(ரி)வு கண்டு தலைமகன் கூறியதாக உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவள் கண்கள் என்னை நடுக்கா', 'இப்போது இவளுடைய பார்வை முன் போல் நான் அஞசி நடுங்கும்படியான துன்பத்தை உண்டக்குவதாக இல்லை', 'இவள் கண்கள் எனக்கு நடுங்குந் துன்பத்தை உண்டாக்க மாட்டா', 'இவள் கண்கள் நடுங்கும் துன்பத்தைச் செய்யமட்டா' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இவளது கண்கள் நடுக்கம்தரும் கொடுந்துன்பம் செய்யமாட்டாவே என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இவளது வளைந்த புருவங்கள் நேராக இருந்து கண்களை மறைக்குமென்றால், அவை எனக்கு நடுங்கத்தக்க துன்பத்தைச் செய்ய மாட்டா!

கொடுமை செய்யும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று மறைத்தால் இவளது கண்கள் நடுக்கம்தரும் கொடுந்துன்பம் செய்யமாட்டாவே என்பது பாடலின் பொருள்.
'அஞர்' என்பதன் பொருள் என்ன?

கொடும்புருவம் என்ற தொடர் கொடிய புருவம் என்ற் பொருள் தருவது. வளைந்த புருவம் என்றும் பொருள் கொள்வர்.
கோடா என்ற சொல்லுக்கு வளையாது என்றும் வளைந்து எனவும் இருதிறமாகப் பொருள் கொள்வர்.
மறைப்பின் என்றது மறைத்தால் எனப்படும்.
நடுங்கு என்ற சொல்லுக்கு நடுங்கச் செய்யும் என்பது பொருள்.
செய்யல என்ற சொல் உண்டாக்கமாட்டா எனப்பொருள்படும்.
இவள் கண் என்ற தொடர்க்கு இவளது கண்கள் என்று பொருள்.

புருவங்களை வளைத்து தலைமகள் என்னைப் பார்த்தது என்னை மிகவும் வாட்டி வதைக்கின்றது என்கிறான் தலைமகன்.

அவளது அழகிய கண்களை மறைக்கும் புருவங்கள் கொடியன எனச் சொல்கிறான் அவன். இமைகள்தாம் கண்களை மறைக்கும். அவளது புருவ முறிப்பு கண்களை மறைத்ததென்றால் எவ்வளவு அழகான, எடுப்பான மேடான கண்கள் அவை! அக்கண்கள் அவனைத் தாக்கி நடுக்குறச் செய்கின்றனவாம்.

கொடும்புருவம் என்பதற்குக் கொடிய புருவம் என்றும் வளைந்த புருவம் என்றும் இரண்டு வகையாகப் பொருள் கொள்வர். 'கொடும்புருவம்' என்ற தொடர்க்கு 'வளைந்த புருவம்' என்பதைவிட 'கொடிய புருவம்' என்பது பொருந்தும்.
'கோடா மறைப்பின்' என்றதற்கு 'மேலும் வளையாமல் நின்று, கண் பார்வையை என்மீது கூர்மையாய்ப் பாய்ச்சவிடாமல் தடுக்குமாயின்', 'அருகிலுள்ள வளைந்த புருவங்கள் நேராக விருந்து மறைக்குமாயின்', 'நேர்நின்று தடுப்பின்', 'வளையாமல் செம்மையாய் நின்று தடுத்தால்', 'மேலும் வளையாது சரியாக இருந்திருக்குமானால்', என்றபடியான விளக்கங்கள் இன்றைய ஆசிரியர்களிடம் இருந்து பெறப்படுகின்றன. கோடா என்ற சொல்லுக்கு மலையாக, கரையாக என்று கூறி மலை அல்லது கரை போன்று நின்று மறைத்திருக்கலாமே என்றும் உரை உள்ளது. அதுபோலவே கோடா மறைப்பின் என்பதற்கும் 'வளையாமல் மறைத்தால்' என்றும் அதற்கு நேர் எதிரான பொருளான 'வளைந்து மறைத்தல்' என்றும் 'மேலும் வளையாது இருந்திருக்குமானால்' என்றும் பொருள் கொண்டமையால் 'கொடும்புருவம் கோடா மறைப்பின்' என்ற தொடர்க்கு வேறுவேறான உரைப்பொருள் தோன்றின.
'கொடும்புருவம் கோடா மறைப்பின்' என்றதற்கு 'வளைந்த புருவம் வளையாமல் மறைத்திருந்தால்' என்பது பெரும்பான்மையோர் கொண்ட உரை. 'கொடிய புருவம் வளையாமல் மறைத்திருந்தால்' என்பது மற்றொரு கருத்து. இந்த இரண்டு விளக்கங்களிலும் 'வளையாமல் மறைத்திருந்தால்' என வருகின்றன. புருவங்களே வளைந்துதானே இருக்கின்றன; அதனால் 'மேலும் வளைந்த புருவம்' என்று கூட்டி உரைத்து மூன்றாவது உரைப்பொருள் வந்தது.
பரிதியின் வளைந்த புருவம் 'அழகு செய்து விரகம் விளைத்தபடியாலே' என்றது 'அவள் புருவத்தை வளைத்த அழகு அவனிடத்தே காதல் தாகத்தை ஏற்படுத்தியது' என்ற பொருள் தருவது. புருவ அழகே பாராட்டப்பட்டது என்று இவர் கூறுகிறார். கருத்தளவில் இப்பாடலுக்கு இது சிறந்த உரையாகிறது.

