இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1084



கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்தகைப்
பேதைக்கு அமர்த்தன கண்

(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1084)

பொழிப்பு (மு வரதராசன்): பெண்தன்மை உடைய இந்தப் பேதைக்குக் கண்கள் கண்டவரின் உயிரை உண்ணும் தோற்றத்தோடு கூடி ஒன்றோடொன்று மாறுபட்டிருந்தன.

மணக்குடவர் உரை: தம்மைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள்.
அமர்தல் - மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது) பெண்தகைப் பேதைக்குக் கண் - பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள்; கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் அமர்த்தன - தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி அமர்த்திருந்தன.
(அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: பார்த்தவரின் உயிர்குடிக்கும் கவர்ச்சிகொண்டு பெண்ணின் கண்கள் போர் செய்கின்றன.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெண்தகைப் பேதைக்குக் கண் கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் அமர்த்தன.

பதவுரை: கண்டார்-காண்போரது, பார்த்தவருடைய; உயிர்-உயிர்; உண்ணும்-உண்ணும், குடிக்கும்; தோற்றத்தால்-தோற்றத்தால், வடிவத்தால்; பெண்தகை-பெண்தன்மை; பேதைக்கு-களங்கமற்ற இளம்பெண்ணிற்கு, மடமையுடைய மகளுக்கு; அமர்த்தன-மாறுபட்டிருந்தன; கண்-விழி.


கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே.
பரிப்பெருமாள்: தன்னைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத்தாலே.
பரிதி: தம்மைக் கண்டார் உயிருண்ணும் தோற்றத்துடனே கூடி.
காலிங்கர்: நெஞ்சே! இவ்விடத்து வந்து கண்டவராகிய நமது உயிர்பருகும் தன்மையே இவை இரண்டினுஞ் சாலப் புலப்படத் திகழ்தலால்.
பரிமேலழகர்: தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்துடனே கூடி.

'தம்மைக் கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தாலே' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கண்டவர் உயிருண்ணும் தோற்றத்துடன்', '(இவளுடைய கண்கள்) பார்த்தவர்களுடைய உயிரைக் கவர்ந்துவிடுகிற காரணத்தால்', 'சார்ந்தவருடைய உயிரை விழுங்குந் தோற்றத்தோடு இருப்பதால்', 'பார்த்தார் உயிரை உண்ணக்கூடிய தோற்றத்தோடு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தம்மைப் பார்த்தவர் உயிர் நீக்கும் தோற்றம் கொண்டதனால் என்பது இப்பகுதியின் பொருள்.

பெண்தகைப் பேதைக்கு அமர்த்தன கண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள்.
மணக்குடவர் குறிப்புரை: அமர்தல் - மேவல். இது பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது.
பரிப்பெருமாள்: பெண் தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண்கள்.
பரிப்பெருமாள் குறிப்புரைரை: அமர்தல் - மேவல். அது பொருத்தத்தின் வந்தது. பேதையோடு ஒத்த தொழிலுடைத் தென்று கண்ணின் கொடுமை உட்கொண்டு கூறுதல்.
பரிதி: பெண்தகை யுடைய பேதைக்குக் கண்கள் அமர்த்திருந்தன என்றவாறு.
காலிங்கர்: இப்பெண்மை நலனும் பேதைமையும் உடையாட்கு இதனால் இயன்றன கண் எனவே இரண்டும் ஒருவாற்றால் இத்துயர்க்கு ஒரு தண்ணளி செய்வன போலும் என்பது கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: பெண் தகையை உடைய இப்பேதைக்கு உளவாய கண்கள் அமர்த்திருந்தன.
பரிமேலழகர் குறிப்புரை: அமர்த்தல்: மாறுபடுதல். குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்.

