இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0742



மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்

(அதிகாரம்:அரண் குறள் எண்:742)

பொழிப்பு (மு வரதராசன்): மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உடையதே அரண் ஆகும்.

மணக்குடவர் உரை: தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும், மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும் உடையது அரணாம்.
தெளிந்தநீர்- பெருநீர். இது கலங்காதாதலின். அணி நிழற்காடு என்றதனாலே செறிவுடைய காடென்று கொள்ளப்படும்.

பரிமேலழகர் உரை: மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாவது.
(எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலம் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார். மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய் இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: மணி போலும் நீல நிறத்தினையுடைய ஆழமான கடலும், வெளி நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் போன்றன நாட்டுக்கு அரண்களாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மணிநீரும், மண்ணும், மலையும், அணிநிழல்காடும் உடையது அரண்.

பதவுரை: மணி-(கரு)நீல நிறம்; நீரும்-நீரும்; மண்ணும்-நிலமும்; மலையும்-மலையும்; அணி-குளிர்ந்த; நிழல்-நிழல்; காடும்-காடும்; உடையது-உடையது; அரண்-கோட்டை.


மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்காடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும் மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும்;
மணக்குடவர் குறிப்புரை: தெளிந்தநீர்- பெருநீர். இது கலங்காதாதலின்; அணி நிழற்காடு என்றதனாலே செறிவுடைய காடென்று கொள்ளப்படும்.
பரிப்பெருமாள்: தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும் மலையாயினும், அழகிய நிழலினையுடைய காடாயினும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: மலை அரண் என்றும், காட்டரண் என்றும் கூறுப. சேற்று அரண் என்பதும் ஒன்று உண்டு. அதுவும் இவற்றினுள் அடங்கும். பரிதி: நீரரணும் கோட்டையரணும் மலையரணும் காட்டரணும் என்ற நாலு வகை அரணும் ;
காலிங்கர்: மணி நீரும் என்றது பளிங்கு போலத் தெளிந்து ஆழம் உடைமையும் வற்றாமையும்; மண்ணும் என்றது நாற்பெரும் சேனையும் அகத்து அடி இடுதற்கு அரிய இடமும்மலையும் என்றது மற்று அதன் புறத்து முற்றி ஓங்கித் தலை மயக்குறுத்து (நிற்கும் மலையும்; அணிநிழல் காடும் என்றது) ஆங்கு அதன் புறம் சூழ்ந்து ஓங்கிப் பரந்த தூங்கு இருள் காடும் வகையறப் பெற்ற இவை நான்கினையும்; [அகத்து-நாட்டிற்குள்ளே]
பரிமேலழகர்: மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும் மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும்;
பரிமேலழகர் குறிப்புரை: எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலம் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார். மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய் இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.

'தெளிந்த நீராயினும், நிழலும் நீருமிலாத வெறுநிலமாயினும் மலையும் அழகிய நிழலினையுடைய காடும்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'நீரரணும் கோட்டையரணும் மலையரணும் காட்டரணும்' என்றார். காலிங்கர் 'பளிங்கு போலத் தெளிந்து ஆழம் உடைமையும் வற்றாமையும் நாற்பெரும் சேனையும் அகத்து அடி இடுதற்கு அரிய இடமும் மலையும்; அணிநிழல் காடும்' என்கிறார். பரிமேலழகர் 'மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும் மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும்' என்று உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அகழியும் வெட்ட வெளியும் மலையும் செறிந்த காடும்', 'நீலமணி போன்ற நிறமுடைய நீர் நிறைந்த அகழியும் மலையும், அழகிய நிழலையுடைய காடும், வெட்ட வெளியும்', 'ஆழமான நீருள்ள அகழியும், மண்திட்டுகளும் மலைகளும், மரமடர்ந்த காடுகளும் சூழ்ந்ததாக', 'வற்றாத நீர் நிலையாகிய அகழியும், நீர் நிழலற்ற வெளிநிலமும் மலையும், அழகிய மரநிழல் செறிந்த காடும் (அடுத்தடுத்து)' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நீல நிறத்தினையுடைய ஆழமான கடலும், வெட்ட வெளியும், மலையும், அடர்ந்த காடும் என்பது இப்பகுதியின் பொருள்.

