இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0749



முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்டது அரண்

(அதிகாரம்:அரண் குறள் எண்:749)

பொழிப்பு (மு வரதராசன்): போர்முனையில் பகைவர் அழியும்படியாக (உள்ளிருந்தவர் செய்யும்) போர்ச் செயல் வகையால் பெருமை பெற்றுச் சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.

மணக்குடவர் உரை: முந்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படியாக, வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி மாட்சிமைப்பட்டது அரணாவது.
அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின மதிற்றலையில் அமைத்தல்.

பரிமேலழகர் உரை: முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி - போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று; மாண்டது அரண் - மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது.
(தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப்பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல், என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். 'மற்றும் வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல் போதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை.)

வ சுப மாணிக்கம் உரை: போர்முனையில் பகைவர் ஓடுமாறு போர்வினையில் பெருமிதச் சிறப்புடையதே அரண்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி மாண்டது அரண்.

பதவுரை: முனைமுகத்து-போர்முனையின் முன்னிடத்தில், போர் முகப்பு; மாற்றலர்-பகைவர்; சாய-கெட, அழியஜ்; வினைமுகத்து-முதற்போரிலேயே, போர்வினையின்கண், போரின் முன்னணியில்; வீறு எய்தி-சிறப்பு பெற்று, உயர்வு அடைந்து; மாண்டது-மாட்சிமையுடையது; அரண்-கோட்டை.


முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறெய்தி :

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முந்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படியாக, வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி;
மணக்குடவர் குறிப்புரை: அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின மதிற்றலையில் அமைத்தல். [அட்டாலகமும் - கோட்டை மதில்மேல் உள்ள மண்டபம்; மதில் தலையில் -மதில் உச்சியில்]
பரிப்பெருமாள்: முந்துற்ற முகத்தினையுடைய பகைவர் கெடும்படியாக, வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி;
பரிப்பெருமாள் குறிப்புரை: அஃதாவது அட்டாலகமும் மதிற்பொறியும் முதலாயின மதிற்றலையில் அமைத்தல். இது மதில் தலையில் கருவிகள் அமைக்க வேண்டும் என்றது.
பரிதி: எதிர்த்த படை சயங் கொள்ளாமல் சாய்ந்து போக அரணிருந்தார் வெற்றி கொள்வது;
காலிங்கர்: புறத்து அரசன் கடைப்புறத்துப் போர் தொடங்கிய அளவிலே தலை சாய்ந்து ஓடுமாறு அகத்தோர் இயந்திரம் முதலிய கல்பொறியும் பாம்பும் கனலும் கடிகுரங்கும் வில் பொறியும் வேலும் வெந்தீவட்டும் காய்ச்சிய மணலும் கவ்வு இருப்பு உலக்கையும் வீச்சுறு தூண்டிலும் விசைத்தெறிகவணும் ஆகிய வினைத்தொழில் உடைய; [கடைப்புறந்து- பின்படையைப் பாதுகாத்து]
காலிங்கர் குறிப்புரை:முனைமுகத்து என்பது கடைப்புறந்து வந்து போர் தொடங்கிய என்றது. வினைமுகத்து என்பது போர்த்தொழிலிடத்து என்றது. வீறு எய்தி என்பது விருப்பம் உற்று என்றது.
பரிமேலழகர்: போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம் அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று;
பரிமேலழகர் குறிப்புரை: தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப்பொருதல் கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல், என்றிவை முதலாய வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். [வீறுபெற்று - வேறு ஒன்றிற் செல்லாத பெருமை பெற்று; தொடக்கத்தில் கெட்டார்-போர்புரியவந்து முதலிலேயே தோற்றவர்; எய்தல்- அம்பெய்தல்; எறிதல்- சக்கரம், வேல் முதலியவற்றை வீசி எறிதல்; குத்துதல் ஈட்டியாற் குத்துதல்; வெட்டுதல் -கத்தியால் வெட்டுதல்; அதனைச் சாய்ப்பன செய்தல்-எதிரிப்படையை அழிக்கக்கூடிய வினைகளைச் செய்தல்]

