இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1082



நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்னது உடைத்து

(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1082)

பொழிப்பு (மு வரதராசன்): நோக்கிய அவள் பார்வைக்கு எதிரே நோக்குதல் தானே தாக்கி வருத்தும் அணங்கு, ஒரு சேனையயும் கொண்டு வந்து தாக்கினாற் போன்றது

மணக்குடவர் உரை: இவ்வழகினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் அஞ்சாமல்வரும் தானையைக் கொண்டு வந்தது போலும். தானைக்கு உவமை நோக்கம். இது மெய்கண்டு வருந்துவான் கண் கண்டதனால் வருத்த மிக்கது கூறியது.

பரிமேலழகர் உரை: (மானுட மாதராதல் தெளிந்த தலைமகன் அவள் நோக்கினானாய வருத்தம் கூறியது.) நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் - இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல்; தாக்கு அணங்கு தானைக்கொண்டன்னது உடைத்து - தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற் போலும் தன்மையை உடைத்து.
(மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல் என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர்.)

இரா சாரங்கபாணி உரை: என்னைப் பார்த்தவள் பின் என் பார்வைக்கு எதிர் நோக்குதல் தாக்கி வருத்தும் பெரிய தெய்வம் சேனையையும் உடன் அழைத்து வந்து தாக்கியது போன்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நோக்கெதிர் நோக்கினாள் நோக்குதல் தாக்கு அணங்கு தானைக்கொண்டன்னது உடைத்து.

பதவுரை: நோக்கினாள்-பார்த்தாள், நோக்கப்பட்டாள், பார்க்கப்பட்டவள்; நோக்கு-பார்வை, நாட்டம்; எதிர்நோக்குதல்-எதிராகப் பார்த்தல்; தாக்கு-தாக்கி வருத்துகின்ற; அணங்கு-தெய்வம்; தானை-படை; கொண்டு-உடன்கொண்டு வந்துள்ள தன்மை; அன்னது-போல்வது; உடைத்து-உரிமையாகக் கொண்டது.


நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இவ்வழகினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல்.
பரிதி: பார்த்த பார்வைக்கு எதிராகப் பார்த்த பார்வை.
காலிங்கர்: கண்ணுக்கு இனியதாகிய மிக்க அழகினையுடையாள், நாட்டத்து எதிர்நோக்குத் தன்மை நெஞ்சே!
பரிமேலழகர்: இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள் என் நோக்கிற்கு எதிர் நோக்குதல்; [இப்பெற்றித்தாய - இத்தன்மையதாகிய]
பரிமேலழகர் குறிப்புரை: மேலும், 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்றமையான், இகரச்சுட்டு வருவிக்கப்பட்டது. எதிர் நோக்குதல் என்றமையின், அது குறிப்பு நோக்காயிற்று. வனப்பால் வருந்துதல் மேலும் குறிப்பு நோக்கால் வருந்துதல் கூறியவாறு. 'நோக்கினாள்' என்பதற்கு 'என்னால் நோக்கப்பட்டாள்' என்று உரைப்பாரும் உளர். [இகரச்சுட்டு அண்மையிலுள்ள பொருளைக் குறிக்கும். அஃது இந்நோக்கினால் (இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள்) என்பதாம்.]

நோக்கினாள் என்ற சொல்லுக்கு 'இவ்வழகினையுடையவள்' என்று மணக்குடவரும், 'கண்ணுக்கு இனியதாகிய மிக்க அழகினையுடையாள்' என்று காலிங்கரும் 'இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள்' என்று பரிமேலழகரும் உரை கண்டனர். பரிமேலழகரின் இப்பெற்றித்தாய என்பது முந்தைய குறளில் கூறப்பட்ட 'அணங்குகொல் ஆய்மயில் கொல்' என்பதைச் சுட்டும் என்று அவரே விளக்கியுள்ளார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பார்த்தவள் மேலும் எதிர்ப்பார்வை பார்த்தல்', 'என் பார்வைக்கு எதிர்ப் பார்வையாக அவளும் என்னைப் பார்த்தாள்', 'அழகுமிக்க இவள் நான் பார்த்தவுடன் என்னை எதிர்த்துப் பார்த்தல்', 'பார்த்தவளுடைய பார்வைக்கு எதிராகப் பார்த்தல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என் நோக்கிற்கு என்னால் பார்க்கப்பட்டவளின் எதிர்நோக்குதல் என்பது இப்பகுதியின் பொருள்.