உடையது அரண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உடையது அரணாம்.
பரிப்பெருமாள்: உடைய இடம் அரணம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அரண் செய்யும் இடம் கூறிற்று.
பரிதி: அரண் என்றவாறு.
காலிங்கர்: உடையதே அரணாவது என்றவாறு.
பரிமேலழகர்: உடையதே அரணாவது.

'உடையது அரணாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சேர்ந்தது அரணாகும்', 'உடையது அரண்', 'இருப்பது கோட்டை', 'உடையதே அரண் ஆகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உடையது அரண் ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நீல நிறத்தினையுடைய ஆழமான கடலும், வெட்ட வெளியும், மலையும், அணிநிழல் காடும் உடையது அரண் ஆகும் என்பது பாடலின் பொருள்.
'அணிநிழல் காடு' என்பது என்ன?

கடல், வெட்டவெளி, மலை, காடு ஆகியன இயற்கை அரண்கள்.

மணிபோல் நீல நீரும், மணற்பரப்பான வெட்டவெளி நிலமும், மலையும், செறிந்த காடும் உடையது அரணாவது.
பாடலில் நான்கு உம்மைகள் வருதலால், நான்கு அரண்களை வள்ளுவர் சொல்கிறார் எனத் தெரிகிறது. இவற்றுள் யாதானும் ஒன்றுடைமையும் அரணாம் என்பார் மணக்குடவர். இந்நான்கையும் இயற்கையரண், செயற்கையரண் என்ற இரண்டனுள் மேலும் விரிப்பர் சிலர். அரண் என்பதை நாட்டரண், தலைநகர் அரண் என்றும் பகுப்பர். தலைநகரைச் சுற்றியிருப்பது காவற்கோட்டை என அறியப்பட்டது. இங்கு கூறப்பட்டிருப்பது நாட்டரண்.
தெ பொ மீனாட்சிசுந்தரம் 'மணிநீர் என்பதே நெய்தல் நிலம். மலையே குறிஞ்சி நிலம், காடே முல்லை நிலம். எஞ்சி நிற்பது பயிராகும் மண் நிறைந்த மருதம்' என நானிலங்களும் அரணாகக் கூறப்பட்டுள்ளன என்பார்.
நகரோ நாடோ அமைக்கும் இடம் இயற்கையரண் உளதாயும், இயற்கையரணிலாத பகுதிக்குச் செயற்கையரண்களும் அமைதல் கூடும் என்பதனைக் கருதியே வள்ளுவனார் இயற்கை செயற்கை என விதவாது பொதுமையில் நால்வகை யரணை நவின்றார் (தண்டபாணி தேசிகர்).

மணிநீர்:
மணிநீர் என்பது நீலநிற நீர் எனப் பொருள்படும். கருநீலநிறநீர் எனவும் சொல்வர். மிகஆழமான நீரின் தோற்றம் கருமையாகக் காணப்படுவதால் அது மணிநீர் எனப்பட்டது. ஆழமான நீல நிற நீர் என்பதால் இது கடலைக் குறிப்பதாகிறது. நாட்டுக்கு அரண் கடலாக அமையின் பகைவர் போர்தொடுப்பது கடினமான இருக்கும். நகர்க்குரிய அரண் என்றால் ‘மணி நீர்’ என்பதற்கு ஆழ்ந்த அகழிநீர் எனப் பொருள் கொள்ளலாம்.
மணிநீர் என்பதற்குத் தெளிந்த, கலங்காத, பளிங்குபோன்ற, எப்பொழுதும் வற்றாத நீர் எனப் பொருள் கொண்டு ஆறு, கடல், அகழி என்பன இயற்கைநீர் அரண்கள் என்றும் அகழி என்றது செயற்கை நீர் அரண் என்றும் மணிநீர் அரணை விளக்குவர்.

