இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0741 குறள் திறன்-0742 குறள் திறன்-0743 குறள் திறன்-0744 குறள் திறன்-0745
குறள் திறன்-0746 குறள் திறன்-0747 குறள் திறன்-0748 குறள் திறன்-0749 குறள் திறன்-0750

பகைவராற் கைப்பற்றப்படாவாறும் கொள்ளையடிக்கப்படாவாறும், அழிக்கப்படாவாறும், நாட்டிற்கும் தலைநகருக்கும் அரசனுக்கும் பாதுகாப்பளிக்கும் இயற்கையும் செயற்கையுமாகிய இருவகையமைப்பு. இது நாட்டின் சிறந்த வுறுப்புக்களுள் ஒன்றாதலாலும், 'வல்லரணும் நாட்டிற் குறுப்பு' என்று முந்தின அதிகாரத்தில் தோற்றுவாய் செய்யப்பட்டதினாலும், நாட்டின் பின் வைக்கப்பட்டது.
- தேவநேயப் பாவாணர்

நாட்டிற்கும் நகருக்கும் ஆட்சித்தலைவர்க்கும் அழிவு வராமல் பாதுகாத்துக் கொள்ளும் அமைப்பு அரண் எனப்படுகிறது. மலை, நீர், மணல், காடு போன்றன இயற்கையரண் என்றும், கோட்டை போன்றன செயற்கையரண் என்றும் இருதிறப்பட்டன. வள்ளுவர் வடிவமைப்பாளராகவே மாறி அரண் அமைவு பற்றி விளக்குகிறார். அரணானது தன் நாட்டைக் காப்பதையும் பகைவரைத் தாக்குதல் செய்தலையும் வீரச்சுவைபட இயற்றித் தந்துள்ளார்.

அரண்

‘அரண்’ என்பது பாதுகாவல் என்னும் பொருளைத்தரும். பாதுகாவலைக் கொடுக்கக் கூடியது ‘அரண்’ எனப்படுகின்றது. மதிற்சுவரும், அகழியும், காடும் அரணாக இருந்த நிலைமையிலிருந்து மாறி வான் எல்லையிலும் இன்று அரண் உண்டாக்கிக் கொண்டிருக்கிறோம். மனித வரலாறு நிறைய முன்னேற்றங்களைக் கண்டிருந்தாலும் அரசியல் பரப்பில் நாடுகளது எல்லைகள் வரையறைப்பட்டும் அவை தனித்தனியான அரசமைப்பு கொண்டும்தான் உள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சீனாவின் பெருஞ்சுவர் போல, அமெரிக்கா போன்ற நன்கு வளர்ந்த குடியாட்சியிலும் குடியேறுபவர்களைத் தடுக்க எல்லை முழுக்க நீளமான சுவர் கட்டவேண்டும் என்ற கருத்தாடல் இன்றும் நடைபெறுகிறது.
அறம் ஒன்றைத் தவிர வேறு காவல் இல்லை என்ற நிலையில்தான் எல்லை வரையறைகள் இல்லாத (borderless) உலகம் பிறக்கும். அதற்கு இன்னும் பல நூற்றாண்டு காலம் ஆகும் என்றே தோன்றுகிறது.

அரண் நாட்டிற்கு உறுப்பு என்பதால் நாட்டின் சிறப்புக்கு அரணும் இன்றியமையாதது. தனது அரசே தலைமை தாங்கி விளங்கவேண்டும் என்ற எண்ணம் நீங்கும் வரையில், ஒரு நாடு நல்ல அரண் பெற்றிருக்க வேண்டும். குறளில் சொல்லப்பட்டுள்ள அரண் நாட்டினை எவ்விதம் காக்கிறது என்று கூறுகிறது. ஒரு நாட்டின் படைபலம் இயங்கிவரும் காவல் நிலை என்றால் அதன் அரணோ நிலையாய் உள்ள காவல் நிலை; அரண் இருந்த நிலையிலேயே தற்காப்பைத் தந்து தாக்குதலும் செய்யும், அரண்களில் அவ்வந்நாட்டினர் நின்று வரிவாங்கியும் அந்தந்த நாட்டுச் சட்டத்திற்குப் புறம்பான குடியேற்றங்களுக்கான தடைகளை நிறைவேற்றியும் காத்து வருகின்றனர். அரசியல், பொருள்நிலை, போர்நிலை, பண்பாட்டு நிலை முதலிய அனைத்துக்கும் நாடு முழுவதற்கும் அரண் காவல் செய்கிறது.

