இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0745



கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்

(அதிகாரம்:அரண் குறள் எண்:745)

பொழிப்பு (மு வரதராசன்): பகைவரால் கைப்பற்றப்படுவதற்கு முடியாததாய், தன்னிடம் உணவுப்பொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு எளியதாகிய தன்மை உடையது அரண்.

மணக்குடவர் உரை: பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய்த் தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய் அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையுடைத்தாயிருப்பது அரணாவது.
எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாதலும் வேண்டுமென்றவாறாயிற்று; தூரத்தில் நீரைப் பிறரறியாமல் உள்ளே புகுதவிடுதலும் வேண்டும் என்பதாம்.

பரிமேலழகர் உரை: கொளற்கு அரிதாய் - புறத்தாரால் கோடற்கு அரிதாய்; கொண்ட கூழ்த்து ஆகி - உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார் நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரணாவது.
(கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம் முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும் அவர் விட்டன அகத்தார்மேல் செல்லாமையும், பதணப்பரப்பும் முதலாயின.)

இரா இளங்குமரன் உரை: பகைவரால் பற்றுதற்கு அருமை உடையதாய், உள்ளிருப்பார்க்கு வேண்டிய அளவு உணவு உடையதாய், உள்ளிருப்பார் தங்கிப் போர் செய்தற்கு எளிதானதாய் அமைந்தது அரண்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண்.

பதவுரை: கொளற்கு-கொள்ளுதற்கு; அரிதாய்-அருமையானதாய்; கொண்ட-கையிருப்பாக வைக்கப்பட்ட; கூழ்த்து-உணவினையுடையது; ஆகி-ஆய்; அகத்தார்-உள்ளேஇருப்பவர்; நிலைக்கு எளிதாம்-வருந்தாமல் கிட்டக்கூடியதாம்; நீரது-தன்மையுடையது; அரண்-கோட்டை.


கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய்த் தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய்;
பரிப்பெருமாள்: பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய்த் தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய்;
பரிதி: மாற்றாரால் அழிக்கப்படாததாய், விளைவுண்டாய்;
காலிங்கர்: பகைவேந்தர் முற்றி இருந்தும் கொளற்கு அரிதாய், அகத்தோர் நெடிது ஆண்டு இருப்பினும் உணற்கு எளிதாகப் பெரிதும் ஈட்டிக்கொண்ட நெல் அரிசி கொள்ளுப் பயிர் முதலிய உணவுப் பொருள்களையும் உடைத்தாய்;
பரிமேலழகர்: புறத்தாரால் கோடற்கு அரிதாய் உட்கொண்ட பலவகை உணவிற்றாய்;
பரிமேலழகர் குறிப்புரை: கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும் இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக் கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின. [இளை - காவற்காடு; கிடங்கு -அகழி; பொறிகள் - மதில் மேலுள்ள வில், வேல், வாள், அம்பு முதலியவற்றை வீசும் எந்திரங்கள்;]

'பகைவரால் கொள்ளுதற்கு அரிதாய்த் தன்னகத்தே அமைக்கப்பட்ட உணவையும் உடைத்தாய்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிடிப்பதற்கு அரிதாய் உணவு நிறைந்ததாய்', 'பகைவர்க்குக் கைப்பற்ற அரியதாய் உணவுப் பொருள்களைக் கொண்டதாய்', 'பகைவர்களால் கைப்பற்ற முடியாதபடி, உணவுப் பொருள்கள் வேண்டிய மட்டும் உள்ளதாயும்', 'பகைவரால் கொள்வதற்கு முடியாததாய், இயல்பாகக் கொண்டுள்ள உணவுப் பொருள்களை உடையதாய்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பகைவர்க்குக் கைப்பற்ற அரியதாய் உணவுப் பொருள்கள் நிறைந்ததாய் என்பது இப்பகுதியின் பொருள்.

அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையுடைத்தாயிருப்பது அரணாவது.
மணக்குடவர் குறிப்புரை: எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாதலும் வேண்டுமென்றவாறாயிற்று; தூரத்தில் நீரைப் பிறரறியாமல் உள்ளே புகுதவிடுதலும் வேண்டும் என்பதாம்.
பரிப்பெருமாள்: அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையும் உடைத்தாயிருப்பது அரணாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: எனவே, புறத்தார்க்கு நிற்றற்கரிய நீரையுடைத்தாதக வேண்டும். அஃதாவது அரணுக்கு நீங்கி நிற்பதோர் ஆற்றினின்றும் பிறர்க்குத் தோற்றாமல் சுருங்கையாகப் படுத்து உள்ளே நீர் புகுதலும், மதிலை முற்றினார்க்கு அணைய நீர் இன்மையும், இன்னும் அதனானே வெற்றிலையும் பூவும் உள்ளே உண்டாக்குதலும் பிறவும் ஆம்.[சுருங்கையாகப் படுத்து-கோட்டையிற் கள்ள வழி]
பரிதி: நோயற்றதாய் உள்ளது அரண் என்றவாறு.
காலிங்கர்: நாற்பெருஞ்சேனையும் விட்டு உலாவுதற்கு வேண்டும் வீதியும் பூவும் சாந்தும் நீரும் நிழலும் பொதுவியர்க்கு உரிய மகளிரும் பிறவும் உடையது யாது; மற்று அதுவே அரண் ஆவது என்றவாறு. [பொதுவியர்க்கு உரிய மகளிர் - பரத்தையர்]
பரிமேலழகர்: அகத்தாரது போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரணாவது.
பரிமேலழகர் குறிப்புரை: நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம் முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும் அவர் விட்டன அகத்தார்மேல் செல்லாமையும், பதணப்பரப்பும் முதலாயின. [பதணப்பரப்பு - மதிலுள் மேடை]

'அகத்துறைவார்க்கு நிற்றற்கு எளிதாகும் நீரையும் உடைத்தாயிருப்பது அரண்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'நோயற்றதாய் உள்ளது அரண்' என்கிறார். காலிங்கர் 'நாற்பெருஞ்சேனையும் விட்டு உலாவுதற்கு வேண்டும் வீதியும் பூவும் சாந்தும் நீரும் நிழலும் பொதுவியர்க்கு உரிய மகளிரும் பிறவும் உடையது யாது; மற்று அதுவே அரண்' என உரைத்தார். பரிமேலழகர் 'போர்நிலைக்கு எளிதாய நீர்மையையுடையதே அரண்' எனப் பொருள் கூறுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'உள்ளிருப்பவர் செயலுக்கு எளியதே அரண்', 'உள்ளே நின்றவர் போர் செய்யும் நிலைக்கு எளிதாம் இயல்பினையுடையது அரண்', 'உள்ளே இருக்கிறவர்களுக்கு (வெளியே உள்ள பகைவர்கள் எவ்வளவு காலம்) முற்றுகையிட்டாலும் அதைப் பொருட்படுத்தாமலிருக்கும்படி) வேண்டிய எல்லா வசதிகளும் நிறைந்ததாக உள்ளதே கோட்டை', 'உள்ளிருப்போரின் வாழ்வுக்கு எளிதாக இருக்கும் தன்மையதே அரணாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உள்ளிருப்பவர்களின் செயற்பாடுகளுக்கு எளிதாக இருக்கும் தன்மையதே அரண் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பகைவர்க்குக் கைப்பற்ற அரியதாய் உணவுப் பொருள்கள் நிறைந்ததாய் அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது அரண் என்பது பாடலின் பொருள்.
'அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது' என்ற தொடர் குறிப்பது என்ன?

பன்னாட்கள் போர் நீடித்தாலும் அகத்தார் தாக்குப்பிடிக்க வல்லதாயிருப்பது அரண்.