தாக்கணங்கு தானைக்கொண் டன்னது உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தானே வருத்தவல்ல தெய்வம் அஞ்சாமல்வரும் தானையைக் கொண்டு வந்தது போலும்.
மணக்குடவர் விரிவுரை: தானைக்கு உவமை நோக்கம். இது மெய்கண்டு வருந்துவான் கண் கண்டதனால் வருத்த மிக்கது கூறியது.
பரிதி ('தானைக் கண்டன்ன' பாடம்): தாக்கப்பட்ட அணங்காகிய தெய்வப் பெண்ணின் கூட்டத்தை ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: எத்தன்மைத்தோ எனின், அனைத்துயிரையும் விதிவழி வந்து தாக்குவதாகிய கூற்றுப் பின்னும் தன்திறல் போதாமல் சேனையும் கொண்டு வந்த அவ்வொப்புடைத்தென்று இங்ஙனம் வருந்தித் தலைமகன் என் நெஞ்சிற்குச் சொல்லியது என்றவாறு.
பரிமேலழகர்: தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற் போலும் தன்மையை உடைத்து. தானை - படை]

பழைய ஆசிரியர்கள் அனைவரும் 'தானே தாக்கி வருத்துவதோர் அணங்கு தாக்குதற்குத் தானையையும் கொண்டு வந்தாற் போலும்' என்ற பொருளிலேயே உரை காண்கின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொடுந்தெய்வம் சேனையோடு தாக்கியது போல்', 'அப்பார்வையின் முன் நான் அவளைப் பார்த்தவுடனே எனக்குத் திகைப்புண்டாக்கிய அழகு இப்போது அவளுடைய கண்ணாகிய வேலாயுதம் கொண்டு என்னைக் குத்துவதுபோல இருக்கிறது', 'தானே தாக்கி வருத்தும் ஒரு தெய்வம் ஒரு படையையும் உடன்கொண்டு வந்தாற்போலும் தன்மையுடையது', 'தானே தாக்கி வருத்துவதோர் தெய்வ மகள் தாக்குதற்குப் படையையும் கொண்டு வந்தாற்போலும் தன்மையை உடைத்து' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தாக்கிகொண்டிருக்கிற தேவதை தன் படையைக் கூட்டிக் கொண்டுவந்தது போல் உள்ளது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நோக்கினாள், என் பார்வைக்கு, எதிர்நோக்குதல் தாக்கிகொண்டிருக்கிற தெய்வப்பெண் தன் படையைக் கூட்டிக் கொண்டுவந்தது போல் உள்ளது என்பது பாடலின் பொருள்.
'நோக்கினாள்' என்ற சொல் குறிப்பது என்ன?

அவளது எதிர்பார்வை அவனைத் திக்குமுக்காடச் செய்துவிட்டது!

நான் பார்த்தற்கு எதிர்பார்வை அவள் வீசியது, தாக்கி வருத்தும் பெரிய தெய்வம் தன் படையையும் உடன் அழைத்து வந்து தாக்கியதைப்போல் இருந்தது என்கிறான் தலைவன்.
காட்சிப் பின்புலம்:
தலைவனும் தலைவியும் ஒருவரை யொருவர் முன் அறியாதவர்கள். எங்கோ ஓரிடத்தில் இருவரும் எதிர்கொள்ள நேர்ந்தது. முதற்பார்வையிலேயே அப்பெண்ணின் உருவமைப்பும் உடல் அசைவுகளும் தலைமகனை மின்னல் போல் தாக்கி நிலைதடுமாறச் செய்தது. அவளது பேரழகு அவனை அவளிடம் ஈர்ப்புக் கொள்ளவைத்தது. அவளது எழில் நலம் பற்றி அணங்கோ என்றும் சாயல் பற்றி மயிலோ என்றும் வியந்தான். அடர்ந்த கூந்தலையுடைய இவள் நிலவுலகப் பெண்தானா என எண்ணித் தளர்வுற்றான்.

இக்காட்சி:
முற்குறளில் (1081) தலைவன் பேரழகுடைய அவளை பார்த்தான் எனச் சொல்லப்பட்டது. முதலில் அவளைப் பார்த்தது என்பது இயல்பான நிகழ்வு. பார்த்தபின் மயங்கி நாட்டத்துடன் அவளை நோக்குகிறான். அறிமுகமற்ற ஓர் ஆடவன் தனக்குத் தெரியாமல் தன்னை விழைவுடன் பார்ப்பது ஒழுக்கம் நிறைந்த எப்பெண்ணுக்கும் ஏற்காது. அவள் எதிர்நோக்கு வீசுகிறாள். அப்பப்பா! எப்படிப்பட்ட எதிர்ப்பார்வை அது! அப்பொழுது 'அணங்கு அதாவது வருத்துந்தெய்வம் ஒன்று தன் ஆற்றல் போதாமல் ஒரு படையுடன் வந்து தாக்கியது போல் கொடூரமாக இருந்தது' என்று அவன் மனத்துக்குள் வருந்திக் கூறுகிறான். அப்பார்வையின் தாக்குதல் பலதிக்கிலிருந்தும் வந்ததது போல் இருந்ததாம். தாக்கத்தின் வீச்சைக் குறிக்கவே படைகொண்டு வந்தது போன்றது எனப்பட்டது. படைகொண்டு தக்கியது போல் இருந்தது என்றதால் அவள் கொண்டது சினப்பார்வை என்பது என அறியலாம். முதலில் அவள் அழகு அவனை வீழ்த்தியது; இப்பொழுது அவள் தன்னை சினத்துடன் எதிர்நோக்கியது தானே தாக்கித் துன்புறுத்துகிற பெண்தெய்வம் தன் படையுடன் வந்து தாக்கியது என்பதாக உணர்கிறான்.