அரண் அமைவாக அமைந்துவிட்டால் நாடு, பகைவர் தாக்குதலுக்கு எளிதில் ஆளாகாது. மூவேந்தர்களின் பல ஆண்டுகள் படையெடுப்பையும் தாக்குப்பிடித்து பாரியின் பறம்புமலையின் அரண் நின்றது என்று புறப்பாடல் வழி அறிகிறோம். குறள் அரண் வகைகளைப் பலபடக் கூறுமிடத்தில், இப்பொழுதைக்கும் பொருந்துமாறு அப்பொழுதே சொல்லி வைத்தாற்போலத் தோன்றுகிறது: அரணே போர் செய்கிறது; அரணே வெற்றியைப் பெற்றித் தருகிறது என்று அதைப் போற்றுகிறார் வள்ளுவர். அரண்காக்கும் போர் வினைவல்லாரது இன்றியமையாமையும் சொல்லிச் செல்கிறார்.

'இன்று கருத வேண்டிய அரண் அறிவாகிய அரண், எதிர்ப்பின்மையாகிய அரண், தற்காப்பு இன்மையாகிய அரண் முதலியனவே ஆகும். அறிவைச் 'செறுவார்க்கும் உள் அழிக்க லாகா அரண்' என்று திருவள்ளுவர் கூறியிருக்கின்றார்.... பொருளுக்கு (அரசியல் வாழ்வுக்குக்) காப்புச் செய்ய வல்லது அறமே என்னும் உண்மையை உலகம் உணர வேண்டிய நிலைமை வந்துவிட்டது' என்னும் மு வரதராசன் கருத்து இங்கு நினைக்கத்தக்கது.

அரண் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 741ஆம் குறள் போர்மேற் செல்வார்க்கும் அரண் மதிப்புமிக்கது; அஞ்சித் தற்காப்பவர்க்கும் அது இன்றியமையாதது என்கிறது.
  • 742ஆம் குறள் நீல நிறத்தினையுடைய ஆழமான கடலும், வெட்ட வெளியும் மலையும் அடர்ந்த காடும் உடையது அரண் ஆகும் எனக் கூறுகிறது.
  • 743ஆம் குறள் உயர்வு, அகலம், வலிமை, நெருங்குதற்கு அருமை இவை நான்கும் அமைந்தது அரண் என்று நூல்கள் கூறும் எனச் சொல்கிறது.
  • 744ஆம் குறள் பகையைத் தடுத்து நிறுத்தற்குரிய இடம் சிறியதாயும் உள்ளே பெரிய இடத்தினை உடையதாய் முற்றுகையிட வரும் படையின் ஊக்கத்தை அழிப்பதாய் உள்ளதே அரணாகும் என்கிறது.
  • 745ஆம் குறள் பகைவர்க்குக் கைப்பற்ற அரியதாய் உணவுப் பொருள்கள் நிறைந்ததாய் உள்ளிருப்பவர்களின் செயற்பாடுகளுக்கு எளிதாக இருக்கும் தன்மையதே அரண் எனச் சொல்கிறது.
  • 746ஆம் குறள் எல்லாப் பொருள்களும் உடையதாய், உற்ற இடத்து உதவும் நல்லாளும் உடையதே அரணாகும் என்கிறது.
  • 747ஆம் குறள் சூழ்ந்தும், சூழாது தாக்கியும் வஞ்சனை செய்தும் பகைவரால் கைக்கொள்ளுதற்கு முடியாதது அரண் எனச் சொல்கிறது.
  • 748ஆம் குறள் வலுவாக வளைத்து வந்துள்ள பகைவரையும் தன்னை விடாமல் பற்றிய அகத்தார் வெல்வதற்குரிய சிறப்பு வாய்ந்தது அரண் என்கிறது.
  • 749ஆம் குறள் போர்முனையில் முதலிடத்திலேயே பகைவர் கெட, முதற்போரிலேயே சிறப்புப் பெற்று மாட்சிமைப்பட்டதே அரண் எனக் கூறுகிறது.
  • 750ஆவது குறள் எத்துணை மேன்மையுடையதாய் இருந்தாலும் செயல்திறம் இல்லாதவரிடம் இருக்கும்போது பாதுகாப்பு இலது என்கிறது.