பகைவரால் கைப்பற்றுவதற்கு அருமையுடையதாய் போதிய உணவுப் பொருள்களைத் தன்னகத்தே உடையதாய் உள்ளிருப்போர்க்கு எந்தவித வசதிக்குறைவும் இன்றி போர்நிலைக்கெளிதாய உள்ள தன்மையுடையதாய் அமைவது அரண்.
தாக்குதலையும் தடுத்தலையும் எளிதாகக் கையாளக் கூடியதாக அமைவது அரண். கைப்பற்ற முடியாததாய் உயர்வகலம் திண்மை பலவித பொறிகளைக் கொண்டும் கையிருப்பில் அனைத்து நுகர்வுப்பொருட்களைக் கொண்டதாயும், கோட்டைக்குள் இருக்கும் ஆட்களும், படைவீரர்களும் வாழும் நிலையை எளிதாக்கும் தன்மை கொண்டதாயுள்ளது அது. கூழ் என்பது உணவு குறித்த சொல்லாயினும் இங்கு அது துய்ப்பதற்கு ஏற்ற பொருள்கள் அனைத்தினையுமே குறிக்கும். பல நாள் முற்றுகையிட்டுப் போர் நடைபெற்றாலும், உள்ளே இருக்கும் மக்களுக்கு இப்பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கும் நிலையில் இருக்கவேண்டும். அமைதிக் காலத்திலும் அரண்காவல் வேண்டியிருக்கும். அமைதிக்காலமானாலும் போர் நடைபெறும் நேரத்திலானாலும் அரணுக்குள்ளேயிருப்பவர்கள் இயல்பான வாழ்க்கை நடத்துவதற்கு எளிதாக உள்ளவாறான ஏற்பாடுகளைக் கொண்டது அரண்.

'அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது' என்ற தொடர் குறிப்பது என்ன?

அகத்தார் என்ற சொல் உள்ளிருப்பார் என்ற பொருள் தருவது. இங்கு அது அரணுள் இருப்போரைக் குறிக்கிறது. (புறத்தார் என்பவர் முற்றுகையிட வந்து மதிலுக்கு வெளியேயிருப்பவர் ஆவார்.)
'நீரது' என்பதற்குத் தன்மையுடையது என்றும் நீரையுடையது என்றும் இருதிறமாகப் பொருள் கொள்ளப்பட்டு இத்தொடர் விளக்கப்பெற்றது. 'அகத்தார் நிற்றற்கு எளிதாகும் நீரையுடைத்தாயிருப்பது அதாவது நிலைக்குமளவு அளவான நீரும் உடையது; அதேநேரம், புறத்தார்க்கு நிற்றற்கரிதாகும் நீரையுடைத்தாதல் அதாவது நிலை கொள்ளாத அளவு பெருகுகிற நீரும் வேண்டும்' என்றும் 'அகத்தோர்க்கு அரணிலிருந்து வெகுதூரத்திற்கப்பாலுள்ள ஆற்றினின்றும் வெளியார் யார்க்கும் தெரியாதபடிச் சுரங்க வாய்க்கால் வழியாக அரணுக்குள் நீர் புகுதலும், முற்றுகையிட்டார்க்கு அணையக் கூட நீர் இன்மையையும் உடைமையோடு, உள்ளிருப்பார் நுகர்தற்குரிய பூ, வெற்றிலை முதலிய போகப் பொருள்களை விளைவிப்பதாயும் இருத்தல் வேண்டும்' என உரைப்பர் மணக்குடவர்/பரிப்பெருமாள். பரிமேலழகர் 'நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட கணை முதலியன புறத்தார்மேல் எளிதில் சேறலும் புறத்தார் விட்டன அகத்தாரைத் தாக்கமையும், மதிலுள் மேடை முதலாயின' என்பார்.
இவற்றுள் 'போர்நிலைக்கு எளிதாம் தன்மையுடையது' என்னும் பரிமேலழகர் உரை சிறக்கும்.
'அகத்தார் நிலைக்கெளிதாம் நீரது' என்றதற்கு உள்ளிருப்பார் பகைவரை வெல்லும் போர்நிலைக்கெளிதாய தன்மையை உடையது என்பது பொருள்.

பகைவர்க்குக் கைப்பற்ற அரியதாய் உணவுப் பொருள்கள் நிறைந்ததாய் உள்ளிருப்பவர்களின் செயற்பாடுகளுக்கு எளிதாக இருக்கும் தன்மையதே அரண் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஏற்பாட்டியலில் அரண் சிறந்து விளங்க வேண்டும்.

பொழிப்பு

கைப்பற்றுதற்கு அரியதாய் உணவுப் பொருள்கள் நிறைந்ததாய் உள்ளிருப்பவர்களின் செயல்களுக்கு எளிதாக இருக்கும் தன்மையதே அரண்.