இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1089பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து

(அதிகாரம்:தகை அணங்கு உறுத்தல் குறள் எண்:1089)

பொழிப்பு (மு வரதராசன்): பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ?

மணக்குடவர் உரை: பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடையவட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு இவைதாமே அமையும்.
இது, தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.

பரிமேலழகர் உரை: (அணிகலத்தானாய வருத்தம் கூறியது.) பிணை ஏர் மடநோக்கும் நாணும் உடையாட்கு - புறத்து மான் பிணை ஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு; ஏதில தந்து அணி எவன்? - ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து?
(மடநோக்கு - வெருவுதல்உடைய நோக்கு. 'இவட்குப் பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: மான்பார்வையும் வெட்கமும் உடையவளுக்கு வேறு அணிகள் போடுதல் எதற்கு?


பொருள்கோள் வரிஅமைப்பு:
பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு ஏதில தந்து அணிஎவனோ?

பதவுரை:
பிணைஏர்-பெண்மானை ஒத்திருக்கின்ற; மட-மருண்ட; நோக்கும்-பார்வையும்; நாணும்-வெட்கமும்; உடையாட்கு-பெற்றிருப்பவட்கு; அணி-அணிதல்; எவனோ-எதற்காகவோ? ஏதிலதந்து-புறம்பானதைக் கொடுத்து.


பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடையவட்கு;
பரிப்பெருமாள்: பிணையையொத்த மடப்பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடையவட்கு;
பரிதி: மான் போன்ற பார்வையும் நாணமும் உள்ளவட்கு;
காலிங்கர்: நெஞ்சமே! தன் பெண்மை அழகு பேரொளி சிறத்தற்கு பெடைமான் நோக்கனைய அழகும் மடப்பமும் சிறந்த நோக்கினது நலத்திற்கு இயல்பாகிய நாணினையும் தனக்கு உடையளாகிய இவட்கு;
பரிமேலழகர்: (அணிகலத்தானாய வருத்தம் கூறியது.) புறத்து மான் பிணை ஒத்த மடநோக்கினையும் அகத்து நாணினையும் உடையாளாய இவட்கு;
பரிமேலழகர் குறிப்புரை: மடநோக்கு - வெருவுதல்உடைய நோக்கு.

பழைய உரையாசிரியர்கள் அனைவருமே பெண்மானின் பார்வையும் நாணமும் கொண்ட பெண்ணுக்கு என்று இப்பகுதிக்கு விளக்கம் அளித்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'புறத்தே பெண்மான் போன்ற மடப்பத்தையுடைய நோக்கத்தையும் அகத்தே நாணத்தையும் உடையவளுக்கு', 'பெண்மான் போன்ற வஞ்சமற்ற பார்வையும் நாணமும் உடைய இந்தப் பெண்ணுக்கு', 'மான்போன்ற அழகிய அச்சப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு', 'பெண்மானை ஒத்த அழகிய பார்வையினையும், நாணத்தையும் உடைய இப்பெண்ணிற்கு', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெண்மான் போன்று மருண்ட பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

அணியெவனோ ஏதில தந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு இவைதாமே அமையும்.
மணக்குடவர் குறிப்புரை: இது, தான் அவளைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.
பரிப்பெருமாள்: பிறிது அணிதந்து அணிகை யாதினைக் கருதியோ? பிறரை வருத்துவதற்கு இவைதாமே அமையும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் தலைமகன் சொற்கேட்டு நாணுற்ற தலைமகள் வாளாது நிற்றல் ஆற்றாது தன் அணிகலனைத் தொட்டுழி, அதனை நோக்கி இத்தன்மையாட்கு இதனையும் அணிதல் வேண்டுமோ என்று தமரைக் கொடுமை கூறுவான் போல நலம் பாராட்டியது.
பரிதி: ஆபரணமும் வேண்டுமோ என்றவாறு.
காலிங்கர்: இனிவேறு சில தந்து அணிகின்ற அணி என்னையோ? எனவே நம்மை வருத்துகின்றது.
காலிங்கர் குறிப்புரை: மற்று இப்பிறவணியும் வந்து படைத்துணை செய்ய வேண்டுமோ என்று பின்னும் தன்னுறு துயரம் தன் நெஞ்சோடு கிளத்தல் கருத்து என்றவாறு.
பரிமேலழகர்: ஒற்றுமை உடைய இவ்வணிகளே அமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்து அணிதல் என்ன பயனுடைத்து?
பரிமேலழகர் குறிப்புரை: 'இவட்குப் பாரமாதலும் எனக்கு அணங்காதலும் கருதாமையின், அணிந்தார் அறிவிலர்' என்பதாம்.