இப்பாடலிலுள்ள தானை என்றதற்கு இன்றைய ஆசிரியர்களில் சிலர் 'கண்ணாகிய வேல் படை' என்று பொருள் கொள்வர்.

'நோக்கினாள்' என்ற சொல் குறிப்பது என்ன?

இப்பாடலிலுள்ள 'நோக்கினாள்' என்ற சொல்லுக்கு இவ்வழகினையுடையவள், கண்ணுக்கு இனியதாகிய மிக்க அழகினையுடையாள், இப்பெற்றித்தாய வனப்பினை உடையாள், பார்த்தவள், என்னைப் பார்த்தவள், என்னால் நோக்கப்பட்ட இவள், அழகுமிக்க இவள், இத்தகைய அழுகுடையாள், இத்தகைய அழகிய தோற்றமுடையாள் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

நோக்கினாள் என்ற சொல்லுக்குப் பார்த்தாள் என்பது நேர் பொருள்.
ஒருவரின் கண்ணை பார்த்தவுடன் அவரின் உள் உணர்வுகளை அறிந்துகொள்ள முடியும். தலைமகளது அழகு கண்டு தளர்ந்து போனவனை அவளது எதிர்பார்வை, படையைத் துணைக் கொண்டு பலவாறு தன்னைத் தாக்குவதுபோல் இருந்தது என்று தலைவன் கலங்குகிறான். தன்னைப் பார்த்தவனை இன்னான் என்று அறியப் பார்க்கும் பொது நோக்காக அது இல்லை. தலைவியின் எதிர்ப்பார்வை தோழமையாக இருக்கவில்லை என்பது பின்வரும் சொற்களாலும் அறியமுடிகிறது. இவனது பார்வையை இடைமறித்து ஒரு வெட்டு வெட்டிவிட்டதுபோல் நோக்கினாள் அவள்; அது அவனை சினத்துடன் கூடிய எதிர்நோக்காகவே இருந்தது. அதில் ஒரு படையையே தன் விழிகளில் திரட்டியது போன்றதாய் இருந்ததாம். தொடர்பில்லாதவனாகவும் அயலானாலவும் தோன்றும் இவன் ஏன் என்னை இப்படிப் பார்க்க்கவேண்டும் என்று எண்ணி, அவனைச் சுட்டுவிடுவது போல் பார்த்த பார்வை அது. அவளின் எதிர்நோக்குக்கு என்ன வலிமை! என்று தலைவன் வியக்கிறான்.

காலிங்கர் 'கண்ணுக்கு இனியதாகிய மிக்க அழகினையுடையாள்' என்று 'நோக்கினாள்' என்ற சொல்லுக்குப் பொருள் உரைத்தார். இது பார்ப்பதற்கு அல்லது நோக்குதற்கு இனியதாக இருப்பவள் என்ற பொருள் போலும். இதே பொருளில்தான் மணக்குடவரும் பரிமேலழகரும் உரை கூறியுள்ளனர். இக்குறட் போக்கை அதன் பொருளுடன் இயைபுபடுத்தும்போது நோக்கினாள் என்ற முதற்சொல் உரையாசிரியர்களுக்கு இடர்ப்பாடு உண்டாக்கியதால்தான் இச்சொல்லுக்கு அழகினையுடையவள் என்பதுபோன்ற தொடர்பற்ற பொருளுரைத்தனரோ என எண்ணத் தோன்றுகிறது.
‘நோக்கினாள்’ என்பதற்கு என்னால் நோக்கப்பட்டாள் என்று உரைப்பாருமுளர் எனவும் தன் உரையில் குறிப்பிட்டுள்ளார் பரிமேலழகர். அப்பொருள் கண்ட ஆசிரியர் யார் என்று தெரியவில்லை. இதுவும் முதற்சீர் தரும் இடரை விலக்கவே சொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
'நோக்கினாள் என்பதற்கு வனப்பினை உடையாள், நோக்கப்பட்டாள், நோக்கிய அவள் என உரைகள் பல உள. என்னைப் பார்த்தவள் என்று கருத்தோட்டமாகப் பொருள் கொள்ளுதல் நன்று' என்பார் இரா சாரங்கபாணி.

'நோக்கினாள்' என்ற சொல்லுக்குப் பார்த்தாள் அல்லது நோக்கப்பட்டாள் என்பது பொருள்.

என் நோக்கிற்கு என்னால் பார்க்கப்பட்டவளின் எதிர்நோக்குதல், தாக்கிகொண்டிருக்கிற தேவதை தன் படையுடன் வந்து தாக்குதல் போல் உள்ளது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவளது எதிர்நோக்கால் சரமாரியாகத் தாக்கும் தகையணங்குறுத்தல்.

பொழிப்பு

நான் பார்த்தவள் என்னைப் பார்த்துப் பின் நான் அவளை நோக்க அவள் என்னை எதிர்நோக்கியது, அழகால் தானே தாக்கிய தேவதை இப்பொழுது படையோடு வந்து தாக்கியது போல் இருந்தது.