அரண் அதிகாரச் சிறப்பியல்புகள்

இன்று வளர்ந்திருக்கின்ற போர் முறைகள் அரண் என்ற பாதுகாப்பில் அடங்குகின்றனவாக இல்லை என்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து வானத்திலிருந்து அணுகுண்டுகளையும், இராக்கெட்டுகளையும் ஏவும் நிலைக்கு போர்த்திறம் வளர்ந்துள்ள நிலையில் வள்ளுவர் கூறிய அரண் பற்றிய கருத்துக்கள் இந்தக் காலத்துக்குப் பொருந்தாதவை என்று எழுதுகின்றனர். ஆனால் வள்ளுவர் கூறும் அரண்கள் எல்லாக் காலத்துக்கும் பயன்படுவனவே. அவர் அரண் என்ற பாதுகாப்பு பற்றியே சொல்லுகிறார். கோட்டை, மதில் என்பனவற்றின் உள் விளக்கங்கள் இல்லை. நாட்டின் இயற்கை அரண்களும், பாதுகாக்கும் படைகளும் ஒரு நாட்டின் அரண்களாகக் கொள்ளப்படவேண்டும் எனக் கூறியிருக்கிறார். இன்றைக்குப் பொருந்தாதவன என்பவர்கள் அரண் என்பதைப் பாதுகாப்பு என்னும் பொருள் கொண்டு இவ்வதிகாரத்தின் பாடல்களை மறு வாசிப்பு செய்தால் வள்ளுவரின் கருத்துக்கள் என்றைக்கும் ஏற்றவையே என்பதை உணர்வர்.

ஆற்றல் வாய்ந்த கோட்டை ஒன்று போரில் பகைவரை வெல்கிறது என்று முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப் பற்றியார் வெல்வது அரண்(748) என்ற பாடல் சொல்கிறது. இதில் அரண் உயிருடைய பொருள்போல் செயலாற்றுகிறது என்று வள்ளுவர் பாடி மகிழ்கிறார்.

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்டது அரண் (749) என்ற பாடல் போர்க்காட்சியை நம் முன் நேரடியாகத் தோன்றச் செய்கிறது. போர்க்களத்தின் வீரச் செயல்களும் மாட்சிமையும் அரணுக்கே உரியது என இப்பாடல் கூறுகிறது.

எனைமாட்சித்து ஆகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண் (750) என்ற பாடல் அரணை இயக்குபவர்களது இன்றியமையாமையையும் பாடுகிறது. நாட்டின் பாதுகாப்புக்கு அரணமைவு மட்டுமல்லாமல் அதனை ஆட்சிப்படுத்துவர்களது திறமும் மிகத்தேவை என்பதை அழுத்தமாகக் கூறுவது இப்பாடல்.




குறள் திறன்-0741 குறள் திறன்-0742 குறள் திறன்-0743 குறள் திறன்-0744 குறள் திறன்-0745
குறள் திறன்-0746 குறள் திறன்-0747 குறள் திறன்-0748 குறள் திறன்-0749 குறள் திறன்-0750