இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0746



எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்

(அதிகாரம்:அரண் குறள் எண்:746)

பொழிப்பு (மு வரதராசன்): தன்னிடம் உள்ளவர்க்கு (வேண்டிய) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல வீரர்களை உடையது அரண் ஆகும்.

மணக்குடவர் உரை: எல்லாப் பொருள்களையும் உடைத்தாய், உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண்.
எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.

பரிமேலழகர் உரை: எல்லாப் பொருளும் உடைத்தாய் - அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது.
(அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார்.)

வ சுப மாணிக்கம் உரை: எல்லாப்பொருளும், இடத்துக்குக் கொண்டுபோய் உதவும் நல்லாளும் உடையதே அரண்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் நல்லாள் உடையது அரண்.

பதவுரை: எல்லா-அனைத்து; பொருளும்-பொருளும்; உடைத்தாய்-கொண்டதாய்; இடத்து-இடத்து; உதவும்-உதவும்; நல்லாள்-நல்ல வீரர்; உடையது-உடையது; அரண்--கோட்டை.


எல்லாப் பொருளும் உடைத்தாய்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாப் பொருள்களையும் உடைத்தாய்;
மணக்குடவர் குறிப்புரை: எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.
பரிப்பெருமாள்: எல்லாப் பொருள்களையும் உடைத்தாய்;
பரிப்பெருமாள் குறிப்புரை: எல்லாப் பொருளமாவன-நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும்.
பரிதி: எல்லாப் பொருளும் உண்டாய்;
காலிங்கர்: கீழ்ச் சொல்லிப் போந்த பரிசே அரணியல் பொருளும் அகத்தமை பொருளும் பிறவுமாகிய எல்லாப் பொருள்களும் இனிது அமைவு உடைத்தாய்; [கீழ்ச் சொல்லிப் போந்த பரிசே-கீழ்ச் சொல்லிப் போந்தபடி]
பரிமேலழகர்: அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்;

'எல்லாப் பொருள்களையும் உடைத்தாய்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். நுகரவேண்டுவனவும் படைக்கலங்களும், அகத்தமை பொருளும் பிறவும், அகத்தோர்க்கு வேண்டும் பொருள்கள் என அவர்கள் இதை விளக்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னகத்தே தங்கி இருப்பவர்கட்கு வேண்டிய எல்லாப் பொருள்களும் உடையதாய்', '(சண்டையில்லாத காலங்களிலும் கூட முற்றுகை இருப்பது போலவே எதிர்த்து நிற்பதற்கு அவசியமான) எல்லாத் தளவாடங்களும் உள்ளதாக', 'தன்னுள் இருப்பார்க்கு வேண்டிய எல்லாப் பொருளும் உடையதாய்', 'நாட்டு மக்களுக்கு வேண்டும் எல்லாப் பொருளும் பெற்றிருப்பதாய்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எல்லாப் பொருள்களும் உடையதாய் என்பது இப்பகுதியின் பொருள்.

இடத்துதவும் நல்லாள் உடையது அரண்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உற்றவிடத்து உதவவல்ல வீரரையுடையது அரண்.
பரிப்பெருமாள்: உற்றவிடத்து உதவவல்ல நல்ல வீரரையும் உடையது அரண்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நல்ல வீரரும் வேண்டும் என்றது.
பரிதி: உற்றவிடத்துதவும் சேவகர்களை உடையது அரண் என்றவாறு.
காலிங்கர்: புறத்தகல் சேனைத் திறத்து அறிவினைக்குச் சினத்து இடன் உதவும் திருந்திய வீரரையும் உடையது யாது மற்று அதுவே அரணாவது என்றவாறு.
பரிமேலழகர்: புறத்தோரால் அழிவெய்தும் எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக்காக்கும் நல்ல வீரரையும் உடையதே அரணாவது.
பரிமேலழகர் குறிப்புரை: அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும் முதலிய நற்குணங்கள் உடைமை பற்றி 'நல்லாள்' என்றார்.

'உற்றவிடத்து உதவவல்ல நல்ல வீரரையும் உடையது அரண்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி நல்லாள் என்றதற்குச் சேவகர்கள் எனப் பொருள் கொள்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'புறத்தே இருந்து தாக்குபவர்களால் அழிவு வருமிடத்து உதவுகின்ற நல்ல வீரரை உடையது அரண்', 'அந்தந்த வேலைக்கு அந்தந்த சமயத்தில் உதவக்கூடிய பயிற்சியுடைய தகுந்த ஆள்பலமு உள்ளதாக இருப்பது தான் கோட்டையாகும்', 'எதிரி தாக்குமிடத்தே போர்புரிந்துதவும் நல்ல வீரரையுடையதாயிருப்பதே அரணாகும்', 'பகைவரால் கேடு வந்த இடத்து உதவிக்காக்கும் நல்ல வீரரை உடையது அரணாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உற்ற இடத்து உதவும் நல்லாளும் உடையதே அரணாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எல்லாப் பொருள்களும் உடையதாய், உற்ற இடத்து உதவும் நல்லாளும் உடையதே அரணாகும் என்பது பாடலின் பொருள்.
'நல்லாள்' யார்?

துணை வினை செய்யும் ஆட்களும் மிகத் தேவை அரணுக்கு.