இத்தொடரின் பொருள் உரைப்பதில் பழைய ஆசிரியர்கள் வேறுபடுகின்றனர். மணக்குடவர்/பரிப்பெருமாள் பேதைமையோடு ஒத்த கண்ணின் கொடுமை என்றனர். காலிங்கர் தண்ணளி செய்வன என்கிறார். பரிமேலழகர் பேதைமைக்கு ஏலாது கண்கள் கொடியவாயிருந்தன என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெண்ணியல்புகள் வாய்ந்த இப்பேதைக்கு உள்ள கண்கள் மாறுபட்டுப் போர் செய்கின்றன', 'பெண்ணழகு பொருந்திய இந்த அப்பாவியானவளுக்குக் கண்கள் மட்டும் அந்த சுபாவத்திற்குப் பொருத்தமில்லாதவைகளாக இருக்கின்றன', 'பெண்ணிற்குரிய குண அழகு மிகுந்த இம் மாதினுடைய கண்கள் அவள் நல்லியல்புக்கு மாறுபட்ட தன்மையன', 'பெண்களிற் சிறந்த அழகையுடைய இவ்விள நங்கைக்குக் கண்கள் பொருந்தியிருந்தன' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

களங்கமற்ற பெண்ணுக்குக் காண்பார் உயிர் கவரும் கண்கள் முரண்பாடாய் அமைந்துள்ளன என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
களங்கமற்ற பெண்ணுக்குக் காண்பார் உயிர் கவரும் கண்கள் அமர்த்தன என்பது பாடலின் பொருள்.
'அமர்த்தன' என்பதன் பொருள் என்ன?

'இவளது கண்கள் என் உயிரை எடுத்துவிட்டனவே!' என்கிறான் தலைவன்.

பார்த்தவரது உயிரைக் குடிக்கும் தோற்றமுடைய கண்களைக் கொண்ட கள்ளங்கபடமற்ற இப்பெண்ணுக்குக் பொருந்தி வரவில்லையே எனத் தலைவன் நினைக்கிறான்.
காட்சிப் பின்புலம்:
முதன்முதலில் தலைவன் தலைவியைக் கண்ட வேளையிலேயே அவளது அழகில் தன்னைப் பறிகொடுத்துவிடுகிறான். காதல் அணங்கோ, மயிலோ என வியந்தான். அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் ஒரே நேரத்தில் பார்த்தார்கள். அப்பொழுது அவள் அவனைப் படைகொண்டு தாக்குவது போல இருந்ததாம். இவனது பார்வைக்கு இணையாக எதிர்கொள்ளவே எதிர்பார்வையாக அப்படிப் பார்த்தாள். கூற்றுவன் பற்றிக் கேள்விப்பட்டுத்தான் இருக்கிறேன்; இப்பொழுதுதான் அது பெரிய கண்களையுடையது என்று சொல்லப்படுவதை நம்புகிறேன் எனச் சொல்லிக்கொண்டு இருக்கிறான்.

இக்காட்சி:
'பார்ப்பவர் யாராயினும் அவற்றின் அழகில் செயலிழந்து போவர் என்று சொல்லும்படியான தோற்றம் கொண்டதாக அவளது கண்கள் இருக்கின்றன' என வியக்கிறான் தலைவன். ஆனால் அவள் பெண்மையும் பேதைக்குணமும் கொண்டவளாகவும் இருக்கிறாளே! இந்தக் 'கொல்லும்' கண்கள் இவளுக்குப் பொருந்தி வரவில்லையே எனவும் எண்ணுகிறான். அவளது கண்கள் தன்னை முற்றிலும் இழக்கச் செய்யும் தன்மை கொண்டன என்ற பொருளில் அவற்றை 'உயிர் உண்ணும் தோற்றம்' என்று சொல்கிறான். உயிரற்ற உடலுக்கு உரியவனாக நிலைகுலைந்து போய்விடுகிறான்.