மண்:
மண் என்பது பரந்த வெளியிடத்தைக் குறிப்பது. வெட்டவெளி இருக்குமாயின் பகைவர்கள் வருவதையறிந்து எதிர்சென்று வென்றுவிடலாம். ‘மண்’ என்பதனால், அவ் வெளியிடம் மண் நிறைத்து பிறர் உட்புக இயலாதவாறு பள்ளம் முள் கல் ஆகிய இவைகளால் மணற்பரப்பால் அமைக்கப்படுவது. எனவே நிலம் என்னாது மண் எனப்படுகிறது. 'நிழலும் நீரும் இல்லாத வெளிநிலம்' என்பார் மணக்குடவர். 'பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு அமைக்கப் பெற்ற மதிற்புறத்து வெள்ளிடைமண்-அதாவது மருநிலம்' என்பர் பரிமேலழகர். 'நாற்பெருஞ்சேனையும் அகத்து அடி இடுதற்கு அரிய இடம்' என்பது காலிங்கரது விளக்கம். மண் என்பதற்கு மருமண், களர்நிலம், பதுக்கை பரப்பிய நால்வகைச் சேனையும் அடிவைக்க இயலாத மண்நிலம் எனவும் பொருள் கூறுவர்,

மலை:
‘மலை’ அரண் இயற்கையாக அமைவது. உயரம் இவ்வரணின் சிறப்பு. இந்திய நாட்டின் வடவெல்லை தொடரான மலைகளைக்கொண்ட அரண் கொண்டது. மலையின் இடைவெளிகளில் அரணாக சீனநாட்டில் எழுப்பிய சுவர் மனிதனால் உண்டாக்கப்பட்ட ஏழு அதிசயங்களில் ஒன்றாயிருக்கிறது.

அணிநிழல் காடு:
'அணி நிழல் காடு' என்பது காட்டரண்.

'அணிநிழல் காடு' என்பது என்ன?

'அணிநிழல் காடு' என்றதற்கு அழகிய நிழலினையுடைய காடு, காட்டரண், பரந்த தூங்கு இருள் காடு, குளிர்ந்த நிழலையுடைய காடு, அடர்த்தியான நிழல் தரும் காடு, செறிந்த காடு, மரமடர்ந்த காடு, அணீயணியாய் உள்ள இருண்ட காடு, அழகிய மரநிழல் செறிந்த காடு, அடர்ந்து செறிந்த காடு, குளிர்ந்த நிழலுள்ள அழகிய காடு, அழகைத் தரும்படியான நிழலைக் கொடுக்கும் அடர்ந்த காடு என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

அணிநிழற்காடு என்றதற்கு அழகிய நிழல் உள்ள காடு என்பதைவிட அணியாக அமைந்து நிற்கும் அடர்ந்த காடுகள் என்பதே நாட்டிற்கு அரணாவதற்குப் பொருத்தம். நிழல் என்றதற்கு இருள் எனப் பொருள் கொள்வார் காலிங்கர். நிழல் காடுகள் என்றால் பகைவர்க்கு வாய்ப்பாக அமையுமே என எண்ணியதால் இவர் இருள் எனக் கொண்டார் போலும்.
அணிநிழல் காடு பகைவர் உட்புகாதவாறு தடுத்து நிற்கும் காவற்காட்டை உணர்த்துவது. வானுற ஓங்கிய பெரிய மரங்களையும் அவற்றுக்கு அடியில் பலப்பல சிறிய மரங்களையும் அவற்றின் அடியில் ஒன்றன்மேல் ஒன்று கிடந்த கொடிகளையும் செடிகளையும் புதர்களையும் உடைய காடு அணிநிழற் காடாம். இத்தகைய காட்டினுள் பகைவர் புக அஞ்சுவர். அடர்ந்த காடுகளை எளிதில் அழிக்கவும் முடியாது.

'அணிநிழல் காடு' என்ற தொடர்க்கு செறிந்த காடு என்றது பொருத்தமான பொருள்.

நீல நிறத்தினையுடைய ஆழமான கடலும், வெட்ட வெளியும் மலையும் அடர்ந்த காடும் உடையது அரண் ஆகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என்பன அரண் வகைகள்.

பொழிப்பு

நீலமணி போன்ற நிறமுடைய கடலும் வெட்ட வெளியும் மலையும் அடர்ந்த காடும் உடையது அரணாகும்.