'வேறு அணிகள் தந்து அணிதல் என்ன பயன் கருதியோ' என்று பழம் ஆசிரியர்கள் உரை கொண்டனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தொடர்பில்லாத அணிகலன்களைக் கொண்டு வந்து செயற்கையாக ஒப்பனை செய்தல் ஏன்?', 'அனாவசியமான ஆபரணங்கள் என்னத்திற்கோ? (தெரியவில்லை)', 'இயற்கையாகிய அவ் வணிகள் அமைந்திருக்க செயற்கையாகிய வேறு நகைகளைப் போடுதல், பாரமாகுமே தவிர வேறு என்ன பயன்?', 'இவளுக்குப் புறம்பாய வேறு அணிகளை அணிந்து பார்த்தால் என்ன பயன்?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வேறு அணிகள் தந்து அணிவிப்பது எதற்கு? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெண்மான் போன்று மடநோக்கும் நாணமும் உடைய இவளுக்கு வேறு அணிகள் தந்து அணிவிப்பது எதற்கு? என்பது பாடலின் பொருள்.
'மடநோக்கு' என்றால் என்ன?

மருண்ட பார்வையும் இயல்பான நாணமும் இவளது அழகுக்கு அழகு சேர்க்கும்போது வேறு அணிகள் ஏன் பூண்டுள்ளாள்? எனத் தலைவன் தனக்குள் நினைக்கிறான்.

பெண் மானைப் போன்ற அழகிய களங்கமற்ற பார்வையும் இயல்பாக உள்ள நாணமும் ஆகிய இயற்கையழகுக் கூறுகளே இவள்பால் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இன்னும் ஆபரணங்களை அணிவித்து அவளது அழகை செயற்கையாகப் பொலிவுபடுத்த நினைப்பது ஏன் என்று எண்ணிப் பார்க்கிறான் தலைவன்.
மருட்சியான தோற்றம் கொண்ட இவளது கண்கள் பெண்மானின் கண்கள் போல இவளுக்கு அழகு தருகிறது. பெண்தன்மையை எடுத்துக்காட்டும் நாணம் என்னும் பண்பையும் இவளது களங்கமில்லாத பார்வையில் காண்கிறேன். இவற்றால் பொலிவு பெற்று இவள் பேரழகுடன் திகழ்கிறாள். இவ்விதம் அவளது புற உறுப்புகளின் அழகும் அகப் பண்புநலன்களும் அவள் அழகுக்கு அழகு சேர்ப்பனவாக ஆகின்றன. இயற்கையே அணியாக இருக்கின்றபோது இவளுக்கு வேறு ஆபரணங்கள் எதற்கு என்று வியக்கின்றான்.
அவள் புறத் தோற்றத்தில் மான் போல் இருக்கிறாள். அது ஒரு அழகு. அவளின் உள் அழகு அவள் கொண்ட நாணம். அது மற்றொரு அழகு. கண்ணின் புறத்தோற்றத்தில் தலைவியின் உள்ளம் வெளிப்பபடுவதில்லை; கண் நோக்கும் நோக்கில்தான் அவளுடைய உள்ளம் வெளிப்படுகின்றது; அவளது மடநோக்கில் புற அழகும் நாணத்தில் அக அழகும் தெரிகின்றன. புற அழகும் அக அழகும் சேர்ந்த பெண்ணின் பார்வை இப்பாடலில் காட்டப்பட்ட விதம் படிப்போர் உள்ளத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது.