பேதை என்ற சொல்லுக்கு அறிவிலி, இளம்பெண், களங்கமற்ற பெண் என்பதாகப் பலபொருள் காணப்படுகின்றன. பழைய ஆசிரியர்கள் பேதை என்றே பொருள் கொண்டனர். பேதை என்பது 5-7 வயதான சிறுமியின் பருவம் குறிப்பிடும் சொல்லாகவும் உள்ளது. இங்கு சொல்லப்படுபவள் இளம்பெண். எனவே 5-7 வயதுப் பெண் என்பது பொருந்தாது. பேதை என்ற சொல் சூதுவாது அறியாத வெள்ளை உள்ளம் கொண்டவள் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளதாகத் தோன்றுகிறது. 'பெண்தகைப் பேதை' என்ற தொடர் பெண்மைக் குணங்களும் பேதைமையுமே அவள்மேல் தலைவனுக்கு ஈர்ப்பு உண்டாகச் செய்கிறது என்பதைச் சொல்வதாக உள்ளது.

'அமர்த்தன' என்பதன் பொருள் என்ன?

'அமர்த்தன' என்ற சொல்லுக்கு ஒத்தன, அமர்த்திருந்தன, இயன்றன, மாறுபட்டிருந்தன, மதர்த்துக் காணப்படுகின்றன, போர் செய்கின்றன, சுபாவத்திற்குப் பொருத்தமில்லாதவைகளாக இருக்கின்றன, (இவள் இளமையோடு) மாறுபட்டனவாகும், அவள் நல்லியல்புக்கு மாறுபட்ட தன்மையன, பொருந்தியிருந்தன, போரிடும், கொடியனவா யிருந்தன, அமைக்கப்பட்டுள்ளன என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பரிமேலழகர் அமர்த்தல் என்றதற்கு மாறுபடுதல் என்று பொருள் உரைத்து 'குணங்கட்கும் பேதைமைக்கும் ஏலாது கொடியவாயிருந்தன என்பதாம்' என விளக்கமும் தந்தார். கண் தருகின்ற பெருந்துன்பத்தைத் தலைவியின் பெண்ணலமும் பேதைமையும் தணிக்கின்றன என்பது காலிங்கர் உரையாகும். அமர் என்பது போரைக் குறிக்கும் சொல். எனவே போர் செய்கின்ற கண்கள் என்று வ சுப மாணிக்கம் கூறுவார். அமர்த்தன என்பதற்குக் கண்கள் அங்குமிங்கும் அசைந்து கெண்டேயிருப்பதனால் பொருந்தி இருந்தன அதாவது தம்முள் பொருது கொண்டு இருந்தன என்று சி இலக்குவனார் விளக்குகிறார். அமைந்துள்ளன என்பது மற்றும் சிலர் தரும் விளக்கம். அமர்த்தல் என்ற சொல்லுக்கு மாறுபடுதல் என்றும், போர் செய்யவல்ல என்றும், பொருகின்ற தன்மையுள்ள அதாவது தம்முள் பொருது கொண்டு இருந்த என்றும், போர் செய்யவல்ல என்றும், அமைந்திருந்தன என்றும் பொருந்தியிருந்தன என்றும் கூடிக் கொடியனவாயிருந்தன என்றும் உரை பகன்றனர். இவ்வாறாக மாறுபடுதல், பொருந்தியிருத்தல், மேவியிருத்தல், தம்முள் பொருது கொண்டு இருத்தல் என ஒன்றுக்கொன்று நேர் எதிரான பொருள்களுடன் உரைகள் உள.
இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள 'அமர்த்தன' என்பதற்கு பொருந்தாத பொருத்தம் என்பது பொருத்தமாகலாம்.

'அமர்த்தன' என்ற சொல் இங்கு மாறுபட்டன என்ற பொருள் தரும்.

களங்கமற்ற பெண்ணுக்குக் காண்பார் உயிர் கவரும் கண்கள் முரண்பாடாய் அமைந்துள்ளன என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

'கொல்லும்' கண்களால் தகையணங்குறுத்தல்.

பொழிப்பு

பெண்ணியல்புகள் கொண்ட இப்பேதையின் கண்கள் கண்டவர் உயிருண்ணும் தோற்றத்துடன் மாறுபட்டு அமைந்துள்ளன.