'எதிர்த்த படை சாய்ந்து போக அரணிருந்தார் வெற்றி கொள்வது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'போர்முனையில் பகைவர் ஓடுமாறு போர்வினையில்', 'போர் செய்யுமிடத்திலே பகைவர் அழியும்படியாகப் போர்த்திறத்தால் பெருமை பெற்று', '(உள்ளே புகுந்துவிட்ட பகைவர்களைப் பற்றிக் கொள்ளத் தவறிவிட்டாலும்) போர் புரியவேண்டி நேரிட்டால் பகைவர்கள் ஒருமிக்க மடியும்படியான (எந்திர தந்திர) வேலைப்பாடுகள் அமைந்துள்ள பெருமையுடையதான', 'நேரிற் போர் தொடங்கியுள்ள இடத்தேயுள்ள பகைவர் தன்னகத்துள்ளோர் செய்யும் போர்ச்செயல் வன்மையால், இறந்தொழியும்படி சிறப்படைந்து' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

போர்முனையில் முதலிடத்திலேயே பகைவர் கெட, முதற்போரிலேயே சிறப்புப் பெற்று என்பது இப்பகுதியின் பொருள்.

மாண்டது அரண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாட்சிமைப்பட்டது அரணாவது.
பரிப்பெருமாள்: மாட்சிமைப்பட்டது அரணாவது.
பரிதி: அரண்.
காலிங்கர்: மாட்சிமைப்பட்டது யாது; மற்று அதுவே அரணாவது என்றவாறு.
பரிமேலழகர்: மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே அரணாவது.
பரிமேலழகர் குறிப்புரை: 'மற்றும் வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல் போதல் செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை. [சுருங்கை வழி- கோட்டையிலுள்ள கள்ள வழி]

'மாட்சிமைப்பட்டது அரணாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெருமிதச் சிறப்புடையதே அரண்', 'மாட்சிமைப்பட்டது அரண்', 'மாட்சிமையுள்ளதே கோட்டை', 'பேர்பெற்றதே தக்க அரணாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மாட்சிமைப்பட்டதே அரண் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
போர்முனையில் முதலிடத்திலேயே பகைவர் கெட, முதற்போரிலேயே சிறப்புப் பெற்று மாட்சிமைப்பட்டதே அரண் என்பது பாடலின் பொருள்.
'வினைமுகத்து வீறெய்தி' என்றால் என்ன?

அதிரடியாகத் தாக்கவல்ல வடிவமைப்புள்ள அரண் பெருமை தேடித்தரும்.

முற்றுகையிட வந்த பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்து போகுமாறு, போர்த்தொழிலில் உயர்வு அடைந்து மாட்சிமை பெற்ற அமைப்புகளைக் கொண்டது அரண்.
அரண், செயற்பட்டு வீறெய்தி நிற்கும் மாட்சிமை, வீரச்சுவை தோன்றும் வகையில் விளக்கப்படுகிறது. பகைவர் முற்றுகையிடும் பொழுது, அவர்களைப் போர் முனையிலே அழிப்பதற்குரிய போர்த்திறங்களை உடையதாக அரண் இருத்தல் வேண்டும் என்கிறது பாடல். போர் தொடங்கிய உடனேயே, அவர்களது ஊக்கம் அழியும் வண்ணமும், அவர்களை முன்னேறவிடாமல் உடனடித் தாக்குதலைத் தொடங்குவதற்கு ஏதுவாகவும் அரண், அதன் கோபுரம், மேல்வீடு ஆகியன அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயத்தமாய் நிற்கும்படைகள் பகைவர் அரணை நெருங்கும் சமயத்தில் அம்புகளை எய்தல், வேல்களை எறிதல், நெருப்புக் குண்டுகளையும் கவண்களையும் வீசுதல், ஈட்டிகளால் குத்துதல் முதலியனவற்றை விரைந்து செய்வர். பகைவர் காணமுடியாத இடங்களில் இருந்துகொண்டு அகத்தோர் கொடுக்கும் முதல் தாக்குதலே, புறத்தோர் திரும்பவும் வந்து போர் செய்ய எண்ணக்கூடாது என்ற அளவில் இருக்குமாதலால், முற்றவந்தவர் அரணைக் கடக்க முடியாது ஆற்றல் அழிந்து திரும்பிவிடுவர்.
போரின் விரைவு தோன்றுவதால் ஆங்கிலத்தில் Blitz என்று சொல்லப்படுவதற்கு இணையான தாக்குதலை இக்குறள் காட்டுகிறது எனலாம். இவ்வாறு போர்க்களத்தின் முதலிடத்திலேயே பகைவர் அழிய முதற்தாக்குதலிலேயே தனிப்பெருமை எய்தி மாட்சிமைப்பட அரணின் வடிவமைப்பு துணை செய்கிறது. அரணே போர் செய்து வெற்றி ஈட்டித் தருவதுபோல் அம்மாட்சி இங்கு விளக்கம் செய்யப்பட்டுள்ளது.