'நாணுற்ற தலைமகள் வாளாது நிற்றல் ஆற்றாது தன் அணிகலனைத் தொட்டுழி' என்று இனிய ஒரு காட்சியைக் காட்டியும் 'அவளது பார்வையும் நாணுமே போதுமான அழகியல்கள் ஆகும்; பின் ஏன் அணிகலன்கள்?' , 'இவ்வணிகள் இவளுக்குச் சுமையாகவும் தலைவனுக்குத் துன்பம் இழைப்பனவாகவும் உள்ளன; அவற்றை அவளுக்கு அணிவித்தவர் அறிவில்லாதவர்' எனக் கூறியும் இக்குறளுக்கு நயம் உரைத்தனர் உரையாசிரியர்கள்.
'பிறமகளிர் அணி தரித்து அழகு செய்வர்; சீதை அணி பறித்து அழகு செய்வாள்' என்று அணியா அழகின் புகழ் பாடிய கம்பர், இக்குறட் கருத்தை உட்கொண்டு இராமாயணக் கதைத் தலைவி சீதையை அணிகளால் அழகு படுத்துவது அமிழ்திற்குச் சுவை சேர்ப்பது போல் உள்ளது என்கிறார். அப்பாடல் இது:
அமிழ் இமைத் துணைகள் கண்ணுக்கு அணி என அமைக்குமா போல்
உமிழ் சுடர்க் கலன்கள் நங்கை உருவினை மறைப்பது ஓரார்
அமிழ்தினைச் சுவை செய்து என்ன, அழகினுக்கு அழகு செய்தார்
இமிழ் திரைப் பரவை ஞாலம் ஏழைமை உடைத்து, மாதோ!
(கம்ப இராமாயணம், கோலம்காண் படலம், 3)
(பொருள்: மறைதற்குக் காரணமான இரண்டு இமைகளும் அக்கண்களுக்கு அழகென்று அமைக்கப்பட்டிருப்பது போல, (சீதைக்கு அணிசெய்யும் மகளிர்) ஒளிவீசும் ஆபரணங்கள் சீதையின் வடிவத்தை மறைக்கும் என்னும் உண்மையை உணராதவர்களாய், அமிழ்துக்கு மேலும் சுவை கூட்டும் முயற்சியைப் போல, அழகினுக்கு அழகு செய்யத் தொடங்கினார்கள். அவர்கள் அலை ஒலிக்கும் கடல்சூழ்ந்த இந்நிலவுலகத்து அறியாமையுடையவர்கள் அம்மம்மா!) மேலும் தோழியர் அணிகளைப் பூட்டும்போது அவள் உறுப்புகளின் அழகு மறைவதை அறிந்திலர் என்கின்றார்.

'மடநோக்கு' என்றால் என்ன?

மடநோக்கு என்ற தொடர்க்கு மடப்பத்தினையுடைய நோக்கு, நாணம், மடப்பம், மடநோக்கு, மருளும் இளம்பார்வை, மான்பார்வை, கள்ளமற்ற பார்வை, மெல்லிய நோக்கு, அச்சப் பார்வை, அழகிய பார்வை, மருளும் மான் பார்வை, அஞ்சுந் தன்மையை யுடைய பார்வை, பெண்மானொத்த பார்வை, மருண்ட பார்வை என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
பரிமேலழகர் 'மடநோக்கு' என்ற சொல்லுக்கு வெருவுதலையுடைய அதாவது அஞ்சுதலையுடைய பார்வை என்று பதவுரை கூறினார். மானின் கண்கள் எப்பொழுதும் அச்ச நிலையில் இருப்பனபோல் தோன்றுவதோடு அவை அகலமாக விரிந்து களங்கமற்ற தன்மையுடன் காட்சி அளிக்கும். மடநோக்கு என்று சொல்லப்பட்டதால் அறியாப் பார்வை அல்லது கள்ளமற்ற பார்வை என்பது பொருத்தமாகும்.

மடநோக்கு என்பது களங்கமற்ற பார்வை குறித்தது.

பெண்மான் போன்று மருண்ட பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு வேறு அணிகள் தந்து அணிவிப்பது எதற்கு? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மருண்ட பார்வையும் நாணமும் இவளுக்குப் பேரழகு தரும் ஆபரணங்கள் எனும் தகையணங்குறுத்தல் பா.

பொழிப்பு

பெண்மான் போன்ற மடப்பத்தையுடைய நோக்கத்தையும் நாணத்தையும் உடையவளுக்குத் வேறு அணிகலன்களைக் கொணர்ந்து அணிவது ஏன்?