கோட்டைக்குள்ளே இருப்பவர்கட்குத் தேவையான எல்லாப் பொருள்களும் குறைவறப் பெற்றதாய், உள்ளிருந்து உதவி செய்தற்குரிய சிறந்த துணை வீரர்களையும் உடையது அரண்.
அரணுக்குள்ளே இருக்கும் மக்களுக்கு வேண்டிய எல்லாம் பொருள்களையும் உடையதாய், வேண்டும் இடத்து வந்து உதவிசெய்யும் நல்ல ஆட்களையும் கொண்டதாயும் அரண் இருக்க வேண்டும். இதற்கு முந்தைய குறளில் உணவுப்பொருள் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இங்கு எல்லாப் பொருளும் உடையதாக வேண்டுமென்று சொல்லப்படுகிறது. எல்லாப்பொருளும் என்றது அனைத்து நுகர் பொருட்கள், படைக்கலங்கள், மருத்துவப் பொருட்கள் போன்றவை. புறத்தார் அரணுக்குள்ளே எப்பொருளும் செல்லவிடாமல் தடுப்பர். எனவே எல்லாப்பொருள்களும் போதிய கையிருப்புக் கொண்டதாக இருக்க வேண்டும்.
'இடத்துதவும்' என்பதற்கு உற்றவிடத்து உதவும் என்பது பொருள். தேவைப்பட்ட இடங்களுக்கெல்லாம் உடன் சென்று உதவுவது. உதவித் தேவை போர் நிலையிலும் எழலாம்; அமைதிக் காலத்தும் உண்டாகலாம். போரில் காயம்பட்டு துன்பப்பட்டிருப்பவருக்கு முதல் உதவி செய்து கோட்டைக்குள்ளே மருத்துவரிடம் எடுத்துச் செல்லுதல் போன்ற பணி ஆற்றுவதைக் குறிப்பது. போர் இல்லாத பிற நேரங்களிலும் உளவறிதல் போன்ற மற்ற பல பணிகளைச் செய்யத் துணை ஆட்கள் வேண்டியிருக்கும்.
'நல்லாள்' என்பதற்குப் பரிதி கூறும் 'சேவகர்' என்ற பொருள் சிறந்தது.

'நல்லாள்' யார்?

'நல்லாள்' என்றதற்கு வீரர், நல்ல வீரர், சேவகர், திருந்திய வீரர், நல்ல படைத்தலைவன், நல்ல படைவீரர், பயிற்சியுடைய தகுந்த ஆள்பலம், வலிய வீரர், சிறந்த வீரர், நன்மறவர், வலிய போர் வீரர் என உரையாசிரியர்கள் பொருள் கூறியுள்ளனர்.

பெரும்பான்மையர் போர் வீரர் என்ற பொருளிலேயே உரை செய்துள்ளனர். போர்ச் செயல் புரிபவர்களைப் பற்றி இவ்வதிகாரத்துப் பின்வரும் குறள்களில் வள்ளுவர் பாடியுள்ளார். நாமக்கல் இராமலிங்கம் ''நல்லாள்' என்பது 'தகுதியான ஆள்'. அதாவது அந்தந்த வேலையிற் பயிற்சியுள்ள ஆட்கள்' எனப் பொருள் கூறி 'எல்லாப் பொருள்களும் எல்லா வேலைகட்கும் பயிற்சி பெற்ற நல்ல ஆள் பலமும் நிரந்தரமாக, கோட்டையில் எப்போதும் இருக்க வேண்டும்' என விளக்குவார்.
நல்லாள் என்றது போர்க்கலையில் அடிப்படைப் பயிற்சி பெற்று அரண் பணிகள் அனைத்திலும் ஓரளவு திறன் பெற்றவர்களைக் குறிக்கும். நெருக்கடியான சூழ்நிலையில்-போரானாலும் அல்லது அமைதிக்காலமானாலும்- எத்தகைய இக்கட்டுகளுக்கும் ஈடு கொடுக்கும் நிலையில் பணியாற்றும் நல்ல உதவியாளர்களாகவும் (auxiliary) இருப்பர். தொண்டுள்ளம் கொண்டு நாட்டுப்பற்றுடையவராக இருப்பதால் நல்லாள் எனப்பட்டனர்.

நல்லாள் என்ற சொல்லுக்குப் படைத்தலைவன் என்றும் சிலர் உரை செய்தனர். இது பொருந்தாது. இன்னும் சிலர் நல்ல பெண் எனப்பொருள் கொண்டு இது வெற்றி தரும் பெண் தெய்வம் என்றும் கொற்றவையைக் குறிக்கும் என்றும் உரை வரைந்தனர். இவையும் சிறப்பில.

'நல்லாள்' என்றதற்குப் பயிற்சி பெற்ற துணை வீரர் என்பது பொருள்.

எல்லாப் பொருள்களும் உடையதாய், உற்ற இடத்து உதவும் நல்லாளும் உடையதே அரணாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பயிற்சி பெற்ற நல்ல உதவியாளர்களையும் கொண்டதாக இருக்கும் அரண்.

பொழிப்பு

எல்லாப் பொருள்களும் உடையதாய் தேவையான இடத்து உதவும் நல்லாளும் உடையதே அரண்