பரிப்பெருமாளின் 'கொடிய புருவம் வளைந்து மறைத்திருக்குமானால்' என்பது பெரும்பான்மை விளக்கத்துக்கு மாறாக அமைகிறது. அவரது உரை "இக்கொடிய புருவம் இவள் கண்கள் என்னைத் துன்பம் செய்வதன் முன்பே கோடி மறைத்தனவாயின், அதனக் கடந்து போந்து எனக்கு நடுங்கப்படும் துன்பஞ் செய்யலாற்றாவே அவை என்றவாறு" என்பது. இவர் கோடா என்பதற்கு வளைந்து எனப் பொருள் கொண்டு உரை செய்கிறார். புருவம் வளைந்து இருத்தல் இயல்பு; அதுவே அழகும் கூட. கண்களைச் சுருக்கி அல்லது இடுங்கிப் பார்த்தால் புருவங்கள் மேலும் வளையும். அப்பொழுது கண்கள் சிறுது மறைந்தபடி காணப்படும். ஏன் இங்கு அவள் புருவங்களைக் கோணிப் பார்க்கிறாள்? அவள் நாண் கொண்டதால் அப்படி ஒருக்களித்துப் பார்க்கிறாள் என்று சொல்கிறார் பரிப்பெருமாள். அவர் கருத்துப்படி 'கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப் பேதைக்கு அமர்த்தன கண்' என்ற தலைமகன் சொற்கேட்டு நாணமுற்ற தலைமகள் தலைகுனிந்து அவனை நோக்கியபோது புருவ முரிவு தோன்றி அவள் கண்களைச் சற்றே மறைத்ததாம். இந்தச் சூழலில் அவன் அவளது கண்களை முழுமையாகப் பார்க்க முடியவில்லை. இன்னும் மிகையாக புருவ முறிவு ஏற்பட்டால் கண்கள் முற்ற மறைந்துவிடும். எனவே இன்னும் புருவம் கோணினால் கண்கள் முழுமையாக மறைந்து அவை தன்னைத் துன்புறுத்தாமல் இருக்குமே என்கிறான். அவளது அழகிய கண்களைக் காணமுடியவில்லையே என்பதும் சொல்லப்பட்டது. ஆனாலும் கண்களைக் காணமுடியாவிட்டாலும் அவளது கோடிய 'கொடிய' புருவங்களின் அழகைச் சுவைக்கிறான். கண்ணழகைப் பாராட்டுவது போல் புருவ அழகைப் புகழ்கிறான். 'கொடிய புருவம் வளைந்து மறைத்திருக்குமானால்' எனக் கொண்டு உரைக்கப்பட்ட பரிப்பெருமாள் உரை ஏற்றம் மிக்கது.

சிலப்பதிகாரத்தில் இக்குறட் கருத்தைத் தழுவிய பாடல் வரி ஒன்று உள்ளது: கோடும் புருவத் துயிர்கொல்வை மன்நீயும்(சிலப்பதிகாரம்: கானல்வரி: 7:19-2 பொருள்: நீயும் நினது வளைந்த புருவத்தால் உயிரைக் கொல்லா நிற்கின்றாய்). இதில் கானல் வரித் தலைவன் 'கோடிய புருவம் என் உயிரைக் கொல்கிறது' என்று குறிப்பிடுகின்றான்.

'அஞர்' என்பதன் பொருள் என்ன??

'அஞர்' என்ற சொல்லுக்கு நடுங்குந் துன்பம், நடுங்கப்படும் துன்பம், நடுங்கத்தக்க துன்பம், நடுங்கு துயரம், நடுங்கும் துயர், நடுங்கும்படியான துன்பம், நடுக்குவது, நடுங்கக்கூடிய துன்பம், நடுக்கத்தைத் தரும் துன்பம், நடுங்குதற்கேதுவான துன்பம் என உரைகாரர்கள் பொருள் தந்தனர்.

அஞர் என்ற சொல் நடுக்கம் தரும் துன்பம் என்ற பொருள் தரும்.

கொடுமை செய்யும் புருவங்கள் வளையாமல் நேராக நின்று மறைத்தால் இவளது கண்கள் நடுக்கம்தரும் கொடுந்துன்பம் செய்யமாட்டாவே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெண்ணின் 'கொடிய' புருவங்கள் வளையும் அழகும் அவனைத் துன்புறுத்துகின்றன என்னும் தகையணங்குறுத்தல் கவிதை.

பொழிப்பு

கொடிய புருவம் வளையாமல் மறைத்தால் இவள் கண்கள் நடுக்குறும் துன்பம் செய்யாதொழியும்.