'வினைமுகத்து வீறெய்தி' என்றால் என்ன?

வினைமுகத்து என்பது முதற்போரிலேயே அதாவது போர்ச்செயல் தொடங்கிய அளவில் என்ற பொருள் தருவது. இதை 'அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளால் பகைவர் தொடங்கிய போரினை அறிந்து எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல், என்றிவை முதலாய வினைகளுள், அதனை(ப் பகையை)ச் சாய்ப்பன செய்தல்' என விளக்குவார் பரிமேலழகர். 'எதிர்த்து வரும் பகைவர்களது நிலைக்கு ஏற்ப அவர்களை எதிர்த்துத் தோற்கடிப்பதே இங்கு வேண்டுவது. இதனுள் எல்லாவகையான போர்முறை விரிவுகளும் அடங்கும்' என்பார் தெ பொ மீ.
வீறு எய்தல் என்றதற்குப் போரில் சிறப்புறல்; தம் கை மேலோங்க நிற்றல் என்று பொருள் கொள்வர். வினைமுகத்து இவ்வாறு வீறு எய்துவது-சிறப்புறுவது வினைப்படு நிலையின் வீறு. அது படைபலத்தின் ஆற்றல் முழுவதையும் ஒருங்கிணைத்து விரைவாகவும் கடுமையாகவும் தாக்குவதைக் குறிக்கும். ஒரு புறம் படைவீரகள் குழுமமாகத் தோன்றி கண்ணிமைக்கும் நேரத்தில் பகைவர் தலை சாய்ந்து ஓட வைப்பர்; மறு பக்கம் பகைப்படை எதிர்பாராத சுரங்கம் போன்ற பகுதியிலிருந்து மறைந்திருந்த படை தோன்றி அவர்களைத் திகைக்கச் செய்யும்; இன்னொரு புறம் மதில் மீதிருந்து போர்க்கருவிகளை - காலிங்கர் கூறுவதுபோல இயந்திரம் முதலிய கல்பொறியும் பாம்பும் கனலும் கடிகுரங்கும் வில் பொறியும் வேலும் வெந்தீவட்டும் காய்ச்சிய மணலும் கவ்வு இருப்பு உலக்கையும் வீச்சுறு தூண்டிலும் விசைத்தெறிகவணும் -இயக்கி பகைவரைக் கலங்கச் செய்வர். இவ்வாறு ஒரே நேரத்தில் பல திசைகளிலிருந்து தாக்கி வெற்றி எய்துவது 'வினைமுகத்து வீறெய்தி' எனப்பட்டது.
'வினைமுகத்து வீறெய்தி' என்றதற்கு மணக்குடவர் 'வினை செய்யும் இடத்து வெற்றியெய்தி' எனவும் காலிங்கர் 'போர்த்தொழிலிடத்து விருப்பம் உற்று' என்றும் பரிமேலழகர் 'வினை வேறுபாடுகளான் வேறு ஒன்றிற் செல்லாத பெருமை பெற்று' என்ற பொருளிலும் உரை செய்கின்றனர்.

'வினைமுகத்து வீறெய்தி' என்பது போர்த்தொழிலில் பெருமிதம் கொண்டு என்ற பொருளது.

போர்முனையில் முதலிடத்திலேயே பகைவர் கெட, முதற்போரிலேயே சிறப்புப் பெற்று மாட்சிமைப்பட்டதே அரண் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

முதலிலேயே ஓங்கி அடிக்கவல்ல அமைப்புடையது அரண்.

பொழிப்பு

போர்முனையில் பகைவர் அழியும்படியாகப் போர்த்திறத்தால் சிறப்புடையதே அரண்.